உண்மையான நட்பின் அடையாளம் என்ன?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

உண்மையான நட்பின் அடையாளம் என்ன?

Updated : பிப் 01, 2018 | Added : பிப் 01, 2018
Advertisement
உண்மையான நட்பின் அடையாளம் என்ன?

பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு என்றாலும், இரயில் சிநேகமாய் வழித்தடங்களில் பூக்கும் இன்ஸ்டன்ட் நட்பு என்றாலும்… நம் வாழ்வில் அவசியமான ஒரு உறவாக அது மாறிவிடுகிறது. நட்புறவுகள் பல்வேறு பருவங்களில் பல்வேறு சூழல்களில் ஏற்பட்டாலும், எது உண்மையான நட்பு என்பதில் குழப்பம் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறது? சத்குருவின் இந்த உரை, உண்மையான நட்பு எது என்பதை அறுதியிட்டு காட்டுகிறது!
கேள்வி சத்குரு, நட்பின் பொருள் என்ன?
சத்குரு: உங்களுடைய எண்ணப்போக்கு, உணர்தல், புரிதல், விருப்பு மற்றும் வெறுப்புகளுக்குத் துணையாக இருப்பவர்களுடனேயே எப்போதும் நீங்கள் நட்பு கொள்கிறீர்கள். நீங்கள் தேடுவதெல்லாம், உங்களுக்குள்ளிருந்து வெளிப்படும் அர்த்தமற்ற விஷயங்கள் என்னவாக இருந்தாலும், அதற்கு உறுதுணையாக இருக்கும் ஒரு நபரைத்தான்.
கடந்த வருடத்தின் பனிக்காலத்தில் இது நிகழ்ந்தது. சின்னஞ்சிறு பறவை ஒன்று, வேனிற்காலத்தை சற்று அதிக நாட்கள் அனுபவித்துவிட்டதால், சரியான காலத்தில் விரைவாக, தெற்கு நோக்கிய வலசைப் பயணம் தொடங்கத் தவறிவிட்டது. பனிப்பொழிவு துவங்கிய பிறகு தாமதமாக வலசைப் பயணம் ஆரம்பித்து, பறந்து செல்ல முயற்சித்தது. ஆனால் அதிகப் பனியினால் உடல் விறைத்துக் கீழே விழுந்தது. அந்த வழியே வந்த ஒரு பசு மாடு, சாணமிட்டவாறு சென்றது. சாணம் மிகச் சரியாக அந்தப் பறவை மீது குவியலாக விழுந்து, அதை மூடிவிட்டது. சாணத்தின் இதமான சூட்டினால் விறைப்பு நீங்கி, நலமடைந்துவிட்ட பறவை மகிழ்ச்சியில் கீச்சிடத் தொடங்கியது. அந்த வழியே ஒரு பூனை சென்று கொண்டிருந்தது. பறவையின் குரலைக் கேட்ட பூனை சுற்றுமுற்றும் பார்த்ததில், சாணக் குவியலுக்குள்ளிருந்து கீச்சொலி வருவதைக் கண்டது. உடனே சாணத்தைத் தள்ளி, பறவையைச் சாணத்திலிருந்து கவ்வி இழுத்து, சாப்பிட்டுவிட்டது. இந்த கதையின் நீதி என்னவென்றால், அசிங்கத்தால் உங்களை நிறைப்பவர் உங்கள் எதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அசிங்கத்திலிருந்து உங்களை வெளியில் எடுப்பவரும் உங்கள் நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அனைத்திலும் நீங்கள் ஒன்றை குறிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும் - அதாவது நீங்கள் அசிங்கத்திற்குள் இருக்கும்பொழுது, வாய்மூடி இருப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் நண்பர்களிடம் உள்ள குறைகளை எப்போதும் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அது முக்கியம் அல்ல. ஆனால் அதேநேரத்தில் அவர்களிடையே