மானிட வாழ்வு மகத்தான வரம்

Added : ஜன 19, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 மானிட வாழ்வு மகத்தான வரம்


எப்படியோ நமக்கு மனித உருவம், மானிட வாழ்வு கிடைத்து விட்டது. மானிட பிறவிக்கே உரிய பேசும் திறனும், சிரிக்கும் திறனும், சிந்திக்கும் திறனும் கிடைத்துவிட்டது. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் அவ்வை.அந்த வகையில் நாம் பெருமைப்படலாம். சந்தோஷப்படலாம். ஆனால், அந்த பெருமைக்கும் சந்தோஷத்திற்கும் உரியவர்களாகநாம் நடந்து கொள்கிறோமா? வாழ்ந்து வருகிறோமா? அதுதான் இப்போது நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய முதல் கேள்வி.
நமது சிந்தனை திறனை சோதித்து பார்த்த மாதிரியும் ஆயிற்று அல்லவா? அந்த திசையில் சிந்திக்க ஆரம்பித்தால், நமது சிந்திக்கும் திறனை கொண்டு என்ன பெரிதாய் சாதித்துக் கிழித்து விட்டோம் என்ற புதிய கேள்வி புறப்படுகிறது.


எதில் திருப்திஇதோ நம்மை நாமே ஆளத் தொடங்கி முழுதாய் எழுபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. என்ன குறை இல்லை இந்த திருநாட்டில். மனித வாழ்வுக்கு அடிப்படையிலும் அடிப்படை தேவையான குடிநீர், கழிவுகள் அகற்றம், குப்பை இல்லா வீதிகள், குண்டும் குழியும் அற்ற சாலைகள், தடையில்லா மின்சாரம், சுற்றுப்புற சுகாதாரம். இதை பற்றியெல்லாம் பெருமைப்பட முடியுமா. சந்தோஷப்பட முடியுமா. பரவாயில்லை என்று திருப்தியாவது படமுடியுமா. நொந்து நுாலாகி, வெந்து, விம்மி அழத்தானே முடிகிறது.அப்படி என்றால் வெள்ளையனை விரட்டி விட்டு, ஆளத்தொடங்கிய இந்தியர்களின் சிந்தனை திறன், செயல்திறன், ஆட்சி திறன், தொலைநோக்கு இவை குறித்து எப்படி பெருமைப்பட முடியும். எப்படி, நிலவில் நீர் இருக்கிறது என்று முதலில் கண்டறிந்தது இந்திய விஞ்ஞான திறன் தானே என்று பெருமைப்படலாமா. ஆனால் இன்றும் காலிக்குடங் களுடன் தாய்மார்கள் தெருவில் அமர்ந்து மறியல் செய்வதும் இந்தியாவில் தானே... இதில் பாரதி வேறு பாடிவிட்டான்...'தேடிச் சோறு நிதந் தின்று-பலசின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்வாடி துன்ப மிக உழன்று- பிறர்வாடப் பல செயல்கள் செய்து- நரைகூடிக் கிழப் பருவ மெய்தி- கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போல-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....'ஆள்பவர்களின் அக்கறை ஒரு புறம் இருக்கட்டும். ஆளப்படுகிறவர்கள், இன்றும் விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கழிந்தும், கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும், கையை தட்டி ரசிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.


புறப்பட்ட புரட்சிஅரசியல் மேடையில் மட்டுமா? தொலைக்காட்சி பெட்டிக்குள்ளும் வேடிக்கை பார்த்து ரசிக்க, எத்தனை எத்தனை கூத்துகள். அத்தனையும் வெற்றுக்கேளிக்கைகள். ஒரு நுாற்றாண்டுக்கு முன்னாள் ரஷ்யாவில் எழுந்தது ஜார் மன்னனுக்கெதிரான புரட்சி. சில ஆண்டுகளுக்கு முன்னாள் எகிப்து, சூடான் ஆகிய நாடுகளிலும் கூட எழுந்தது புரட்சி. அதிபர் ஆட்சி அகன்றது. ஆனால், இங்கே அப்படி ஒன்றும் யுகப்புரட்சி எழவில்லையே... புஸ்வாணப் புரட்சி கூட புலப்படவில்லையே... ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து இளைஞர்கள் எழுந்தார்களே! இன்று ஊருக்கு ஊர் காளைகளை அடக்கி வீரம் காட்டுகிறார்களே! நிச்சயமாக பாராட்டலாம். ஆனால் இந்த பெருமை முழுமையான ஒரு பெருமைதானா...ஒரு வீர விளையாட்டிற்காக மரபு சார்ந்த உணர்வுகளை காப்பதற்காக, வெளிப்பட்ட அந்த எழுச்சிக்கு பின்... சாமானிய மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்னைகள் பல, தீர்வு தேடி தவித்து கொண்டிருக்கின்றனவே. அவை எதற்காகவும் எந்த எழுச்சியும் எந்த மூலையிலும் முளைக்கவில்லையே ஏன்... எழுச்சியும் புரட்சியும் இளைப்பாற போய் விட்டனவா... இந்த விஷயத்தில் இளைஞர்களையோ, மாணவர்களையோ குறை சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.அவர்கள் மட்டும் தான் நாட்டுப்பற்றை காட்ட வேண்டுமா என்ன.எந்தெந்தப் பெயரிலோ எத்தனையோ கிளப்கள் இருக்கின்றன. நற்பணி மன்றங்கள் நாடெங்கும் இருக்கின்றன. எல்லா கட்சிகளிலும் அந்த அணி, இந்த அணி என்று பெரும் படைகள் இருக்கின்றனவே. டஜன் கணக்கான திரையுலக கதாநாயகர்களுக்கு தெருவுக்கு தெரு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.


