காதலே! காதலே! என்ன செய்யப் போகிறாய்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

காதலே! காதலே! என்ன செய்யப் போகிறாய்?

Added : பிப் 12, 2018
 காதலே! காதலே! என்ன செய்யப் போகிறாய்?

எல்லாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.என் பாட்டிக்கு இருப்பு கொள்ளவில்லை.'நாங்கள்லாம் கல்யாணம் பண்றச்சே இதெல்லாம் கிடையவே கிடையாது? என்னை கட்டிக்க போறவரையே, கல்யாணம் பண்ணிக்கப் போற அன்னிக்குத் தான் தெரியும். இங்க பார்க்காதே, அங்க பார்க்காதேன்னு, என் மாமியாக்காரி பண்ணினதெல்லாம், இப்ப நினைச்சாலும் கொடுமையா இருக்கு.'என் மாமியாரை சொல்லணும். இல்ல அன்னிக்கே... ச்ச... இப்பலாம் இது ரொம்ப சகஜமாயிடுத்து! காலம் ரொம்ப கெட்டுப் போயிடுத்து, கடவுளே!'பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த என் பாட்டியின் சிநேகிதி, அவள் மனதில் இருப்பதை, அவள் பங்குக்கு அங்கலாய்த்தாள். 'சரி தான். கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த கிழத்தையா நான் கல்யாணம் பண்ணிண்டிருப்பேன்... என் விதி...'பாரு... இதுங்க, என்ன ஜாலியா போஸ் கொடுத்துண்டு, ஜம்னு டிரெஸ் பண்ணிண்டு! இதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். பேசாம வாயை மூடிண்டு பாரு...' கவுன்டர் கொடுத்தாள், பாட்டியின் சிநேகிதி. இருந்தாலும் என் பாட்டிக்கு மனசு கேட்கவில்லை. 'நாலு பேருக்கு முன்னாடி, இது தேவையா... நாளைக்குத் தான் இதுங்களுக்கு கல்யாணம்... முதல் நாளே, இப்படியெல்லாம் கண்ட இடத்தையெல்லாம் தொட்டுண்டு... ச்ச... போஸ் கொடுக்கறா...'இந்த போட்டோகிராபருக்காவது விவஸ்தை வேண்டாம்... இப்படியெல்லாமா படம் எடுப்பான்? அதுவும் நாலு பேர் பாக்கறச்ச... என்னவோ போ... கலி முத்திடுத்து' என்றாள்.'சும்மா இருடி. இதுங்க நேத்திக்கு இன்னிக்கு பாக்கல. ரொம்ப நாளா, லவ் பண்ணிட்டு இருக்காளாம். ரொம்ப நாளைக்கு முன்னாலேயே அவங்களே முடிவு பண்ணிட்டாளாம். அப்பா, அம்மாவும் சரின்னு சொல்லிட்டாளாம். அப்புறம் என்ன வெட்கம்... உனக்கு வெட்கமா இருந்தா கண்ணை மூடிக்கோ! அவர்களின் விவாத மேடை, இன்னிக்கு முடியப் போறதில்ல.வரவேற்பு நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், 'நீ தான் என் நம்பிக்கை' என்ற உந்துதலில், நாளையைப் பற்றி கவலைப்படாமல், மாப்பிள்ளையும், பெண்ணும், மேடையில், 'லவ்வி'க் கொண்டிருந்தனர்.என் கண், அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாலும், எண்ண ஓட்டம் எங்கேயோ இருந்தது.காதல்!மிகப் பெரிய சக்தி தான்! எல்லா மதங்களிலும், காலம் கடந்தும், இதிகாச காலம் தொட்டு இப்போது வரையும், சினிமா முதல் சீரியல் வரை, எல்லாருடைய வாழ்விலும், ஒரு வினாடியாவது வந்து போயிருக்கும். வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில், எல்லாரும் அதை உணர நேர்ந்திருக்கும். அல்லது நாம் சந்திக்கும் சிலர் கூட, அதை நினைவுபடுத்துவர்.காதல், தேவையா... அவசியமா? இதனால் நிகழப் போவது என்ன? இதனால் என்ன மாற்றம் நிகழப் போகிறது? காதலுக்கு கண் இல்லை என்கின்றனரே... அது உண்மையா? காமம், காதலின் தொடக்கமா... இல்லை, அது தான் முடிவா? ஒரு படத்தில் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதல் செய்வர். கடைசி காட்சியில் தான், இருவருமே பார்ப்பர். இரண்டு பேருமே அழகாக இருப்பர். ஒரு வேளை அவர்கள் அழகாக இல்லாமல் இருந்திருந்தால், அவர்கள் என்ன முடிவு எடுத்திருப்பர்? இல்லை, ஒருவர் அழகாக இருந்து, மற்றவர் இல்லையென்றால்? காதலுக்கு வயது, வரைமுறை, அங்க லட்சணங்கள் என, ஏதாவது வரைமுறை இருக்கிறதா...
