பத்து லட்சம் ரூபாய், 'டார்கெட்' வெடி...பணம் தராதவர்கள் பட்டியல் ரெடி!

Added : ஜன 29, 2018
Share
Advertisement
எலும்பு மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகி, வீட்டில் ஓய்வில் இருந்தாள் மித்ரா. அவளைப் பார்ப்பதற்காக, சில புத்தகங்களுடன் வந்தாள் சித்ரா.''அக்கா... நீயாவது பழம், ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வராம, 'புக்ஸ்'களை வாங்கிட்டு வந்தியே... ரொம்ப தேங்க்ஸ்!'' என்றாள் மித்ரா.''இந்த ஒரு மாசம் தான், உனக்குப் படிக்க, 'டைம்' கிடைக்கும்... அதுக்கு அப்புறம், படிக்கிறதுக்கு ஏது நேரம்
பத்து லட்சம் ரூபாய், 'டார்கெட்' வெடி...பணம் தராதவர்கள் பட்டியல் ரெடி!

எலும்பு மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகி, வீட்டில் ஓய்வில் இருந்தாள் மித்ரா. அவளைப் பார்ப்பதற்காக, சில புத்தகங்களுடன் வந்தாள் சித்ரா.''அக்கா... நீயாவது பழம், ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வராம, 'புக்ஸ்'களை வாங்கிட்டு வந்தியே... ரொம்ப தேங்க்ஸ்!'' என்றாள் மித்ரா.''இந்த ஒரு மாசம் தான், உனக்குப் படிக்க, 'டைம்' கிடைக்கும்... அதுக்கு அப்புறம், படிக்கிறதுக்கு ஏது நேரம் இருக்கப் போகுது?'' என்றாள் சித்ரா.''அக்கா... என் பையன் படிக்கிறதால, மார்ச் வரைக்கும், 'டைம்' கொடுங்கன்னு, டிரான்ஸ்பரை தள்ளிப் போட்டாராமே, நம்ம மாவட்ட ஆபீசர்!'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து... அவரோட இடத்துக்கு வர்றதுக்கு பயங்கர போட்டி... ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்களைப் பிடிச்சு, இங்க வர்றதுக்கு முரளீதரன்னு ஒருத்தர், 'டிரை' பண்றாராம். மார்ச் வரைக்கும், 'வெயிட்' பண்ண முடியாதுன்னு, கோயம்புத்துார், 'கார்ப்பரேஷன் போஸ்ட்டிங்'குக்கு குறி வச்சிருக்காராம்,'' என்றாள் சித்ரா.''இல்லியேக்கா... அங்க மோகன்னு ஒருத்தர் தான் வர்றதா சொல்லிட்டு இருந்தாங்களே,'' எனக் குறுக்குக் கேள்வி கேட்டாள் மித்ரா.''உண்மை தான்... ஆனா, அவரோட மனைவியும், இதே டிபார்ட்மென்ட்ல ஜாயின்ட் செகரட்டரி பொறுப்புல இருக்காங்களாம். அதனால, அவருக்குப் போடக்கூடாதுன்னு, ஒரு 'குரூப்' கொடி துாக்கிருக்காம். அநேகமா, இந்த, 'போஸ்ட்டிங்'குக்கு முயற்சி பண்ற ஆபீசருங்கதான் இதைச் செஞ்சிருக்கணும்,'' என்றாள் சித்ரா.''யாரு வந்தாலும், இங்க ஆளுங்கட்சி ஆளுங்களுக்கு அடிமையாத்தான் இருக்கணும்; சுயமா ஒண்ணும் செய்ய முடியாது... அப்புறம் யாரு வந்தா நமக்கென்ன?'' என்று விரக்தியாய்ப் பேசினாள் மித்ரா.''இப்பிடித்தான் ஆளுங்கட்சி பேரைச் சொல்லிட்டு, ஊருக்குள்ள பல பேரு, பல வேலைகளைச் செஞ்சிட்டு இருக்காங்க. ஆனா, அதெல்லாம், அந்த ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்களுக்குத் தெரிஞ்சுதான் நடக்குதான்னே சந்தேகமா இருக்கு!'' என்றாள் சித்ரா.''கரெக்ட்க்கா... துடியலுார், பன்னிமடை பெரியநாயக்கன்பாளையம் ஏரியாக்கள்ல, தனியா இருக்குற வீடுகள்ல, சூதாட்ட கிளப், ஒரு நம்பர் லாட்டரி எல்லாம் ஜோரா நடக்குது... இதை நடத்துறவுங்க, பல கேஸ்கள்ல உள்ள போயிட்டு வந்த, 'அக்யூஸ்ட்'களாம்... இவுங்க எல்லாம் சேர்ந்து, 'பிரைவேட் பாங்க்'ல ஒரு அக்கவுண்ட் நம்பர்ல, தினமும், 10 ஆயிரம் ரூபா போடுறாங்களாம். அது ஒரு ஆளுங்கட்சி ஆளோட அக்கவுண்ட்ன்னு சொல்றாங்க. உண்மையான்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.''