waris diary | வாரிஸ் டைரியின் சொல்லமுடியாத சோகக்கதை| Dinamalar

வாரிஸ் டைரியின் சொல்லமுடியாத சோகக்கதை

Updated : பிப் 06, 2018 | Added : பிப் 06, 2018 | கருத்துகள் (3)
 வாரிஸ் டைரியின் சொல்லமுடியாத சோகக்கதை


வாரிஸ் டைரியின் சொல்லமுடியாத சோகக்கதை


பிப்ரவரி 6ம் தேதி உலகில் பல கோடி பெண் குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் இனி எந்த ஒரு பெண் குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட தினம்தான் சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation) எதிர்ப்பு தினம்.

வருடத்தில் எத்தனையோ தினங்கள் இருந்தாலும் இந்த தினத்திற்கு உள்ள வலியும் வேதனயும் சோகமும் வேறு எந்த தினத்திற்கும் இருக்குமா? என்பது தெரியவில்லை.
எதனால் இந்த தினம் என்பதை தெரிந்து கொண்டால்தான் இதன் பின்னனியில் உள்ள வலியை புரிந்து கொள்ள முடியும்.

இரண்டு நாற்காலிகள் எதிர் எதிரே போடப்பட்டு உள்ளது.
ஒரு நாற்காலியில் உலகப்புகழ் பெற்ற ஆப்பிரிக்கா மாடல் அழகியும் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தவருமான வாரிஸ் டைரி அமர்ந்துள்ளார்.அவரை பேட்டி காண உலகின் முன்னணி பத்திரிகை நிருபர் காத்லின் மில்லர் இன்னோரு நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.

அடுத்தடுத்த அழகிப்போட்டிகளில் வென்று, குறுகிய காலத்தில் விளம்பர உலகின் முடிசூடா ராணியாக பணம் மற்றும் புகழின் உச்சத்தில் நிற்கும் ஒரு அழகியின் சுவராசியமான கதையை கேட்க உட்கார்ந்தவருக்கு பயங்கரமான அதிர்ச்சி! பேட்டியின் முடிவில் நிருபர் குமுறி அழுகிறார்.
அழகியின் சொந்தக்கதை இவ்வளவு சோகமாக இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

”நான் உங்களிடம் பேசியிருப்பது என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம். எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று எனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது, சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம் பல கோடி முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை பற்றி பேசியிருக்கிறேன்…. பெண் பிறப்புறுப்பு சிதைப்பு ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்து வருகிறது. என் கதையின் மூலமாக இனி இப்படியொரு கொடுமை எந்த பெண்ணுக்கும் நடக்கவில்லை என்றால் எனக்கு அதுவே போதும் என்கிறார்.
அது என்ன பெண் உறுப்பு சிதைப்பு

பெண் குழந்தை பிறந்த ஐந்து வயதில் இருந்து ஏழு வயதிற்குள் அந்தக் குழந்தைக்கும் நடத்தப்படும் சடங்குதான் இது.
ஐந்து வயதுக் குழந்தை ஒரு நாள் ஒரு வெட்ட வெளிக்கு அவளது தயாரால் அழைத்துச் செல்லப்படுவாள்.அங்கு அந்த இனத்தைச் சேர்ந்த கிழவி ஒருத்தி இந்தக் குழந்தைக்காக காத்திருப்பாள்.

பாறையில் படுக்கவைக்கப்பட்ட குழந்தைக்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பதே தெரியாது.ஆனால் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரியும் அம்மாவின் கழுத்தைக்கட்டிக் கொண்டு கத்தும் கதறும் கண்ணீர் வற்ற அழும் ஆனால் அந்த அழுகையை விட அவர்களுக்கு அப்போது நடக்கவேண்டிய சடங்குதான் முக்கியம்.
தாயும்,மற்ற சிலரும் பிடித்துக் கொள்ள பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரிஸ் என்ற உணர்வு முடிச்சு அடியோடு அறுத்து எறியப்படும் அதன்பின்னும் அந்தக்கிழவியின் கையில் உள்ள துருப்பிடித்த பிளேடின் ரத்த வெறி அடங்காமல் உள் உதடுகளை கண்டபடி கிழிக்கும்,ரத்தச்சகதியான அந்த இடத்தை கரித்துணியிலும் கேடுகேட்ட ஒரு துணியால் துடைத்துவிட்டு மேல் உதடுகளை மூடி சின்னதாய் ஒரு ஒட்டைமட்டும் விட்டுவிட்டு இழுத்துப்பிடித்து தைத்துவிடுவாள்.

