ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி படுகொலை : வீடு புகுந்து வெறிச்செயல்; ஐ.சி.எப்.,பில் பயங்கரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி படுகொலை : வீடு புகுந்து வெறிச்செயல்; ஐ.சி.எப்.,பில் பயங்கரம்

Added : பிப் 10, 2018
Advertisement

சென்னை: தெற்கு ரயில்வே, முக்கிய தொழிற்சங்க நிர்வாகி ஒருவரை, பட்டப்பகலில், அவரது மனைவி கண் எதிரே, வீட்டிற்குள் புகுந்து, வெட்டிக் கொலை செய்த சம்பவம், சென்னை, ஐ.சி.எப்.,பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரமாரியாக வெட்டு : சென்னை, ஐ.சி.எப்.,பில் உள்ள, சென்னை பாட்டை சாலையைச் சேர்ந்தவர், புதியவன், 50. இவர், ஏ.ஐ.ஓ.பி.சி., எனப்படும், ரயில்வே பிற பிற்போக்கு வர்க்க தொழிற்சங்கத்தின் செயலராக இருந்தார்.அவரது மனைவி ரஞ்சிதா, 44. இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். தனியார் பள்ளியில் படிக்கின்றனர். நேற்று காலை, மகள்கள் இருவரும், பள்ளிக்கு சென்றனர். காலை, 9:00 மணியளவில், வீட்டின், 'ஹால்' பகுதியில் அமர்ந்து, புதியவன், காலை உணவு அருந்திக் கொண்டிருந்தார். ரஞ்சிதா, கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென கதவை தட்டும் சத்தம் கேட்டது. ரஞ்சிதா சென்று, கதவை திறந்தார். சற்றும் எதிர்பாராத நிலையில், வெளியே இருந்த இருவர், ரஞ்சிதாவை பிடித்து தள்ளிவிட்டு, வீட்டிற்குள் புகுந்தனர். உடனே, கதவை மூடி, தாழிட்டனர். சுதாரிப்பதற்குள், அவர்கள், முதுகில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, உணவருந்திக் கொண்டிருந்த புதியவனின், தலை, கை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில், சரமாரியாக வெட்டினர்.
அதிர்ச்சி : இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த புதியவன், சம்பவ இடத்திலேயே இறந்தார். கணவரை, கண் எதிரே வெட்டிக் கொலை செய்வதை கண்ட, ரஞ்சிதா, அதிர்ச்சியில் அப்படியே உறைந்தார்.பின் அந்த இருவரும், கண் இமைக்கும் நேரத்தில், அந்த இடத்தில் இருந்து, இருசக்கர வாகனத்தில் தப்பினர். கணவரின் உடலை பார்த்து, ரஞ்சிதா கதற, சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். தகவலறிந்த கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், ஐ.சி.எப்., இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, புதியவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தடயவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் பதிவான கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், கொலையாளிகள், இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வது தெரிந்தது. ரஞ்சிதாவிடம், அந்த காட்சிகளை காட்டிய போது தான், புதியவனை கொலை செய்த நபர், அவரிடம், 10 ஆண்டுகளுக்கு முன் கார் ஓட்டுனராக வேலை பார்த்த, பாஸ்கரன் என்பது தெரியவந்தது. மற்றொரு நபர், பாஸ்கரனின் கூட்டாளியாக இருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். தப்பிய கொலையாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
விசாரணை : இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதியவன் கொலை குறித்து, முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதில், அவரை வெட்டிய நபர், அவரிடம் பணிபுரிந்த பாஸ்கரன் என, அடையாளம் காணப்பட்டு உள்ளது. பாஸ்கரன், புதியவனிடம் கார் ஓட்டிய போது, அடிக்கடி விடுப்பு எடுத்துள்ளார். புதியவனை, தரக்குறைவாகவும் பேசி வந்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த புதியவன், பாஸ்கரனை, அப்போதே வேலையை விட்டு நிறுத்தி உள்ளார். அதன் பின்னர், பாஸ்கரனுடன், புதியவனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், பாஸ்கரன், ஏன் புதியவனை கொலை செய்தான் என்பது, தெரியவில்லை. ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியான புதியவனின் பதவிக்கு, கடும் போட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், திட்டமிட்டு, யாரேனும் பாஸ்கரனை வைத்து, இந்த கொலையை அரங்கேற்றினரா என்றும் சந்தேகிக்கிறோம்.பணிபுரியும் இடம், தொழிற்சங்கத்தில், புதியவனுக்கு, யார் யார் எதிரிகள் என்றும், விசாரணை நடக்கிறது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவர். பின், கொலைக்கான காரணம் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X