சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

உயர்ந்தவற்றிற்காக ஆசைப்பட வேண்டும் என்பது ஏன்

Added : பிப் 06, 2018
Advertisement
உயர்ந்தவற்றிற்காக ஆசைப்பட வேண்டும் என்பது ஏன்

தொலைநோக்குடன் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றிக் கூறும் சத்குரு அவர்கள், வாழ்வில் எது உச்சபட்சமோ, அதையே தொலைநோக்காகக் கொள்வது பற்றியும், அதை அடைவதற்கான வழி பற்றியும் இங்கே விளக்குகிறார்.

சத்குரு: எவ்விதமான தொலைநோக்கும் இன்றி, ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இன்றி, இங்கு ஒருவர் வாழ வேண்டுமெனில் அதற்கு ஒரே வழி, அவர் கள்ளங்கபடமற்றவராகவும் அகங்காரம் அற்றவராகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர் மட்டும் தான் இங்கே சும்மாவே ஆனந்தமாக வாழ முடியும். அவருக்கு தொலைநோக்கும் தேவையில்லை, அல்லது எதைப் பற்றிய விருப்பமும் கிடையாது. ஆனால் ஒருவர் இந்நிலையில் இல்லாவிட்டால், அவர் தொலைநோக்குடன் வாழ்வது மிகமிக அவசியம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று எல்லா வகையான வசதி வாய்ப்புகளும் நமக்கு இருக்கிறது. ஆனாலும், மனித சமுதாயம் மட்டும் குழம்பிய குட்டையாய் அமைதியற்று தத்தளிக்கிறது. நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையை சிறிதளவு உணர்வு பூர்வமாக கவனிப்பவர் என்றால், மனிதர்களை, குரல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் ஒரு மிகக் குழப்பமான கலவையாகவே நீங்கள் உணர்வீர்கள். இது பல அளவுகளில், பல நிலைகளில் நிகழும் குழப்பங்களின் வெளிப்பாடு. நிகழ்கால நிதர்சனத்தை வெவ்வேறு அளவுகளில் தவறாகப் புரிந்து கொள்வதால் இந்தக் குழப்பங்கள் உண்டாகின்றன. இப்படித் தவறாகப் புரிந்து கொள்வதாலும், தவறான கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதாலும், ஒரு மனிதன் தனக்கும், தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் உருவாக்கும் வலியும், வேதனையும், உளைச்சலும் மிகவும் துரதிர்ஷ்டமானது. இது தான் இன்றைய நிலவரம். இன்று மனிதனின் விருப்பத்திலும், தொலைநோக்கிலும் ஒரு தெளிவு இல்லை. உலகிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் உண்மையிலேயே என்ன விரும்புகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை 'வாழ்ந்து' கொண்டிருக்கிறார்கள். அல்லது, தான் விரும்புவது என்ன என்று தெரிந்திருந்தும், தங்களுக்கு வேண்டியதை நடத்திக் கொள்ளும் மனஉறுதியோ, தொலைநோக்கோ அவர்களுக்கு இருப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் மக்கள் தங்களுக்கு எது மிக எளிதாகக் கிடைக்கிறதோ, தங்கள் கைகளுக்கு எது எட்டுகிறதோ, அதுவே போதும் என்று இருந்து விடுகின்றனர். ஒரு ஊரில் ராமு, பீமு என இரு நண்பர்கள் இருந்தனர். ராமுவுக்கு பேரம் பேசுவதென்றால் அலாதி பிரியம். எங்கு எது பேரம் பேசி வாங்கமுடியும் என்றாலும், ராமு தயாராகி விடுவான். தள்ளுபடி என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டால், எதுவாக இருந்தாலும் வாங்கிவிடுவான். அது வேண்டுமா, வேண்டாமா என்கிற சிந்தனையே அவனுக்கு இருக்காது. ஒரு நாள் பீமு ராமுவிடம், “மிக அற்புதமான ஒரு வியாபாரம் அமைந்திருக்கிறது. இதுபோல் வேறு ஒரு வாய்ப்பு உன் வாழ்நாளில் கிடைக்காது. நம் ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்துள்ளது. அதில், அவர்கள் தேவைக்கும் அதிகமாக