இருக்கும் உங்கள் செல்வாக்கை இழப்பதற்கும் உங்களுக்குத் துணிவு இருக்க வேண்டும். நண்பர்களிடையே புகழ்பெறும் முயற்சியில், உங்களைச் சுற்றிலும் ஏதோ ஒருவித இனிமையை நிலைநாட்டும் முயற்சியில், உங்களுக்குள் எவ்வளவு இனிமையற்ற தன்மையை நீங்கள் புதைத்து வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள். இனிமையற்றதை புதைத்தால், இனிமையற்றதைத்தான் நீங்கள் அறுவடை செய்வீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அந்தத் தோழியுடன் அல்லது தோழனுடன் செல்வாக்கில்லாமல் இருக்கவும் உங்களுக்கு துணிவு வேண்டும். அதேநேரத்தில் அவருடன் அன்புடனும், நட்புடனும் இருக்க வேண்டும். தற்போது உங்களது நட்புறவுகள் எப்போதும் உடன்படிக்கைகள் மற்றும் விருப்பு வெறுப்புகளினால் மட்டுமே உருவாகியுள்ளது. ஆனால் நீங்கள் நெல்லிக்கனியும், நாவல்கனியுமாக இருவேறுபட்டவர்களாக இருந்தாலும், அப்போதும் நீங்கள் நல்ல நண்பர்களாக இருக்க முடியும். ஒரு உண்மையான நண்பனாக இருப்பவர், உங்கள் தவறுகளை உங்களிடம் எடுத்துக் கூறும் துணிச்சலுடன், மேலும் அன்புடனும் நட்புடனும் இருக்கிறார் - அதுதான் நட்புறவு.
ஒருநாள் அமெரிக்க நாட்டின் மூன்று தளபதிகளும் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் தத்தமது படையினருடன் கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கிற்கு வந்திருந்தனர். முதல் தளபதி தனது படைப்பிரிவினரின் கீழ்ப்படிதல் மற்றும் வீரத்தைப் பற்றி பெருமை பேசிக்கொள்ள விரும்பினார். ஆகவே அவர் கூறினார், “என் படைப்பிரிவைப் போன்று வேறொன்று இல்லை. உயரிய வீரமும் கீழ்ப்படிதலும் அமைந்தவர்கள் என் வீரர்கள். உங்களுக்கு ஒரு உதாரணம் காட்டுகிறேன்” என்றவர், “பீட்டர்” என்று முழங்கினார். பீட்டர் ஓடோடி வந்து, “உள்ளேன், ஐயா” என்றான். “இதைப் பார்த்தாயா” என்றபடி தளபதி, கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கைச் சுட்டிக்காட்டினார். “இந்தப் பள்ளத்தாக்கை நீ அப்படியே தாவிக் கடக்க வேண்டும், இப்பொழுதே!” அந்த வீரன் முழுவேகத்தில் ஓடித் தாவினான். அவன் எங்கே சென்றிருப்பான் என்பது உங்களுக்குத் தெரியும். இதைக்கண்ட இரண்டாவது தளபதி சிரித்தவாறு கூறினார், “அது ஒன்றுமில்லை, இதைப் பாருங்கள்” என்றபடி “ஹிக்கின்ஸ்” என்றழைத்தார். “உள்ளேன் ஐயா,” ஹிக்கின்ஸ் அவர்முன் நின்றான். ஒரு அவசரம்! நீ பறந்து சென்று, பள்ளத்தாக்கைக் கடந்து அங்குள்ள என் அதிகாரியிடம் இதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்.” உடனே தன் கைகளை விரித்து படபடத்தவாறு பறக்கத் துவங்கிய வீரனுக்கு நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்கள். மூன்றாவது தளபதி அமைதியாகவே இருந்தார். அவரை இடித்துரைத்த மற்றவர்கள், “உங்களது படை எப்படி?” என்று சிரித்தனர். “உங்கள் படை வீரம் அற்றது” என்றும் கேலி பேசினர்.
