அலகுமலையில் நடக்குது ஜல்லிக்கட்டு ; ஆளுங்கட்சியில் நடக்குது ‛மல்லுக்கட்டு'

Added : பிப் 07, 2018
Advertisement
தை மாத குளிரில் தலை நடுங்கியபடியே சித்ரா வண்டியை ஓட்ட, ஸ்வெட்டர், குல்லா சகிதம் மித்ராவும் நடுங்கினாள். ""என்ன மித்து, ஸ்வெட்டரெல்லாம் போட்டுட்டு இப்படி நடுங்குற,'' என்றாள் சித்ரா.""ஆமாம், போங்க...! நீங்களும்தான் நடுங்குறீங்க. அந்த பேக்கிரியில் நிறுத்துங்க. சூடா, ஒரு காபி குடிச்சிட்டு போகலாம்,'' என்று மித்ரா சொன்னதும், மொபட்டை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.உள்ளே
அலகுமலையில் நடக்குது ஜல்லிக்கட்டு ; ஆளுங்கட்சியில் நடக்குது ‛மல்லுக்கட்டு'

தை மாத குளிரில் தலை நடுங்கியபடியே சித்ரா வண்டியை ஓட்ட, ஸ்வெட்டர், குல்லா சகிதம் மித்ராவும் நடுங்கினாள். ""என்ன மித்து, ஸ்வெட்டரெல்லாம் போட்டுட்டு இப்படி நடுங்குற,'' என்றாள் சித்ரா.
""ஆமாம், போங்க...! நீங்களும்தான் நடுங்குறீங்க. அந்த பேக்கிரியில் நிறுத்துங்க. சூடா, ஒரு காபி குடிச்சிட்டு போகலாம்,'' என்று மித்ரா சொன்னதும், மொபட்டை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.
உள்ளே சென்று, காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, அங்கிருந்த வார இதழை புரட்டியவாறே, ""சீக்கிரம் போனாத்தான், சிவன்மலை ஆண்டவரை தரிசிக்க முடியும்,'' என்றாள்.
""மக்கள் பல போராட்டம் நடத்தியும், பெட்டிஷன் போட்டும், மனுஷன், வெயிட்டிங் லிஸ்டில் மாட்டாமல், தப்பிச்சுட்டாரு பார்த்தீங்களா?'' என்றாள் மித்ரா.
""ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். லிங்கேஸ்வரர் ஊருக்கு, புதிய போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதை தெரிந்து கொண்டவுடன், பழைய அதிகாரி, தொகுதி வி.ஐ.பி.,யை பார்க்க போனாராம். ஆனால், அவரோ நீங்கள் ஆடிய ஆட்டமெல்லாம் போதும். என் பேரை வைச்சு, கொஞ்ச நஞ்சமா சுருட்டுனீங்க. உங்களுக்கு
"ரெகமண்ட்' செய்தால், என்னோட பதவிக்கு கெட்ட பேர் வந்துடும். இதைப்பற்றி எங்கிட்ட பேச வேண்டாம்,' அப்படின்னு, முகத்தில் அடித்த மாதிரி சொல்லிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
உடனே, மித்ரா, ""என்னக்கா... "பரம' ரகசியத்தை, இப்படி உடைச்சுட்டீங்க@ள "சாமி'. சரி... பரவாயில்லை விடுங்க. அதே லிங்கேஸ்வரர் ஊரில், ரெவின்யூ, யூனியன், போலீஸ் இப்படி முக்கியமான டிபார்ட்மென்ட்டில் உள்ள அதிகாரிகள், தங்கள் இஷ்டத்துக்கு நடந்துக்கிறாங்களாம். பொதுமக்கள் கேட்டா, "அவர்தான் சொன்னார். அவருகிட்ட சொல்லிட்டோம்,' என்று சொல்லி, தொகுதி வி.ஐ.பி., பேரை சொல்றாங்களாம்,'' என்று தனக்கு தெரிந்த மேட்டரை கூறினாள் மித்ரா.
""அட... அது கூட பரவாயில்லை. பஸ் கட்டண உயர்வை கண்டிச்சு, தமிழ்நாட்டுல, எங்கேயுமே, கடையடைப்பு நடத்தல. ஆனா, வி.ஐ.பி., தொகுதியில் மட்டும் நடந்ததால், அவருக்கு "செம' கோபம் வந்துச்சாம். ஸ்டேஷன் பொறுப்புல இருக்கிற அதிகாரியை வரச்சொல்லி, வறுத்தெடுத்துட்டாராம். நொந்து போன, போலீஸ் அதிகாரி, "கப்சிப்'ன்னு நடையை கட்டிட்டாராம்,'' என்று சித்ரா கூறி முடிக்கவும், காபி வரவும் சரியாக இருந்தது.
