கிராம சபைகளுக்கு உயிர் கொடுப்போம்!| Dinamalar

கிராம சபைகளுக்கு உயிர் கொடுப்போம்!

Added : ஜன 26, 2018 | கருத்துகள் (2)
கிராம சபை, Gram Sabha,சட்ட மேதை அம்பேத்கர்,Ambedkar, சட்டமன்றம், Legislative Assembly, பாராளுமன்றம்,Parliament, மகாத்மா காந்தி,Mahatma Gandhi,  மக்களாட்சி, பஞ்சாயத்து,Panchayat, பொருளாதார முன்னேற்றம், குடியரசு தினம், Republic Day, உள்ளாட்சி தேர்தல்கள், ஜனநாயகம், Democracy,

இந்தியா உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு. சட்ட மேதை அம்பேத்கரின் கூற்றுப்படி
இந்திய ஜனநாயகத்தில் அதிக வலிமையுடையவர்கள் மக்கள். அவர்கள் தங்கள் வலிமையை
வாக்குச்சீட்டின் மூலம் ஜனநாயக முறைப்படி வெளிப்படுத்துகின்றனர். தங்களை ஆள
வேண்டிய பிரதிநிதிகளை மக்களே தேர்வு செய்து கொள்வதால் இந்தியா உலகின் மிகச்சிறந்த நேரடி மக்களாட்சி நடைமுறை கொண்ட நாடாக திகழ்கிறது. சட்டமன்றங்கள், பாராளுமன்றம் போன்றவற்றில் மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளே மக்களுக்காக ஆட்சி நடத்துகின்றனர். ஆனால் கிராம சபை எனும் நிர்வாக அமைப்பில் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமின்றி மக்களும் நேரடியாக பங்கு பெறுகின்றனர்.


கிராம சபை“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது” என்ற காந்தி “கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பொருளாதார முன்னேற்றம்” என்றார். சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக இயங்க வேண்டும், கிராம சுயராஜ்யமே நாட்டின் அடிப்படை நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும் என்பது காந்தி கண்ட கனவு. அவரின் கனவை நனவாக்க
இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாட்டில் பிரிவு 40 பஞ்சாயத்து நிர்வாகம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து நிர்வாகம் திறம்பட செயல்பட உதவுவது இந்த கிராமசபை. அரசியலமைப்பு சட்டப்படி பஞ்சாயத்து நிர்வாக அமைப்புகளில் மிகவும் வலிமை வாய்ந்தது கிராம சபையாகும். இது கிராம ஊராட்சியின் பொதுச்சபை.ஒரு கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்களா என இளைஞர்களிடம் கேட்கும் போது பெரும்பாலானவர்களிடம் வரும் பதில் இல்லை என்பதே.

காரணம் கிராம சபை பற்றியும் அதன் உறுப்பினர்கள் பற்றியும் இன்று போதுமான அளவு
விழிப்புணர்வு இல்லை. இது கவுன்சிலர் போல் மக்களால் தேர்வு செய்யப்படுவது அல்ல.
கிராம ஊராட்சிக்குட்பட்ட 18 வயது நிரம்பிய ஆண், பெண் உட்பட அனைவரும் கிராம சபை உறுப்பினர்களாவர். இதன் மூலம் கிராமத்தின் வளர்ச்சியில் ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் என
எவ்வித பேதமின்றி அனைவரும் பங்கெடுக்கக்கூடிய ஒரு வெளிப்படையான ஜனநாயக அவையாக கிராம சபை அமைகிறது.

கிராமத்திலிருக்கும் இளைஞர், முதியோர், பெண்கள், ஆசிரியர்கள்,அரசு அலுவலர்கள் என பலதரப் பட்ட மக்களின் அனுபவம், அறிவாற்றல் ஆகியவை எளிதாக கிடைக்கிறது. இவை கிராம
வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவதிலும், வெளிப்படை நிர்வாகத்திற்கும் அடித்தளமிடுகிறது.


கிராமசபைக்கூட்டம்அடித்தட்டு மக்களுக்குஅதிகாரம் அளிக்கும் நேரடி மக்களாட்சியின் சிறந்த மாண்பாக கருதப்படும் கிராம சபைஆண்டுக்கு நான்கு முறை (அதாவது, ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி) கூட்டப்படும். இவை தவிர கிராம ஊராட்சித் தலைவர் விரும்பும் போது சிறப்புக் கூட்டங்களை நடத்தலாம்.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு கிராம சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். பொதுவாக கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் நடைபெறும். உள்ளாட்சி நிர்வாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத போது மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரைப்படி உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி செயலாளர்கள் கிராம சபைக் கூட்டத்தினை நடத்துகின்றனர்.