எனக்குள் ஆயிரம் சிந்தனைகள்!: ராமாயணத்தில் ஒரு காட்சி. மிதிலை நகரம் நோக்கி ராமர் பயணிக்கிறார். எதற்காக பயணிக்கிறோம் என்று தெரியாது. குருவின் உத்தரவு. சாலையில் நடந்து செல்கையில், உப்பரிகையில் இருந்து சீதா பிராட்டி, ராமரை பார்க்க, ராமபிரான் சீதையை அண்ணாந்து பார்க்க...கம்ப ராமாயணத்தில், எல்லாரும் அறிந்த ஒரு சொற்றொடர், 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்! - நல்ல உறவின் தொடக்கம் நிகழ்ந்த தரும் அது!ராமருக்கு சீதை மேல் உண்டான காதல், வில்லை முறித்தால் தான் நிறைவேறும். காதல் தந்த வேகம், அதனால் உண்டான வீரம், தைரியம், விவேகம், வில் முறிந்தது; காதல் மலர்ந்தது; இருவரும் மனமுவந்து மணம் முடித்தனர்.கடவுளே ஆனாலும், காதல் தந்தது உந்துதல். 'ஒரு வீரனாக நான் அந்த கடமையை செய்கிறேன். அவளை அடைய வேண்டும் என்பதை விட, இது என் வீரத்திற்கு விடப்பட்ட சவால். அதற்கு ஈடு இணையற்ற பரிசு, சீதை' என, ராமர் நினைத்தார்; வில்லை முறித்தார்.அந்தக் காதல் இதிகாசத்தில் இடம் பெற்றது; போற்றப்படுகிறது.அதே இதிகாசத்தில், சீதை மேல் ராவணன் கொண்ட காதலில், காதலை விட காமம் மேலோங்கி நின்றது.மாற்றான் மனைவியை நினைத்தாலே பாவம். அதை விட மிகப் பெரிய பாவம், ஒரு பெண்ணை கடத்தி வந்து, அவள் விருப்பதற்திற்கு மாறாக, பலவந்தப்படுத்தி அடைய நினைப்பது.இது காதலா... காமம் அஸ்திவாரமாக கிடக்க, அதன் மேல் எழுப்பப்பட்ட காதல். விளைவு, ஒரு நல்ல வீரன் ராவணனின் மரணம்; ஒரு சாம்ராஜ்யத்தின் சகாப்தம் நிறைவு.காதலின் தொடக்கம் என்ன? கண்டதும் காதல்... கொண்டதும் மோகம் தானா?ஒரு சாராரின் வாதம் என்ன தெரியுமா...காமம் தான் காதலுக்கு அடிப்படை. ஒரு பெண்ணுடைய அங்க லட்சணங்கள் சரியாக இருந்தால், அவளை அடைய, ஒருவன் வகுக்கும் திட்டம் தான் காதல். அவள் அழகாக இல்லையென்றால், அவளை ஒரு பையன் கூட ஏறெடுத்து பார்க்க மாட்டான்.அவள் உடம்பை பார்த்து, அவளை அடைய வேண்டும் என்ற வெறியில், காதல் என்ற போர்வையில், போதை பிறக்கிறது. அவளை அடைந்த பின், காதல் நிறைவடைகிறது.பெண்களுக்கும், தன்னுடன் பழகும் ஆண், 'நல்ல திடகாத்திரமாக இருக்க வேண்டும்; நிறைய வசதிகளோடு இருக்க வேண்டும். கல்யாணம் பண்ணிக் கொண்ட பின் கூட, சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்ற எண்ணம் இருக்கிறது.இப்படி சுயநலத்தோடு, காதல் என்ற போர்வையில் இருவரும் பழகுவதன் பெயர் காதலா... மனங்கள் சங்கமிப்பது தான் காதல். இங்கே, முகங்கள் தான் சங்கமிக்கின்றன. இது எப்படி காதலாகும்?தாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் காதல் கசப்பாகத் தான் போய் முடிகிறது. இன்னும் ஒரு சிலர், ஒரு படி மேலே போய், உடம்பு சுகத்திற்காக உறவு வைத்து, 'இதில் என்ன தவறு இருக்கிறது' என, தத்துவம் பேசி, வாழ்க்கை நடத்துவதையும் பார்க்க முடிகிறது.மணமான பிறகும் கள்ளக் காதல். அதனால் கொலை, தற்கொலை.கடலோர விடுதிகளில், இளைஞர்கள் கால் கடுக்க, அறை தேடி நிற்பதை பார்க்கும் போது, காதல் மேல் அவர்கள் கொண்ட மரியாதையை நினைத்து மனம் கலங்குகிறது.காதல் என்பதன் அர்த்தம், காத்தல். 'நான் உன்னை காப்பேன்' என்பதன் சுருக்கம் தான் காதல். அந்த நம்பிக்கை, கல்யாணத்திற்கு முன்னாலும், பின்னாலும், வயதானாலும் ஏற்படலாம்.ஒருவரை நேசித்தால், அவர் எந்த வித பிரதிபலன் எதிர்பாராதவராக இருக்க வேண்டும். இந்த அக்கறையும், என் மனதும், என் உடலும் உனக்கு மட்டுமே சொந்தம் என்ற எழுதப்படாத உடன்படிக்கை இருக்க வேண்டும்.நட்பு, காதல், கல்யாணம். இது தான் காதலின் பரிமாணங்கள். இதில் எந்த நேரத்திலும் நம்பிக்கை பிளவு படலாகாது. பெரும்பாலோருக்கு பிரச்னை, கல்யாணம் ஆன பின், காதல் கசந்து போவது. எதிர்பார்ப்பு நிறைவேறாத போது, ஏமாற்றம்மிஞ்சுகிறது.நம்மை நம்பி, ஒரு ஜீவன் இருக்கிறது. அது பல ஜீவன்களை தரப் போகிறது என்ற நன்றியறிதல் இரண்டு பேருக்கும் வேண்டும். 'குட்மார்னிங்' என்று சொல்வதை விட, 'ஐ லவ் யூ' என்று சொல்வது, இப்போது சர்வ சாதாரண கலாசாரமாக மாறி விட்டது.ஒரு ஆணிற்கோ, பெண்ணிற்கோ, பாய் பிரண்டோ, இல்லை கேர்ள் பிரண்டோ இல்லையென்றால், உலகம் அவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை; அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.அவனோ, இல்லை அவளோ, எதற்காக தன்னிடம் பழகுகிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வமோ, அறிவு சாதுர்யமோ இருவருக்கும் இல்லை. அதை பலர் சாமர்த்தியமாக பயன்படுத்தி, அவர்கள் கொண்ட நல்ல அன்பை, கொச்சைப்படுத்தி, அவர்களை, தன் வயமாக்கிக் கொள்ளும் வேலையும் நடக்கிறது.கல்லுாரியில் இளைஞர்கள் படிக்கும் போது, படிப்பதற்கு முக்கியத்துவம் தராமல், காதலின் பக்கம் கவனம் திரும்பி, காதலின் அர்த்தம் புரியாமல் நேரம் கடத்துவதும், இன்று வாடிக்கையாகி வருகிறது.குறிப்பாக, ஆண்களை விட பெண்களுக்கு உடல் ரீதியாக பாதிப்பு அதிகம். ஆனால், மன வலி என்பது இருவருக்கும் பொதுவானது.'