கையூட்டில் கலங்கி நிற்கும் சமுதாயம்!

Updated : பிப் 11, 2018 | Added : பிப் 11, 2018 | கருத்துகள் (2) | |
Advertisement
இரண்டு நண்பர்கள் ஆற்றங்கரையில் நின்று, பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பார்த்து கொண்டிருந்தனர். அதில், ஒரு கம்பளி மூட்டை மிதந்து வந்து கொண்டிருந்தது. நண்பர்களில் ஒருவன், அந்த மூட்டையை எடுக்க விரும்பினான்.ஆனால், அடுத்தவனோ, வெள்ளப்பெருக்கின் அளவை கருதி, வேண்டாமென்று தடுத்தான். ஆனால், முதலாமவன் மீறி, ஆற்றில் குதித்து கம்பளி மூட்டையை கரைக்குத் எடுத்து வர முயற்சித்தான்;
கையூட்டில் கலங்கி நிற்கும் சமுதாயம்!

இரண்டு நண்பர்கள் ஆற்றங்கரையில் நின்று, பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பார்த்து கொண்டிருந்தனர். அதில், ஒரு கம்பளி மூட்டை மிதந்து வந்து கொண்டிருந்தது. நண்பர்களில்
ஒருவன், அந்த மூட்டையை எடுக்க விரும்பினான்.

ஆனால், அடுத்தவனோ, வெள்ளப்பெருக்கின் அளவை கருதி, வேண்டாமென்று தடுத்தான். ஆனால், முதலாமவன் மீறி, ஆற்றில் குதித்து கம்பளி மூட்டையை கரைக்குத் எடுத்து வர முயற்சித்தான்; முடியவில்லை.கரையிலிருந்தவன் சொன்னான், 'மூட்டை போனால் போகிறது. விட்டு வா... நீயாவது உயிர் பிழைப்பாய்' என்றான். அதற்கு அவன், 'நான் அதை விட்டு வெகு நேரமாகிறது. அது தான் என்னை விட மாட்டேன் என்கிறது' என்றான்.

தண்ணீரில் மிதந்து வந்தது, கம்பளி மூட்டையல்ல, கரடி.அதுபோல, மக்களின் நலனுக்காக பணியாற்றும், அரசு பதவியில் உள்ளவர்கள், தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட கடமையைச் சரியாக செய்தால் கூட, அதனால் பயனடைந்தவர்கள் சிலர், அன்பளிப்பு என்ற பெயரில் ஏதாவது ஒரு பரிசை அல்லது தொகையை கொடுத்து, லஞ்சத்தை துவக்கி விட்டனர்.

அந்த பழக்கம், கடமையை செய்யத் தவறினாலும், அதனால் பயனடைந்தவர்கள் கொடுப்பது
என மாறி, எதுவாக இருந்தாலும், கையூட்டு கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்ற நிலையை, அரசு பதவியில் இருப்பவர்கள் ஏற்படுத்தி விட்டனர்; மக்களும், அதற்கு தங்களை பழக்கப்படுத்தி கொண்டு விட்டனர்.

'ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால் கூட கொடுத்து விடுவோம்; வேலை முடிந்தால் சரி' என்ற நிலைக்கு போய் விட்டனர். 'அவர் காசு வாங்க மாட்டார்' என்றால், நம்ப மறுக்கின்றனர்
அல்லது அதற்காக வருத்தப்படுகின்றனர். ஏனென்றால், போட்டி அதிகமாகி விட்டது; ஒருவர் கொடுக்கத் தயங்கினால், அடுத்தவர் கொடுத்து, வாய்ப்பைத் தட்டிச் சென்று விடுவார் என்ற நிலை.

அதனால் தான், ஊழலுக்கு, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லி
பயனில்லை; மக்களும் தான் காரணம் என, சிலர் வாதிட ஆரம்பித்து விட்டனர்.சமூகப் பொறுப்புள்ளவர்கள் யாரும் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.தீய நோக்கத்தோடு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கொடுக்கப்படும் கையூட்டை கொடுத்தவரும், சமமாகக் கருதப்பட வேண்டிய குற்றவாளி தான். நியாயம், நேர்மை இவற்றின் பக்கம் இருக்கும் யாரும், கையூட்டு கொடுக்க முன் வர மாட்டார்கள்.

