அக்யூஸ்ட்களோட நடந்த பேச்சு...அவார்டு ஸ்டேஷனோட மரியாதை போச்சு!| Dinamalar

'அக்யூஸ்ட்'களோட நடந்த பேச்சு...அவார்டு ஸ்டேஷனோட மரியாதை போச்சு!

Added : ஜன 23, 2018
Share
மருத்துவமனையில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் மித்ரா; பழங்கள் சகிதமாக, அங்கே வந்த சித்ரா, பதட்டமாய்க் கேட்டாள்...''என்னடி மித்து... நீ நல்லாத்தான வண்டி ஓட்டுவ... எப்பிடி விழுந்து, காலை உடைச்சிக்கிட்ட?''''நாம நல்லா ஓட்டுனாலும், எதிர்ல வர்றவுங்க சரியா ஓட்டணுமே... அவினாசி ரோட்டுல, 'லெப்ட்'ல பேய் வேகத்துல, 'பைக்'ல வந்த ஒரு பையன், தட்டி விட்டுட்டுப் போயிட்டான்,''
 'அக்யூஸ்ட்'களோட நடந்த பேச்சு...அவார்டு ஸ்டேஷனோட மரியாதை போச்சு!

மருத்துவமனையில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் மித்ரா; பழங்கள் சகிதமாக, அங்கே வந்த சித்ரா, பதட்டமாய்க் கேட்டாள்...
''என்னடி மித்து... நீ நல்லாத்தான வண்டி ஓட்டுவ... எப்பிடி விழுந்து, காலை உடைச்சிக்கிட்ட?''''நாம நல்லா ஓட்டுனாலும், எதிர்ல வர்றவுங்க சரியா ஓட்டணுமே... அவினாசி ரோட்டுல, 'லெப்ட்'ல பேய் வேகத்துல, 'பைக்'ல வந்த ஒரு பையன், தட்டி விட்டுட்டுப் போயிட்டான்,'' என்றாள் மித்ரா.
''போலீஸ் கமிஷனரும் என்னென்னமோ பண்றாரு... இந்தப்பசங்க அடங்குறது மாதிரியே தெரியலை... சிட்டிக்குள்ள, 'சைலன்சர்' இல்லாம, 'பைக்' ஓட்டுறது அதிகமாயிருச்சு. மோதவே வேண்டாம்... பக்கத்துல வந்தாலே, வண்டி ஓட்டுற லேடீஸ், பயத்துல கீழ விழுந்துருவாங்க,'' என்றாள் சித்ரா.
''உண்மைதான்க்கா... இப்பவே நான், 'ஹெல்மெட்' போட்ருந்ததால, தப்பிச்சேன். அந்தப் பையன் வந்த வேகத்துக்கும், வண்டி சத்தத்துக்கும் உசுரே போயிருச்சுன்னு தான் நினைச்சேன்,'' என்றாள் மித்ரா.
''சிட்டிக்குள்ள இருக்குற போலீஸ் பெரும்பாலும், சம்பாதிக்கிறதுல தான் குறியா இருக்காங்க... 'சிசிபி'யில ஏ.சி., போஸ்ட்டிங் காலியா இருக்குல்ல... அதைப் பிடிக்க பயங்கரமான போட்டி நடக்குது... ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ற சில ஏ.சி.,க்கள், எவ்வளவு கொடுத்தும் அங்க வரத் தயாரா இருக்காங்க. யாரு வந்தாலும், கோடீஸ்வரனாத்தான் வெளிய போவாங்க!'' என்றாள் சித்ரா.
''ஏ.சி., மட்டுமா... அங்க ஒரு, 'லேடி இன்ஸ்' இருக்காங்களே... வசூல், 'கலை'யில பிஎச்.டி., வாங்குனவுங்க... ஆம்பளை 'இன்ஸ்'களே அந்த கலெக்சன் செல்வியைப் பார்த்து மிரளுவாங்க,'' என்றாள் மித்ரா.
