ஜாதகம் சரியில்லையே ரஜினி...!| Uratha sindhanai | Dinamalar

ஜாதகம் சரியில்லையே ரஜினி...!

Updated : ஜன 23, 2018 | Added : ஜன 20, 2018 | கருத்துகள் (4)
Share
 உரத்த சிந்தனை, ஜாதகம், ரஜினி, Uratha sindhanai

நடிகர் ரஜினிஅரசியலுக்கு வருவதாக அறிவித்ததைப் பற்றியே, தமிழக ஊடகங்கள் இப்போது பரபரப்பாக பேசி வருகின்றன. அதுபோல, அவருக்கும் முதல்வர் கனவு பிடித்து ஆட்டுகிறது. ஆனால், அதற்கான ஜாதக பலன் இல்லையே!

அவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் சனியும், கேதுவும் வலிமையாக உள்ளனர்; எட்டாமிடத்தில் ராகு இருக்கிறார். ஏழில் இருக்கும் குரு, லக்னத்தை பார்ப்பது சிறப்பு.
ஆயினும், குருவும், சந்திரனும் அமைக்கும், குரு -சந்திர யோகம், ஜாதகத்தில் இல்லை. ஆனால், ஐந்தாமிடத்தில் புதன்-சுக்ர யோகம் உள்ளது; சந்திர மங்கள யோகமும் கூட உள்ளது.

நாலாமிடத்தில் லக்னாதிபதி சூரியன் இருப்பதால், அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பது நியாயமே. செவ்வாய் மகரத்தில் உச்சம். இந்த அமைப்பால், அவருக்கு பெரும் புகழ் உள்ளது.
ஆனால், அவருக்கு தடையாக இருப்பதும், அவரது நற்பெயருக்கு சோதனையாக இருக்கப்
போவதும் இரண்டாமிடமும், ஏழாமிடமும் தான்! கூடவே ஏழரை சனி. இரண்டில் உள்ள சனியும், கேதுவும் உணர்த்துவது, அவர் எதிலுமே அதிகம் பற்றில்லாதவர் என்பதையே!

இரண்டாமிட சனி, -கேது கூட்டணியின் காரணமாக, அவர் அவ்வளவு எளிதாக முடிவெடுக்க மாட்டார். எந்த விஷயத்தையும் செய்வதற்கு அளவுக்கதிகமாக தயங்குவார். சில சமயங்களில், முடிவெடுப்பதற்குள் சம்பந்தப்பட்ட விஷயமே முடிந்து போயிருக்கும்.அவரின் அரசியல் முயற்சிக்கு இந்த குணமே மிகப் பெரிய எதிரியாகும்.

இரண்டாமிட சனி, -கேது கூட்டணியின் காரணமாக, அவர் ஒரு வார்த்தை பேசினாலும், அது பெரும் விவாதமாகி விடும். எட்டாமிட ராகுவால், சிறு விஷயங்களுக்குக் கூட உடனடியாக, 'அப்செட்' ஆகி விடுவார்.இது, தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல குணம் தான் என்றாலும், அரசியலுக்கு உதவாது.

இரண்டாமிட சனி, -கேது கூட்டணி மற்றும் எட்டாமிட ராகு காரணமாக, அவர் தன் முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். இதனால் அவர், அதிக விமர்சனங்களைச் சந்திக்க வேண்டிஇருக்கும்.இந்த கிரகங்கள் கூட்டணி காரணமாக, ரஜினியால் அவரது கட்சியில், குடும்ப ஈடுபாட்டைத் தவிர்க்க இயலாது; வாக்குறுதிகளை சுலபமாக நிஜமாக்க முடியாது.

மகர ராசிக்காரரான ரஜினிக்கு, ஏழரை சனி துவங்குகிறது. சிம்ம லக்னப்படி, சனி, அவருக்கு ஆறு மற்றும் ஏழாமிடத்துக்கு அதிபதியாவார். இது, கடன் மற்றும் எதிரிகளை தரக்கூடிய நிலையாகும்.அரசியலுக்கு அவர் வருவது ஏழரை கால சனி பகவானுக்கு மிகவும் வசதியாகப் போய் விடும். எதிரிகளையும், பொருளாதார குறைவையும் வாரி வழங்க வாய்ப்பிருக்கிறது.
வயது, 68 வயதாகி விட்டது. இந்நிலையில், தனியாக அரசியல் கட்சி துவங்கி, ஊர் ஊராக அலைந்து, கட்சியை பலப்படுத்த அவர் ரொம்பவே பிரயத்தனப்பட வேண்டும்.

தனக்குப் பின் கட்சியை நடத்த, தன்னைப் போலவே பிரபலமான ஒரு தலைவரை உருவாக்க வேண்டும்.அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவுக்குப் பின் இரண்டாம் கட்ட பிரபலங்கள் இல்லாததால் ஏற்படும் பிரச்னைகளை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். அது போன்ற பிரச்னை, கட்சி துவக்கினால், ரஜினிக்கும் ஏற்படும்.

