ஆபரேஷன்க்கு முதல் நாளே சுதாரிப்பு...ஆவணங்கள் ஊட்டியிலே மறைப்பு!| Dinamalar

'ஆபரேஷன்'க்கு முதல் நாளே சுதாரிப்பு...ஆவணங்கள் ஊட்டியிலே மறைப்பு!

Updated : பிப் 07, 2018 | Added : பிப் 06, 2018
Share
ஊன்றுகோல் உதவியுடன், மெதுவாக நடந்து கொண்டிருந்தாள் மித்ரா: பெரிய 'ஸ்வீட் பாக்கெட்' உடன், அவளைப் பார்க்க வந்திருந்த சித்ரா, ஒரு 'மில்க் ஸ்வீட்' எடுத்து அவளுக்கு ஊட்டினாள்.''என்னக்கா...யுனிவர்சிட்டியில இருந்து வந்த ஸ்வீட்டா...?'' என்று சிரித்தாள் மித்ரா.''கரெக்ட் மித்து...அங்க நடந்த ஊழல்களைப் பத்தி, நாம தான் அதிகமா பேசிருக்கோம்; இத்தனை வருஷம் கழிச்சு, இப்பதான்
'ஆபரேஷன்'க்கு முதல் நாளே சுதாரிப்பு...ஆவணங்கள் ஊட்டியிலே மறைப்பு!

ஊன்றுகோல் உதவியுடன், மெதுவாக நடந்து கொண்டிருந்தாள் மித்ரா: பெரிய 'ஸ்வீட் பாக்கெட்' உடன், அவளைப் பார்க்க வந்திருந்த சித்ரா, ஒரு 'மில்க் ஸ்வீட்' எடுத்து அவளுக்கு ஊட்டினாள்.

''என்னக்கா...யுனிவர்சிட்டியில இருந்து வந்த ஸ்வீட்டா...?'' என்று சிரித்தாள் மித்ரா.

''கரெக்ட் மித்து...அங்க நடந்த ஊழல்களைப் பத்தி, நாம தான் அதிகமா பேசிருக்கோம்; இத்தனை வருஷம் கழிச்சு, இப்பதான் விஜிலென்ஸ்க்கு வீரம் வந்து, களத்துல கலக்கிருக்காங்க...அதுக்கு மாணவர்கள் கொடுத்த 'ஸ்வீட்' இது!'' என்று உற்சாகமாகப் பேசினாள் சித்ரா.

''இந்த ஆபரேஷனுக்கு முதல் நாளே, சென்னையில இருந்து வந்திருந்த விஜிலென்ஸ் ஆபீசர்கள் நாலஞ்சு பேரு, மருதமலையில வந்து சாமி கும்பிட்ருக்காங்க...தெரியுமா?'' என்றாள் மித்ரா.

''அண்ணனைப் பிடிக்க தம்பி கிட்ட வேண்டுதலா...ஆனா, சிக்குனவரோட டிரைவருக்கு, ஏதோ அரசல் புரசலா இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு...அவரு, 'ஐ.டி., ரெய்டு வரப்போறாங்க'ன்னு தகவல் சொல்லிருக்காரு...உடனே, சுதாரிச்ச அந்த பேமிலி, சொத்து சம்மந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ்களை எல்லாம், ஒரு காருல போட்டு, ஊட்டியில இருக்குற ஒரு காட்டேஜ்ல வச்சுட்டாங்களாம். இனிமே வந்தா பாத்துக்கலாம்னு நினைச்சிருக்கிறப்பதான், விஜிலென்ஸ் வந்து விளையாண்டுருச்சு!'' என்றாள் சித்ரா.

''எட்டு கோடி கொடுத்து தான், இந்த போஸ்ட்டிங்கை இவரு வாங்குனார்ங்கிற விஷயம், கவர்னருக்குத் தெரிஞ்சு, அவர் அனுமதி கொடுத்த பிறகு தான், இந்த 'ஆபரேஷனை' 'ப்ளான்' பண்ணிருக்காங்க'' என்றாள் மித்ரா.

