எட்டு நாட்களாக, போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடினர்; தமிழகமே ஸ்தம்பித்தது. எனினும், எதற்காக அவர்கள் போராடினரோ அந்த பணப்பலன்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
இவர்களைப் போல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள். ஊராட்சி பணியாளர்கள் என, பலதரப்பினரும், சம்பள உயர்வு கேட்டு பல முறை போராடியுள்ளனர்.
யாரையும் திருப்திப்படுத்த அரசால் முடியவில்லை; காரணம், நிதிப்பற்றாக்குறை.
ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தர நிதி இல்லாமல், ஊராட்சி அமைப்புகள் தடுமாறுகின்றன; உதவ அரசிடம் நிதி இல்லை.
இப்படி, ஒட்டுமொத்த அரசு ஊழியர்களே சம்பளத்திற்கு அல்லாடும் போது, அந்த, 234 பேருக்கு மட்டும், எந்த கோரிக்கையும் வைக்காமல், போராட்டம் நடத்தாமல், ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம், 55 ஆயிரத்திலிருந்து, 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, இரு மடங்கு சம்பள உயர்வு. இதனால், அரசிற்கு ஆண்டிற்கு, 25.32 கோடி ரூபாய் கூடுதல் செலவு.ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்த போது, நிலுவைத் தொகையை, 'பேப்பர் இன்கிரிமென்ட்' என, அறிவித்த அரசு, எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும், 2017 ஜூலையில் இருந்தே வழங்க இருக்கிறது!
நம் மாநிலத்தை விட தனிநபர் வருமானம் அதிகமுள்ள கேரளாவில், 39 ஆயிரத்து 500 ரூபாய்; குஜராத்தில், 44 ஆயிரம் ரூபாய் தான், எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம்.
ஊதிய உயர்வில் நகைக்கத்தக்க விஷயம், தொலைபேசி படி, 5,000 ரூபாயில் இருந்து, 7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதே!அரசு இன்னும் எந்த காலத்தில் சிந்தித்து கொண்டிருக்கிறது என, தெரியவில்லை. இன்றைய, '4ஜி' யுகத்தில், 500 ரூபாய்க்கும் குறைவாக சந்தா செலுத்தினால், மூன்று மாதம் மொபைல் போனில், 24 மணி நேரமும் பேசலாம்; தேவையான அளவு, இன்டர்நெட் கிடைக்கும்.நிலைமை இவ்வாறு இருக்க, எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏன், 7,500 ரூபாய்!
அஞ்சல் படியாக, 2,500 ரூபாய் வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த,
எம்.எல்.ஏ., அஞ்சல் மூலம் கடிதங்களை, இவ்வளவு தொகைக்கு அனுப்புகிறார்?
அதுபோல, வாகனப்படி, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தொலை துார பஸ்களில், எம்.எல்.ஏ.,க் களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளது. ஆனால் எந்த, எம்.எல்.ஏ., அரசு பஸ்சில் செல்கிறார்?ரயிலில் கட்டண சலுகையும் உள்ளது. கப்பல் போன்ற, சொகுசு கார்களில் வலம் வரும் பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்களுக்கு, ரயில் கட்டண சலுகை வேஸ்ட்!
தொகுதி படி, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எத்தனை, எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில் வலம் வருகின்றனர் என்பது அந்த தொகுதி மக்களுக்கு தான் நன்றாக தெரியுமே!கலெக்டர் அலுவலக கூட்டங்களுக்கு கூட, பல, எம்.எல்.ஏ.,க்கள் வருவது இல்லை. எப்போதாவது அமைச்சரோடு வருவர்; அரசு விழாக்களில் தலை காட்டுவர்; போய் விடுவர். அவரவர் தொகுதிகளில், எம்.எல்.ஏ., அலுவலகங்களில், பூட்டு தொங்குவது சர்வ சாதாரண விஷயம்.
'ஒரு முறை ஓட்டு கேட்க வந்து ஜெயித்து போனவர், அடுத்த தேர்தலுக்கு தான் வருவார்' என்பது போன்ற, 'ஜோக்'குகள் நம்மூரில் பிரபலம்.மாத ஊதியம் தவிர ஒவ்வொரு நாளும் சட்டசபைக்கு வரும் போது, 500 ரூபாய் தினப்படி வேறு உண்டு இவர்களுக்கு!விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து, வறுமையில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கட்டுமானத்தொழில்கள் நலிவடைந்து, கூலித்தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். படித்த இளைஞர்களுக்கு, நல்ல வேலையில்லை.
'ஒக்கி' புயலால் இறந்தவர்களுக்கு, அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முழுமையாக உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. மாநில அரசின் கடன், இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது.இப்படி இருக்கையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா?
ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட்டை சமர்ப்பித்து, நிதி உதவி கேட்டு, மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறது, மாநில அரசு. ரேஷனுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்தாலும், சர்க்கரை விலையை உயர்த்தாமல் இருக்க, அரசிடம் நிதி இல்லை. புது வளர்ச்சி
திட்டங்களுக்கும் போதிய நிதி இல்லை.இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா?
எந்த, எம்.எல்.ஏ., ஏழையாக இருக்கிறார்... அதெல்லாம் காமராஜர், கக்கன், பொன்னம்மாள் காலத்தோடு போய்விட்டது என்பது பொதுமக்களின் ஆதங்கம்.வேட்பு மனு தாக்கலின் போது, சொத்து மதிப்பை தாக்கல் செய்கின்றனர். அடுத்த தேர்தலில், பல மடங்கு அதிகரித்து, பலர் கோடீஸ்வரர்களாக மாறி விடுகின்றனர்.
விரல் விட்டு எண்ணும் சில, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, வசதி இல்லாதவராக, நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்.பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவர்களின் உறவுகள், லட்சங்களில் புரளுகின்றனர் என்பது, ஊரறிந்த உண்மை!மக்கள் பிரதிநிதிகளான, எம்.எல்.ஏ.,க்கள் சொந்தமாக தொழில் செய்து, பெரும் பணக்காரர்களாக இருக்கின்றனர்.
கல்லுாரி வைத்திருப்பவர்கள், பஸ் உரிமையாளர்கள், ஓட்டல் நடத்துபவர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், குவாரி, 'பார்' ஏலம் எடுப்பவர்கள், 'பினாமி' பெயரில் ஒப்பந்ததாரர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர், எம்.எல்.ஏ.,க்கள் தான்!
ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்கும் தொகுதி நிதியாக, ஆண்டு தோறும், இரண்டு கோடி ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது.அதாவது, ஐந்தாண்டுகளில், 10 கோடி ரூபாயில் அவர் தொகுதியில் வளர்ச்சிப்பணிகள் செய்ய வேண்டும். இந்த நிதி முழுமையாக, பணிகளுக்கு மட்டும் தான் ஒதுக்கப்படுகிறதா என்றால் இல்லை என்பது தான் அநேகமான பதிலாக இருக்கும்.
சொந்த கட்சிக்குள், எம்.எல்.ஏ., 'சீட்' வாங்க பணம் கொடுக்க வேண்டிய நிலை. அரசியல் செய்யவும் பணம் வேண்டும். எனவே, பெரும்பாலும் பணக்காரர்கள் தான், எம்.எல்.ஏ., ஆக முடியும். ஓரிருவர், ஓரிரு கட்சிகள் மட்டும் விதிவிலக்கு!
ஓட்டு கேட்கும் போது, 'நான் உங்களுக்கு சேவை செய்வேன்' என, உறுதிமொழி தந்த, எம்.எல்.ஏ.,க் கள், உண்மையிலேயே சேவை செய்கின்றனரா; அவ்வாறு எனில், எத்தகைய சேவை என்பதை, பட்டியலிடுவரா?
நிலைமை இப்படி இருக்கும் போது, ஊழியர்கள் போல், அரசு இவர்களுக்கும் படிகளுடன் சம்பளம் தர வேண்டுமா... அடிக்கடி ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமா?அரசு துறைகளில் தொகுப்பு ஊதியம் வழங்குவது போல, குறைந்தபட்ச தொகை தந்தால் போதாதா... ஈட்டுப்படி, சில்லரை செலவினப்படி, தொகுதிப்படி, வாகனப்படி என்றெல்லாம் வழங்க வேண்டுமா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பல ஊழல் புகார்களில் சிக்கினாலும், ஒரு ரூபாய் தான் சம்பளம் வாங்கியதாக கூறியிருந்தார். அவர் வழியில், 'மக்கள் பணியாற்றும்' முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிதி நெருக்கடி நிலவும் சூழலில் சம்பள உயர்வை
எதிர்பார்ப்பது நியாயமா?
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 'நிதி பற்றாக்குறை உள்ள நிலையில் சம்பள உயர்வு தேவையா... அதை ஏற்கப் போவதில்லை' என, கூறிஇருக்கிறார். அவரும், அவரது கட்சி, எம்.எல்.ஏ.,க்களும், தமிழக நலன் கருதி, ஊதிய உயர்வை பெற்றுக் கொள்ள மாட்டோம் என, அறிவித்துள்ளதை வரவேற்போம்!
ஜி.வி.ரமேஷ்குமார்
பத்திரிகையாளர்
இ - மெயில்
rameshgv1265@gmail.com