சென்னை: ''மத்திய தொல்லியல் துறையின், மைசூரு அலுவலகத்தில் உள்ள, தமிழ் கல்வெட்டு படிகள், வெளிப்படை தன்மையுடன் பாதுகாக்கப்படுகின்றன; ஆவணங்கள் ஏதும் சிதைக்கப்படவில்லை,'' என, அதன் இயக்குனர், முனிரத்தினம் தெரிவித்துள்ளார்.
மத்திய தொல்லியல் துறையின், தென்னிந்திய அலுவலகம் மைசூரில் உள்ளது. அங்குள்ள, கல்வெட்டு துறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து புகார் எழுந்தது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் கல்வெட்டியல் துறை இயக்குனர், முனிரத்தினம் கூறியதாவது:
மைசூரு கல்வெட்டுப் பிரிவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி கல்வெட்டு ஆவணங்களும், உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு ஆவணங்களை சரிபார்த்து, பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும், இங்கு வந்து ஆவணங்களை பார்த்து, ஆராய்ந்து செல்கின்றனர்.
மத்திய அரசின் நிறுவனமான, மத்திய தொல்லியல் துறை, இந்திய மொழிகளின் ஆவணங்களை சிதைத்து, நாட்டின் ஒற்றுமையை ஒரு போதும் கெடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.