கிராம சபைக் கூட்டம் பற்றிய அறிவிப்பு ஏழு நாட்களுக்கு முன்பேமக்களுக்கு தெரிவிக்கப் படவேண்டும். கிராமத்தில் படிப்பறிவில்லாத மக்கள் இருந்தால் கிராமசபைக் கூட்டம் பற்றிய
அறிவிப்பினை தண்டோரா மூலம் அறிவிக்க வேண்டும். கிராம பொது மக்கள் கூடும் பொது இடங்களான குடிநீர்த் தொட்டி, சத்துணவுக்கூடம்,கலையரங்கம், தொலைக்காட்சி அறை, பள்ளிக்கூடம், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் மீது கிராம சபைக் கூட்டம் பற்றி இடம், தேதி, நேரம் உட்பட அறிவிப்பு ஒட்டப்பட வேண்டும். ஒரு சில ஊராட்சிகள் கிராம மக்கள் அதிகளவு கலந்து கொள்ள வேண்டி வீடுதோறும் துண்டு பிரசுரங்கள் வழங்குகிறது.


கிராம சபையின் முக்கியத்துவம்கிராம பொது மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட கிராம சபை, வருடாந்திர வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விவாதம் செய்து ஒப்புதல் வழங்குதலை முக்கிய பணியாக கொண்டுள்ளது. கிராம ஊராட்சியின் வரவு செலவுதிட்டங்கள் மார்ச் 31க்கு முன் வைக்கப்படும். அதை கிராம சபை
பரிசீலித்து ஒப்புதல் வழங்குதல். பள்ளி, சுகாதார வளாகம், கலையரங்கம், விளையாட்டுத்
திடல், குடிநீர்த்தொட்டி போன்ற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உரிய இடவசதி அளித்து ஒப்புதல் வழங்குதல். அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறும் கிராம மக்களின் பயனாளிகள் பட்டியலுக்கு ஒப்புதல் தருதல்.கிராமத்தில் ஜாதி, மத நல்லிணக்கத்தை வளர்த்தல்.
கிராமத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், கடந்த ஆண்டு கிராம ஊராட்சி யில் செயல்படுத்தப்பட்ட பணிகளை ஆய்வு செய்தல் என பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை கிராம சபை மேற்கொள்கிறது. ஆனால் இவற்றில் எல்லாம் மக்களாகிய நாம் பங்கு கொள்கிறோமா என்பது தான்
இன்றைய கேள்வி.


வலுவிழக்கும் கிராம சபைஇப்படி சிறப்பான முறையில் வெளிப்படையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வரும் இந்த கிராம சபைகள் இன்று தனது வலிமையை முழுமையாக இழந்து வருகிறது. ஏனெனில், உள்ளாட்சி தேர்தல்கள் மற்ற தேர்தல்களைப் போல் முறைப்படி நடப்பதில்லை. கிராம சபைக்கு மாநில அரசின் ஆதரவு சரியாக கிடைப்பதில்லை.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத போது கூட்டங்களை நடத்த ஆர்வமின்மையும் ஒரு காரணம். தாங்கள் கிராம சபையின்
உறுப்பினர்கள் என்பதை மக்கள் பலர் அறிந்திருக்காதது பெரும் குறை.கிராம சபையின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டியது தற்போதய அவசியம்.

கிராம சபை என்பது அரசியல், கல்வியை மக்களுக்கு நேரடியாகப் புகட்டும் இடமாகும். முன்பு கிராம நிர்வாகத்தின் ஆணிவேராக நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் இன்று ஒரு சம்பிரதாய கூட்டமாகவே நடைபெறுகிறது. மக்களை எஜமானர்களாகக் கொண்ட நமது ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத அங்கமான கிராம சபையை, கால ஓட்டத்தில் நீர்த்துப் போகசெய்யாமல் தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமை மக்களாகிய நம்மிடமே உள்ளது.

-முனைவர்.

சி.செல்லப்பாண்டியன்
உதவிப் பேராசிரியர்

தேவாங்கர் கலைக்கல்லுாரி
அருப்புக்கோட்டை
78108 41550

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X