கிழவி விட்டுவைத்த அந்த ஒட்டை வழியாகத்தான் சிறுநீர் கழிக்க வேண்டும் பருவம் வந்த பிறகு அந்த ஒட்டை வழியாகத்தான் மாதவிடாய் பிரச்னையையும் சமாளிக்க வேண்டும்.
துருப்பிடித்த பிளேடால் ஏற்படும் தொற்று, அதிகமான ரத்தப்போக்கு, பெண் உணர்வு முடிச்சுகளை துண்டித்தல், உணர்வு நாளங்களை சிதைத்தல்,பின்நாளில் உடல் மற்றும் மன ரீதியிலான பிரச்னை போன்ற எது பற்றியும் அந்தக்கிழவிக்கும் சரி அந்தத் தாய்க்கும் சரி அந்த இனத்திற்கும் சரி கொஞ்சமும் கவலையில்லை அவர்களைப் பொறுத்தவரை காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் தங்கள் இனத்தின் கவுரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது.

இதனால் என்ன நடக்கும், சிதைப்பு நடந்த நாற்பது நாட்களுக்கு சொல்லமுடியாத பல துயரங்கள்,அதன் பிறகு ஒவ்வொரு சொட்டாகத்தான் சிறுநீர் கழிக்கமுடியும்,அப்படி ஒவ்வொரு சொட்டு சிறுநீர் கழிக்கும் போதும் அமிலத்தை விழுங்கி வெளியேற்றுவது போன்ற காந்தல் இருக்கும், பருவம் வந்த பிறகு இந்தப்பிரச்னை இன்னும் அதிகரிக்கும்.
இந்த இனத்தைப் பொறுத்தவரை அவர்களது பெண்களுக்கு செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாது ,தெரியக்கூடாது.பெண் என்றால் கணவனுக்கு குழந்தை பெற்றுத்தரும்,வீட்டு வேலைகள் செய்யும், ஒட்டகம் மேய்த்து தரும் ஒரு உயிருள்ள ஜடம் அவ்வளவுதான்.

அவளது கணவன் கற்புள்ள ஒரு பெண்ணை பெற்றதற்கான அடையாளமே இந்தக் கொடுமை. கல்யாணம் முடிந்ததும் முதலிரவின் போது கணவன் மூடப்பட்ட பிறப்புறுப்பு தையல்களை வெட்டிவிடுவான் அந்த தையல்கள் லேசாக பிரிந்து இருந்தால் கூட அவள் சபிக்கப்பட்டவளாக நடத்தப்படுவாள்.
அதன் பிறகு நடக்கும் உறவு காரணமாக குழந்தை பிறப்பது ஒரு எந்திரம் போல நடக்குமே தவிர பெண்ணின் உணர்வு உரிமை சுகம் என்ற எதற்கும் அங்கு இடமில்லை.

இந்தக் கொடுமைக்கு உள்ளானவர்தான் மாடல் அழகி வாரிஸ் டைரி
பிறப்பு உறுப்பு சிதைப்பை அடுத்து வாரீசுக்கு அவளது பதிமூன்றாவது வயதில் அடுத்த கொடுமை திருமணப்பேச்சு என்ற பெயரில் வந்தது.

அறுபது வயதைத் தாண்டிய அகோரமான கிழவன் ஒருவன் தருவதாகச் சொன்ன ஐந்து ஒட்டகங்களுக்கு ஆசைப்பட்டு வாரிசை அந்த கிழவனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார் பாசக்கார அப்பா.
இது பிடிக்காத வாரிஸ் உடுத்திய உடையோடு வெறும் காலோடு வீட்டைவிட்டு வெளியேறி ஒடினார், காலில் ஏற்பட்ட கொப்புளங்கள் ஒடவிடாமல் ஒய்வு எடுக்கச் சொல்லியது.