இவன் கடைசி வரை என்னை வைத்து காப்பாற்றுவானா, இந்த நட்பால், படிப்பில் இருவரின் கவனமும் குறைகிறதா, இவன் நல்ல உத்தியோகத்தில் குடியேறுவானா, நட்பு தரும் நம்பிக்கையால் முன்னேறி செல்கிறோமா என்பதை இருவரும் யோசிப்பதில்லை.நம் பெற்றோர் நம்மை படிக்கத் தான் அனுப்பினர்; நம்மை நம்புகின்றனர். ஆனால், காதல் என்றால் என்ன என்று தெரியாமல், நேரம் கடத்துவதும், ஊடல் செய்வதும், 'ஹார்மோன்'களின் உந்துதலால் உடலில் ஏற்படுகிற உணர்ச்சிகள் தரும் மாற்றத்தால் தாம் செய்வது சரியா, தவறா என்ற குழப்பத்திலேயே படிப்பையும், எதிர்காலத்தையும் கோட்டை விடுகின்றனர்.பல தருணங்களில், முன்னுரிமை பிறருக்கு மாறினால், 'இவள் என்னுரிமை. யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்' என்ற உணர்வு மேலிட, பிரச்னை அதிகமாகிறது. நல்ல நட்பு விலை போகிறது; விபரீத விளைவுகளுக்கும் காரணமாகிறது.நீங்கள் ஒருவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால், எக்காரணத்தைக் கொண்டும் நம்மை விட்டு இந்த உறவு பிரியாது என்ற, நம்பிக்கை உணர்வு தானே ஏற்பட வேண்டும்... அது தானே காதல்!இதில், சினிமா மற்றும் மீடியாக்களின் பங்கும் மிக மிக அதிகம். சினிமாவில் வேலை கிடைக்காமல், வெட்டித்தனமாய் ஊர் சுற்றும் இளைஞன், காதலிப்பது போலவும், பெரியவர்களை எதிர்த்து சண்டை போட்டு, கடைசி காட்சியில் ஊரே எதிர்க்க, 'நாங்கள் வாழ்ந்து காட்டுவோம்' என்ற வீர வசனம் பேசுவதும் உண்டு.படம் நிறைவடையும். அதற்கு பின்னால் அவர்கள் எப்படி பிழைத்தனர் என, எந்த திரைப்படமும் காட்டுவதில்லை; நாமும் யோசிப்பதில்லை.இளைஞர்கள், தாங்கள் தான் அந்த கதாநாயகன் அல்லது கதாநாயகி என, நினைத்து மேற்கொள்ளும் முடிவால், ஊருக்கு ஊர் சண்டை, ஆணவக் கொலைகள், தற்கொலை, பெற்றோர் கதறல் நடக்கின்றன.நம் முதல் குறிக்கோள் படிப்பது. பின் வேலை பார்ப்பது. அதற்குப் பின் தான் காதல். ஒரு துவக்கத்திலேயே காதல் பிறந்து விட்டால், வாழ்வில் நல்ல விதமாக குடியேறும் வரை இருவரும் காத்திருந்தால் காதலுக்கு அர்த்தமிருக்கும்.நட்பிற்கும், காதலுக்கும் இருப்பது நுாலிழை இடைவெளி தான். உளவியல் ரீதியாக, ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவரவர்களுக்குள் பிரச்னை வரும் போது, ஒருவருக்கொருவர் ஆதரவாக சொல்லும் வார்த்தைகள், அணுகுமுறைகள், அனுசரணைகள், நட்பு தாண்டி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்.