பாலமேடு : மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக களமாடிய காளைகளை கச்சிதமாக பிடித்த வீரர்களும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களும் பரிசு மழையில் நனைந்தனர். பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி பலியானார்.
பாரம்பரியமிக்க பாலமேடு ஜல்லிக்கட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றுவதாகவும், காளைகளை துன்புறுத்த மாட்டோம் எனவும் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சர் உதயகுமார், கலெக்டர், எஸ்.பி., மணிவண்ணன் ஆகியோர் கொடியசைத்து காலை 8:30 மணிக்கு ஜல்லிக்கட்டை துவக்கினர்.
பாலமேடு மகாலிங்கம் சுவாமி மடத்து கமிட்டி, மஞ்சமலையான் கோயில், அய்யனார் கோயில், தெக்கூர் பட்டாளத்து அம்மன் கோயில், காளியம்மன் கோயில், பாலமுருகன் கோயில், பத்ரகாளியம்மன்- மாரியம்மன் கோயில் காளைகள் அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை வீரர்கள் தொட்டு வணங்கி அனுப்பி வைத்தனர்.
227 பேர் நீக்கம் :
மொத்தம் 927 வீரர்கள் பெயர் பதிவு செய்தனர். மருத்துவ சோதனையில் 227 பேர் தகுதி நீக்கம்
செய்யப்பட்டனர். 700 பேர் பங்கேற்றனர். பதிவு செய்யப்பட்ட 1,080 காளைகளில் 490 மட்டுமே வந்திருந்தன. கால்நடை துறை துணை இயக்குனர் பார்த்தசாரதி, டாக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் 31 காளைகளை தகுதி நீக்கம் செய்தனர்.
மொத்தம் 446 மாடுகள் அடுத்தடுத்து வாடிவாசலில் இருந்து அசராமல் சீறிப்பாய்ந்தன. அஞ்சாமல் விரட்டி சென்று திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கு தினமலர் கிப்ட் பாக்ஸ் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் தங்கம், வெள்ளி காசு, கட்டில், மெத்தை, பீரோ, மோட்டார் பைக், சைக்கிள், சேர், குத்துவிளக்கு, அண்டா, வேட்டி, துண்டு என ஏராளமான பரிசுகள் வாரி வழங்கப்பட்டன. வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் கிடைத்தன.
அலங்காநல்லுார் மணி, சக்திவேல், பாலமேடு முருகன் உட்பட குறிப்பிட்ட சில வீரர்கள் காளைகளை அடக்கி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றனர். விதிமீறி செயல்பட்ட வீரர்களை கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் எச்சரித்து வெளியேற்றினர். வெளிநாட்டினர் பங்கேற்று கைதட்டி ரசித்தனர். 1200 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மதியம் 3:30 மணிக்கு நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பார்வையாளர் பலி:
காளையை அடக்க முயன்றபோது துாக்கி வீசப்பட்ட 25 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே எமக்காளபுரத்தை சேர்ந்த மில் தொழிலாளி காளிமுத்து, 19, பார்வையாளராக பங்கேற்றார்.
களம் கண்ட பின் காளைகளை உரிமையாளர்கள் பிடித்து செல்லும் பகுதியில், பின்னால் வந்த காளை முட்டி அவர் பலியானார். காயம் அடைந்த ஆறு பேர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உச்சநீதிமன்றம் சார்பில் கண்காணிப்பு குழு தலைவர் மிட்டல் தலைமையில் ஆறு பேர் கண்காணித்தனர்.
பாலமேட்டை சேர்ந்த வீரர் மணி, ஏழு காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். ஐந்து காளைகளை அடக்கிய பாலமேடு முருகன், சிவசாமி, சிவராஜ் இரண்டாம் இடம், நான்கு காளைகளை அடக்கிய சக்திவேல், வில்லி மூன்றாம் இடம் பெற்றனர். சரந்தாங்கி சிவசாமி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.முதல் மூன்று இடங்கள் பெற்ற வீரர்களுக்கு சோழவந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம் முறையே 10 ஆயிரம், 5000, 3000 ரூபாய் பரிசு வழங்கினார்.சீறிப்பாய்ந்து சிக்காத சக்குடி வீரணசாமி, புதுப்பட்டி மாணிக்கம், அவனியாபுரம் தென்னரசு, புதுக்கோட்டை செந்தில் தொண்டைமான், மஞ்சம்பட்டி கருப்பையா, பாலமேடு கருப்பசாமி கோயில், சரந்தாங்கி சிவசாமி ஆகியோரின் காளைகள் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மகாலிங்கம்சுவாமி மடத்து கமிட்டி தலைவர் செல்லத்துரை, செயலர் கார்த்திகேயன், பொருளாளர் சுப்புராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்தனர். பாலமேடு பேரூராட்சி செயலர் பூங்கொடி முருகு தலைமையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. காயமடைந்த வீரர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினர் உதவி செய்தனர்.
ஜல்லிக்கட்டில் சில காளைகளை இரண்டுக்கும் மேற்பட்டோர் அடக்கினர். 'இது விதிமீறல்; பரிசுக்கு பதில் வீரர்களுக்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள் மட்டும்' என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லுாரில் இன்று காலை 8:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்கின்றனர். சிறந்த வீரருக்கும், காளையின் உரிமையாளருக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3)
Reply
Reply