நயம் பேசுங்கள்; மதம் வேண்டாம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நயம் பேசுங்கள்; மதம் வேண்டாம்!

Added : ஜன 18, 2018 | கருத்துகள் (5)
நயம் பேசுங்கள்; மதம் வேண்டாம்!

வைரமுத்து அவர்களுக்கு... ஒரு சாதாரண யதார்த்தவாதியின் வேண்டுகோள்...
உங்களின் ரசிகனாக, ஒரு கவிஞனாக, என் இனத்தவன் தவறு செய்வதை கண்டு சகியாமல், உங்களை திருத்திக் கொள்ள இதுவே சரியான தருணம் என, உங்களுக்கு நினைவுறுத்த இந்த முயற்சி!
'மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாளால்...' என, திருப்பாவை முதல் பாசுரத்தில் துவங்கி, 'மார்கழி திங்களல்லவா... மதி கொஞ்சும் நாளல்லவா...' என, நீங்கள் எழுதிய, சங்கமம் திரைப்படப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கும்.
அந்தப் பாடல் முழுவதும், ஆண்டாளின், திருப்பாவையை அடியொற்றிய பாடல் வரிகளும், 'சூடிக்கொடுத்த சுடர்கொடியே...' என, அந்த கதாநாயகன் உருகி உருகிப் பாடுவது போலும் வரிகளை அமைத்திருப்பீர்கள். நீங்கள் திருப்பாவை முழுவதையும் கற்றிருக்காவிட்டால், அந்த பாடலை உங்களால் எழுதியிருக்க முடியாது. அந்த பாடலை புனையும் போதும், அந்தப் பாடலுக்கான ஊதியம் பெற்ற போதும், ஏன் ஆண்டாள் பிறப்பு பற்றி நீங்கள் யோசிக்கவில்லை?
ஒவ்வொருவரின் பிறப்பும், இறப்பும் அவர்களின் வாழ்க்கை முறையும், அவரவர் தனிப்பட்ட விஷயங்கள். அது, பொதுவாக வாழும் மனித சமுதாயத்தை பாதித்தால், அதை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம். ஆண்டாள் ஒரு தெய்வப்பிறவி. அவரின் தமிழ்த் தொண்டும், இறைவனை அடைய அவள் கொண்ட பக்தி மார்க்கமும், உலகத்தில் அனைவராலும் போற்றப்படுகிறது. நீங்கள், தெய்வ நம்பிக்கை கொள்ளாதவராக இருக்கலாம். ஆனால், ஆண்டாள் ஒரு தமிழ்ப் பெண். அவளை அவதுாறாகப் பேசுவது, நல்ல தமிழனுக்கு அழகா?
கவிஞன் என்பவன், மதம், ஜாதி, இனம், மொழி கடந்தவன், பற்றற்றவன். பிறர் மனம் புண்படாமல் எழுதவும், சிந்தித்து பேசவும், கவிதை வடிவமைக்கிற பொறுப்பும், உரிமையும் கொண்டவன். அப்படியிருக்க, யாரை திருப்திப்படுத்த, நீங்கள் அவ்வாறு பேசினீர்கள்? நீங்கள் வேண்டுமானால், சுய ஆராய்ச்சி செய்து, கட்டுரை வெளியிடுங்கள்.
யாரோ மேலைநாட்டவர் சொன்னதாக சொல்லி, உங்களுடைய வக்கிரத்தை காண்பித்தீர்கள். காப்பி அடிக்கும் சிந்தனாவாதி அல்ல நீங்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.உங்கள் சிந்தனைப்படியே வருவோம்... ஆண்டாள், தெய்வம் என்பதை மறந்து விடுங்கள். அவர் ஒரு தமிழ் கவிஞர். யாராவது ஒருவர் தமிழில் பேசினாலோ, கவிதை எழுதினாலோ, அவர் தமிழுக்கு பெருமை சேர்த்தார் என, கொண்டாடுவது தானே ஒரு தமிழனின் கடமை! அவருடைய தமிழின் பிறப்பிடத்தை பற்றி பேசத்தான் தங்களுக்கு மேடை வழங்கப்பட்டது; ஒரு கவிஞனுடைய மேலோங்கிய குணமே, மற்றவர்களுடைய திறமையை அங்கீகரிப்பதும், பாராட்டுதலும் தானே!தமிழகத்தில் ஒரு புதிய கலாசாரம் பரவி வருகிறது. இந்து மதத்தை பற்றி கேலி பேசுவதும், திரைப்படங்களில் தெய்வங்களின் உருவத்தை புனைந்து குத்தாட்டம் போடுவதும், நகைச்சுவை செய்வதும், வாடிக்கையாகி விட்டது.