''அதை விடு... நாட்டுலயே, 'பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு' வாங்குன ஸ்டேஷனைப் பத்தி, பரபரப்பா ஒரு மேட்டர் ஓடுது தெரியுமா?'' என்றாள் சித்ரா.''அங்க ஒரு வக்கீலோட கட்டடத்தைக் காலி பண்ணுன விவகாரத்துல, மூணு லாரியில பொருட்களைக் கடத்திட்டுப் போயிட்டதா டிஜிபி ஆபீசுக்கே புகார் போச்சே. அந்த மேட்டரா... என்னாச்சு?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''அதே மேட்டர் தான்... டிஜிபி ஆபீஸ்ல இருந்து உத்தரவு வந்தும், ஒழுங்கா விசாரிக்கலைன்னு, அந்த கேசை பீளமேடு இன்ஸ்கிட்ட கொடுத்துட்டாங்க. அவரு தோண்டித்துருவி, மூணு, 'அக்யூஸ்ட்'களைத் துாக்கிட்டாரு. தொலைஞ்சு போன கேஸ் கட்டுல, கால் பங்கையும், 'ரெக்கவரி' பண்ணிட்டாரு. அதுல ஸ்பெஷல் என்னன்னா, சம்மந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்., இந்த, 'அக்யூஸ்ட்'கள்ட்ட எத்தனை முறை பேசிருக்காருங்கிற, 'லிஸ்ட்'டையும் எடுத்துட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அச்சச்சோ... அவரும் அந்த கடத்தல் ஜோதியில கலந்துட்டாரா... அப்பிடின்னா, 'அவார்டு' வாங்குன ஸ்டேஷனோட மரியாதை போச்சா?'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மித்ரா.இருவரும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த மித்ராவின் அம்மா, 'சித்ரா! நீ கூட இருக்கியா... நான் கொஞ்ச நேரம் வெளிய நடந்துட்டு வர்றேன்,'' என்று கிளம்பினார். மியூஸிக் சேனலில், எம்.ஜி.ஆர்., பாடலைப் பார்த்ததும், ஏதோ நினைவுக்கு வந்தவளாய்க் கேட்டாள் சித்ரா...''மித்து... எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவுல, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., கோஷ்டிப் பூசல், பகிரங்கமா வெளிச்சத்துக்கு வந்துருச்சு... கவனிச்சியா?''''தெரியலையேக்கா... அண்ணா சிலைக்குப் பக்கத்துல புதுசா திறந்திருக்குற எம்.ஜி.ஆர்., சிலையில மாலை போடுறதுக்கு, 'மாநகர் மாவட்டம்' வரலைன்னு கேள்விப்பட்டேன்... வழக்கம்போல, கவுண்டம்பாளையத்துல இருக்குற எம்.ஜி.ஆர்., சிலைக்கே மாலை போட்டுட்டு இருந்துட்டாராமே!''
''அதே தான் மேட்டர்... அவரு கடுமையான அதிருப்தியில இருக்காராம். அவரு என்ன சொன்னாலும், எந்த அதிகாரியும் கேக்குறது இல்லியாம். தொகுதியிலயும் பெருசா வேலை நடக்குறதில்லை... சசியை எதிர்த்து, கூவத்துார்ல இருந்து கடைசி நேரத்துல வந்தவரு அவரு தான்... தெரிஞ்சோ, தெரியாமலோ ஓ.பி.எஸ்.,சை ஆதரிச்ச அவரு, இப்போ அவரு மேலயும் நம்பிக்கை இல்லாம இருக்காராம்.''
''அவரு மட்டுமா... நம்ம மாவட்டத்துல எல்லா ஆபீசரும், ஆளுங்கட்சியில அஞ்சு பேரு சொன்னா மட்டும் தான் கேக்குறாங்களாம். இப்பிடியே போனா, அடுத்த தடவை தொகுதிக்குள்ள காலை வைக்க முடியாதுன்னு, மத்தவுங்க எல்லாருக்குமே வருத்தம் தான்!''''அது மட்டுமில்லாம, அவரோட தொகுதியை வேற ஒரு முக்கியமான ஆளு குறி வச்சிருக்காராம்... இப்பவே அவரு சொல்ற வேலைய மட்டும் தான், அதிகாரிகள் செய்யுறாங்களாம்!''
''கரெக்ட்தான்... கார்ப்பரேஷன்லயே, சில பேர்ட்டதான் அதிகாரம் குவிஞ்சிருக்கு... 2014ல இருந்து, மூணே மூணு கம்பெனிகள் தான், எல்லா காண்ட்ராக்ட்டையும் எடுத்திருக்காம். குப்பையில அள்ளுறது ஒரு கம்பெனி; ரோடு, சிவில் ஒர்க்ல, தட்டி எடுக்குது இன்னொரு கம்பெனி; ஆளுங்களை வேலைக்கு எடுக்குற பேருல ஒரு கம்பெனி, அறுவடை பண்றது வேற ஒரு கம்பெனி,'' என்றாள் மித்ரா.''நிஜம் தான் மித்து... இன்ஜினியரிங் முடிச்சிட்டு, 'டேட்டா ஆபரேட்டர்' வேலை பாக்குற பசங்களுக்கு, அஞ்சாயிரம் தான் சம்பளம் தர்றாங்க. ஆனா, 'கவர்மென்ட்'ல வாங்குறது ஒன்பதாயிரம்!'' என்றாள் சித்ரா.
''அதை விட கொடுமை... இவுங்க போடுற ரோடு தான்... இவ்ளோ கேவலமான, 'குவாலிட்டி'யில ரோடு போடுறதை, இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை,'' என்று கொதித்தாள் சித்ரா.''இந்த லட்சணத்துல, 'ஸ்மார்ட் சிட்டி' வேலை நடந்துச்சுன்னா, எப்பிடியிருக்கும்னு யோசிக்கவே முடியலை,'' என்றாள் மித்ரா.
