chennai | அசத்தும் 87 வயதான விகடகவி| Dinamalar

அசத்தும் 87 வயதான விகடகவி

Updated : ஜன 23, 2018 | Added : ஜன 23, 2018 | கருத்துகள் (1)
அசத்தும் 87 வயதான விகடகவி

கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலுக்கு மிமிக்ரி செய்தவர்.
அசத்தும் 87 வயதான விகடகவி
நீண்ட நாளைக்கு பிறகு வாய்விட்டு கண்ணில் நீர் வரும் வரை சிரிக்கும்படியான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

நடத்தியவர் 87 வயதான பெரியவர் உடையார்பாளையம் ஆர்.சீனிவாசன்.

சென்னை தி.நகரில் கடந்த 87 ஆண்டுகளாக இயங்கிவரும் ஸ்டெனோ கிராபர்ஸ் கில்டு அமைப்பின் சார்பில ஒவ்வாரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெறுகிறது.

பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் யார் வேண்டுமானாலும் ஜோக் சொல்லலாம் என்பது ஒரு சிறப்பு.சொல்லக்கூடிய ஜோக் பிறர் மனம் புண்படாமல் இருக்கவேண்டும்,அரசியல்,சினிமா,ஆபாசம் தவிர்க்கவேண்டும் என்பது மட்டுமே விதி.

இந்தக்கூட்டத்தில் பேசியவர்தான் 87 வயது ஆர்.சீனிவாசன்.சென்னையைச் சேர்ந்த இவர் ஒரு முன்னாள் ரயில்வே ஊழியர்.இளம் வயதிலேயே விகடம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் அந்தக் காலத்தில் ராமசாமி சாஸ்திரிகள் என்பவர் செய்யும் விகடக்கச்சேரியில் மனம் பறிகொடுத்தார்.

பின் அவரையே தன் மானசீக குருவாகக் கொண்டு விகடக்கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.தனது நண்பர்களுக்கு நடுவில், உறவினர்கள் வீட்டில் என்று ஆரம்பித்த இவரது நகைச்சுவையான விகடக்கச்சேரிக்கு ஆதரவு பெருகவே மேடை ஏற ஆரம்பித்தார்.

பறவைகள் மிருகங்களின் சத்தத்தோடு,பிரபல பாடல்களை எடுத்துக் கொண்டு அதை மாறுபட்ட ராகங்களில் பாடுவது,அப்பா-பிள்ளை போல உரையாடுவது என்பது இவரது விகடக்கச்சேரியின் தனிச்சிறப்பு.கச்சேரியில் நிறைய நல்ல விஷயங்களை கோடிட்டு காட்டுவார்.

அன்றைய நிகழ்ச்சியில் வா வா வாத்யாரே வீட்டண்டே நீ வாரங்காட்டினா விடமாட்டேன் என்ற பாடலை இவர் பாகவதராக மாறி பாடிய போது சிரிக்காதவர்களே கிடையாது.

இப்படி பலரும் ரசிக்கும் விகடகவியாக உருவான இவரைப்பற்றி கேள்விப்பட்ட இயக்குனர் பாலசந்தர் தன்னுடைய அவள் ஒர தொடர்கதை படத்தில் இவரை பயன்படுத்திக் கொண்டார்.

அந்தப்படத்தில் வரும் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற பாடலில் இடம் பெற்ற குயில்,யானை,கன்று,வீணை,தவில்,தவளை,சலங்கை உள்ளீட்ட பலவித மிமிக்ரி சத்தம் இவர் கொடுத்ததுதான்.

இந்தப்பாடல் வெளிவந்து கிட்டத்தட்ட 41 வருடமாகிவிட்டது ஆனாலும் இப்போது கேட்டாலும் அந்தப்பாடல் ரசிக்கும் படியாக இருக்கும்.இவர்தான் அந்த பாடலில் இடம் பெற்ற பலகுரல்களுக்கு சொந்தக்காரர் என்று தெரிந்த பிறகு அவர் மீதான மரியாதை இன்னும் கூடியது.

இவரது திறமையை மதித்து தமிழக அரசு கடந்த 2005ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.இது போது நிறைய பட்டங்கள் அதைவிட நிறைய விருதுகள் .மேடை நடிகராகவும் சில காலம் வலம் வந்தார்.

ஒய்வு பார்த்த வேலைக்கு தானே தவிர நான் செய்துவரும் விகடக்கச்சேரிக்கு கிடையாது என்றபடி முன்னிலும் பிசியாக விகடக்கச்சேரி செய்துவந்தார்,வருகிறார்.அப்பா போதும்பா வயசாயிடுச்சு ஒய்வு எடுங்க என்று பிள்ளைகள் சொன்னாலும் நாலு பேரை சிரிக்க வைப்பது என்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம் அதைவிடுவானேன் என்றபடி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் களம் கண்டு வருகிறார்.

நேர்மையான எளிமையான எதார்த்தமான வாழ்க்கைதான் என் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்று சொல்லும் இவரது மகன் டாக்டர் எஸ். சேகர் மூலமாக இவரிடம் பேசலாம்,அவரது எண்:9790775571.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X