சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பன்முக படைப்பாளி ஞாநி காலமானார்!
எழுத்து, நாடகம், சினிமா என பல துறைகளில்
முத்திரை பதித்தவர்

சென்னை : எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடகம், குறும்பட இயக்குனர் என்னும் பன்முக படைப்பாளியான, ஞாநி, 64, நேற்று காலமானார்.

பன்முக படைப்பாளி,ஞாநி,காலமானார்


இவரது முழு பெயர் ஞாநி சங்கரன். இவரது பெற்றோர் பெயர், வேம்புஸ்வாமி - பங்காரு அம்மாள். 1954ல், செங்கல்பட்டில் பிறந்த இவர், பி.ஏ., ஆங்கில இலக்கியமும், இதழியல் டிப்ளமா படிப்பும் படித்தவர். தந்தை பணியாற்றிய, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையிலேயே, நிருபராக சேர்ந்து, தன் ஊடகப் பணியை தொடங்கியவர். 'தினமணி கதிர், சுட்டி விகடன்' இதழ்களின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.


'ஆனந்த விகடன், குமுதம், கல்கி' பத்திரிகைகளில், 'ஓ பக்கங்கள்' என்ற பெயரில் வெளிவந்த கட்டுரைகள், வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. முன்னாள் பிரதமர், வி.பி.சிங்கின் மேடை உரைகளை, தமிழில் மொழிபெயர்த்தவர். மத்திய அரசின் சார்பில், ஆஸ்திரேலியாவுக்கு, நல்லெண்ண துாதராக சென்றவர்.


அரசியல் அரங்கில் பிரபலமான, முன்னணி விமர்சகர். அரசியல், திரைப்படம், கலாசாரம், இலக்கியம், இதழியல் உள்ளிட்ட துறைகளில் முதன்மையான இவர், நாடக நடிகர் மற்றும் ஓவியராகவும் திறமையை காட்டியவர். பல புத்தகங்கள், திரைப்பட போஸ்டர்களுக்கு, அவரின் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டதோடு, பொது பயன்பாட்டிற்காக, பாரதி ஓவியத்தையும் வரைந்தார்.


அவர், 'தீம் தரிகிட, ஏழு நாட்கள், அலைகள், அரங்கம், கட்டியங்காரன்' ஆகிய இதழ்களை நடத்தியவர். 'விண்நாயகன்' என்ற இதழுக்கும், 'பிரைட் நைஸ்' என்ற ஆங்கில இதழுக்கும், ஆசிரியராக இருந்தவர். கடந்த, 1980களில், நாட்டையே உலுக்கிய, 'போபர்ஸ்' பீரங்கி ஊழல் பற்றி, 'முரசொலி' புதையல் பகுதியில் விரிவாக எழுதி, பலராலும் கவனிக்கப்பட்டார். அவரின், தொலைக்காட்சி விவாதங்களையும், பலரும் கவனித்து வந்தனர்.


நாற்பது ஆண்டுகளுக்கு முன், இவர் தொடங்கிய, பரீக் ஷா நாடகக் குழு, புதிய நாடக உணர்வை தோற்றுவித்து, தற்போதும் இளைஞர்களிடம், மாற்று சிந்தனையை வளர்த்து வருகிறது. இவர் இயக்கிய, 'பலுான், ஒரு விசாரணை, வட்டம், சண்டைக்காரிகள்' போன்ற நாடகங்கள், இவரின் திறமையை பறைசாற்றுகின்றன. அவை மட்டுமின்றி,

'விண்ணிலிருந்து மண்ணுக்கு, பிக்னிக் பூக்குட்டி, காதலென்ன கத்தரிக்காயா, வேர்கள், அய்யா' ஆகிய, தொலைக்காட்சி தொடர்களின் இயக்குனராகவும் இருந்திருக்கிறார்.


குறும்படங்களின் இயக்குனராக, 'ஒற்றை ரீல், உள்ளேன் அய்யா' உள்ளிட்டவற்றை இயக்கி உள்ளார். 'தவிப்பு' எனும் நாவல், 'ஓ பக்கங்கள்' எனும் கட்டுரைகள், 'பழைய பேப்பர், மறுபடியும், கண்டதைச் சொல்லுகிறேன், மீடியா உறவுகள், சமூகப் பாலினம், மீடியாவும் கல்வியும், நெருப்பு மலர்கள், அயோக்கியர்களும் முட்டாள்களும், பேய் அரசு செய்தால்' உள்ளிட்ட புத்தகங்கள் எழுதி உள்ளார். தன் அனுபவங்களை, இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில், முனைப்பு காட்டியவர். அவர்களுக்கு, வாழ்க்கைத் திறன் பயிற்சியளித்து, நம்பிக்கை ஊட்டி வந்தார். ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், கருத்து சுதந்திரத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டு, வாழ்வில் கடைபிடித்தவர்.


கடந்த, 2014ல், அரவிந்த் கெஜ்ரிவாலால் ஈர்க்கப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, ஆலந்துார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். அதற்கு பின், அரசியலில் இருந்து விலகினார். 'ஓ பக்கங்கள்' என்ற பெயரில், 'யூ டியூப்' சேனலை, சமீபத்தில் தொடங்கி நடத்தி வந்தார். சென்னை நிருபர் சங்க செயலராக இருந்த அவர், 'தினமலர்' நாளிதழின் இணைப்பாகவும், மாணவர் இதழாகவும் வெளிவரும், 'பட்டம்' ஆலோசகராக இருந்து வழிநடத்தினார்.


இவ்வாறு, பன்முகத் திறமைகளை கொண்ட இவர், சில மாதங்களாக, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, வாரத்துக்கு மூன்று முறை, 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற்று வந்தார். 'துக்ளக்' இதழின் ஆசிரியராக உள்ள, குருமூர்த்தியின் பேச்சை, வீடியோவில் பார்த்து, நேற்று முன்தினம் இரவு, முகநுாலில் கருத்து தெரிவித்தார்.