''போன வாரம், கார்ப்பரேஷனை ஆய்வு பண்ணுன, சென்ட்ரல் அர்பன் டெவலப்மென்ட் டிபார்ட்மென்ட் செகரட்டரி, 'ஏன் இன்னும் வேலைய ஆரம்பிக்கலை'ன்னு கேட்டு, துளைச்சு எடுத்திருக்காரு. அதுக்கு, 'எதுக்கெடுத்தாலும் சென்னையில தான் முடிவெடுக்கணும்னு சொல்றாங்க; அதனால தான் 'லேட்' ஆகுது'ன்னு ஆபீசர்க சொல்லிருக்காங்க,'' என்றாள் சித்ரா.பின் அவளே, ''மித்து... அந்த செகரட்டரி ஒண்ணும், கோயம்புத்துாருக்கு ஆய்வு பண்றதுக்கு வரலை; நம்ம ஊர்ல இருக்குற யோகா சென்டருக்கு, இந்த வாரத்துல 25 ஐ.ஏ.எஸ்., அதிகாரிங்க, யோகா கத்துக்க வர்றாங்களாம். இவரும் அதுக்கு வந்துட்டு தான், இங்க ஒரு 'விசிட்' அடிச்சிருக்காரு.
அவுங்க எல்லாருமே, யோகா கத்துக்க வர்றாங்களா, கோயம்புத்துார்ல என்ன வேலை நடக்குதுன்னு 'வேவு' பாக்க வந்திருக்காங்களான்னு தெரியலை,'' என்றாள் சித்ரா.''அக்கா... நீ அந்த இன்ஜினியரிங் பசங்கள்ட்ட வேலை வாங்கிட்டு, பாதிச் சம்பளத்தைக் கொடுக்குறதைப் பத்தி சொன்னியே... அப்பாவி மலைவாசி மக்களுக்கு பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல கடனாக் கொடுத்த பத்தாயிரம் ரூபாயில, ஐநுாறு ரூபா கமிஷன் வாங்கிருக்காரு, ரேஞ்சர் ஒருத்தரு,'' என்றாள் மித்ரா.
''சிவ சிவா... இதெல்லாம் அடுக்குமா?'' என்று ஆவேசமானாள் சித்ரா.''முழுசாக் கேளு...'எக்கோ டூரிசம்' பணியாளர்களா வேலை பாக்குற 'டிரைபல்' மக்கள்ட்ட இந்த பணத்தைப் பறிச்ச மேட்டர், டிஎப்ஓவுக்குத் தெரிஞ்சு, இன்னொரு ரேஞ்சரை வச்சு விசாரிச்சிருக்காரு... உண்மைன்னு தெரிஞ்சதும், அந்த ஐநுாறு ரூபாயில, நானுாறு ரூபாயை அந்த மக்களுக்கே வாங்கிக் கொடுத்துட்டாராம்... ஆனா, இதை வாங்குன சூபர்வைசர், ரேஞ்சர் ரெண்டு பேரு மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை,'' என்றாள் மித்ரா.செய்தி சேனலில் ஏதோ ஒரு செய்திக்காக, கோவை கலெக்டர் அலுவலக கட்டிடத்தைக் காட்டினர்; அதைப் பார்த்ததும் கேட்டாள் சித்ரா...
''நம்ம கலெக்ட்ரேட்ல, பி.ஏ.,ஜி போஸ்ட்டிங்ல, ஒன்றரை வருஷமா யாரையும் நிரந்தரமாப் போடாம, 'அடிஷனல் சார்ஜ்'லயே ஓட்டிட்டு இருக்காங்க... ஏன்னு தெரியுமா?''''அது நல்ல 'பவர்புல'லான போஸ்ட்டிங் ஆச்சே... யாராவது வேண்டப்பட்டவுங்க கிடைக்கிறாங்களான்னு தேடிட்டு இருப்பாங்க,'' என்றாள் மித்ரா.
''நீ சொல்றதும் ஓரளவுக்கு உண்மைதான்... ஆனா, சினிமா தியேட்டர் லைசென்ஸ், ஹோர்டிங்ஸ் விவகாரங்கள்ல 'பர்மிஷன்' கொடுக்குற 'பவர்' இருக்குறதால, இப்போ இருக்குற தலையாட்டி பொம்மைகளை வச்சே ஓட்டலாம்னு ஆளுங்கட்சி ஆளுங்க நினைக்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஆளுங்கட்சின்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வந்துச்சு... புட்டுவிக்கி ரோட்டுலயும், வீரகேரளம் ரோட்டுலயும் தோட்டத்துல இருக்குற கட்டிடங்கள்ல மூணு நம்பர் லாட்டரிகளை ஆளுங்கட்சிக்காரங்க நடத்துறாங்களாம். அங்கேயே சரக்கும் தாராளமா விக்கிறாங்களாம். திருவிழாவுக்குப் போறது மாதிரி ஆளுங்க போயிட்டு வர்றாங்கன்னு ஏரியாக்காரங்க கொதிக்கிறாங்க''மித்ரா சொல்லி முடிப்பதற்குள், 'எக்ஸ்-ரே எடுப்பதற்காக செவிலியர் உள்ளே நுழைய, எழுந்து வெளியே சென்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X