தங்கள் பக்கம் தவறுஉள்ளவர்கள், குறையிருப்பவர்கள் தான், அதை மறைக்க, கையூட்டு கொடுக்க முன் வருவர். அதற்கு துணை போகும் அதிகாரியும்,அரசியல்வாதியும், சமூக விரோதிகளுக்கு சமமானவர்கள் தான்!சமுதாயத்தில் மிக சாதாரண நிலையில் இருந்தவர்கள், தங்களின் உழைப்பால் மிக உயர்ந்த நிலைக்கு வந்திருந்தால், அவர்கள் போற்றுதலுக்கும், பாராட்டு தலுக்கும் உரியவர்கள்.ஆனால், எந்த தகுதியும் இல்லாமல், கிடைத்த வாய்ப்பை, தவறாகப் பயன்படுத்தி, பலரின் வயிற்றெரிச்சலை சம்பாதித்து, கூடவே பணத்தையும் சேர்த்து உயர்ந்தவர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள் இல்லை; துாற்றுதலுக்கு உரியவர்கள்; சட்டத்தின் தாக்கு
தலுக்கு உரியவர்கள்.

ஒரு பதவியைத் தேர்ந்தெடுத்து, அதை அடைய முயற்சிப்பவர், அந்த பதவிக்கு மக்களிடையே உள்ள மதிப்பு, மரியாதை, அந்த பதவியில் மக்களுக்கு சேவை செய்து புகழையும், பெருமையையும் அடைய உள்ள வாய்ப்பு ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும்.அதன் படி, அந்த பதவிக்கு வர முயற்சிக்க வேண்டுமே தவிர, அந்த பதவியில் இருப்பவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால், எந்த அளவுக்கு சுகத்தை அனுபவிக்கலாம்; சொத்தை குவிக்கலாம் என, கற்பனையில் கணக்குப்போடக் கூடாது.

அவ்வாறு கணக்கு போட்டு வருபவர்கள், அந்தப் பதவியின் பெருமையை நாசப்படுத்த வருபவர்கள்.அது, வி.ஏ.ஓ., பதவியாக இருந்தாலும் சரி... அரசின் தலைமைச்செயலர் பதவியாக இருந்தாலும் சரி... முதல் அமைச்சர் பதவியாகவே இருந்தாலும் சரி...நேர்மையான அரசியல்வாதிகளின் பெயர்களைப் பட்டியலிட ஆரம்பித்தால், கர்ம வீரர் காமராஜர், கக்கன், இவர்களுக்கு பிறகு யாருடைய பெயரையும் சொல்லத் தோன்றவில்லை.

நேர்மையற்ற அரசு அதிகாரியாகட்டும், ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியல்வாதியாகட்டும், அவரிடம் நேர்மை இல்லையென்றால், கீழ் பணியாற்றும் அதிகாரிகளையும், பணியாளர்களையும் தவறிழைக்கும் போது, தட்டிக் கேட்கும் துணிவையும், தகுதியையும் இழந்து விடுவர்.
அதனால் தான், கீழ் நிலையில் உள்ள அலுவலர்கள், சாதாரண மக்களிடம் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றனர். தனி நபர், அரசு அலுவலரை அணுகி, தகவலைக் கேட்டால், அந்த அலுவலர், வந்தவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்து கூட பேசுவது இல்லை.

அவர்களுக்கு தெரியும்... நம்மைப்பற்றி இவர்கள், மேலுள்ளவர்களிடம் புகார் செய்தாலும், அந்த அதிகாரிகளுக்கு தங்களைத் தட்டிக் கேட்கும் நிலை இல்லை என்று!உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கும் இன்றைய அதிகாரிகள் பலரும், சுயமாக முடிவெடுப்பதில் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்; தயக்கம் காட்டுகின்றனர்.சின்னச்சின்ன விஷயங்களில் கூட முழுதுமாகக் கேட்டு தெரிந்து, நியாயமான முடிவை துணிந்து எடுக்காமல், கீழுள்ளவர்கள் சுட்டி காட்டும் இடத்தில் கையெழுத்து போடும் நிலையில் தான் இருக்கின்றனர்.

கீழ்நிலையில் உள்ளவர்கள், அவர்களின் சொந்த விருப்பு, வெறுப்போடு அல்லது கையூட்டு பெற்று, எடுக்கும் முடிவை, மாற்றும் துணிவில்லாமல் அப்படியே ஆமோதிக்கிற வேலையைத் தான் செய்கின்றனர்.அந்த அச்சத்துக்கு காரணம், உயர் அதிகாரிகளின் பல ஊழல் விவகாரங்கள், கீழுள்ளவர்கள் மூலமாகத்தான் வெளியாகிறது என்பதை, அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர்.

கீழுள்ளவர்கள் செய்யும் தவறை, பாதிக்கப்பட்ட மக்கள், மேலதிகாரிகளிடம் சொன்னால், அது எவ்வித குறிப்பிட்ட உத்தரவும் இல்லாமல், 'தக்க நடவடிக்கைக்காக' என்ற ஒரு வார்த்தையை, உபயோகித்து உளுத்துப்போன வார்த்தையைச் சுமந்து கொண்டு, தவறு செய்த அதிகாரியிடமே திரும்பி வந்து விடுகிறது. 'நீங்கள் மேலதிகாரியிடம் போனாலும் எங்களுக்கு பயமில்லை' என, கீழே உள்ளவர்கள் சொன்ன நிலை தாண்டி, 'மேலே போனாலும் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை' என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டனர்.