''ஜெயில்ல இருக்குற சின்ன மேடம், உயர் கல்வித்துறையை கையில வச்சிருந்த 'மாஜி', பழனி 'பாதர்', தலைமைப் பொறுப்புல இருந்து மாட்டுன ராவ்காரு, அப்புறம் 101வது வார்டு கவுன்சிலர் மாதிரி, இங்க வந்து வந்து போன ரோசமான அய்யா...இவுங்க நாலு பேருக்கும் தலைக்கு ரெண்டு கொடுத்ததாப் சிக்கிறாங்களே...அதெல்லாம் இந்த கேஸ் விசாரணையில வெளிய வருமா?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.

''அந்த குடும்பம் சம்மந்தப்பட்டதுங்கிறதால, வெளியில வந்தாலும் வரலாம்...அது மட்டுமா...ஹாஸ்டலுக்கு பாத்திரம் வாங்குனது, ஸ்போர்ட்ஸ், லேப் பொருட்கள் வாங்குனதுன்னு எதுக்குமே 'ப்ராப்பரா' டெண்டர் நடத்தாம, காசு எடுத்திருக்காங்க...32வது பட்டமளிப்பு விழா செலவு மட்டும், 14 லட்சத்து 55 ஆயிரத்து 878
ரூபாய்ன்னு கணக்கு காமிச்சிருக்காங்க'' என்றாள் மித்ரா.

''சிண்டிகேட்ல இருக்குற ரெண்டு பேரை விசாரிச்சா, இன்னும் பல மேட்டர் தெரியவரும்!'' என்றாள் சித்ரா.

கால் வலிப்பதாகக் கூறி, கட்டிலில் வந்து உட்கார்ந்த மித்ரா, 'டிவி'யைப் போட்டு, காமெடி சேனலைத் திருப்பினாள். அதில் 'நேரம்' பட காமெடியில், 'சின்ன வயசுல என் பேரு சரவணன்...இப்போ சரவணர்' என்று கலாய்த்துக் கொண்டிருந்தார் தம்பி ராமையா.

''அக்கா...இந்த சரவணரைப் பார்த்ததும், நம்ம பிள்ளையார் பட்டி ஹீரோவுக்கு துணையா இருந்த ரெண்டு 'சரவணர்'கள் ஞாபகம் வந்துச்சு...நீ சொல்றதும் அவுங்களைத்தான...நிஜமாவே, அவுங்களை விசாரிச்சா நல்லாருக்கும்'' என்றாள் மித்ரா.

''அதை விடு மித்து....ஐ.பி.எஸ்.,களை ஐ.ஏ.எஸ்.,கள் ஜெயிச்சது தெரியுமா?'' என்று விடுகதை போட்டாள் சித்ரா.

''என்னக்கா சொல்ற...அவுங்களுக்குள்ள என்ன போட்டி நடந்துச்சு?'' என்று விழிகளை விரித்தாள் மித்ரா.

''சென்னையில ஐ.ஏ.எஸ்.,அணிக்கும், ஐ.பி.எஸ்., அணிக்கும் நடந்த கிரிக்கெட் போட்டியில, ஐ.பி.எஸ்., டீமை, ஐ.ஏ.எஸ்., டீம், ஈஸியா ஜெயிச்சுட்டாங்க. 25 ஓவர்ல, ஐ.பி.எஸ்., டீம், 6 விக்கெட் கொடுத்து 164 ரன் எடுத்திருக்காங்க; இவுங்க, நாலே விக்கெட் கொடுத்து, 22 ஓவர்லயே ஜெயிச்சுட்டாங்க. நம்ம கார்ப்பரேஷன் கமிஷனர், 22 ரன் அடிச்சிருக்காரு'' என்றாள் சித்ரா.

''போன தடவை, 84 ரன் அடிச்சாரே...இந்தத் தடவை என்னாச்சு?'' என்று கேட்டாள் மித்ரா.