புட்டுவிக்கி ரோட்டுலயும், வீரகேரளம் ரோட்டுலயும் மூணு நம்பர் லாட்டரி நடத்திட்டு இருக்காங்கன்னு பேசிட்டு இருந்தோமே... அதை 'க்ளோஸ்' பண்ணிட்டாங்க. ஆனா, பேரூர் படித்துறைக்குப் பக்கத்துல, ஒரு தோட்டத்துல அமோகமா நடக்குதாம். போலீசுக்கு வலுவா மாமூல் போகுது போலிருக்கு... அதை நடத்துறது, 'பண்ட்' பட்டப் பேரைக் கொண்ட ஆளுங்கட்சி ஆளுன்னு தான் சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.''மாமூலைப் பத்திப் பேசவும், எனக்கு காந்திபுரம் ஸ்டேஷன்ல கிரைம் பாக்குற ஒரு போலீஸ் ஆபீசரோட ஞாபகம் வந்துச்சு. பேருல சக்கரை வச்சிருக்குற அந்த ஆபீசர், பஸ் ஸ்டாண்ட் ஏரியாவுல பிக் பாக்கெட் அடிக்கிறவன்ல ஆரம்பிச்சு, கஞ்சா, லாட்டரி விக்கிற அத்தனை கிரிமினல்கிட்டயும் தினசரி மாமூல் வாங்குறாராம். இதுக்காகவே, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல ஒரு ரூம் வச்சிருக்காராம். அங்க வந்து மாமூலை வச்சிட்டுப் போயிரணுமாம்,'' என்றாள் மித்ரா.''சிட்டிக்குள்ள இப்பிடி நடக்குதுன்னா, ரூரல்ல, வேற மாதிரி கலெக்ஷன் நடக்குது... சூலுார், கருமத்தம்பட்டி 'லிமிட்'கள்ல இருக்குற அவினாசி ரோடு, திருச்சி ரோடுகள்ல 'பேட்ரோல்' வண்டிங்க ரெண்டு ஓடுது. இதுக்கான டீசல், பராமரிப்புச் செலவு எல்லாமே, 'என்.எச்.,அதாரிட்டி'ல இருந்து கொடுக்குறாங்க. ஆனா, அந்தப் பணம், இவுங்களுக்குப் போறதே இல்லியாம்!'' என்றாள் சித்ரா.''அப்பிடின்னா, இந்த வண்டிங்க எப்பிடி ஓடுது?'' என்று கேட்டாள் மித்ரா.''அவுங்க வண்டிங்களை மறிச்சு, நாலு கேசைப் போடுறாங்க. அதுல ரெண்டுல காசை வாங்கிட்டு, செலவுக்கு வச்சுக்குறாங்க... அந்த ரோடுகள்ல வர்ற டேங்கர் லாரிகள்ல இருந்து டீசல், பெட்ரோல் திருடுறது வழக்கமா நடந்துட்டு இருக்காம். அதை இந்த 'பேட்ரோல்'காரங்க கண்டு பிடிச்சு, வண்டிக்குத் தேவையான டீசலை அங்க வாங்கிக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.பழங்களை நறுக்கி, தட்டில் வைத்துச் சென்றாள் மித்ராவின் அம்மா. அதைச் சுவைத்துக்கொண்டே, 'டிவி'யைப் போட்டாள் சித்ரா. செய்தி சேனலில், மணல் தட்டுப்பாடு பற்றி, செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து விட்டு, மித்ரா கேட்டாள்...''என்னக்கா... ஆலாந்துறை பக்கத்துல நொய்யல்ல இருந்து மானாவாரியா மணல் திருடுறாங்களாமே!''''ஆமா மித்து... தொம்பிலிபாளையம், நாதே கவுண்டன்புதுார் ஏரியாக்கள்ல, வண்டி வண்டியா மணல் திருடுறாங்க. சில வண்டிகளோட நம்பர்களைக் கொடுத்து, 'இந்த வண்டியெல்லாம் விட்ருங்க'ன்னு, ஆளுங்கட்சி தரப்புல இருந்து பட்டியல் கொடுத்து இருக்காங்களாம். ஆனா, கணக்கு வழக்கு இல்லாம, ஏகப்பட்ட வண்டிகள்ல மணல் எடுத்துட்டுப் போறாங்க; கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் யாருமே கண்டுக்கிறதே இல்லை!''''