அடித்த குளிருக்கு, இருவரும் சுடச்சுட காபியை குடித்து, பில் கொடுத்து விட்டு, மீண்டும் புறப்பட்டனர்.
""அதிகாரிகளோட கொட்டத்தை அடக்க, "சபா'வில் வைத்து, சாட்டையை சுழற்ற "நாயகர்' ரெடியாயிட்டு வர்றாருன்னு, அவங்க கட்சிக்காரங்க ஊர் பூரா சொல்றாங்களாம்,'' என்ற மித்ரா, ஸ்வெட்டரை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.
அப்போது, சித்ராவின் மொபைல் போன் ஒலித்தது. வண்டியை நிறுத்தி, சித்ரா பேச முயன்றும், சிக்னல் கிடைக்கவில்லை. "ச்சே... என்ன நெட்வொர்க், இப்படி பண்ணுது?'' என்றதும், ""இப்படியே தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தா என்ன பண்றது?'' என்றாள் மித்ரா.
""நீ... எந்த மேட்டரை சொல்றேன்னு எனக்கு தெரியும். மக்களோட நேரடி தொடர்புல இருக்கற எல்லா துறை அதிகாரிகளுக்கும், அரசே, "சிம்கார்டு' கொடுத்து, "சி.யு.ஜி.,' இணைப்பும் கொடுத்திருக்காங்க. ஆனா, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மட்டும் இன்னும் எட்டாத உயரத்துலயே இருக்காங்க. கவர்மென்ட் "சிம்' இல்லாததால, பர்சனல் நம்பர மட்டும் பயன்படுத்தறாங்க. நேர்ல போனாலும், பார்க்கவே முடிவதில்லை. அதனால, புகார் செய்ய வசதியா, சி.யு.ஜி., "சிம் கார்டு' கொடுத்தா பரவாயில்லை,'' என்றாள் சித்ரா.
""ஆமாம். அதைத்தான், நானும் சொல்றேன். மாவட்ட சாலைப்பாதுகாப்பு குழுதான், மக்களோட கேள்விக்கு பதில் சொல்லணும்'' என்று ஆவேசப்பட்டாள் மித்ரா.
""இந்த ரெஜிஸ்டர் ஆபீசுக்கு இடம் பார்க்குற விஷயம் தெரியுமா? இந்த ஆபீஸ், நெசவாளர் காலனிக்குள்ள, கண்ணுல படாத சந்துக்குள்ள இருக்குது.
தி.மு.க,, ஆட்சியில் அங்க மாத்தினாங்க. இப்ப, சொந்தமாக கட்டடம் கட்டலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. இதுக்காக, காங்கயம் ரோடு பகுதியில், முதலிபாளையம் பிரிவுல, 50 சென்ட் இடம் இலவசமாக தர்றோம்னு சொன்னாங்களாம். இதை தெரிஞ்சுட்டு, நெருப்பெரிச்சலை சேர்ந்தவங்க, 30 சென்ட் இடம் கொடுக்கறோமுன்னு சொல்றாங்களாம். இதனால, எங்க கட்டுறதுன்னு, ரெஜிஸ்டர் தீவிர மோசனை பண்றாராம்,'' என்று சித்ரா விளக்கவும், சிவன்மலை அடிவாரம் வரவும் சரியாக இருந்தது.
மலை மீது செல்ல, டிக்கெட் கேட்டதற்கு, "தைப்பூசம் என்பதால், அளவு கடந்த பக்தர்கள் வந்துள்ளனர். அதனால், மேலே செல்ல அனுமதியில்லை,' என்று கவுன்டரில் பதில் வரவும், அருகிலுள்ள பார்க்கிங்கில், வண்டியை நிறுத்தி விட்டு, இருவரும், விநாயகரை கும்பிட்டு, படிகளில் ஏறினர்.
""ஏம்பா... இந்த ஜல்லிக்கட்டு ஏற்பாடு, எப்படி இருக்குது?'' என்று கேட்டாள் சித்ரா.
""அதுக்கென்ன. அமர்க்களமா இருக்குது. ஜல்லிக்கட்டு வந்ததால், ஆளுங்கட்சியில ஒரே மல்லுக்கட்டாம்,'' என்று மித்ரா புதிர்போடவும், ""விளக்கமாகத்தான் சொல்லேன்,'' என்றாள் சித்ரா.
""ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கிற ஜி.ஓ., கலெக்டர் ஆபீசுக்கு கூட வரலை. ஆனா, அமைச்சர் சென்னையில இருந்தே வாங்கிட்டு வந்து, தைப்பூச விழாவில், வெளியிட்டாங்களாம். ஜி.ஓ., காப்பிய "பிரஸ்'க்குகொடுத்துடுங்கனு, அங்கிருந்த "மாஜி' சேர்மன் சொல்லவும், ""வேண்டாம்'னு "மாஜி' மாவட்ட சேர்மன் தடுக்கவும் பிரச்னை ஆரம்பிச்சிடுச்சு,'' என்று மித்ரா மூச்சு வாங்கினாள்.
இருவரும், படிக்கட்டில் அமர்ந்து தண்ணீர் குடித்தனர். சில நிமிடங்களில், மீண்டும் படியேற துவங்கினர். ""சரி.. அப்புறம் என்னாச்சு,'' என்று ஆர்வமானாள் சித்ரா.
""அலகுமலை கோயிலுன்னு கூட, பார்க்காம, ரெண்டு பேரும் "தரக்குறைவான' வார்த்தைகள் பேசிட்டாங்களாம். இதைப்பார்த்த போலீசும், அறநிலையத்துறை அதிகாரிகளும் தெறிச்சுட்டாங்களாம். இன்னும் போகப்போக என்னென்ன கூத்து நடக்குமுன்னு,' தெரியலை,'' என்று சொல்லி சிரித்தாள் மித்ரா.
அதற்குள், வள்ளியாத்தாள் சன்னதி வரவே, இருவரும், சுவாமி தரிசனம் செய்து விட்டு, சில நிமிடங்கள் "ரெஸ்ட்' எடுத்தனர்.
அப்போது, இருவரின் பேச்சும், கல்வித்துறை பக்கம் திரும்பியது.
""டீச்சர்ஸ், எம்.பில்., படிச்சா "டபுள் இன்கிரிமென்ட்' கிடைக்கும். ஆனால், அதற்கு அனுமதி வாங்கிட்டுத்தான் படிக்கணுமாம். திருப்பூர் மாவட்டத்துல, சில பேர் அனுமதி வாங்காமலேயே படிச்சு முடிச்சுட்டாங்க. அவங்களுக்கு, "இன்கிரிமென்ட்' போடறதுக்கு, முக்கிய அதிகாரியும், இன்னொருத்தரும், "வாங்கி'
தள்றாங்களாம். டீச்சர்சும், வேற வழியின்றி, "கப்பம்' கட்டுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""ஏன்... மித்து. கிணறு வெட்ட போய் பூதம் கிளம்புன கதையாக, பாரதியார் யூனிவர்சிட்டி "வைஸ் சேன்ஸலர்' லஞ்ச விவகாரம் தலை விரிச்சு ஆடுது. இன்னும் முடிந்த
பாடில்லை. அதேபோல, இந்த விவகாரமும் ஒரு நாள் வரத்தான் போகுது பாரு. சரி... கிளம்பலாம் மித்து. கூட்டம் அதிகமாயிட்டே இருக்குது,'' என்று சொன்ன சித்ரா படியேற துவங்கினாள்.
""திருப்பூரில் நடந்த தினகரன் அணி பொதுக்கூட்டத்தில் பேசிய, கர்நாடக மாநில பொறுப்பாளர், அமைச்சர்களை கண்டபடி பேசுனாராம். அதுக்கப்பறம் நடந்த பிரஸ்மீட்டில், ஜெ., படமே இல்லையாம். இதைப்பார்த்த நிர்வாகி ஒருவர், அடிச்சுப்புடுச்சு, ஜெ., படத்தை வாங்கிட்டு, கையில வச்சுகிட்டு நின்னாராம்,''
என்று சிரித்தாள் மித்ரா.
""ஜெ.,போட்டோ கூட இல்லாம, எப்படி இவங்க அரசியல் பண்றாங்கன்னு தெரியலையே,'' என்று சித்ராவும் சிரித்தாள்.
""பக்கத்துல இருக்கற பல்லடத்தில், "டாஸ்மாக்' சரக்கு ஆறா ஓடுதாம். எங்களை கவனிச்சிட்டா, எங்க வேண்டுமானாலும் சரக்கு வித்துக்குங்க,'ன்னு, போலீசே சொல்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""இது எங்க போய் முடியப்போகுதோ? அதே பகுதியில, பல கிராமங்களில், வீதிக்கு வீதி, "சரக்கு' விக்கறாங்களாம். ஒவ்வொரு நாளுக்கும், ஏரியா வாரியாக போய், வசூல் பண்றாங்களாம். இதை கேட்க வேண்டிய அதிகாரிகளுக்கும், கரெக்டா, "கவனிப்பு' நடக்குதாம்,'' என்றாள்.