யானைகள் இருக்கிறதாம். சாதாரணமாக ஒரு யானை வாங்க வேண்டுமெனில், 50,000 ரூபாய் செலவாகும். ஆனால் இவர்கள் 2,000 ரூபாய்க்கே யானையைத் தருகிறேன் என்கிறார்கள்! நினைத்துப்பார்! ஒரு யானை, வெறும் 2,000 ரூபாயிலே” என்றான். அதற்கு ராமு, “உனக்கென்ன பைத்தியமா? ஒரு யானையை வைத்து நான் என்ன செய்வேன்? நான் மூன்றாவது மாடியிலே ஒற்றை படுக்கையறை ஃப்ளாட்டிலே தங்கியிருக்கிறேன். அந்த யானையைக் கொண்டு வந்து எங்கே வைப்பேன்? அதை நான் எப்படி சமாளிப்பேன்? எனக்கு யானை எல்லாம் வேண்டாம்” என்றான். ஆனால் பீமுவோ அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை. “யோசித்துப் பார். 50,000 ரூபாய் பெறுமானமுள்ளது. அதை வெறும் 2,000 ரூபாய்க்குத் தருகிறார்கள். இதுபோல் சலுகை கிடைக்க வாய்ப்பே இல்லை. இதை விட்டுவிடாதே!” என்றான். அதற்கு ராமு, “இல்லை, இல்லை, வேண்டாம்… அந்த யானையை நான் எங்கே கட்டி வைப்பேன்? அதற்கான இடவசதி என்னிடம் இல்லை. அதோடு, அந்த யானைக்கு உணவளிக்க பணத்திற்கு எங்கு போவது? முதலில், எனக்கு எதுக்கு யானை? அதை வைத்து நான் என்ன செய்வேன்?” என்று மறுத்தான். பீமு விடுவதாய் இல்லை. வெகுநேரம் பேசிப் பார்த்துவிட்டு, கடைசியாக, “அங்கு போய் நன்றாக பேரம் பேசினால், 2,000 ரூபாய்க்கு நாம் இரண்டு யானைகள் கூட வாங்கலாம்” என்றான். அடுத்த நொடியே ராமு, “இப்போது சொன்னாயே, இது வாஸ்தவம். வா, சீக்கிரம் போய் அதை வாங்கி வரலாம்” என்று கிளம்பிவிட்டான்!

ஏதாவது ஒன்று எளிதாகக் கிடைக்கிறதென்றால், அது வேண்டுமா, வேண்டாமா என்றெல்லாம் பார்க்காமல், அதை அடைவதற்கு மக்கள் தயாராகி விடுகின்றனர். எளிதாகக் கிடைக்கிறது, அது ஒன்றே போதும் அவர்களுக்கு! கடந்த ஆயிரம் ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளி சூழ்நிலையில் அதிசயத்தக்க மாறுதல்களை மனிதன் செய்திருக்கிறான். ஆனால் அதே நேரத்தில், 'கிடைப்பதையெல்லாம் அடைய வேண்டும்' என்ற ஒரு எண்ணத்தால், தனக்கும் இவ்வுலகிற்கும் அவன் மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறான். இலட்சம் வருடங்களில் நடக்காதது, கடந்த 1000 வருடங்களில் நடந்திருக்கிறது. அதே நேரத்தில், 'எளிதாகக் கிடைப்பதெல்லாம் வேண்டும்' என்று, வேண்டாத யானைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறான். தனக்கு உண்மையிலேயே தேவையற்ற பலவற்றையும் அவன் செய்திருக்கிறான். இவ்வுலகில் மனிதன் செய்திருக்கும் பலப்பல மாற்றங்கள், இன்று அவனுக்கே தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்துமே 'செய்வதற்கு எளிது' என்ற ஒரு காரணத்தாலேயே அவனால் செய்யப்பட்டது. தேவையான தொலைநோக்கு இல்லாமல், தனக்கு தோன்றியதை எல்லாம் செய்துவிட்டு, ஐம்பது ஆண்டுகள் கழித்து அதன் விளைவுகள் தெரியும் போது, மனிதன் மனம் நொந்து கொள்கிறான். தனக்கு உண்மையிலேயே என்ன தேவை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கவனம் இன்றி, 'கிடைப்பதையெல்லாம் அடைய வேண்டும்' என்ற கண்ணோட்டத்தில் அணுகுவதால், வரமாய் இருந்திருக்க வேண்டிய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இன்று சாபக்கேடாய் ஆகியிருக்கிறது. இது போன்ற கண்ணோட்டத்தில் வாழ்வைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டுவிட்டதால், அவனின் வாழ்வை சுலபமாகவும், சுகமாகவும் மாற்றவல்ல விஞ்ஞானம், இன்று அவன் வாழ்வை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தொலைநோக்கும், மனஉறுதியும் இன்று இவ்வளவு குறைவாக இருக்கக் காரணம், சுற்றி இருக்கும் உலகை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருப்பது தான். இந்த நொடியில் உலகின் போக்கு எப்படியிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டே நம் வாழ்வை நிர்மாணிக்க முயல்கிறோம். தற்போதைய நிலவரத்திற்கு ஒத்து, தொலைநோக்கை முடிவு செய்தால், மீண்டும், எது கிடைக்குமோ, எது எளிதாக நடக்குமோ, அதற்கே முன்னுரிமை வழங்குவோம். அதனால், எதை அடையமுடியும், எதை அடையமுடியாது என்று யோசிக்க வேண்டாம். வாழ்வில் எதை உச்சபட்சமாக அடைய முடியுமோ அதை உங்கள் தொலைநோக்காகக் கொள்ள சிந்தியுங்கள். உங்களைப் பொறுத்தவரை உயர்ந்தது எதுவோ, அதற்காக வாழுங்கள். அது நடக்குமா, நடக்காதா என்பது பற்றி கவலையில்லை. அது நடக்கிறதோ, இல்லையோ, அத்தகைய தொலைநோக்குடன் வாழ்வதே மிக உயர்வானதாக, நிறைவைத் தருவதாக இருக்கும். அப்படி வாழ்வது யாருக்குமே மகிழ்ச்சி தரும் செயலாக இருக்கும். உங்களுக்கென்று ஒரு தொலைநோக்கு வைத்திருக்கிறீர்கள்… அது எளிதானதா, கடினமானதா என்று உங்களுக்கு கவலையில்லை, அதை சாதிக்க முடியுமா, முடியாதா என்ற தயக்கம் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அதன் முடிவைப்பற்றி உங்களுக்குக் கவலையில்லை. ஆனால் உங்கள் தொலைநோக்கிற்காக உங்கள் உயிரையும் கொடுக்க சித்தமாயிருக்கிறீர்கள். இப்படி வாழ முடிந்தால், இதுவே உன்னதமான நிலைகளை அடைவதற்கு மிக எளிய வழியாக இருக்கும். பகவத்கீதை முழுவதிலும் கூட இதையே தான் சொல்லியிருக்கிறார்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது மட்டுமே கண்ணாக, வேறு எப்பக்கமும் கவனம் சிதறாமல், அது நடக்குமா நடக்காதா என்ற யோசனை இல்லாமல், உங்கள் உயிரையும் அதற்கென கொடுத்திடுங்கள். அவ்வாறு இருந்தால், தன்னிலேயே அது முழுமையான ஒரு ஆன்மீகப் பாதையாக ஆகி விடும். இது நமக்குள்ளும், வெளியேயும் இருக்கும் தடைகளை தாண்டிச் செல்ல உதவுவதோடு, வாழ்க்கை, உயிர், மற்றும் அதைத் தாண்டிய பரிமாணங்களை அறிவதற்கும் வழிவகுக்கும். தனக்கும் தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கும் என்ன வேண்டும் என்ற தெளிவான தொலைநோக்கு ஒருவருக்கு இருந்தால், அதை உருவாக்கிக் கொள்வது அவர் திறனிற்கு அப்பாற்பட்டு இருக்காது. ஒருவேளை இந்த பிறப்பில் அதை செய்து முடிக்கலாம், அல்லது இன்னும் சில பிறப்புகள் தேவைப்படலாம். ஆனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது உங்களை நிச்சயம் வந்தடையும். மனிதர்கள் எப்போதும் குழம்பிய குட்டையாய், தங்களுக்கு வேண்டாதவற்றையே பெரும்பாலும் தேடிக் கொண்டிருப்பதால் தான், அவர்களுக்கு வேண்டியது அவர்களுக்குக் கிட்டுவதில்லை. வாழ்வின் எக்கணத்திலும், நாம் கடந்து வந்திருக்கும் சூழ்நிலைகளையே அளவுகோலாகக் கொண்டால் அல்லது நம் தர்க்க அறிவிடம் ஒன்று முடியுமா, முடியாதா என்று நாம் கேட்டால், அது எப்போதுமே சராசரியான விஷயங்கள் மட்டுமே சாத்தியம் என்று சொல்லும். ஆனால் ஒருவருக்கு அவரது தொலைநோக்கு தெள்ளத் தெளிவாக இருந்தால், தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், அதுவே வேண்டும் என்று அவர் ஏங்கினால், மிகமிக உயரியவையும் அவர் காலடியில் வந்து விழும்.

