புதுடில்லி : லிபியாவில் உள்நாட்டு போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களை பத்திரமாக, மீட்டு வர நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்ஒருகட்டமாக, அவர்களை கப்பல் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பல், தற்போது லிபியாவை நெருங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குமுன்னதாக, அவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் அழைத்து வரப்படுவதாக இருந்தனர். ஆனால் கிளர்ச்சியாளர்கள், பென்காஜி ஏர்போர்ட்டை சூறையாடியதால் , அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக இந்த மாற்று நடவடிக்கை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல், எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திலிருந்து லிபியாவிற்கு புறப்பட்டுள்ளது. அங்கு தவிக்கும் இந்தியர்கள், கப்பல் மூலம், எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திற்கு வந்து சேருவார்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் விமானம் மூலம் இந்தியா திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, அலெக்சாண்டிரியா நகருக்கு கூடுதல் விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைவன்கோட்டையில் போலீசார் ஆய்வு : லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் சிக்கி, திருநெல்வேலி மாவட்டம், தலைவன் கோட்டையைச் சேர்ந்த முருகையன் பலியானார். அசோக்குமார் மற்றும் முத்துக்குமார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல்கள் சேகரிக்க போலீசார், தலைவன்கோட்டைக்கு விரைந்துள்ளனர். லிபியாவில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில், தலைவன்கோட்டையைச் சேர்ந்த 30 பேர் பணியாற்றி வருகி்ன்றனர். இவர்களில், முருகையன், ராணுவ தாக்குதல்களிலிருந்து தப்பிக்க வாகனத்தில் தப்பிச் செல்லும் போது குண்டடி பட்டு பலியானார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். மற்ற 27 பேரது நிலை குறித்து ஆராய உத்தரவிடுமாறு, மத்திய அரசிற்கு தலைவன்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், லிபியாவில் தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் இங்குள்ள உறவினர்களுக்கு போனில் பேசியுள்ளனர். அப்போது, தாங்கள் 27 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், விரைவில் ஊருக்கு வந்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவலை, உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களை பத்திரமாக மீட்டு மீட்டுத்தரும்படி அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்தி்ய அரசு நம்பிக்கை : தமிழகர்களைப் போலவே, லிபியாவில் தவிக்கும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், அங்கிருந்தபடியே உறவினர்களுக்கு பேசியுள்ளனர். இதனால், இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கை மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், லிபியாவின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம் என்று கூறினார்.
கிருஷ்ணா பேட்டி : இந்நிலையில் டில்லியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீ்ட்பதற்காக அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என கூறினார். மேலும் அவர் இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இந்தியர்களை மீட்பதற்காக கப்பல் ஒன்று எகிப்தை சென்றடைந்தது என கூறினார்.