கங்கை இங்கே வர வேண்டும்! குமரிக்கடலை தொடர வேண்டும்!

Added : ஜன 16, 2018
Advertisement
கங்கை இங்கே வர வேண்டும்! குமரிக்கடலை தொடர வேண்டும்!

குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை என ஐவகைத் திணைகளோடு தமிழர் வாழ்க்கை இயல்பாய் அமைந்திருந்தது.'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்'என்பது திருக்குறள்.அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வளர்ந்தாலும் உயிர் வாழ சுவாசக்காற்று
இன்றியமையாதது போலத்தான், உலக இயக்கத்தின் அச்சாணி உழவுத் தொழில் ஆகும். இயற்கையுடன் இணைந்த வாழ்வின் தடம்மாறியதன் விளைவு இயற்கைப் பேரிடர் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது.இயற்கைப் போரிடர் தாக்குதலாகிய 'ஒக்கி' புயல் நம்
வாழ்க்கையை நிலை தடுமாறச் செய்து விட்டது. காடுகளை அழித்தோம். கான்கிரீட் காடுகளை உருவாக்கினோம். நீர் வரத்துக்கால்வாய்களை ஆக்கிரமித்து அழித்து விட்டோம்.நீர் ஆதாரங்களான கண்மாய், குளம் முதலியவற்றைத் தடம் தெரியாமல் அழித்து விட்டோம். காற்று மாசுப்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் மாசுபடுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளால் நீர் ஆதாரங்கள் மாசுப்பட்டுள்ளன. போகித் திருநாள் அன்று இல்லத்து குப்பையை வெளியேற்றும் நாம் நம் இதயத்துக் குப்பையை
வெளியேற்றி உள்ளோமா?
மன அழுக்குகள்
ஆசை, கோபம், பொறாமைமுதலிய மன அழுக்குகள் அகன்று உள்ளனவா?நவராத்திரி கொலு பொம்மைகளில் சில பொம்மைகள் களிமண்ணால் செய்யப்பட்டு, வண்ணம் பூசப்பட்டிருக்கும். சில பொம்மைகள் பஞ்சினால் தயாரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டிருக்கும். சில பொம்மைகள் சர்க்கரையால் செய்யப்பட்டுவண்ணம் பூசப்பட்டிருக்கும். களிமண் பொம்மைகள் தண்ணீரில் கரைந்தால் சேறாகும்; சகதி ஆகும்.பஞ்சுப் பொம்மைகள்தண்ணீரில் மூழ்கினால் ஒட்டுமொத்தத் தண்ணீரையும் உறிஞ்சிக் கொள்ளும். சர்க்கரைப்பொம்மைகள் தண்ணீரில் கரைந்து தான் மறைந்து பிறருக்குத்தித்திப்பாக நிறைந்து நிற்கும்.களிமண் பொம்மைகளைப் போல் சில மனிதர்கள் தாமும்களங்கப்பட்டுப் பிறரையும்களங்கப்படுத்தி விடுகின்றனர்.பஞ்சுப் பொம்மைகளைப் போல சில மனிதர்கள் எல்லாவற்றையும் தாமே உறிஞ்சிக் கொள்கின்றனர்.
