இருக்கு... ஆனா இல்லை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

இருக்கு... ஆனா இல்லை!

Added : பிப் 02, 2018
இருக்கு... ஆனா இல்லை!

இது மிகவும் சிறந்த பட்ஜெட். மூன்று வகைகளில் வருவாய் ஆதாரங்களை நிதி அமைச்சர் உருவாக்கியுள்ளார். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு மற்றும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்கிறது.

இரண்டாவது, பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும். மூன்றாவது, சுங்க வரி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இவ்வாறு கிடைக்கும் நிதி, நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள், சிறு நகரங்களில் வை - பை வசதி, ரயில்வே, விமான நிலையங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிடப்படும்.
அந்த வகையில், இந்த பட்ஜெட் சிறந்தது. ஆனால், இதனால், நாட்டு மக்களுக்கு உண்மையான நேரடி பலன் கிடைக்காது.
ஊரக சாலைகள், நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு அளிக்கப்படும் என, நிதியமைச்சர் கூறியுள்ளார். இதனால், விவசாய உற்பத்தி நிச்சயம் அதிகரிக்கும்.
ஆனால், விவசாயிகளின் வருவாய் உயருமா? சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டின் விவசாய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் விவசாயிகள் தற்கொலையும் உயர்ந்து வருகிறது.
அதிக உற்பத்தி செய்ததால், ஒரு கிலோ உருளைக்கிழங்கை, இரண்டு ரூபாய்க்கு கூட விற்க முடியாமல் விவசாயிகள் கடந்தாண்டு தவித்தனர். உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க, அதன் விலை குறைந்து விடுகிறது.
அடிப்படை ஆதார விலை, உற்பத்தி செலவை விட, 1.5 மடங்கு அதிகம் வழங்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆதார விலை எப்போதுமே, உற்பத்தி செலவை விட அதிகமாகவே இருக்கும். 1.2 மடங்கு அதிகமாக பெற்றபோதும், விவசாயிகளுக்கு பிரச்னை தீரவில்லை. அதனால், 1.5 மடங்காக உயர்த்துவதால் மட்டும் பிரச்னை தீராது.
உலகெங்கும் விவசாயம், நஷ்டத்தில் இயங்கும் தொழிலாக மாறியுள்ளது. அதனால்தான், விவசாய வருவாயை விவசாயிகளுக்கு நேரடியாக அளிக்கும் திட்டத்தை வளர்ந்த நாடுகள் மேற்கொள்கின்றன. தோராய கணக்கின்படி, உரம், உணவு மற்றும் பாசன மானியமாக, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. இதை, 10 கோடி விவசாயிகளுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயாக நேரடியாக வழங்கினால், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பல்வேறு சமூக நல திட்டங்கள், உண்மையில் அதன் பயனாளிகளுக்கு எந்த பலனையும் அளிப்பதில்லை. உணவு மானிய திட்டத்தில், ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமையை, ஒரு ரூபாய்க்கு அளிப்பதால் எந்த பலனும் இல்லை. அதே நேரத்தில் மிகப் பெரிய நிறுவனங்களால் அவர்களது வேலை பறிக்கப்படுகிறது.
பெண்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால், சமையல் காஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேக் இன் இந்தியா என்பதற்கும், வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை நிதி அமைச்சர் உணர வேண்டும்.
இந்த பட்ஜெட்டில் உள்ள ஒரு நல்ல அறிவிப்பு, சிறிய நகரங்களில், வை - பை வசதியை ஏற்படுத்துவது. இதனால், கிராமத்தில் உள்ளவர்களுடைய வருமானம் அதிகரிக்கப் போகிறது.
வெளிநாடுகளில் இருந்து அவர்களுக்கு ஆர்டர்கள் வரப் போகின்றன. ஆன்லைனில் படித்து, மாணவர்கள் அறிவை வளர்க்கப் போகின்றனர் என. அரசு நினைக்கிறதா? அதைவிட மாவட்டந்தோறும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மையங்களை அமைக்கலாம்.
மிகப்பெரிய முதலீட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் பளபளக்கும். மக்கள் வேலை இல்லாமல், மானிய விலை அரிசியை சாப்பிட்டு, அந்த நெடுஞ்சாலைகளில், வை - பை வசதியை பயன்படுத்தி சுகமாக இருப்பர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X