ஆனால், அந்த துணிவு மற்ற மதங்களை கேலி செய்வதில் அவர்களுக்கு இல்லை; வரவும் வராது. ஏன்? இந்து மதத்தையோ, இந்துக்களையோ விமர்சனம் செய்தால், சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்று விடலாம் என, தப்புக்கணக்கு போடுகின்றனர்; ஒரு சிலர் இந்து மதத்தை சார்ந்து கொண்டே, அதன் கோட்பாடுகளை இழித்துப் பேசி, தங்களின் மேதாவித்தனத்தை காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், பணம், புகழ், சம்பாதிக்க மட்டும், இந்து மதத்தை மேற்கோள் காட்டுவர். நீங்களுமா...!
மதம் என்பதும், அது சார்ந்த நம்பிக்கையும், சடங்குகளும் நம் நாட்டில் வேரூன்றி விட்டது. அந்த நம்பிக்கை மாறாது; மாறவும் கூடாது. ஆத்திகம் என்பது நம்மை நல்வழிப்படுத்தவே தோன்றியது. நாத்திகத்தை பெரிதும் போதிக்கும் உங்கள் வழிகாட்டி, கருணாநிதியே, 'பக்தி கூடாது என சொல்லவில்லை; பக்தி பகல் வேஷமாக மாறி விடக்கூடாது' என்று தான், ஒரு படத்தில் வசனம் வைத்தார். அவர் புகழ் பாடும் உங்களுக்கு இது தெரியாதா? அவரே, முன்னொரு நாளில், ஒரு பத்திரிகையில், ஆண்டாளின், 'குத்து விளக்கெரிய...' என்ற பாசுரத்தை மேற்கோள் காட்டி, 'குப்பைத்தொட்டி' என்று சிறுகதையில், விரசத்தை அள்ளித் தெளித்திருந்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அப்போது, அன்றைய இந்துக்கள் வீறு கொண்டு எழாதது, கருணாநிதி செய்த புண்ணியம். அந்தக் கோபம், தற்போது எரிந்து, தணிந்து, மீண்டும் எரிகிறது.
நாத்திகம் பற்றி பேச, இந்து இலக்கியங்களை படிக்கத் துவங்கி, சாதாரண கவிஞர், 'கண்ண'தாசன் ஆகவில்லையா! அவரே, தன்னை, 'கவியரசு' என தான் சொல்லிக் கொண்டார். ஆனால் நீங்களோ, 'கவிப்பேரரசு' என...
'ராமபிரானுக்கு கோவில் எதற்கு?' என்று, இஸ்லாமிய பெருமக்கள் கூடியிருக்கும் சபையில் பேசுகிறீர்கள்! அவர்கள் கை தட்டினால், உங்களுக்கு பெருமை! ராமரும், கிருஷ்ணரும் தோன்றவே இல்லை என வைத்துக் கொள்வோம்; ராமாயணம், மகாபாரதம் பொய் என்றே கொள்வோம். ஆனால், இரண்டு இதிகாசங்களும் போதித்தது, 'பிறன்மனை நோக்கினால் அழிவு' என்பது தானே! அந்த கொள்கை, கசப்பு மருந்து போலாகி விட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது!ஒரு குடும்பத் தலைவராக யோசியுங்கள். நீங்கள் ஆண்டாள் அவதார நோக்கத்தை பற்றி பேசப் போக, அது சகியாமல், ஒரு சிலர் உங்களுடைய தாயைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும், அநாகரிகமாக பேசினர். உங்களுடைய மனைவியும், உங்களுடைய மகனும் மற்றும் உங்கள் குடும்பத்தாரும் அதை கேட்டிருப்பர். அது, அவர்களுடைய மனதை எப்படி பாதித்திருக்கும்... அதற்கு மூல காரணம் நீங்கள் தானே!நீங்கள் செய்த தவறுக்கு உங்கள் தாய்க்கும், உங்கள் மனைவிக்கும் அவதுாறு எதற்கு? இன்ன பேசினால், இன்ன எழுதினால் இந்த அழிவு நிகழும் என்ற தீர்க்க தரிசனம் உங்களுக்கு வேண்டாமா? கவிஞனாக அந்த பொறுப்பு உங்களுக்கு உண்டு என்பது தெரியாதா? இப்போது உங்களை நிந்திக்கும் பலர், முன்னொரு நாளில் உங்கள் கவிதையை சிந்தித்தவர்களாக இருந்திருப்பர் இல்லையா? எத்தனை ரசிகர்களை இதற்காக தாரை வார்த்து விட்டீர்கள்!வெற்று வாயால் மன்னிப்பு கேட்பதை விட, மனசாட்சியுடன் மன்னிப்பு கோருங்கள். உலகம் மீண்டும் உங்களை, கவிஞனாக அடையாளம் காண வேண்டுமானால், நயம் பேசுங்கள்; மதம் வேண்டாம்!

மல்லி கிஷோர்
பேச்சாளர், எழுத்தாளர்
kishore@goripe.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X