என்ன தான் அவர், 'ஊழலை ஒழிப்பேன்' எனக் கூறினாலும், அரவிந்த் கெஜ்ரிவாலை அவர் நினைவில் கொள்ள வேண்டும். ரஜினி ஊழலற்றவராக இருக்கலாம். ஆனால், இரண்டாம்
மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களை கட்டுப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை.
செலவு செய்ததை எடுக்க முடியவில்லை என்றால், கட்சியினர் காலப்போக்கில் சலிப்
படைவது இயல்பு.

தமிழக அரசியல், 'ஒயிட் காலர்' வேலையல்ல. பிறர் மீது சேறு வாரி இறைக்க வேண்டும்; திடீர் திடீரென கூட்டணியை மாற்ற வேண்டும்; ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும்.இதுவெல்லாம், அவரின் குணத்துக்கு ஒத்து வராதது.எம்.ஜி.ஆர்., காலத்தில், வேறு பொழுதுபோக்குகள்
இல்லை; சினிமா மட்டுமே பிரதான பொழுது போக்கு! மேலும், எம்.ஜி.ஆர்., - தி.மு.க.,வில் ஏற்கனவே பல காலம் இருந்து, அரசியலை பற்றி நன்கு அறிந்தவர்.

சினிமாவிலேயே தன்னை ஒரு மாபெரும் தலைவராக, திறமையாக போட்டியின்றி உருவகப்
படுத்தியவர் அவர்! சினிமாவில் கூட, புகை பிடிக்கவோ, மது அருந்தவோ இல்லை. இதனால், தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட போது, மக்களின் ஆதரவால் முதல்வரானவர்.இக்காலத்தில் பல்வேறு பொழுதுபோக்குகளில் சினிமாவும் ஒன்று, அவ்வளவே! நடிகர்களுக்கு, எம்.ஜி.ஆர்., காலத்தில் ரசிகர்கள் அல்லாத, மற்ற பொதுமக்களிடமும் அவருக்கு இருந்த அளவு மதிப்பு, இப்போதைய நடிகர்களுக்கு இல்லை.

ரஜினி மீது எல்லா மக்களுக்கும் பரிதாபம் வருமளவு அவருக்கு எந்த துரோகமும், யாராலும் இழைக்கப்படவில்லை. தமிழகத்தில் அரசியலில் ஜெயிக்க வேண்டுமானால், சினிமா புகழ் மட்டும் போதாது; மேலும் சில கணக்குகள் உள்ளன.ஜெ., மறைவால் பெரிய வெற்றிடமெல்லாம் ஏற்பட்டு விடவில்லை. அவர் இல்லை; ஆனால்,அ.தி.மு.க., தொண்டர்கள் அப்படியே உள்ளனர்.
ஒருவேளை, ரஜினியின் கட்சிக்கு, அ.தி.மு.க., விலிருந்து, கொஞ்ச ஓட்டுகள் பிரியலாமே ஒழிய, பெரும்பாலான, அ.தி.மு.க.,வினர் ரஜினிக்கு ஆதரவளிப்பர் என, எதிர்பார்க்க முடியாது.

தி.மு.க.,வில் கருணாநிதி ஓய்வெடுத்தாலும் கூட, தி.மு.க., தொண்டர்கள் அவ்வளவு எளிதில், இன்னொரு கட்சிக்கு ஓட்டளித்து விட மாட்டார்கள்! தி.மு.க., ஓட்டுகள், 3- - 4 சதவீதம், ரஜினிக்குக் கிடைக்கலாம்.ஆக, இரண்டு பெரிய கட்சிகளும், மற்ற சிறு கட்சிகளும் சேர்த்து, பெரும்பான்மையான ஓட்டு சதவீதத்தை தம் வசம் வைத்திருக்கின்றன. மீதி இருக்கும் ஓட்டு
சதவீதத்தை தான், ரஜினி பயன்படுத்த வேண்டும்!அவரின் ரசிகர்களில், பல கட்சிகளைச் சேர்ந்த
வர்களும் உள்ளனர்.

அவரின் மன்றத்தில் உறுப்பினராகச் சேர்பவர்களின் எண்ணிக்கையும், ஓட்டாக விழும் எண்ணிக்கையும் மாறுபடக் கூடும்.காங்கிரஸ், சில ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் புது உறுப்பினர்களை சேர்த்தது. ஆனால், அவை ஓட்டாக மாறவில்லை. ஒரே நபர், பல கட்சிகளிலும் உறுப்பினராக இருக்கும் கூத்து, தமிழகத்தில் அதிகம்.ஆக, அ.தி.மு.க.,வின், 4 சதவீதம், தி.மு.க.,வின், 4 சதவீதம், ரசிகர்களின் 7- - 8 சதவீதம் என, 15 சதவீத ஓட்டுகள், ரஜினிக்கு கிடைக்கலாம்; நடுநிலை வாக்காளர்கள், 6- - 7 சதவீதம் அவருக்கு ஓட்டளிக்கலாம்!