இணையாத கூட்டம்தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை தவிர எத்தனை அரசு பிரச்னைகள், அக்னி பிரச்னைகள், அடங்கா பிரச்னைகள் இருக்கின்றன என்று இவர்களுக்கு தெரியாதா. அதற்கெல்லாம் இணையத் தெரியாத, இணைய விரும்பாத, இணைய இயலாத, எழுச்சிகொள்ள இயலாத, இனமா தமிழினம். அவ்வளவு தானா தமிழனின் சிந்தனையாற்றல், செயலாற்றல், சமூகநல உணர்வு.எல்லோரும் படித்திருப்போம். ஒரு நாட்டில் மக்கள் அடிமைகளாகவோ, வளர்ச்சி காண முடியாதவர்களாகவோ இருப்பதற்கு காரணம், மன்னனின் அலட்சியமோ, சுயநலமோ, குரூர நெஞ்சமோ, முட்டாள் தனமோ மட்டுமல்ல. அளவுக்கு மீறிய சகிப்பு தன்மைக்குப் பழகிவிட்ட மக்களின் மனம், சிந்திக்க மறந்த மூளை, செயலாற்ற தெரியாத கரங்கள், இவையே முக்கிய காரணங்கள்.அரசியலில் நுழைந்தவர்கள், ஆளாளுக்கு ஆயிரம் கோடிகளில் புரளும் போது வெறும் ஆயிரத்திற்கே அல்லாடுபவர்கள், அதைப்பற்றி சிந்திக்க முனையவில்லை என்றால், சினம் கொள்ளத் தெரியவில்லை என்றால், செயலாற்ற துணிய வில்லை என்றால், மானிடப்பிறவிக்கே உரிய சிந்தனை திறனை பற்றி சிறிதளவாவது பெருமை பட முடியுமா?சிந்திக்கும் திறன் பெற்ற மானிட இனம், சராசரிக்கும் கீழான நிலையிலேயே ஆண்டுக்கணக்காக அவதிப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும், இதுவே சொர்க்கம் என்று ரசித்து வாழ்ந்தால் எல்லாம் விதி என்று சகித்து வாழ்ந்தால், மானிட வாழ்வு எப்படி மகத்தான வரமாக இருக்க முடியும்? எல்லாரும் வெளிநாடு சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் பலர் சினிமா பார்க்கிறவர்கள் தான்.
சினிமா மூலம் நிச்சயமாக ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மன், சுவிஸ், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளை பார்த்து வியந்து இருப்பார்கள்.அங்கே உள்ள வீதிகளின் சுத்தம், நதிகளின் துாய்மை, சுற்றுப்புற சுகாதாரம், போக்குவரத்து ஒழுங்கு, சாலைகளின் நேர்த்தி எல்லாமே பார்க்க தானே செய்கிறார்கள்.


மானிட வாழ்வு


நம் தலைவர்களால் அந்த நிலையை ஏன் இங்கே கொண்டுவர முடியவில்லை. கொண்டு வர முயற்சிக்கவில்லை. அதெல்லாம் இருக்கட்டும். அவர்களை அதற்காக சிந்திக்க வைக்க, செயல்பட வைக்க, அன்றாடம் அவதிப்படும் மக்களும் கூட ஏன் சிந்திக்க துவங்கவில்லை. சிந்தித்தால் தானே தெரியும். இழப்பதற்கு இங்கே எதுவும் இல்லை, பெறுவதற்குத்தான் எத்தனையோ உள்ளது என்று.எழுபதாண்டு சுய ஆட்சிக்கு பின்னும் இந்த நிலை என்றால், அதற்கு முழுக்காரணமும்ஆள்பவர்களும், ஆண்டவர்களும் மட்டுமா? அவர்களை கேள்வி கேட்காத, கேட்க துணியாத, துணிவதற்கு முதுகெலும்பு இல்லாத, முழுபலத்தையும் காட்ட தெரியாத மக்களும் தானே காரணம்?முதுகெலும்பு நிமிர்ந்தால், நிமிர்ந்தே இருந்தால், மானிட வாழ்வு மகத்தான வரம்தான்.- தங்கவேலு மாரிமுத்துஎழுத்தாளர்திண்டுக்கல்93603 27848

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
19-ஜன-201815:56:24 IST Report Abuse
Welcome Back to 1900AD back to 1900 AD.No Industrial revolution No Trade.World Will be Peaceful.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X