இது சாக்ரடீஸின் வாழ்வில் நடந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணத்தால், துரதிர்ஷ்டவசமாக அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தன் தண்டனைக்காக அவர் காத்திருந்த அந்த கடைசி சில வாரங்களில், அவருக்கு இசையின் மீது ஆர்வம் பிறந்தது. தன் வாழ்வில் அதுவரை அவர் தத்துவமேதையாகவே அறியப்பட்டார். அவரும் அவ்வாறே இருந்தார். இசையின் மீது அப்படி ஒன்றும் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, கடைசி சில வாரங்களே இருந்த போது அவருக்கு இசையின் மீது நாட்டம் வந்தது. அந்தக் கடைசி வாரங்களிலே இசையைக் கற்க ஆரம்பித்து, மிக அற்புதமாகவே இசைக்க ஆரம்பித்துவிட்டார். இசையின் வாயிலாக தன் வாழ்வையே புதுவிதமாய் அனுபவிக்கத் துவங்கினார் அவர். திடீரென அவருக்கும், அவரது வாழ்விற்கும் இசை ஒரு புதிய அழகை ஏற்படுத்தியது. அன்று அவரைக் கொல்லாமல் இருந்திருந்தால், ஒருவேளை அவர் ஒரு பெரிய இசைக் கலைஞனாய் வளர்ந்திருக்கலாம். நாமும் அவரை தத்துவமேதையாக அல்லாமல், இசைவல்லுநனராய் அறிந்திருப்போம். இதுபோல், ஒரு மனிதன் முடிவு செய்தால்… தன் வாழ்நாளின் கடைசி வாரங்கள் என்றாலும், அந்தக் கடைசி நாட்களிலும் கனவு காண்பதற்கும், அதை நிறைவேற்றிக் கொள்வதற்குமான மனோதிடமும், உறுதியும் அவனுக்கு உண்டு. நம் இந்தியக் கலாச்சாரத்தில் கூட சில முனிவர்களின் கதைகள் உண்டு. அவர்கள் ஏதோ ஒன்றை செய்யவேண்டும் என்ற அசையா உறுதி கொண்டபோது, கடவுளே இறங்கிவந்து அவர்களுக்காக செயல் செய்தார்கள். இதுபோல் நிறையக் கதைகள் கேட்டிருக்கிறீர்கள் தானே? ஒருவர் முழுத் தீவிரத்துடன், சிவனை சந்திக்க வேண்டும் என்று உறுதிகொண்டு அமர்ந்துவிட்டால், சிவனுக்குக் கூட வேறு வழி இருக்காது, அவரும் இவர்முன் வந்துதான் ஆகவேண்டும். இவையெல்லாம் தெள்ளத் தெளிவாய் உணர்த்தும் ஒரு விஷயம் - உங்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாக இருந்தால், அதுதான் எல்லாம் என்று நோக்கம் வைத்திருந்தால், இன்று மிகக் கடினமாகத் தோன்றுவது கூட, நாளையே உங்கள் வாழ்வில் சராசரி விஷயமாகிவிடும். எவ்வித ஆரவாரமும் இன்றி, உங்கள் காலடியில் அது வந்து விழும். ஆனால் ஒவ்வொரு கணமும், 'இது முடியுமா, முடியாதா' என்று உங்கள் தர்க்க அறிவை நீங்கள் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தால், உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் குழப்பமே, இவ்வுலகிலும் பிரதிபலிக்கத் துவங்கிவிடும். உங்களுக்கென்று ஒரு தொலைநோக்கை உருவாக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அது, இன்றைக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி அல்ல. ஒரு மனிதனாக, உங்களுக்கு உண்மையிலேயே வேண்டியது என்ன? உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் மிக உயரியது எது? என்று பார்த்து அதற்கான தொலைநோக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரேயொரு மனிதனுக்கு தொலைநோக்கு இருந்து, மற்றவர்கள் எல்லாம் அதற்கு எதிராக வேலை செய்தால், மிகக் குறைந்த அளவில்தான் அதை நோக்கிய முன்னேற்றம் இருக்கும். ஆனால் பலர் ஒன்றாக இணைந்து ஒரே தொலைநோக்கில் செயல்பட்டால், மிகமிக அழகான விஷயங்கள் நம் சமுதாயத்தில் நிகழும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X