கோவில் சொத்துக்களை மீட்க குழுக்கள் அமையுங்க! ஆறு வாரத்தில் அறிக்கை தரவும் ஐகோர்ட் உத்தரவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோவில் சொத்துக்களை மீட்க குழுக்கள் அமையுங்க!
ஆறு வாரத்தில் அறிக்கை தரவும் ஐகோர்ட் உத்தரவு

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள, கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், யார் யார் வசம் உள்ளன என்பதை கண்டறிய குழுக்கள் அமைக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High Court,ஐகோர்ட்


குழுக்கள் நேரில் ஆய்வு செய்து, ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், இதேபோல உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, தற்போதைய உத்தரவை தட்டி கழிக்காமல், கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், அரசுக்கு அறிவுறுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், நகர சூரக்குடியில், ஆவுடைநாயகி அம்பாள் சமேத தேசிகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் பரம்பரை அறங்காவலரான, லட்சுமணன் சார்பில், அவரது அதிகாரம் பெற்ற ஏஜென்ட்டுகள் தாக்கல் செய்த மனு:கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதல் பெறாமல், முத்துசெட்டியார் என்பவர் விற்றுள்ளார்.

இதுபற்றி, அறநிலையத்துறை ஆணையருக்கு, 2016 நவம்பரில் மனு அனுப்பினேன். உடன், 'பரமக்குடியில் உள்ள, அறநிலையத்துறை உதவி ஆணையர் விசாரணை நடத்தி, கோவில் நிலங்களை மீட்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆணையர் உத்தரவிட்டார்.

ஆனால், அதற்கு முரணாக, சிவில் நீதிமன்றத்தை அணுகி, மேல் முறையீடு வழக்கு தொடுக்கும்படி, எங்களுக்கு உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி, மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: உதவி ஆணையரின் உத்தரவை பார்த்தால், சட்டத்தின் நோக்கத்தை, அவர் பரிசீலிக்க தவறியது தெரிகிறது. ஒப்புதல் பெறாமல், சொத்துக்களை விற்க அனுமதித்தால், அறக்கட்டளையின் நோக்கம், அறநிலையத்துறை ஏற்படுத்தியதன் நோக்கம் பாழ்பட்டு விடும். எனவே, பரமக்குடியில் உள்ள, அறநிலையத்துறை உதவி ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.


கோவில் சொத்துக்களின் பாதுகாவலராக அறநிலையத்துறை இருப்பதால், கோவில்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளின் நோக்கத்தை மனதில் கொள்ள வேண்டும். கோவில்கள், அறக்கட்டளைகள் முறையாக நிர்வகிக்கப்படுகிறதா, வருமானம் முறையாக ஒதுக்கப்படுகிறதா என்பதை, உறுதி செய்ய வேண்டியது, அறநிலையத்துறை ஆணையரின் கடமை.

மத அமைப்புகள், குறிப்பாக கோவில்களின் சொத்துக்களை, முறையாக பேண வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன், கோவில்களுக்கு, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. தற்போது, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களே உள்ளன. 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்கள் வசமுள்ளன.

அறநிலையத்துறை, ஒவ்வொரு பகுதிக்கும் குழுக்களை நியமிக்க வேண்டும்; அந்தக் குழுக்களின் உறுப்பினர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு நேரில் சென்று, கோவில் சொத்துக்களை அடையாளம் கண்டு, அவை, கோவில் வசம் உள்ளதா; ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளதா என்பது குறித்து, ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்.

வருவாய் மாவட்டங்களில், குழுக்களுக்கு அந்தந்த பகுதி தாசில்தார்கள் உதவ வேண்டும்குறிப்பிட்ட காலமாக, தொடர் தோல்வியில் இருந்த, இந்து சமய அறநிலையத் துறை, கோவில் சொத்துக்களை மீட்க, தற்போதாவது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க, இணை ஆணையருக்கும், ஆணையருக்கும் அதிகாரங்கள் உள்ளன. எனவே, அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இந்த உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே, 2014 அக்டோபரில், ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது, இரண்டாவதாக அளிக்கப்படும் வாய்ப்பு. நிறைவேற்ற தவறினால், தகுந்த நடவடிக்கை எடுக்க, இந்த நீதிமன்றம் தயங்காது. விசாரணை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின் முக்கிய அம்சங்கள் என்ன?