இந்நிலையில், சென்னை, கே.கே.நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனை செல்லும் வழியில் நேற்று அதிகாலை இறந்தார். அவரின் உடல், கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில், அஞ்சலிக்காக, நேற்று வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர். எழுத்தாளர் ஞாநிக்கு, பத்மா என்ற மனைவியும், மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மகன், திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.


மறைந்த எழுத்தாளர் ஞாநி, தன் உடலை, மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கும்படி, குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். அதன்படி, உறவினர்களும், நண்பர்களும் இணைந்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, அவரின் உடலை, சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கினர். அதற்கு முன், எழுத்தாளர்களும்,

Advertisement

அவரின் மாணவர்களும், அவரின் உடலுக்கு, மவுன அஞ்சலி செலுத்தினர். பின், 'ஞாநியின் போராட்டங்கள் வெல்லட்டும் வெல்லட்டும்' எனக் கூறி, உறுதிமொழி எடுத்தனர்.


பிரபலங்கள் இரங்கல்
முதல்வர் பழனிசாமி:


மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநி காலமானார் என்ற செய்தி கேட்டு, துயரம் அடைந்தேன். அவர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என, பன்முக தன்மை கொண்டவராக திகழ்ந்தார். அவரது மறைவு, பத்திரிகை துறைக்கு பேரிழப்பு. ஞாநியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், துறை நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஸ்டாலின், தி.மு.க., செயல் தலைவர்:


தனித்துவமான அரசியல் மற்றும் சமூகப் பார்வையுடன், கட்டுரைகள் பலவற்றைப் படைத்திருக்கும் ஞாநி, பத்திரிகை, நாடகம், இணையதளம், 'டிவி' உட்பட, ஊடகத்துறையின் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்தியவர். அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பினும், எப்போதும் சுயசார்புடன் இயங்கி வந்த ஞாநியின் மறைவு, தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு.
நடிகர் ரஜினிகாந்த்:


ஞாநி என் நண்பர், அவரது எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தனக்கு சரியென தோன்றியதை பயமின்றி பேசக்கூடியவர், எழுதக் கூடியவர். நான், அவரது ரசிகன். அவரது இழப்பு எழுத்துலகத்திற்கு ஈடு செய்ய முடியாதது.
ஜெயமோகன், எழுத்தாளர்:


எனக்கு ஞாநியின் அரசியல் நிலைப்பாடுகள், பல சமயம் ஒத்துப்போவதில்லை, அவருடைய பொதுவான அறநிலைப்பாடுகளில் உடன்பாடுகள் உண்டு. ஆனால், அவர் தன் அரசியல் நிலைப்பாடுகளில், நேர்மையான ஈடுபாடு கொண்டிருந்தார்; அவரின் அரசியல் முழுக்க முழுக்க கொள்கைகள் சார்ந்ததே. சுயநல அரசியல், நம் அன்றாடக் கயமைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் அவர். பழைய கம்யூனிஸ்ட் தோழர்களின் அதே தீவிர மனநிலையும், அர்ப்பணிப்பும் உள்ள வாழ்க்கையை கொண்டவர்.
மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்:


ஒரு ஊடகவியலாளன், எப்படி அச்சமற்ற மனதுடன் இருக்க வேண்டும் என்பதை, தன் வாழ்வின் மூலம் எனக்கு கற்பித்த ஆசான். திருப்பூர் கிருஷ்ணன்: அவர், ஆன்மிக நம்பிக்கையில்லாத காந்தியவாதி; கொள்கையில் சமரசமில்லாத நாடக கலைஞர். உயர்ந்த பண்பாளரை, தமிழ் உலகம் இழந்து விட்டது.
நீதிபதி சந்துரு:


ஞாநி எனக்கு, 43 ஆண்டுகால நண்பர். அவருடைய மரணம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பல்வேறு தளங்களில், நாங்கள் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். நினைக்ககூடிய, எண்ணக்கூடிய கருத்துகளை, ஒளிவு மறைவின்றி, நேரடியாக சொல்லக் கூடியவர். இதனால், அவருக்கு நிறைய நண்பர்களும் உண்டு; எதிரிகளும் உண்டு.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maha - Villupuram  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-201819:22:03 IST Report Abuse

Mahaஇவரது மறைவு பெரும் இழப்பு. அந்த கணீர் குரலை மறக்க இயலாது.

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
16-ஜன-201818:13:56 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)மனதில் பட்டதை நேரடியாக பேசுவார் என்று சொல்வார்கள் . ஆனால் அவர் இந்து மதத்தை பற்றி மட்டும் விமரிசனம் செய்வார் கடுமையாக .பிற மதங்களில் உள்ள நம்பிக்கைகளை அவ்ளோ தீவிரமா விமரிசிக்க மாட்டார் . அவ்வளவு நேர்மை அவருக்கு ..ஞானி நேர்மையானவர் என்று சொல்வதை விட தனக்கு பிடித்ததை மட்டும் சரி என்று சொல்வார்.இவர் இறந்ததில் வருத்தமில்லை .பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும் .

Rate this:
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
16-ஜன-201816:52:17 IST Report Abuse

Adhvikaa Adhvikaaஞானி இரண்டு கருத்துக்கள் சரியாக முடிவெடுத்து சொன்னார். சேது சமுத்திர திட்டம் பெரிய நஷ்டமே வரும் என்று சொன்னார். இரண்டாவது தனது உடலை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்காக தானம் செய்தார். இந்த இரண்டும் சரியான முடிவுகள்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X