தேறாத அதிகாரிகளுக்கு வருது மாறுதல்...திரும்பவும் கூப்பிட்டு வரப்போகுது தேர்தல்!| Dinamalar

தேறாத அதிகாரிகளுக்கு வருது மாறுதல்...திரும்பவும் கூப்பிட்டு வரப்போகுது தேர்தல்!

Updated : ஜன 16, 2018 | Added : ஜன 16, 2018
Share
பட்டுப்புடவை, ஒற்றைப் பின்னல், மல்லிகை என பச்சைத் தமிழச்சியாய், கோனியம்மன் கோவிலின் முன்பாக, சித்ராவுக்காக காத்திருந்தாள் மித்ரா. காட்டன் புடவையில், கலக்கல் ஆக வந்து இறங்கினாள் சித்ரா.''அக்கா... சாமியைக் கும்பிட்டுட்டு ஏதாவது படத்துக்குப் போலாமா?'' என்றாள் மித்ரா.''வேணாம் மித்து... நம்மூர் தியேட்டர்கள்ல படம் பாக்குறதுக்கு, தனியா சம்பாதிக்கணும். இந்த படங்களை,
தேறாத அதிகாரிகளுக்கு வருது மாறுதல்...திரும்பவும் கூப்பிட்டு வரப்போகுது தேர்தல்!

பட்டுப்புடவை, ஒற்றைப் பின்னல், மல்லிகை என பச்சைத் தமிழச்சியாய், கோனியம்மன் கோவிலின் முன்பாக, சித்ராவுக்காக காத்திருந்தாள் மித்ரா. காட்டன் புடவையில், கலக்கல் ஆக வந்து இறங்கினாள் சித்ரா.

''அக்கா... சாமியைக் கும்பிட்டுட்டு ஏதாவது படத்துக்குப் போலாமா?'' என்றாள் மித்ரா.

''வேணாம் மித்து... நம்மூர் தியேட்டர்கள்ல படம் பாக்குறதுக்கு, தனியா சம்பாதிக்கணும். இந்த படங்களை, அடுத்த வாரத்துல 'லோக்கல் சேனல்'கள்ல போட்ருவாங்க,'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா... சாட்டிலைட் சேனல்கள்ல கூட, ஒரு படத்தை ஒரு சேனல்காரங்கதான் போட முடியும்; இவுங்க எல்லா புதுப் படங்களையும் போடுறாங்க. ஆனா, கடைசி கால் மணி நேர, 'க்ளைமாக்ஸ்'சை மட்டும் போடுறதில்லை. இதெல்லாம் இந்த, 'வீடியோ பைரஸி செல்'லுக்குத் தெரியாதா... தெரிஞ்சும் வாங்குறதை வாங்கிட்டு விட்டுர்றாங்களா?'' என்று கேட்டாள் மித்ரா.

''லோக்கல் சேனல் மட்டுமா... நம்மூர்ல பல தியேட்டர்கள்ல லைசென்சே இல்லாமத்தான் படம் ஓட்டிட்டு இருக்காங்க!'' என்றாள் சித்ரா.

''உண்மைதான்க்கா... பீளமேட்டுல லைசென்சே இல்லாம படம் ஓட்டுற மால்'ல இருந்து மாமூல் போகுதாம். அதே ஏரியாவுல இருக்குற மணியான தியேட்டர், ஆளுங்கட்சிக்காரர்க்கு சொந்தமானதாம். அதுக்கும் லைசென்ஸ் இல்லை; பிரச்னையாகி, மூடுன தியேட்டரை இப்போ திறந்து விட்ருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''நம்ம மாவட்டத்துல எத்தனை 'இல்லீகல்' விஷயங்கள், பகிரங்கமா நடக்குதுன்னு கவர்னர் ஆபீசுக்கு 'இ-மெயில்' போயிருக்காம். அநேகமா, சீக்கிரமே சில ஆபீசர்களுக்கு 'டிரான்ஸ்பர்' வரும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

''அக்கா... நீ சொல்றது கரெக்ட்தான்... நம்ம மாவட்ட ஆபீசரே, 'எனக்கு இன்னும் ஒரு வாரத்துல டிரான்ஸ்பர் வந்துரும்'னு, பாக்கிறவுங்ககிட்ட எல்லாம் புலம்பிட்டுத் திரியுறாராம். ஆனா, நான் கேள்விப்பட்ட விஷயம் என்னன்னா, டிஸ்ட்ரிக்ட்லயும், கார்ப்பரேஷன்லயும் இருக்குற முக்கியமான ஆபீசர்களை, தற்காலிகமா மாத்திட்டு, 'லோக்கல் பாடி எலக்ஷன்' நடக்குறப்போ, இவுங்களையே திரும்பவும் இங்க கொண்டு வரணும்னு 'பிளான்' பண்ணிருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

இருவரும், சாமி தரிசனத்தை முடித்து விட்டு, ஆள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து, உட்கார்ந்தனர். தான் கொண்டு வந்திருந்த பொங்கலை எடுத்துக் கொடுத்தாள் சித்ரா.