இதனால் ரஜினிக்கு, 21 - -22 சதவீத ஓட்டுகள் கிடைக்கலாம். அவர் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், குறைந்தது, 32 - -35 சதவீத ஓட்டுகளாவது பெற்றால் தான் முடியும்!ஓட்டுப் பிரிப்புகள் எப்போதுமே, அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வுக்கே சாதகமாகவே முடிகின்றன அல்லது தொங்கலை ஏற்படுத்துகின்றன.பிப்ரவரி, 21ல் கட்சி துவங்குவதாக, நடிகர் கமல் கூறியுள்ளார். அவரால் பெருமளவு ஓட்டுகளை பிரிக்க முடியாது என்றாலும், 4- - 5 சதவீத ஓட்டுகளை இரு முன்னணி கட்சிகளிலிருந்தும், ஏன், ரஜினியின் கட்சியிலிருந்தும் கூட பிரிக்கலாம்.

தினகரன் வேறு, தனி அணியாக தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம், ஓட்டுப்பிரிப்புகள் நடைபெறுவது உறுதியாகிஉள்ளது. இதனால், புதியவர்கள்
யாருக்கும் பலன் கிடைத்து விடாது. மீண்டும் இரு பெரிய கட்சிகளுக்கே பலன் கிடைக்கும்.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் போட்டி போட்டு, கூட்டணிகளில் தீவிர கவனம் செலுத்தலாம்!
ரஜினியும் கூட இந்த கூட்டணிச் சகதியில், பிற்காலத்தில் இறங்கக்கூடும்!

இது, அவரது ஊழலுக்கு எதிரான நிலையை நீர்த்துப் போகச் செய்யும். இதற்கான சிறந்த உதாரணமாக விஜயகாந்த் இருக்கிறார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த பின் அடுத்த தேர்தலில் அவர் கட்சி அடைந்த நிலையைச் சொல்லவும் வேண்டுமா!நடிகர் என்பதால் அவர்களுக்கு, மக்களின் அறிமுகம் கிடைக்கிறது; அவ்வளவே! அதை ஓட்டாக மாற்ற வேண்டுமானால், எல்லாராலும் முடியாது; சிவாஜி கணேசனாலேயே முடியாத விஷயம் அது!

எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும், ஜெயலலிதாவும் மட்டுமே அதை திறமையாக சாதித்தவர்கள்.ரஜினியின் உண்மையான விருப்பம் ஆன்மிகம் தான் என்றாலும், விரும்பியோ, விரும்பாமலோ சினிமாவிலும், 1996லும் அவர் பேசிய சில, 'வசனங்கள்' அவர் மீது தந்துள்ள அழுத்தமே, அவர் அரசியல் வருகையை அறிவித்தாக வேண்டிய கட்டாய நிலையைத் தந்துள்ளது போலத் தெரிகிறது!

ஏதோ ஒரு தயக்கம், இன்னமும் அவரிடம் இருப்பதாகவே கூர்ந்து நோக்குபவர்களுக்குத் தோன்றுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் கூட, முழு மனதுடன் வருவதற்கான வாய்ப்பில்லை. சூழ்நிலைகளே அவரை அரசியலை நோக்கித் தள்ளியிருக்கின்றன.எனவே, அவர் இப்போது கூட, தன் நிம்மதியான, ஆன்மிக வாழ்வுக்குத் திரும்ப முடியும்!

தன் இயல்புக்கேற்ற செயல்களைச் செய்யும் போது தான், ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்க
முடியும்! ரஜினி அரசியலைத் தன் இயல்புக்கு மாறானது என்றும், தற்போதைய உடல் ஆரோக்கியத்துக்குச் சுமையானது என்றும் உணர்ந்தால், அரசியலுக்கு வருவதை இப்போது கூட தவிர்க்க முடியும்!இதன் மூலம் தொடர்ந்து படங்களில் நடித்து, 'சூப்பர் ஸ்டார்' இமேஜுடன்
சந்தோஷமாக ரசிகர்கள் மனதில் வாழ முடியும். ஆன்மிகத்தையும் அமைதியாகத் தொடர முடியும்!

ஒருவேளை... அரசியல் களத்துக்கு வருவதே நல்லது என, அவர் நினைத்தால், பா.ஜ., போன்ற ஒரு தேசியக் கட்சியில் சேர்ந்து, தமிழகத்தில் அக்கட்சி வெல்லும் போது, தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்!இப்போது உள்ள
கட்சிகளில், ரஜினியின் இயல்புக்கு ஓரளவாவது ஒத்துப் போகிற கட்சி, அது மட்டுமே!

பா.ஜ., முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிக்கப்பட்டு பொதுத் தேர்தலை அவர் சந்தித்தால், மோடியின், இன்னும் குறையாத பிரபலமும், ரஜினியின் புது அரசியல் பிரபலமும், பிரசாரமும் ஒன்று சேர்ந்து, 'மேஜிக்'கை உருவாக்கக் கூடும்.ரஜினிக்கு எது நல்லதோ அதையே நான் சான்று
களுடன் எழுத முயன்று இருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன், ரஜினிக்கு நல்ல ஆரோக்கியத்தையும், புகழையும் தரட்டும்! வாழ்த்துகள்!

- எஸ்.நாகராஜன்- -

சமூக ஆர்வலர்

sn.nagarajan@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X