அதுவும், உடல் ரீதியாக ஒருவருக்கொருவர் அணைத்துக் கொண்டு, தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்கையில், அந்த நுாலிழை அறுந்து போகிற வாய்ப்பு அதிகம். அந்த தருணங்களில் மனம் கட்டுக்கோப்பாக இல்லையென்றால், மனம் தடுமாறும்; 'ஹார்மோன்'கள் ஆட்சி செய்யும்.'கண்கள் படாமல், கைகள் தொடாமல் காதல் வருவதில்லை' என்பது, சினிமா பாடல் வரிகள். ஆனால், மனதில் வக்கிரம் தலை துாக்காமல், நட்புணர்வோடு பழகும் உறவு, ஒருவருக்கொருவர் மதிப்பை உண்டாக்கும்.நட்பு, மனதை ஆட்கொள்கிறது. காதல், மனதோடு உடலையும் ஆட்கொள்கிறது. மனதோடு உடலையும் ஒருவரிடத்தில் ஒப்படைக்கும் போது, நம்பிக்கையும், அக்கறையும், பாசமும் மேலாங்கி இருக்க வேண்டும்.அதை யாரிடம் ஒப்படைக்கிறோம்; அதற்கான வயதும், நேரமும் இப்போது வந்து விட்டதா என, ஆராய்ந்து பார்க்கும் போது தான் காதல் வெற்றி பெறுகிறது.உடல்கள் சேர்ந்தால் காமம். உயிர்கள் சேர்ந்தால் காதல். உணர்ச்சி பெருக்கே காமம். உணர்வு பெருக்கே காதல். சேர்ந்து பிரிந்தால் காமம். பிரிந்து சேர்ந்தால் காதல். காமம் என்றால் கைகலப்பு. காதல் என்றால் அரவணைப்பு.காமம் என்றால் சுகம். காதல் என்றால் தவம். காமத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரிந்து விட்டால், காதல் என்பதன் உண்மையான அர்த்தம் விளங்கும்.இப்போது சிலர், 'நீயும் அழகாக இருக்கிறாய்; நானும் அழகாக இருக்கிறேன். நானும் சம்பாதிக்கிறேன்; நீயும் சம்பாதிக்கிறாய். திருமணம் செய்து கொள்வோம்' என, முடிவு செய்கின்றனர். இதில், காதலுடன் சிறிது வியாபாரமும் இருக்கிறது.நாம், நம் காதலை சொன்னால், அவனோ, அவளோ, உறவு சார்ந்தோரோ காதலை நிராகரிக்க எவ்வித காரணமும் இருக்கக் கூடாது.எல்லா பெற்றோருக்கும் தம் பெண், பையன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நம் வாழ்க்கையில் நல்ல நிலையில் குடியேறும் முன், நாம் எடுக்கும் முடிவுகளை சரியாக எடுப்போமா என்ற கவலை அவர்களுக்கு!ஜாதியோ, மதமோ இரண்டாவது பிரச்னை தான். உணர்ச்சி மேலிட, நாம் எடுக்கும் முடிவுகள், மற்றவர்களை மட்டுமல்ல, காதலையும் பாதித்து விடக் கூடாது.முன்னுக்கு வரத் துடிக்கும் ஒருவரை, தன் நட்பு கலந்த காதலால், முன்னுக்கு கொண்டு வந்து, அவரின் சுக, துக்கங்களில் துணை நின்றால், காதல் வாழ்க்கை அர்த்தமாகும்.
- மல்லி கிஷோர்இ-மெயில்:kishore@goripe.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X