அதைச் சுவைத்த மித்ரா, 'மதியம் கோவில்ல அன்னதானம் சாப்பிடலாம்னு நினைச்சேன்... பொங்கலே போதும்... சரியான டேஸ்ட்' என்று சப்புக்கொட்டினாள்.

''கோவில்ல போடுற அன்னதானம் வேணாம்னு நீ சொல்ற... பூண்டி கோவில்ல இருக்குற 'டிக்கெட் கிளார்க்' ஒருத்தரு, கோவில்ல அன்னதானத்துக்கு சமைக்கிறவுங்ககிட்ட, தினமும் வடை, பாயாசத்தோட தனக்கு தனியா சாப்பாடு தயாரிக்கணும்னு உத்தரவு போட்ருக்காராம். ஆளுங்கட்சி 'ரெகமண்டேஷன்'ல வந்த ஆளுங்கிறதால, பயந்துட்டு செஞ்சு தர்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற அதிகாரிகள்னா, தனி 'கெத்து'தான்... கார்ப்பரேஷன்ல பெரிய ஆபீசருக்குத் துணையா இருக்குற மேடம் தான், பல முக்கியமான 'பைல்'கள்ல கையெழுத்துப் போடுறாங்களாம். ஒவ்வொரு வாரமும் வர்ற கலெக்ஷன்ல கரெக்டா 'பங்கு' எடுத்துக்கிட்டு, மத்ததை கணக்கோட அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பிடுறாராம். கார்ப்பரேஷன் வருமானத்தைக் கூட்ட வேண்டிய 'உதவி' ஆபீசருக்கு, வாராந்திர வசூலை கலெக்ஷன் பண்றது தான் முக்கிய வேலையாம்'' என்றாள் மித்ரா.

''ஆட்சி மாறுற வரைக்கும், இவுங்களை யாரும் அசைக்க முடியாது மித்து... ஒட்டு மொத்தமாப் பார்த்தா, நம்ம கார்ப்பரேஷன்ல 'குலேபகாவலி' ஆட்சியாத்தான் இருக்கு,'' என்றாள் சித்ரா.

''ஆனா, அவுங்களுக்குள்ளேயும் ஒரே அடிதடியாத்தான இருக்கு... சென்ட்ரல் ஜோன்ல இருந்து லேடி இன்ஜினியருக்கு, எம்.எல்.ஏ., கூட 'லடாய்' ஆனதால, அங்க இருந்து துாக்கியடிச்சு, மெயின் ஆபீஸ்ல 'டம்மி'யா வச்சிருந்தாங்க. இப்போ, அவுங்களை கிழக்குல முக்கியப் பொறுப்புல போட்ருக்காங்க. அங்க இருந்த அவுங்களோட உயிர்த்தோழியோட பதவியையே இவுங்களே பறிச்சிட்டாங்கன்னு ஒரே பேச்சா இருக்கு,'' என்றாள் மித்ரா.

''பதவின்னு வந்துட்டா, பாசமாவது நட்பாவது,'' என்றாள் சித்ரா.

''நட்புன்னு சொன்னியே... நம்ம சிட்டியில போலீஸ்க்கு நண்பர்களா இருக்குறவுங்க என்ன பண்றாங்க தெரியுமா?'' என்று கேட்டு, தனது மொபைலில் வந்த ஒரு 'வீடியோ'வைக் காட்டினாள் மித்ரா. அவளே தொடர்ந்தாள்...

''இந்த ஆளுக்கு வேலையே, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல சுத்திச் சுத்தி வந்து, அங்க 'ஒதுங்குறவுங்களை' மடக்கிப் பிடிச்சு, வசூல் பண்றது தான். பேருல சக்கரைய வச்சிருக்குற இவரு, வாயைத் தொறந்தா கெட்ட வார்த்தை தானாம். எசகு பிசகா மாட்டுற பசங்களை மிரட்டி பணம் பறிக்கிறது; பணம் இல்லேன்னா, மொபைல், வண்டிச்சாவியை பிடுங்கி வச்சு, 'பார்க்கிங்'ல பணத்தைக் கொடுத்து வாங்கிக்கோ'ன்னு சொல்லுவாராம்.''''இவுங்க ஏன் போலீஸ்ல சொல்றதில்லை?'' எனக் கேட்டாள் சித்ரா.

''அவுங்களும் கண்டுக்கிறதில்லையாம்... இந்த ஆளோட மிரட்டல்ல ரெண்டு மூணு பசங்க, தற்கொலை பண்ணிருக்கிறதா, இந்த பையன் சொல்றான். எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை... ஆனா, இந்த மாதிரி ஆளுங்களால, நல்ல விஷயங்கள் பண்ணுற போலீஸ் பிரண்ட்ஸ்க்கும் கெட்ட பேரு வருது,'' என்றாள் மித்ரா.