இந்தத் தளபதியின் வீரர்கள் அங்கே நடமாடிக் கொண்டிருந்தனர். ஆகவே கை தட்டி அவர், “இங்கே வா” என்றழைத்ததும், அவர்களில் ஒரு வீரன் வந்தான். தளபதி, சற்றுத் தொலைவில் ஓடிக் கொண்டிருந்த காட்டாற்றை சுட்டிக்காட்டி, “இந்தச் சிறிய படகில் நீ அந்த ஆற்றைக் கடக்க வேண்டும்” என்றார். காட்டாற்று வெள்ளம் அதிக உயரத்திலிருந்து பெரும் நீர்வீழ்ச்சியாக விழுந்து ஆறாகத் தொடங்கும் இடம் அது. எனவே அதிக வேகத்துடனும் சுழல்களுடனும் ஓடிக் கொண்டிருந்தது அந்தக் காட்டாறு. காட்டாறைப் பார்வையிட்ட அவன், “தளபதி, நீங்கள் அதிகமாக மது அருந்திவிட்டது போலத் தோன்றுகிறது. அப்படி ஒரு படுமுட்டாள்தனமான செயலை நான் செய்யப் போவதில்லை!” என்றான். மற்ற தளபதிகளிடம், “பாருங்கள், இதுவே உண்மையான வீரம்” என்றார் மூன்றாவது படைத்தளபதி. உங்களது நட்புறவுகளில் சிறிது கூடுதலான துணிவுடன் இருங்கள். அவர்களை இழப்பதற்குத் தயாராக இருங்கள், அது பரவாயில்லை. குறைந்தபட்சமாக, நீங்கள் அவர்கள் மீது அக்கறையுடன் இருந்தால், அவர்களுக்குத் தேவையான நல்லதை செய்வீர்கள், உங்களுக்குத் தேவையான நல்லதை அல்ல. எனக்கு அறிமுகமான ஒரு மருத்துவர் பீர் அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஏறக்குறைய தனது எழுபது வயதில், பெரும் வயிறுடைய பெருத்த மனிதனாக இருந்தார். சமீபகாலம் முன்பு வரை, அவர் தினமும் ஒரு நண்பரைக் காணச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருந்தார். இவர் அங்கு போகும்போதெல்லாம், நண்பர் பீர் பரிமாற, இருவரும் அருந்திக் கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வசதிப்படி அவரது நண்பரும் இங்கு வருவதுண்டு, மருத்துவரும் அங்கு போவதுண்டு. திடீரென்று ஒரு நாள், மருத்துவரின் நண்பர் ஒரு குருவைச் சந்தித்ததோடு, ஆன்மீகப் பயிற்சிகள் செய்யத் தொடங்கியதுடன், பீர் அருந்துவதையும் நிறுத்திவிட்டார். இந்தக் கதையை மருத்துவர் என்னிடம் மிகவும் விலாவாரியாகக் கூறி அப்படியாக ஒரு மகத்தான நட்பு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறினார். அதற்குப்பிறகு ஒருபோதும் அவரது வீட்டிற்கு மருத்துவர் செல்லவில்லை. காரணம், நண்பர் இவருக்கு பீர் பரிமாறுவதை நிறுத்தியிருந்தார். அநேக நட்புறவுகள் இந்தவிதமாகத்தான் இருக்கின்றன. ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டிருக்கும் வரையில், நட்பு இருக்கிறது. அது நின்றுபோகும் கணமே, எல்லாம் போய்விடுகிறது.
முதலில், ஒரு நண்பர் என்பதன் பொருள் என்ன? ஒரு நண்பராக இருப்பவரும் உங்களைப் போலவே மற்றொரு குழப்பமான மனிதர். நண்பர் என்றால், அவர் ஒரு கனகச்சிதமான மனிதர் என்று பொருளல்ல. இருவர், போதுமான தளர்வுநிலையில், ஒருவரை ஒருவர் நேர்மையாக அணுகினாலே, அந்த இருவரும் நண்பர்களாகிறார்கள். உங்களது நண்பரும் கூட நீங்கள் இருப்பதைப் போன்றே குளறுபடியுடன்தான் இருக்கிறார். ஆனால் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் இருக்க முடிந்தால், பிறகு அவர் உங்களுக்கு நண்பராகி விடுகிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X