''அவருக்கு கார்ப்பரேஷன்ல நடக்குற இன்ஜினியர்கள் பஞ்சாயத்தைத் தீர்க்கவே நேரம் சரியா இருக்கு...சிட்டி இன்ஜினியர் போஸ்ட்டிங்கை காலியாவே வச்சிருக்காங்க...அதுக்கு 'இன்சார்ஜ்'ஜா இருந்த பார்வதி, மெடிக்கல் லீவு முடிச்சு வந்த பிறகு, ஒரே ஒரு ஜோன் மட்டும் தான் கொடுத்திருக்காங்க...'துாத்துக்குடி ரிடர்ன்' இன்ஜினியருக்கு அந்த 'போஸ்ட்டிங்'கை கொடுக்கத்தான் பேரம் பலமா நடக்குதாம்!'' என்றாள் சித்ரா.

''அது சரி...இந்த இன்ஜினியர்களை மட்டும் மாத்திட்டே இருக்காங்களே...ஹெல்த் செக்ஷன்ல மட்டும் கை வைக்கவே மாட்டேங்கிறாங்க. எஸ்.ஐ.,கள், ஜோனல் ஆபீசரெல்லாம், பத்துப் பதினைஞ்சு வருஷமா, ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு, நல்லா ஓட்டல், லாட்ஜ், அப்பார்ட்மென்ட்ன்னு நல்லா வசூல் பண்ணிட்டு இருக்காங்க'' என்றாள் மித்ரா.

''ஆளுங்கட்சிக்கு வேண்டியவுங்களா இருந்தா, ஒண்ணுக்கு மூணு போஸ்ட்டிங்ல கொழிக்கிறாங்க...ஞானமுள்ள இன்ஜினியர்... பாவம் ரெண்டு கைய வச்சுக்கிட்டு, மூணு மண்டலத்துல வசூல் பண்ணிட்டு இருக்காரு'' என்றாள் சித்ரா.

''அந்த டிபார்ட்மென்ட்ல முக்கியமான பொறுப்புல இருக்குற பிரகாசமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இங்க வந்தா பிளைட் டிக்கெட், தங்குறது, இதர செலவுகள் எல்லாமே இவர் தான் பாத்துக்கிறாராமே!'' என்றாள் மித்ரா.

''இவரு மூணு மண்டலம் பாக்குறாருங்கிற...வடக்குல ஒரு மண்டலத்துல, ரெண்டு 'லேடி ஆபீசர்'களுக்குள்ள வசூல் போட்டி நடக்குது. ஏற்கனவே சென்ட்ரல்ல மண்டல பொறுப்புல இருந்து, நல்லா காசு பார்த்த மேடம், இப்போ 'அட்மின்' பொறுப்புல அங்க இருக்காங்க...'டவுன் பிளானிங்'ல இருக்குற மேடம், 'லேக்ஸ்' கணக்குலதான் வாங்குறாங்களாம்...அதுல 'பங்கு' வேணும்னு, இந்த மேடம், 'எல்லா பைல்களையும் இங்க கொண்டு வரணும்'னு உத்தரவு போட்ருக்காங்க!'' என்றாள் சித்ரா.

தனது டேபிளில் இருந்த 'பிளாஸ்க்'கில் இருந்து, இருவருக்கும் சுக்கு மல்லி காபியை ஊற்றினாள் மித்ரா. சுவைத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள் மித்ரா...
''அக்கா...ஆர்ட்ஸ் காலேஜ் முன்னால, ஆவின் பேருல ஆக்கிரமிச்சுப் போட்ட பிரியாணிக்கடையை, அடிச்சுத் துாக்குனாங்கள்ல...அந்த கடைக்காரரு, நேத்து கலெக்ட்ரேட்ல வந்து தீக்குளிக்கப் போறதா, ஒரு தகவல் பரவுச்சு. போலீஸ்காரங்க, சுதாரிச்சுப் பிடிச்சு, அனுப்பிட்டாங்க''

