வாழ்ந்து காட்டுவோம்... வாருங்கள்!| Dinamalar

வாழ்ந்து காட்டுவோம்... வாருங்கள்!

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (1)
வாழ்ந்து காட்டுவோம்... வாருங்கள்!

வாழ்க்கை என்பது நமது செயல்களை, சிந்தனைகளை, மனித உறவுகளோடு நாம் கொண்டுள்ள அணுகுமுறைகளை அவ்வப்பொழுது சரிபார்த்து, செப்பனித்து பயணிக்கும் புனிதப் பயணமாகும். பழுதுகளை நீக்கிப் பயணிப்பது என்பது மனிதனுக்கே உரித்தான ஆற்றல். ஏற்றம்,இறக்கம், விருப்பு, வெறுப்பு, நட்பு, பகை போன்றவை தவிர்க்க முடியாத பயணத் தடைகள். இவைகளைக் கடந்து, இலக்கை அடைபவனே தன்னிறைவு பெற்றவனாகின்றான்.

இப்பயணத்தில் எவரும் நமக்குப் பகையல்ல. யாரையும் வீழ்த்த வேண்டுமென்ற வீண் வேண்டுதலோ,முந்திச் செல்ல வேண்டுமென்ற முனைப்போ இல்லை. மன நிறைவே ஆதாயம் என்பதால் வேறு அரிதாரமும் தேவையில்லை. இந்நிலையை அடைய முந்தைய அனுபவங்களின் துணைகொண்டு, கவனமாக நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். அன்றாட நிகழ்வுகளை மனத் திரையில் படமாக்கி சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
நிறை குறைகளை நன்கறிந்து, குறைகளை அன்றே களைதல் நன்று. ஒவ்வொரு நாளும் நம்மை புதுப்பித்துக் கொள்வதே வளர்ச்சி. “கவனக் குறைவே மரணம்” என்கிறது மகாபாரதம்.


சிந்தனைகள் வற்றிப்போவதால்

உள்ளத்தில் உயர் சிந்தனைகள் வற்றிப் போவதால்தான் வாழ்க்கை பயணம் சலித்தும், அலுத்தும் போகின்றது. அதிலிருந்து மீள, மனமானது வேறொரு கீழான செயலை நாடிச் செல்கின்றது.

கவனம் குறைவதால் தடம்மாறித் தடுமாறுகின்றது. தவறிழைத்தல் தவறல்ல. ஆனால் தவற்றினையே தவமாக எண்ணி, அதற்கு நியாயங்கள் பல கற்பித்து,அதனையே நம் இயல்பாக்கி வாழ்வது மடமை. செய்த தவற்றையே மீண்டும், மீண்டும் செய்வதில் புகழேது? பலவீனமாய் மனதின் முன் மண்டியிட்டு மடிந்து போவதற்கேன் மனிதப் பிறவி? சிந்திப்போம்.

வாழ்க்கை அன்றாடம் நம் எதிரே நிறுத்தும் சூழல்களை கணித்தல் சுலபமல்ல. இவற்றை அணுகுவது என்பது ஒரு கலை மட்டுமல்ல. விஞ்ஞானமும் கூட. வாழ்க்கை பல அதிசயங்களை தன்னுள் அடக்கிய மர்மம். அவை நாள்தோறும் நமக்கிடும் சவால்கள் வலிமையானது. ஓய்வில்லாத கடல் அலைகளைப் போல் நிரந்தரமானது. அலை ஓயட்டும் எனக் கரையிலேயே காத்திருப்போர் பலருண்டு.

அஞ்சி, அஞ்சிக் கொஞ்சமாக கால் நனைப்போர் சிலருண்டு. ஆனால் மிரளாது எதிர் நின்று, மீள்வதற்கான வழிகண்டு முத்திரை பதிப்பவர்களே அபூர்வமானவர்கள். சிக்கல்களில் இருந்து விடுபட்ட நிலையில்தான் விடை புரியும். அதுவே விடுதலை.


சூழலெனும் சூழ்ச்சிசூழ்நிலைகளின் சூழ்ச்சி என்னும் வலையில் மாவீரனாகிய அர்ஜுனனே வீழ்ந்து மனம் நொந்தான். அது பலவீனம் என்றறிந்தும், அறியாதது போல் பல சமாதானங்களைச் சொல்லி அடக்கியது மனம். அதனால் புத்தியும் நிலைகுலைந்து போனது.

அறிவின் வடிவாய் அவனருலில் நின்ற கண்ணன் “அர்ஜுனா! நீ கீழான மனத்தளர்ச்சியைஅடையாதே! இவ்வுலகம் உன்னைப் பல சொல்லால் இகழும். பிறர் இகழ்ச்சியே வீரனுக்கு மரணம். துவளாதே! எழுந்து நில்! இன்னல்களை எதிர்கொள்! நீ தோற்றாலும் புகழடைவாய்! என அரவணைத்து கீதை என்னும் அமுதை ஊட்டினான். அதுகேட்டுத் தெளிந்து, பின் தன்கடமையை துணிந்து செய்தான்.


அறிவிலே தெளிவுநாம் பயின்று பெற்ற அறிவு, பொருளீட்டவும், வசதி, வாய்ப்புகளை வளப்படுத்திக் கொள்ளவும் உதவலாம். ஆனால் நம் பலவீனத்தைப் போக்கவோ, சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்ஆற்றலை வளர்க்கவோ முழுமையாக உதவாது. உதவுமென்றால் அர்ஜுனன் தடுமாறியதேன்? கற்றோரும் உயர்பதவியில் தவறிழைப்பதேன்? இவ்வுதாரணம் குறை கூறுவதற்காக அல்ல. குறைகளை களைவதற்கே.

