லக்னோ : கோமியம் மற்றும் பஞ்ச கவ்யத்தில் இருந்து, பல்வேறு மருந்துகள் தயாரிப்பதை, உத்தர பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் ஆயுர்வேத துறையின் சார்பில், கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
இது குறித்து துறையின் இயக்குனர், ஆர்.ஆர். சவுத்திரி கூறியதாவது: மாட்டின் சிறுநீரான கோமியம், மருத்துவ குணங்கள் வாய்ந்தது; மிகச் சிறந்த கிருமி நாசினி. அதேபோல் மாட்டின் சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஆகியவை கலந்த பஞ்சகவ்யமும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது. நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்க, கோமியத்தை தெளிக்கலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோமியம் மற்றும் பஞ்சகவ்யம் பயன்படுத்தி, ஆயுர்வேத துறை சார்பில், சமீபத்தில் எட்டு மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. கல்லீரல், மூட்டு வலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுள்ளன. வேறு சில மருந்துகளை தயாரிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
அரசு சார்பில் லக்னோ மற்றும் பிலிபட்டில் இரண்டு ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைகள் உள்ளன. இதைத் தவிர தனியார் நிறுவனங்களும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. மாநிலத்தில், எட்டு இடங்களில் ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோமியம் மற்றும் பஞ்ச கவ்யத்தில் இருந்து மருந்துகள் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு, கடந்தாண்டு, 19 உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இந்த நிலையில், மாநில அளவிலும் இதில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE