அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,விற்கு திருப்புமுனையை தருமா திருச்சி மாநாடு?

Updated : பிப் 28, 2011 | Added : பிப் 26, 2011 | கருத்துகள் (17)
Share
Advertisement
தேர்தல் என்றதும் தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் தோன்றுவது கட்சியின் மாநாடு. கடந்த காலங்களில் மாநாடு மூலமே தேர்தலில் போட்டியிடும் முடிவை தி.மு.க., தீர்மானமாக நிறைவேற்றி தேர்தல் பாதைக்கு வந்தது. தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதும், அறிவிப்பதும் தி.மு.க., மாநாடுகளில் முக்கிய நிகழ்வாக இருந்து வந்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், மார்ச் 27ல் திருச்சியில் தி.மு.க., மாநில மாநாடு

தேர்தல் என்றதும் தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் தோன்றுவது கட்சியின் மாநாடு. கடந்த காலங்களில் மாநாடு மூலமே தேர்தலில் போட்டியிடும் முடிவை தி.மு.க., தீர்மானமாக நிறைவேற்றி தேர்தல் பாதைக்கு வந்தது. தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதும், அறிவிப்பதும் தி.மு.க., மாநாடுகளில் முக்கிய நிகழ்வாக இருந்து வந்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு முன், மார்ச் 27ல் திருச்சியில் தி.மு.க., மாநில மாநாடு கூடுகிறது. இதுவரை ஒன்பது மாநில மாநாடுகளை தி.மு.க., நடத்தியுள்ள நிலையில், இந்த மாநாடு பத்தாவது மாநாடாக அமையவுள்ளது. " தி.மு.க., மாநாடு எதை முன்னிலைப்படுத்துவதாக அமையும் என்ற கேட்டபோது, தி.மு.க., முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தேர்தலில் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதை கட்சித் தலைமை உணர்ந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரங்களை பெரிதுபடுத்தி, தேர்தல் களத்தில் இறங்கும்போது, எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்ந்து போய்விடக்கூடாது. அது தேர்தலில் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அவர்களுக்கு தெம்பு கொடுத்து, தேர்தல் பணியை எழுச்சியோடு ஆற்ற இந்த மாநாடு உதவும். அதோடு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தி.மு.க. அரசின் திட்டங்கள் சென்றடைந்துள்ளன. "அரசால் பயன்பெற்றவர்கள் வாக்களியுங்கள்' என்பது மாநாட்டு கோஷமாக முன் வைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தொண்டர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியினரையும், அதன் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் மாநாடாக இந்த மாநாடு மாறும். மாநாட்டு பிரமாண்டங்களும், தேர்தல் வியூகங்களும் கூட்டணி கட்சியினரை வியப்பூட்டும் வகையில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு மேடையில், கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக அணிவகுக்கவுள்ளனர். தலைவரின் மாநாட்டு நிறைவுப் பேச்சுக்கு முன், கூட்டணி கட்சித் தலைவர்கள் உரை நிகழ்த்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தி.மு.க., மாநாடு குறித்து எம்.பி.,யும், தி.மு.க., பிரசார செயலருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, "இந்த மாநாட்டில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகியன வெளியிடப்படும். தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அரசின் குறைபாடுகள் குறித்த தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை. எனவே, அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்பதையும் மாநாட்டின் மூலம் தொண்டர்களுக்குக் கூறுவோம்' என்றார். "தி.மு.க.,விற்கு திருச்சி எப்போதும் திருப்புமுனையை தரும்' என்று கடந்த காலங்களில் முதல்வர் கருணாநிதி பலமுறை தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவும், திருச்சியில் தி.மு.க., மாநாடு நடத்தியது. அந்த வகையில், மார்ச்சில் நடக்கும் திருச்சி மாநாடும், தி.மு.க.,விற்கு திருப்பு முனையைத் தருமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.


"சென்டிமென்ட்' பீதியில் தி.மு.க.,வினர்: தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்த போது, சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருச்சியில் மாநில மாநாடு நடத்திய போதெல்லாம், அடுத்து நடந்த பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த, 1989ம் ஆண்டு, பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. தமிழக ஆட்சி கட்டிலில் இருந்த தி.மு.க., பார்லிமென்ட் தோல்வியால் தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது என்பதற்காக, 1990ம் ஆண்டு, திருச்சியில் மாநில மாநாடு நடத்தியது. அதன்பிறகு வேறு எந்த மாநாட்டையும் தமிழகத்தில் நடத்தவில்லை. அந்த மாநாடுக்கு பிறகு, 1991ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., தேர்தலை முன்னிட்டு, 1996ம் ஆண்டு, திருச்சியில் மாநில மாநாடு நடத்தியது. அதேபோல், அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க.,வும் திருச்சியில் மாநில மாநாடு நடத்தியது. அடுத்து நடந்த தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது; அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. கடந்த, 2001ல் ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க., மீண்டும் தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் மாநாடு நடத்தியது. அந்த தேர்தலில் தி.மு.க., தோல்வியை தழுவியது. அ.தி.மு.க., வெற்றி பெற்றது. 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., திருச்சியில் மாநாடு நடத்தியது. தி.மு.க.,- காங்.,- பா.ம.க., என்ற கூட்டணி பலத்தால் வெற்றி பெற்றது. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, திருப்புமுனையாக அமைந்த திருச்சி மாநில மாநாடு, ஆளுங்கட்சியாக இருந்தபோதெல்லாம் தி.மு.க.,வுக்கு வெறுப்புமுனை மாநாடாகவே அமைந்துள்ளது.