பசியும் துாக்கமும் கண்ணைச் சழற்ற அப்படியே படுத்த வாரிஸ் திரும்ப எழும்போது அருகில் ஒரு சிங்கம் தன்னை பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து பயந்து போனார்.
ஒரு சப்புக்கொட்டிக் கொண்டு வாரீசை சுற்றிவந்த சிங்கம் கொஞ்சமும் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாக இருந்த வாரிஸ் டைரியை சாப்பிடுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று நினைத்தது போல திரும்ப போய்விட்டது.

சிங்கத்திடம் இருந்து தப்பி திரும்ப சிரமத்துடன் நடந்து சாலையை அடைந்தவருக்கு ஒரு லாரி டிரைவர் தனது வாகனத்தில் தஞ்சம் கொடுத்தார். ஆனால் அந்த தஞ்சம் என்பது அவனது உடல் பசியை அடக்க கொடுத்த லஞ்சம் என்பது புரிந்தது. சிங்கத்தைவிட மோசமான மனிதர்களை வாழ்வில் சந்திக்கவேண்டும் என்பதும் தெரிந்தது.அவனிடம் இருந்து தப்பியவர் ஒரு வழியாக தலைநகரை அடைந்தார்.
அங்கு பல வீடுகளில் வீட்டு வேலை செய்தவர் பின் லண்டன் சென்றார் அங்குள்ள உணவு விடுதியில் வேலை பார்த்த போது அந்த ஊரின் பிரபல போட்டோகிராபர் டெரான்ஸ் டொனாவான் கண்ணில் பட்டார்.

வாரிசின் சம்மதத்தோடு அவர் எடுத்த படங்கள் சில காலண்டர்களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமானதை அடுத்து விளம்பர நிறுவனங்கள் இவர் வீட்டின் கதவை போட்டியிட்டு தட்டின.
சில ஆண்டுகளில் புகழின் உச்சியை அடைந்தார் ஆனாலும் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் பழைய வேதனையை அனுபவித்தார்.

தோழியின் ஆலோசனையின் பேரில் மருத்துவர் ஒருவர் உதவியுடன் பிறப்பு உறுப்பில் போடப்பட்ட தையல்கள் பிரிக்கப்பட்டது அதன் பின் முதல் முதலாக சிறுநீர் பிரிந்த போது ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லும் போது ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை… வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது என்றெல்லாம் விவரிக்கிறார்.
வாரிஸ் டைரியின் கதை பிரசுரமாகிறது, நாலாயிரம் ஆண்டு காலமாக ஆப்ரிக்கக் கலாச்சாரத்தில் இருந்து வந்த, பெண்ணின் பிறப்பு உறுப்பு சிதைப்பு காரணமாக வாரிஸ் டைரி உடல்ரீதியிலும், மனரீதியிலும் பட்ட சிரமங்களையும் அறிந்து உலக நாடுகள் அதிர்கிறது, உகாண்டா உள்ளீட்ட நாடுகள் உடனடியாக தடை சட்டம் இயற்றுகிறது.ஐநா சபை களஆய்வு செய்து 13 ஆயிரம் கோடி பெண்ணுக்கு மேல் இந்தக் கொடுமைக்கு உள்ளாகியிருப்பதாக ஆதாரபூர்வமாக தகவல் தருகிறது.பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராக ஐநா சபையால் அமைக்கப்பட்ட கமிட்டியின் சிறப்பு தூதராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்படுகிறார், சோமாலியா உள்ளிட்ட 28 ஆப்ரிக்க நாடுகளில் வழக்கத்திலிருக்கும் இந்தக் 'கலாச்சார சடங்கை' எதிர்த்து விழிப்புணர்வு பரவக் காரணமாக இருந்தார்,இருக்கிறார்.

இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது, என் வாழ்நாளில் ஒரு குழந்தைகூடப் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற வன்முறைக்கு இலக்காகவில்லை என்ற நிலையை எட்ட வேண்டும் என்பதே என் லட்சியம் என்று சொல்லி முடிக்கிறார் இல்லையில்லை தனது அறப்போராட்டத்தை தொடர்கிறார் வாரிஸ் டைரி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X