சென்னை மற்றும் டில்லியில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் வீடு, அவரது மகன் கார்த்தி வீடு மற்றும் அலுவலகங்களில், மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில், டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் இருந்து, சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். 'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில், அன்னிய நிதி பரிமாற்ற முறைகேடு தொடர்பாக நடந்த, இந்த சோதனையால், சிதம்பரத்திற்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
கடந்த, 2006ல், மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் இருந்த போது, மலேஷியாவை சேர்ந்த, 'மேக்சிஸ்' நிறுவனம், இந்தியாவில், 'ஏர்செல்' நிறுவனத்தில் முதலீடு செய்ய, மகன் கார்த்தி மூலமாக உதவியதாக, புகார் எழுந்தது. இதேபோல், 2007ல், 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' என்ற தொலைக்காட்சி நிறுவனம், அன்னிய முதலீட்டை முறைகேடாக பெற்றது.
அப்போது, நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, எப்.ஐ.பி.பி., என்ற, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், நிபந்தனைகளை மீறி, அப்பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல்வழங்கியதாக கூறப்பட்டது.
விசாரணை
அதற்கு உதவியதற்காக, கார்த்தியின் நிறுவனம், பெரும் தொகையை பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, பி.எம்.எல்.ஏ., என்ற, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனால், 2015 டிசம்பரில், சென்னையில் உள்ள கார்த்தி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய, 'செஸ் கன்சல்டிங்; அட்வான்ஸ் ஸ்டராட்டஜிக் சொல்யூஷன்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூட்டாக சோதனை நடத்தினர்.
அது, 'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில், ஏர்செல் நிறுவனத்திற்காக நடந்த, அன்னியநிதி பரிமாற்ற முறைகேடு மற்றும் தனியார் கண் மருத்துவமனை முதலீடுகள் தொடர்பாக நடத்தப்பட்டது.
பின், ஒரு வார இடைவெளியில், அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். அதில், அவ்வழக்கு தொடர்புடைய சில ஆவணங்களை பறிமுதல் செய்ததாக, அமலாக்கத் துறை அறிவித்தது. இது தொடர்பாக, 2016 ஏப்ரலில், பெங்களூரில் உள்ள, 'செகோயா' நிறுவனத்தில் சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, 2016 மே மாதத்தில், சென்னை மற்றும் டில்லியில் உள்ள, கார்த்தி வீடு, அலுவலகங்கள் உட்பட, 14 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில், 'எல்டரோடா' அலுவலகம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள, நளினிசிதம்பரம் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. அதேநேரத்தில்,
மகளை கொலை செய்த வழக்கில், சிறையில் அடைபட்டிருந்த, ஐ.என்.எக்ஸ்., நிறுவன உரிமையாளர், பீட்டர் முகர்ஜி, மனைவி இந்திராணி வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இறுதியாக, 2017 டிச., 1ல், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், சிதம்பரத்தின் உறவினர் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.சென்னை, டில்லி அதன் தொடர்ச்சியாக, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, கார்த்தி வீட்டுக்கு, டில்லியில் இருந்து வந்த, ஐந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று காலை, 7:30 மணி முதல் சோதனை நடத்தினர்.
மேலும், வீட்டின் அருகில் உள்ள, எல்டரோடா, செஸ் கன்ஸல்டிங் உள்ளிட்ட, மூன்று இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது, சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் வீட்டில் இல்லை; கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதி, சிதம்பரத்தின் மனைவி நளினி ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
அதே நேரத்தில், டில்லி அருகில் உள்ள கார்த்தி வீடு மற்றும் சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களிலும், அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையில், சிதம்பரத்தின் வீடுகளில் இருந்து, சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சோதனை தொடர்பாக, கார்த்தி தரப்பு வழக்கறிஞர், அருண் நடராஜ் கூறும்போது, ''சென்னையில் நடந்த சோதனை, காலை, 10:45 மணிக்கு நிறைவடைந்தது; ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. யாரிடமும் விசாரணை நடத்தவில்லை,'' என்றார்
மீண்டும், 'சம்மன்!'
ஐ.என்.எக்ஸ்., வழக்கில், அமலாக்கத்துறை, ஏற்கனவே அனுப்பிய சம்மனை ஏற்று, கார்த்தி ஆஜராகாததால், விசாரணைக்கு ஆஜராகும்படி, சில தினங்களுக்கு முன், மீண்டும், 'சம்மன்'அனுப்பியுள்ளது. அதன்படி, அவர், 16ம் தேதி ஆஜராக வேண்டும். அப்போது, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (36)
Reply
Reply
Reply