பூந்தமல்லி: சென்னையில் கைது செய்யப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய நபரை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து சிலர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து சொல்வதாக வந்த தகவலையடுத்து, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில், கன்னியாகுமரியைச் சேர்ந்த, அன்சார் மீரான், 28, என்பவர், உளவு பார்த்ததாக, நேற்று முன்தினம், சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பின், அன்சார் மீரானை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி, செந்துார்பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
அன்சார் மீரானை, ஏழு நாட்கள், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீதான உத்தரவை, இன்று ஒத்தி வைத்தார்.
இதையடுத்து, அன்சார் மீரான், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறியதாவது:
ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய அன்சார் மீரானை, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில், ஒன்பது பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர்.
அன்சார் மீரானுடன், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியாக கருதப்படும், ஹாஜா பக்ருதீன், சிரியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது போன்ற சதி வேலைகளில், அன்சார் மீரான் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மனு மீது, இன்று உத்தரவு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.