பரமக்குடி, அறநிலையத்துறை உதவி ஆணையர் விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களுக்குள், கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவில் நிலங்களுக்கு, மூன்றாம் நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் பெயர்களில், பட்டா வழங்கப்பட்ட விபரங்களை தயாரித்து, நான்கு வாரங்களில், அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது

சட்டவிரோத நில மாற்றங்களால், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவை,

Advertisement

கோவில் பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து தாசில்தார்கள் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு, வருவாய் துறை செயலர் உத்தரவிட வேண்டும். கோவில் நிலங்கள் தொடர்பாக, அறநிலையத்துறையிடம் இருந்து, எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல், பட்டா வழங்க தடை விதிக்க வேண்டும்
கோவில் சொத்துக்களின் விபரங்களை திரட்டி, அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்
கோவில் சொத்துக்கள் விற்பனை, குத்தகை, அடமானம் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட விபரங்கள், அதற்கு அறங்காவலர்கள் தெரிவித்த ஆட்சேபனைகளை, நான்கு வாரங்களில், அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்
● கோவில்களின் அறங்காவலர்களுக்கு தகவல் அனுப்பி, அவர்கள் வசம் உள்ள சொத்துக்கள், சட்டவிரோதமாக மூன்றாம் நபர் வசம் உள்ள சொத்துக்கள், அனுமதியுடன் மற்றும் அனுமதியின்றி விற்கப்பட்ட சொத்துக்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்ற விபரங்களை திரட்டி, ஆறு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்
சட்டவிரோதமாக சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டது குறித்த புகார்களில், தவறு செய்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக, தகுந்த துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை, அறநிலையத்துறை ஆணையர் ஆராய வேண்டும்
கோவில் சொத்துக்களை, சட்டவிரோதமாக விற்பனைக்கு, குத்தகைக்கு விடாமல் இருப்பதை, உறுதி செய்யும்படி, கீழ்நிலை அதிகாரிகளுக்கு, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள சொத்துக்களை மீட்க, உதவி ஆணையர், இணை ஆணையர்கள் விசாரணை நடத்தும்படி, அறநிலையத்துறை ஆணையர் அறிவுறுத்த வேண்டும்
பொதுமக்கள், ஆக்கிரமிப்பாளர்கள், மூன்றாம் நபர் வசம், கோவில் சொத்துக்கள் இருந்தால், அதை உடனடியாக ஒப்படைத்து விடும்படியும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பொது அறிவிப்பை, ஆணையர் வெளியிட வேண்டும்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Roopa Malikasd - Trichy,இந்தியா
13-பிப்-201816:43:47 IST Report Abuse

Roopa Malikasdநல்ல வழக்கு...நல்ல உத்தரவு...நீதி வெல்லட்டும். ஏனைய உழைத்து உண்ணுங்களேன் ...எதற்காக இப்படி கோவில் சொத்தை அபகரித்து கறியை வழக்கிறீர்கள் ...

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-பிப்-201816:15:22 IST Report Abuse

Vijay D Ratnamதிருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு ஆயிரம் வேலி விவசாய நிலம் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆயிரம் வேலி என்றால் 20000 மா கிட்டத்தட்ட 7500 ஏக்கர் நிலம் இருப்பதாக தகவல். இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் என்று யார் யாரோ பரம்பரை பரம்பரையாக கோவில் சொத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருவாரூர் கடைவிதியே கோவில் சொத்துதான். கடைகள் மட்டுமல்ல மசூதிகள், சர்ச் கூடத்தான் இருக்கிறது. விசாரித்தால் திருவாரூர் மாதிரி நிறைய ஊர் கோவில் சொத்துக்கள் எவன் எவனோ அனுபவித்துக்கொண்டு இருப்பது தெரிய வரும்.

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
13-பிப்-201816:08:20 IST Report Abuse

Sivagiriகோவில்கள் மக்கள் வரிப்பணத்தால் சேர சோழ பாண்டிய பல்லவ நாயக்க மன்னர்களால் மக்களுக்காக கட்டப்பட்டவை. . .இன்று ஜனநாயக அரசு உள்ளது . . . எனவே அரசாங்கத்தின் கீழ்தான் கோவில்கள் இருக்க வேண்டும் . . . அந்தந்த ஆகம விதிப்படி அந்தந்த பகுதி பாரம்பரியப்படி அந்தந்தப் பகுதி மக்களால் பூஜை திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டியதே வகுக்கப்பட்ட விதி. ...

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X