அதனால் தான், சாலையில் உட்கார்ந்து, அடம் பிடித்து, அதிகாரிகள் தங்களைத் தேடிவரும்படி செய்கின்றனர். மக்களின் இந்த போக்கு தவறானது என்றாலும் அதற்கு காரணம், பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள் தான். கீழ் மட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு, தவறு செய்தால், உயரதிகாரி முன், தலை குனிந்து நிற்க வேண்டி வரும்; துறை நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லை!

ஆய்வுகள் கூட, முன் போல் நடப்பதுமில்லை; ஆய்வு போலவும் அது இல்லை. சில அதிகாரிகள் கீழுள்ளவர்களையே ஆய்வுக் குறிப்பை எழுதி வரச் செய்து, தங்களின், 'மதிப்பு மிக்க' கையெழுத்தை இட்டு, கடமையைக் கழிக்கும் நிகழ்வுகளும் மலிந்து விட்டன. அதற்கு, நேரமின்மையையும், பணிச்சுமையையும் காரணமாகக் காட்டுகின்றனர்.

நீதிமன்றத்தில் இன்று வழக்குகள் அதிகம் குவிவதற்கு இது போன்ற அதிகாரிகள் தான் காரணம்.
நியாயமான, சட்டப்படியான வேலைகளைச் செய்வதற்கும், தவறு செய்யும் அதிகாரிகளைத்
தட்டிக் கேட்பதற்கும், நீதிமன்றத்தைத் தான் மக்கள் நாட வேண்டியிருக்கிறது.வழக்குகளால் நீதி
மன்றம் நிரம்பி வழிகிறது. நீதியரசர்கள், 'அரசு நிர்வாகத்தை நாங்கள் தான் நடத்த வேண்டுமா...' என்றும் கேட்டு விட்டனர். இதற்கு ஒரு படி மேலே போய், சில புத்திசாலி அதிகாரிகள், 'கோர்ட்டுக்குப் போய் உத்தரவு வாங்கி வாருங்கள்' என, சொல்ல ஆரம்பித்து விட்டனர்
.
நீதிமன்றம் மட்டும் இல்லையென்றால் பல அப்பாவிகள், நேர்மையற்ற அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைக்கு பலியாகி கொண்டிருப்பர்.எனவே, இந்த அதிகாரிகள், தாங்கள் இந்த பதவியை பிடிப்பதற்காக, தேர்வுக்கு எப்படி பாடங்களை மிக ஆழமாக ஊன்றிப் படித்தனரோ, அதே போல பொதுமக்கள் கொண்டு வரும் கோரிக்கை மனுக்களை கவனமாக ஊன்றிப்படித்து, அதற்கு உரிய நடவடிக்கையை குறிப்பிட்டு எழுதி, அது நடக்கிறதா என, பின்பற்றி கவனித்தால் தான், மக்களை, இந்த நேர்மையற்ற அதிகாரிகளிடமிருந்து காப்பாற்ற முடியும்.

மக்களுக்கும் அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கை பிறக்கும். போராட்டங்களும், நீதிமன்றங்களில் குவியும் வழக்குகளின் எண்ணிக்கையும் குறையும்.அதற்காக, வி.ஏ.ஓ., முதல் தலைமைச்செயலர் வரை; காவலர் முதல், இயக்குனர் வரை நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் இல்லை என அர்த்தமில்லை!எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது தான் வருத்தமளிக்கும் செய்தியாக இருக்கிறது!

இ - மெயில்: spkaruna@gmail.com

எம்.கருணாநிதி-,
காவல்துறை
கண்காணிப்பாளர்-, ஓய்வு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (2)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
06-மார்-201805:30:33 IST Report Abuse
N Annamalai உண்மை .தலைப்பு சமுதாயத்திற்கு பதில் தமிழகம் என இருந்து இருந்தால் சாலபொருத்தமாக இருந்து இருக்கும் .
Rate this:
Cancel
aruna - Tiruppur,இந்தியா
05-மார்-201817:10:47 IST Report Abuse
aruna உண்மை. பல வருடங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்தல் சென்றிந்த போது. எல்லோரும் காத்திருக்கும் போது ஒரு நபர் கையூட்டு கொடுத்து முன்னதாக புதுப்பித்து சென்றார். அப்பொழுது நினைத்தேன் வேலைக்கு காத்திருக்கும்போதே லஞ்சம். லஞ்சம் மக்களால்தான் வளர்க்கப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X