80 ஏக்கரில் பணிகள் "ஜரூர்'; வாகனம் நிறுத்த 500 ஏக்கர்: தி.மு.க.,வின், மாநில மாநாடுக்கான பணிகள், 80 ஏக்கர் பரப்பளவில் ஜரூராக நடந்து வருகின்றன. திருச்சி - சென்னை பை-பாஸ் சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் தாலுகாவுக்கு உட்பட்ட, "வெற்றிதிருமுத்தம்' என்ற கிராமத்தில் மாநாடுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த, 18ம் தேதி பூமி பூஜையுடன் மாநாடு பணிகள் துவங்கின. தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாநாடு பணிகள் ஜரூராக நடக்கின்றன. வாகனம் நிறுத்த 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பூமி பூஜைக்கு முதல் நாள் இரவு போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, இந்த இடத்தைப் பார்த்து தேர்வு செய்தார். மாநாடு மைதானத்தை தயார் செய்யும் பணியில் இரவு பகலாக தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுவரை நடந்த மாநில மாநாடுகள்...


* முதல் மாநாடு: 1951- டிச., 13,14,15,16- சென்னை.
* இரண்டாவது மாநாடு: 1956- மே, 17,18,19,20- திருச்சி. (இம் மாநாட்டில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானிக்கப்பட்டது)
* மூன்றாவது மாநாடு: 1961- ஜூலை, 13,14,15,16 - திருப்பரங்குன்றம்.
* நான்காவது மாநாடு: 1966 - டிசம்பர், 29, 30,31 - 1967 ஜனவரி, 1- சென்னை விருகம்பாக்கம். (இம்மாநாட்டில் காங்கிரசை எதிர்க்க 7 கட்சிகள் இணைந்த கூட்டணி உருவானது)
* ஐந்தாவது மாநாடு: 1975- டிசம்பர், 25, 26, 27, 28 - கோவை.
* ஆறாவது மாநாடு: 1990 - பிப்., 9,10,11- திருச்சி.
* ஏழாவது மாநாடு: 1993- மார்ச், 26, 27, 28 - கோவை (வைகோ நீக்கப்பட்ட பின் நடந்த மாநாடு)
* எட்டாவது மாநாடு: 1996- ஜனவரி 26, 27, 28 - திருச்சி.
* சிறப்பு மாநாடு: 1997- ஜூன் 27, 28, 29 - சேலம்.
* பொன்விழா மாநாடு: 1998- செப்டம்பர், 16, 17 - திருநெல்வேலி
* ஒன்பதாவது மாநாடு: 2006- மார்ச்- 3, 4, 5 - திருச்சி.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
H Narayanan - Hyderabad,இந்தியா
27-பிப்-201117:18:40 IST Report Abuse
H Narayanan மாநாடுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த, 18ம் தேதி பூமி பூஜையுடன் மாநாடு பணிகள் துவங்கின... பகுத்தறிவு நல்லா வேலை செய்யுது...
Rate this:
Cancel
kunjumani - Chennai ,இந்தியா
27-பிப்-201113:09:25 IST Report Abuse
kunjumani எந்த கட்சியையும் சாராத பொதுஜனம் தி.மு.க வுக்கு மட்டுமே எப்போதும் வாக்களிப்பார்கள் எனவே மாநாடு தேவை இல்லை. தனியாக நின்று ஜெயிக்கும் ஜெயலலிதா விசயகாந்தை நம்பியுள்ளார் , கடவுளை நம்பிய விசயகாந்த் ஜே வை நம்பியிள்ளார் ஏனென்றால் தி.மு.க வின் மக்கள் செல்வாக்கு அப்படி
Rate this:
Cancel
Silluvandu Sillu - chennai ,இந்தியா
27-பிப்-201112:47:01 IST Report Abuse
Silluvandu Sillu பாசறை (வீட்டுக்கு) திரும்பும் மாநாடு சொல்லுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X