உடுமலை;தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து, காய்கறி சாகுபடி செய்ய, தெளிப்புநீர் பாசனத்தை பயன்படுத்த விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
உடுமலையில் கிணற்று பாசனத்துக்கு மக்காச்சோளம், தென்னை உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கணிசமான பரப்பளவில் தக்காளி, பீட்ரூட், வெங்காயம் உள்ளிட்ட அனைத்து விதமான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது.
உடுமலை சுற்றுவட்டாரத்தில் கடந்த இரண்டாண்டுகளாக பருவமழை குறைவாக பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது. பாசன கிணறுகள் வறண்டதால் பயிர்களை காப்பாற்றுவதற்கு தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தென்னை போன்ற நிரந்தர பயிர்களுக்கும், தக்காளி, கத்தரி மிளகாய் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட குறுகியகால பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.
இந்நிலையில் மேலும் வறட்சி அதிகரித்து தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை, சமாளிக்கும் விதமாக விவசாயிகள் தெளிப்பு பாசன முறையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
தெளிப்புநீர் பாசனத்தில், சொட்டுநீர் பாசன முறையைவிட குறைவான தண்ணீர் போதுமானதாகும். எனவே, காய்கறி சாகுபடிக்கும், தெளிப்பு நீர் பாசனத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
'போதிய மழையில்லாததால் சாகுபடியை காப்பாற்ற மாற்றுவழிகளை சிந்தித்து மாறி வருகிறோம்,' என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல், இம்முறையில் பெரியளவில் விளைச்சல் பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கால்நடை தீவனங்களுக்கும், உளுந்து உள்ளிட்ட பயறுவகை பயிர்களுக்கு மட்டுமே அதிகளவில் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தி வந்த நிலையில் காய்கறி பயிர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.