''இதே மாதிரி, ரெண்டு மூணு இடத்துல, அவுங்க கடை போட்ருக்காங்களாமே...எல்லாமே உள் வாடகைக்கு தான் விட்ருக்காங்க. சவுத், நார்த் ரெண்டு தாலுகா ஆபீஸ் காம்பவுண்ட்லயும் இப்பிடித்தான் பல கடைகள், உள் வாடகைக்கு நடக்குது''

''வாடகையப் பத்திப் பேசவும், டாஸ்மாக் ஞாபகம் வந்துச்சு...சரக்கு குடோன், எஸ்ஆர்எம், டிஎம் ஆபீஸ் எல்லாமே, கவுண்டம் பாளையத்துல, பல வருஷமா தனியார் இடத்துல தான் இருந்துச்சு. அதனால, அங்க பயங்கர 'டிராபிக்' பிரச்னையாகி, மக்கள் நொந்து போயிருந்தாங்களே... இப்போ, எல்லாத்தையும் பீளமேடு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல, சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஏரியாவுக்குக் கொண்டு போகப்போறாங்க. கவர்மென்ட்டுக்கு பல லட்ச ரூபா, காசு மிச்சம்!''

''காசு மிச்சம்னு சொன்னியே...க.க.,சாவடி செக் போஸ்ட்ல, இப்போ கலெக்ஷன் உச்சமாப் போகுது... அங்க 'அவுட்'ல இருக்குற 'செக்போஸ்ட்'ல பத்துப் பேரு இருந்தாங்க. ஒரு நாளுக்கு தலைக்கு நாப்பது, அம்பது ஆயிரம் கிடைக்கும்...இப்போ நாலு பேராக் குறைச்சிட்டாங்க. அதனால, ஒரு நாளுக்கு லட்ச
ரூபாய்க்கு மேல லஞ்சம் வருதாம். வசூல் அதிகமானதால, ஆளுக்கு ஒரு முறை தான் 'செக்போஸ்ட் டூட்டி'ன்னு கடிவாளம் போட்டாங்களாம்!'' என்றாள் சித்ரா.

''இங்க சிட்டிக்குள்ள கடிவாளம் போட முடியாம, சூதாட்ட கிளப்கள் நடக்குது...பல 'கிளப்'களை 'ஸ்பெஷல் டீம்' கண்டு பிடிச்சு மூடிட்டாங்க...ஆனா, 'பேலஸ்'ங்கிற அடைமொழியைக் கொண்டவரோட 'கிளப்'களை மட்டும் கண்டுக்கலையாம்...ஜெயிலு, டாஸ்மாக்ன்னு எல்லா இடத்துலயும் ஆளு வச்சிருக்கிற அவரு, இந்த 'டீம்'லயும் ஆள் வச்சு, 'ரெய்டு' வர்றது தெரிஞ்சு, 'எஸ்கேப்' ஆயிட்டாராம். நம்ம கமிஷனர் தான், இதுக்கு ஒரு முடிவு கட்டணும்!'' என்றாள் சித்ரா.

''அவரு அதுக்கு முடிவு கட்டட்டும்...நம்மூர்ல இருக்குற முக்கியமான பினாமி ஒருத்தர், கர்நாடகா மாநிலம் கூர்க்ல, 680 ஏக்கர் காபி எஸ்டேட் வாங்கிருக்காராம்...ஐ.டி.,க்கு யாரோ ஒருத்தரு, விவரமா பெட்டிஷன் தட்டி விட்ருக்காங்க...இதுக்கெல்லாம் எப்போ முடிவு வருமோ?'' என்றாள் மித்ரா.

''நிச்சயமா சீக்கிரமே வரும்...நீ கொஞ்ச நேரம் 'ரெஸ்ட்' எடு...நான் கிளம்புறேன்!'' என்று கூறி, வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X