சர்க்கரைப் பொம்மையைப் போல் சில அபூர்வ மனிதர்கள் தாம் அழிந்தாலும், கரைந்தாலும்பிறருக்குத் தித்திப்பாக நிறைகின்றனர்.பேராசை மனித மனத்தை நச்சுத்தன்மை உடையதாக்கி விடும்.காட்டுவழிப் பாதையில் ஒரு துறவி நடந்து போய்க் கொண்டிருந்தார். கையில் உள்ள ஒரு கோலால் பாதையைத் தட்டித் தட்டி நடந்து போய்க்கொண்டிருந்தார். காட்டுவழியில் ஒரு இடத்தில் 'ணைங்' என்று சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட இடத்தில் கிளறிப்
பார்த்தார். மண்பானை நிறைய பொற்காசுகள். 'ஐயோ! ஆட்கொல்லி! ஆட்கொல்லி!' என்றுகத்திக் கொண்டே துறவி ஓடினார்.சிறிது நேரம் கழித்து அந்தப் பாதை வழியே அவருக்குப்பின்னால் இரண்டு இளைஞர்கள் வந்தனர். இரண்டு பேரும் தங்கப்புதையலைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு பேரும் சமமாகப் பங்கிட்டுக்
கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இரவுநேரத்தில் ஊருக்குள் போவோம் என்று முடிவு செய்தனர். இரண்டு பேருக்கும் பசிவந்தது. ஒருவர் ஊருக்குள் சென்று உணவு வாங்கி வருவதாகவும்,ஒருவர் காவல் இருப்பதாகவும் முடிவு செய்தார்கள். உணவு வாங்க ஒருவர் போனவுடன், தனியாகக் காவல் இருந்தவர் மனதில் சலனம் ஏற்பட்டது. தங்கக்காசுக் குவியலை தானே வைத்துக் கொள்ளலாமா? என எண்ணினார்.
அவருக்கு எதிரே மூங்கில் கம்பு ஆடிக் கொண்டிருந்தது. அந்தமூங்கில் கம்பை உடைத்துக்கூர்மையாக வைத்துக் கொண்டார். உணவு வாங்கப்போனவர் நெடுநேரம் கழித்து வந்தார். உணவுப் பொட்டலத்தைக் கீழே வைத்தார். கீழே வைக்க குனிந்தபோது காவல் புரிந்தவர் திடீரென,
மூங்கிலால் உணவு வாங்கிவந்தவரின் வயிற்றில் செருகிவிட்டார். அந்த இடத்திலேயே உணவு வாங்கி வந்தவர் இறந்து விட்டார். காவல் காத்தவர்பசியோடு உணவு பொட்டலத்தைப் பிரித்து வேகவேகமாக உணவருந்தினார். உணவருந்திய அடுத்தநிமிடத்திலே மயங்கி விழுந்து இறந்து விட்டார். காரணம் உணவு வாங்கி வந்தவர் உணவில் விஷம் கலந்து கொண்டு வந்திருக்கிறார். துறவி கூறியது போல் 'ஆட்கொல்லி', இரண்டு நண்பர்களை
மரணத்தில் சேர்த்து வைத்துவிட்டது.
உள்ளத்தில் மகிழ்ச்சி

ஆசை, கோபம், பொறாமைமுதலிய அழுக்குகளை நம்இதயத்தை விட்டு அகற்றி விடுவதே போகித் திருநாளின் பயன் ஆகும்.அதைத்தான் திருவள்ளுவர்,'காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமங் கெடக்கெடும் நோய்'என்கிறார்.
வாழ்க்கைக்குப் பொருள் தேவை. அதைபோல் நாம் வாழ்வதிலும் பொருள் தேவை என்பதை உணரவேண்டும்.'அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை' என்றுதிருவள்ளுவர் அடையாளம்காட்டிய இல்லம் அன்பின் முகவரி ஆகும். பசித்து வந்தார்க்கு
உணவிடுதலே இல்லத்தின் அறம்.'யாராயினும், எவராயினும்,எத்தேசத்தவராயினும் அவரின் பசித்தீயை அணைத்திடுக!'என்றார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமான்.

விதை நெல் எடுத்தல்
இளையான்குடி மாற நாயனார் என்ற அடியவர் தம் இல்லம் தேடிப் பசித்து வந்தோருக்கு உணவுதருவதையே தலையாய பணியாக, அறமாகக் கொண்டிருந்தார். யார் பசியோடு வந்தாலும் மாற நாயனார் இல்லத்தில் உணவு உண்டு பசியாறலாம்.வறுமை, ஏழ்மையின் உச்சக்கட்டத்திலும் மாற நாயனார் தம் வயலில் விதைத்த விதை நெல்லை எடுத்து உபசரித்தார். இந்தமாண்பினை யாரிடம் காணமுடியும். விதைநெல் எடுத்தல் என்பது முதலுக்கு இழப்பு. அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் பசிப்பிணி அகற்றும் மருத்துவராய் விளங்கினார்.'வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிக்சில் மிசைவான் புலம்'என்பது திருக்குறள்.'விதைக்காமலே விளைநிலத்தில் விளைச்சல்கிட்டும்' என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.எப்பொழுது விதைக்காமல் விளைச்சல் கிட்டும்?நிலத்தில் உரிமையாளர் விதைக்கஇயலாமல் போனால் ஊரார் அவருக்காக உழுது விதையிடுவார்கள். நிறைவாக விளைச்சலை வீடு கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதனால் தான் விதை இடாமல் விளைச்சல் கிட்டும் என்றார்திருவள்ளுவர். இன்று வானம் பொய்த்துப் போய், மழைநீர்ஆதாரங்கள் வற்றிப் போய்,விவசாயம் கேள்விக்குறியாக மாறிவிட்டது.'உழவினர் கைம்மடங்கின் இல்லை விளைவதுாஉம்விட்டேம்என் பார்க்கும் நிலை'.உழவன் கைகளை மடக்கிக் கொண்டு வேலைநிறுத்தம் செய்தால், வாழ்வை வெறுத்துச் சென்ற துறவிகளும் வாழ இயலாமல் போய்விடும் என்கிறார் திருவள்ளுவர்.

விவசாய வாழ்வு
உற்பத்தியாகும் பயிர்களுக்கு நியாயவிலை கிடைக்காத நிலைமை, பயிர்க் காப்பீட்டுத் தொகையை எதிர்பார்த்து வாழும் பரிதாபகரமான பஞ்ச வாழ்வுதான் விவசாய வாழ்வாக மாறிவிட்டது.
கங்கை இங்கே வரவேண்டும்! குமரிக் கடலைத் தொடவேண்டும்! என்ற முழக்கம் நனவாக வேண்டும். நதிநீர் இணைப்பு, நீர் ஆதாரங்கள் பேணிப் பாதுகாக்கப்படுதல், இயற்கை விவசாயம், நவீன அறிவியல் தொழில்நுட்ப உத்தி
களோடு விவசாய மேம்பாடு, ஒருங்கிணைந்த விவசாய மேம்பாடு, நவீனரக கால்நடை வளர்ப்பு இன்றைய காலத்தின் தேவை. என்றும் வேண்டும் இன்ப அன்பு.
-குன்றக்குடி பொன்னம்பல அடிகள்குன்றக்குடிrajasekaran31581@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

S.C.NATHAN - KANYAKUMARI,இந்தியா
25-ஜூன்-201820:34:30 IST Report Abuse
S.C.NATHAN அய்யா வணக்கம்.அருமையான விளக்கம். எட்டு வழி சாலைக்கு எடுக்கும் முன்னேற்பாடுகளை விட துரிதமாக நதிகள் இணைக்கும் செயல் நடை பெற்றால் ,மேலாண்மை வாரியத்திற்கு பின் செல்ல வேண்டியதில்லை. அதிரடிக்கு பெயர் பெற்ற மத்திய அரசு ,இதை உடனே செய்ய வேண்டும். நீர் மேலாண்மை ,விவசாயத்தின் முதுகெலும்பு.விவசாயம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு ஏணி என்பதை யாவரும் அறிவர்.ஒரு கருவிகளும் இல்லாத காலத்திலேயே ,பல தரப்பட்ட வகையில் நீரை பயன்படுத்தும் கலையை அறிந்த நாடு இது. முயற்சி செய்து ,முடிப்போம் இப்பெரும்பணி ,வரும் கால நம் மக்கள் வாழ்த்தட்டும் .அருமையாக வாழ ,வழி செய்வோம். வாழ்க பாரத மணி திரு நாடு,வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X