அறிவு வேறு, அதில் ஏற்படும் தெளிவென்பது வேறு. அறிவு தெளிவடையும் போது, விரிவை யும் அடைகின்றது. தெளியாத அறிவினால் பயனேதுமில்லை. ஆகவே அறிவில் தெளிவைத் தீட்டுதல் அவசியம். தெளியாத அறிவு அறியாமையைக் காட்டிலும் ஆபத்தானது. அதனால் தன்னலன் மட்டுமல்ல, பிறர் நலனும், தேச நலனும் கூடக் கெடும் சூழல் உருவாகின்றது.

தெளிவற்ற அறிவே பலவீனத்தின் மூலம். பிரிவினைகளின் அஸ்திவாரம். அதுவே வேற்றுமைகளைத் தோற்றுவிக்கும் வேதாளம். இப் பிரிவினையென்னும் வேதாளாமே சமூகம், வீடு, மதம், ஜாதி, மனிதம் என எல்லா இடங்களிலும் ஊடுருவி, துண்டாடத் துடிக்கின்றது. அது நுழைந்த இடமெல்லாம் அழிவே முடிவாகும்.

தெளிந்த அறிவே நம்மை எல்லா வீழ்ச்சிகளினின்றும் காக்கும் கருவி. எப்பகையும் உட்புகமுடியாத அரணாகத் திகழ்வதும் அவ்வறிவே என்கிறது வள்ளுவம்.“தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்” என்று உரக்கச் சொன்னான் பாரதி.


ஆன்மிக நாட்டம்அன்றாட அனுபவங்களில் கிடைக்கும் அறிவையும், படித்துப் பெற்ற அறிவினையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அறிவு அதில் முழுநிறைவைப் பெறுவதில்லை. உண்மையான, தெளிந்த அறிவின் இருப்பிடம் ஆன்மிகமே. வள்ளுவரும். “கற்றதனால் ஆய பயன் என்கொல்” எனக் கேட்கின்றார்.

இறைவனடி தொழுதலும், தொழுவதோடு நில்லாது, நற்பண்பிலும் சிறந்து விளங்குதல் அறமெனத் தொடர்கிறார். அறத்தால் வருவதே தெளிவு. அன்பின் வறட்சியை, அறியாமையின் இருளை, அறிவின் வேற்றுமையைக் களைவது ஆன்மிகம். அது ஒட்டு மொத்த ஒருமைப்பாட்டிற்கும் அடி நாதம். அதன் அடிப்படைப் பயிற்சி பண்பிலிருந்தே துவங்குகின்றது. அது வெறும் புத்தகக் கல்வியல்ல.

பண்புக் கூடம். “பண்புடையோர் ஓரிடத்திற்கு செல்லும் பொழுதும், பண்பிலாதார் அவ்விடத்தினின்று சென்ற பின்னும் சந்தோஷத்தை கொடுப்பர்” என்பார் சுவாமி சின்மயானந்தர்.“யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே” என்று மிக எளிய நடையில் எடுத்துரைக்கின்றது திருமந்திரம். வேள்விகள், தானங்கள், தவங்களைச் செய்ய முடியாவிடினும் இன்சொல் கூறலாம். பிறர் மனதையும், நம்பிக்கைகளையும் சிதைக்காது ஒன்றுகூடி உற்சாகமாக உயர் விஷயங்கள் குறித்துப் பேசலாம்.

உண்மையை உரத்துச் சொல்லும் போதுகூட, உள்நோக்கமின்றிச் சொல்லும் உன்னத மாண்புணர்ந்து பேசலாம். பல பெயர்களைத் தாங்கி, பல வடிவங்களில் தோன்றி, எல்லோர் உள்ளத்திலும் உறையும் இறைவன் ஒருவனே எனத் தெளிவுற அறிதலே பண்பாகும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை” என்றுரைத்ததும் நம் மண்ணில் பிறந்த திருமூலர் தானே.


வாழ்ந்து காட்டுவோம்“வாழ்வில் நேரும் அனைத்து அதிர்வுகளையும் தாங்கும் ஆற்றல், பண்பட்ட மனதிற்கே உண்டு” என்பார் சுவாமி விவேகானந்தர். நற்பண்புகளே மனதைப் பக்குவப்படுத்துகின்றது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும், சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும் இப்பக்குவமானது தேவைப்படுகின்றது. அப்பொழுதுதான் வன்முறைகளனைத்தும் நீங்கும்.

நம்மைச் சுற்றி நல்ல அதிர்வுகள் பரவும். உள்ளம் மலரும். சிந்தை சிறக்கும். இயற்கை செழிக்கும். வையம் தழைக்கும். அன்பெனும் மந்திரம் எங்கும் ஓங்கி ஓலிக்கும். இவ்வுண்மை உணர்ந்து, சுயநலம் நீக்கி, அர்பணித்தும் அரவணைத்தும் வாழும் வாழ்க்கையே உன்னதமானது. வாழ்ந்துகாட்டுவோம் வாருங்கள்.சிவயோகானந்தா

சின்மயா மிஷன், மதுரை94431 94012We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X