''நீ சொல்றது கரெக்ட் மித்து... இதே மாதிரித்தான் ஒண்ணு, ரெண்டு திருநங்கைகள் பண்ற தப்பு, எல்லாரோட பேரையும் கெடுக்குது. போன வாரம், கோயம்புத்துார் - சென்னை ஆம்னி பஸ்சுக்குப் போன ஒரு பையனை மிரட்டி பணம் கேட்ருக்காங்க. தரலைன்னதும் தகராறு பண்ணி, அந்தப் பையனோட உடம்புல ஏதோ ஒரு நரம்பை 'கட்' பண்ணி விட்டுட்டு, 'இனிமே ஒனக்கு அவ்ளோ தான்டா'ன்னு போயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அடப்பாவமே... அப்புறம் என்னாச்சு?'' என்ற மித்ராவிடம், ''அந்த பையன் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கான்... 'சிசிடிவி புட்டேஜ்' வச்சு, ஒரு திருநங்கைய 'அரெஸ்ட்' பண்ணிருக்காங்க. நம்மூர்ல இந்த பிரச்னை, ரொம்பவே 'சீரியஸ்' ஆயிட்டு இருக்கு'' என்றாள் சித்ரா.

''போலீஸ் கரெக்டா இருந்தா, இதெல்லாம் ஆரம்பத்துலயே சரி பண்ணிருக்கலாம்... இப்பிடித்தான், செல்வபுரத்துல சீனிவாசா தியேட்டர் பக்கத்துல இருக்குற ஒரு 'இல்லீகல் பார்'ல, போலீஸ் ஆதரவுல, 24 மணி நேரமும் சரக்கு விக்கிறதோட, கஞ்சாவும் விக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அந்த ஸ்டேஷன் 'லிமிட்'ல மட்டும், மூணு 'பார்' இப்பிடித்தான் 'இல்லீகலா' நடக்குதாம். அந்த ஸ்டேஷன்ல பல வருஷமா உளவு பாக்குற 'தங்க'மான போலீஸ்தான், இந்த சரக்கு, கஞ்சா விற்பனைக்கெல்லாம் 'காட்பாதர்'னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

''போன வாரம் நம்ம பேசுனதுக்கு அப்புறம், 'டிஸ்ட்ரிக்ட்' முழுக்க இருக்குற 'இல்லீகல் பார்'களை மூடிருக்காங்க. அதைத் திறந்து விடுறதுக்கு, ஒரு 'பார்'க்கு 20 ஆயிரம்னு வசூல் பண்ணிருக்காங்க. முதுநிலை பொறுப்புல இருக்குற 'டேஷ்' ஆபீசர் தான், டாஸ்மாக்ல டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்டரோட மேனேஜர்ட்ட இந்த வேலைய ஒப்படைச்சிருக்காராம்,'' என்றாள் மித்ரா.

''அந்த மேனேஜர் தான், அங்க பெரிய ஆபீசர் மாதிரி இருக்காராமே... அவருக்கு 'கப்பம்' கட்டலைன்னா, சரக்கே அனுப்ப மாட்டாராம். இப்பிடியே மிரட்டி மிரட்டியே 'பார்ச்சூனர்' வண்டியும், 'ஹார்லி டேவிட்சன் பைக்'கும் வாங்கிருக்காராம்,'' என்றாள் சித்ரா.

அதைக் கவனிக்காத மித்ரா, அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்து, 'யாரு ஷாஜியா... ராங் நம்பர் சார்' என்று 'கட்' செய்தாள். இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர்.

''அக்கா... வண்டிகளைப் பத்திச் சொன்னியே... நம்ம மாவட்டத்துல இருக்குற சில ஆர்.டி.ஓ.,க்கள், பிரேக் இன்ஸ்பெக்டர்கள், பத்துப் பதினைஞ்சு வருஷமா இங்கேயே அசையாம வசூல் ராஜாவா வண்டி ஓட்டிட்டு இருக்காங்க. அவுங்களை எல்லாம் பட்டியல் போட்டு, மாத்துறதுக்கு ஏற்பாடு நடக்குதாம். அது வேணாம்னு நினைக்கிறவுங்க, பத்து லட்சம் கொடுக்கணும்னு, அந்த டிபார்ட்மென்ட் விஐபிட்ட இருந்து உத்தரவு வந்திருக்காம்,'' என்றாள் மித்ரா.

''அவுங்களுக்கு அதெல்லாம் ஜூஜூபி காசு மித்து... க.க.சாவடி செக் போஸ்ட் போனா, ஒரு பிரேக் இன்ஸ்பெக்டரே, நாளுக்கு அம்பதாயிரம், அறுபதாயிரம் பாத்திருவாரு,'' என்றாள் சித்ரா.

''இன்னொரு வண்டி மேட்டர்... நம்ம ஜிஎச் டாக்டர்கள், 'டூட்டி டைம்'ல காரை எடுத்துட்டு வெளியே போறதைக் கவனிச்சு, 'வார்ன்' பண்ணிருக்காரு பெரிய டாக்டர். பல டாக்டர்கள், இப்போ காரை வெளிய நிறுத்திட்டு, நடந்து போறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அவுங்க நடக்கட்டும்... எனக்கு நடக்க முடியாது. நீ வண்டி எடு'' என்றாள் சித்ரா. வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X