ரெவின்யூ ஆபீசருங்க, இதை மட்டுமா கண்டுக்க மாட்டேங்கிறாங்க... அன்னுார் பக்கத்துல இருக்குற நாரணாபுரம், பொன்னே கவுண்டன் புதுார், காரேகவுண்டம்பாளையம் சுத்து வட்டாரத்துல, பகிரங்கமா கள்ளு இறக்குறாங்க; போலீஸ்காரங்க துட்டை வாங்கிட்டு விட்டுர்றாங்க; இந்த ரெவின்யூ ஆபீசர்களும், 'கம்'முன்னு இருக்காங்க!''''இப்பல்லாம் மக்கள் கொடுக்குற எந்தப் புகாருக்கும் எந்த 'எபக்ட்'டும் இருக்குறதில்லை... கள்ளிமடை ஏரியாவுல, மூணு 'பப்ளிக் டாய்லெட்'கள்ல இருந்தும் வர்ற கழிவுநீரைத் தேக்குறதுக்கு ஒரு சின்னத்தொட்டி கட்டிருக்காரு காண்ட்ராக்டர். அது, தினமும் நிரம்பி ரோட்டுல வழியவும், இப்போ சின்னதா ஒரு சாக்கடை கட்டி, நேரா பொது சாக்கடையில இணைச்சு விட்டுட்டாராம்,'' என்றாள் சித்ரா.அடுத்ததாக 'அம்மா' ஸ்கூட்டர் மானியம் குறித்த செய்தியைப் பார்த்ததும், அடுத்த மேட்டருக்குத் தாவினாள் சித்ரா...''மித்து... 'அம்மா' ஸ்கூட்டருக்கு மானியம்னு அறிவிச்சதும், லைசன்ஸ் எடுக்க ஆர்டிஓ ஆபீசுக்கு வர்ற லேடீஸ் கூட்டம், ரெண்டு மூணு மடங்கு அதிகமாயிருச்சு. அதனால, புரோக்கர்களும், ஆபீசர்களும் எல்.எல்.ஆர்.,க்கு வாங்குற லஞ்ச ரேட்டை ரெண்டு மடங்கா உயர்த்திட்டாங்களாம்!''''இதுக்குப் பின்னணி வேற இருக்குக்கா... நம்மூர்ல இருக்குற பெரிய டிரான்ஸ்போர்ட் ஆபீசர் அடுத்த வருஷம் 'ரிட்டயர்டு' ஆகப்போறதால, இப்போ நம்ம மாவட்டத்துல எட்டு ஆர்டிஓ ஆபீசு, 'செக்போஸ்ட்'ல இருக்குற முக்கியமான ஆபீசர்க எல்லாரும், தலைக்கு பத்து லட்ச ரூபா தரணும்னு லஞ்சத்துக்கு 'டார்கெட்' பிக்ஸ் பண்ணிருக்காராம். அதைக் கொடுக்காதவுங்களோட பட்டியல் இப்போ ரெடி பண்ணிருக்காராம். சீக்கிரமே 'டிரான்ஸ்பர்' வரும்னு பேசிக்கிறாங்க!''''முருகா... முருகா... இதெல்லாம் எப்ப முடிவுக்கு வருமோ?''''நீ முருகனைக் கூப்பிட்டதும், அவரோட இன்னொரு பேரைக் கொண்ட பாரஸ்ட் ஆபீசரைப் பத்துன ஒரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு... மதுக்கரை ரேஞ்ச்ல, பத்து தேக்கு மரங்களை வெட்டிருக்காங்க... விசாரிச்சா, இந்த ஆபீசரோட புது வீட்டுக்குத்தான் வெட்டுனதா, பாரஸ்டரும், கார்டும் சொல்றாங்களாம்... ஆனா, சில மரங்களை வித்ததா தகவல் வருது!'' என்றாள் மித்ரா.''இங்க இப்பிடியா... தொண்டாமுத்துார் பக்கத்துல கொசவன் குள்ளிங்கிற கிராமத்துல தற்காலிகப் பாலம் கட்டுறதுக்கு ஏழு சிமெண்ட் குழாய் வாங்கி, அதுல நாலை நரசிபுரத்துல ஒருத்தருக்கு வித்திருக்காங்க. கலெக்டர்ட்ட புகார் போன பிறகு, திரும்பவும் கொண்டு வந்து வச்சுட்டாங்க. ஆனா, அந்த பிடிஓ, ஏஇ மேல ஒரு நடவடிக்கையும் எடுக்கலை,'' என்றாள் சித்ரா.''கவர்மென்ட் மாறுற வரைக்கும், எந்த ஆபீசர் மேல என்ன புகார் சொன்னாலும் நடவடிக்கை இருக்காது,'' என்று விரக்தியாய்ப் பேசினாள் மித்ரா.''உடன் பிறப்புகள் அடிச்சுக்கிறதைப் பார்த்தா, கருத்துக் கணிப்புல மட்டும் தான், அவுங்க ஜெயிப்பாங்க போலிருக்கு... பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க.,வுல 'பத்மாலயா'காரரோட உரசுற அரசு, ஒன்றியத்தை ரெண்டாப் பிரிக்கணும்னு போராடுறாராம். ஒன்றியம், 'ரெண்டே வேண்டாம்; மூணாப் பிரிங்க'ன்னு சொல்றாராம்,'' என்றாள் சித்ரா.மித்ராவைப் பார்க்க, உறவினர்கள் சிலர் வந்ததால், இருவரும் அரட்டைக்கு இடைவேளை விட்டனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X