""அண்ணாதுரை நினைவுநாள் நடந்த விருந்துல, கோவில் ஊழியர் செஞ்ச கூத்து தெரியுமா?'' என்றாள் மித்ரா.
""அப்படியா... எங்கே சொல்லு?'' என்று சித்ரா
கேட்டதும், ""ஈஸ்வரன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்துல , சவுத் வி.ஐ.பி., தனது பரிவாரங்களோடு, சாப்பிட வந்தாராம். அதைப்பார்த்த கோவில் ஊழியர்கள், அவருக்கு மட்டும் பெரிய சேர் போட்டு, விருந்து பரிமாறி, தடபுடல் பண்ணாங்களாம். அவருக்கு மட்டும், டம்ளரில் பாயாசம், தயிர் ஊற்றி அசத்தினாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""சம விருந்துன்னு, சும்மா வாயால சொன்னா போதுமா? மக்களோட மக்களா உட்கார்ந்து சாப்பிட்டா என்னவாம். இந்த கோவில் ஊழியர்களும் இப்படித்தான். அரசியல்வாதிகள் வந்தால், அவங்களை "காக்கா' புடிக்க, என்ன வேணாலும், செய்வாங்க,'' என்று கோபப்பட்டாள் சித்ரா.
இருவரும், மலையை அடைந்து விட, சுவாமி தரிசனம் செய்ய, நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு பின், சுவாமி தரிசனம் செய்து விட்டு, பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டனர்.
""என்னக்கா, போலீஸ் மேட்டர் ஒண்ணுமே சொல்ல மாட்டீங்களா?'' என்று மித்ரா குழந்தை போல் கேட்டதும்,
""கொஞ்சம் பொறுடா கண்ணு... இப்ப சொல்றேன்,'' என்ற சித்ரா, புளியோதரையை சாப்பிட்டு கொண்டே ஆரம்பித்தாள்.
""சிட்டி ரூரல் லிமிட்டில், பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக தெரிந்தும், கண்டுக்காம விட்ட அதிகாரி, கூட இருந்த எஸ்.ஐ., போலீசுன்னு மொத்தம்
ஏழு பேரை, கமிஷனர் டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு. ஆனால், அதில் சோகம் என்னன்னா, நேர்மையாக இருந்த ஒரு ஏட்டும் சேர்ந்து, இவங்களோட மாட்டீட்டாரு.
இப்படி கூண்டோடு, ஏழு பேரை தூக்கியடிச்சதை தெரிஞ்ச, மற்ற ஸ்டேஷன்களில் உள்ள அதிகாரி களும், போலீசும், "கிலி' அடிச்ச மாதிரி இருக்காங்களாம்,''
என்றாள் சித்ரா.
""எங்கிட்டயும் ஒரு மேட்டர் இருக்கு. தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையம் பிரிவில், சவுத் டிராபிக், வசூலில் பட்டைய கிளப்பறாங்களாம். அடிக்கடி ஏக்ஸிடென்ட் நடக்கிற இடத்தில, நின்னு "செக்கப்' பண்றதால, வண்டி ஓட்டுற எல்லாத்துக்கும் இடைஞ்சலா இருக்குது. எல்லா, டாக்குமென்ட் காண்பிச்சாலும், "வரி' போட்டுதான் அனுப்பறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""பக்கத்துல இருக்கிற பெருமாநல்லூரில், தோழர்கள் கட்சி சார்பில், பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. இதைக்கொண்டாட, அந்த கட்சி பொறுப்பிலுள்ள
ஒருவர் "டாஸ்மாக்' கடையில் வசூல் வேட்டை நடத்துனாராம். இவங்களே மதுக்கடையை எதிர்த்து போராடுவாங்களாம். அப்புறம், அவங்க கிட்டயே, வசூலும்
பண்ணுவாங்களாம். இது எந்த ஊர் நியாயம்ன்னு தெரியலையே,''என்று சிவாஜி டயலாக் மாதிரி பேசினாள் சித்ரா.""சரி... மித்து, கிளம்பலாம். தேர் இழுக்க ஆரம்பிச்சுருவாங்க,'' என்று சொல்லவும், மித்ராவும் நடக்க ஆரம்பித்தாள். அப்போது, சிவன்மலை அடிவாரத்தில், "முருகனுக்கு அரோகரா' என்ற கோஷம் விண்ணதிர கேட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X