புஸ்வாணமாகும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்!  'மல்டி லெவல் பார்க்கிங்' இடத்துக்கும் சிக்கல்...  தெப்பக்குளம் உருவாக்க அறநிலையத்துறை முயற்சி!| Dinamalar

தமிழ்நாடு

புஸ்வாணமாகும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்!  'மல்டி லெவல் பார்க்கிங்' இடத்துக்கும் சிக்கல்...  தெப்பக்குளம் உருவாக்க அறநிலையத்துறை முயற்சி!

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 புஸ்வாணமாகும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்!   'மல்டி லெவல் பார்க்கிங்' இடத்துக்கும் சிக்கல்...  தெப்பக்குளம் உருவாக்க அறநிலையத்துறை முயற்சி!

கோனியம்மன் கோவிலுக்கான தெப்பக்குளம் மற்றும் வசந்த மண்டபம் இருந்த இடமென்று
சர்ச்சை கிளம்பியுள்ளதால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், டவுன்ஹாலில்,'மல்டிலெவல் பார்க்கிங்' அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவி, மாநகராட்சி பங்களிப்பை சேர்த்து, கோவை மாநகரை 'ஸ்மார்ட் சிட்டி'யாக்க, 18 வகையான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரூ.1,570 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட நிதி, ரூ.396 கோடி பெறப்பட்டு, மாநகராட்சி பெயரில், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்டு உள்ளது. ஆனால், நிதி வந்து இரு ஆண்டுகளாகியும் எந்தப் பணியும் துவங்கியபாடில்லை.

மாதிரி சாலை திட்டம்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், முதல் பணியாக, ஆர்.எஸ்.புரம் - டி.பி., ரோடு மற்றும் டி.வி.,சாமி ரோட்டை, 'மாதிரி சாலை'யாக மாற்ற முடிவு செய்து, நகராட்சி நிர்வாக ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டது. மாநகராட்சி கலையரங்கத்தில் புகைப்பட கண்காட்சி நடத்தி, 'மாதிரி சாலை' எவ்வாறு அமையும் என, பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு, கருத்தும் கேட்கப்பட்டது. பின், 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டு, பணியும் படுவேகமாக துவக்கப்பட்டது.

தொலைத்தொடர்பு மற்றும் மின் ஒயர்களை கொண்டு செல்ல, தனி கட்டமைப்பு ஏற்படுத்தி, ரோட்டோரத்துக்கு மாற்றியமைக்க முயற்சி எடுக்கப்பட்டது; துறை ரீதியாக பல்வேறு சிக்கல்கள் உருவானதால், படுவேகமாக துவக்கிய பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இரு ரோடுகளிலும் அடர்ந்து வளர்ந்துள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட பழமையான மரங்களை வெட்டி வீழ்த்தவும், பெயரளவுக்கு சில மரங்களை மட்டும், வேரோடு பெயர்த்தெடுத்து, வேறிடத்தில் நடுவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 'மாதிரி சாலை' திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் புதிதாக வடிவமைப்பு செய்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நிர்வாக அனுமதி கேட்டு, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அது எப்போது வரும், இந்த திட்டம் எப்போது துவங்குமென்பது, அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

அடுத்த கட்டமாக, வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில், ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க, அடுக்கு மாடி வாகன நிறுத்துமிடம் (மல்டி லெவல் பார்க்கிங்) உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால் ஆகிய இடங்களில் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து, 'டெண்டர்' கோரப்பட்டது. ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, ஆவணங்கள் சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

டவுன்ஹாலில், இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், தற்போது மாநகராட்சி 'பார்க்கிங்' உள்ளது. இந்த இடம், யாருக்குச் சொந்தமானது என்ற பிரச்னை புதிதாக உருவெடுத்துள்ளது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு பாத்தியமான தெப்பக்குளம் மற்றும் வசந்த மண்டபம், கோவிலுக்கு எதிரே உள்ள இடத்தில் இருந்து, அவை மண்ணுக்குள் புதைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஆவணங்கள் தேடல்...

அந்த இடம் தான், இந்த 'பார்க்கிங்' இடம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், கோவிலுக்கான தெப்பக்குளம் மற்றும் வசந்த மண்டபத்தை மீண்டும் அங்கு அமைக்கும் முயற்சியில், இந்து சமய அறநிலையத்துறை இறங்கியுள்ளது. இதற்கான ஆவணங்களை திரட்டும் பணிகளில், கோவில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். கோவில் தொடர்பான ஆவணங்களை தருமாறு, மாவட்ட நிர்வாகத்தின் ஆவண காப்பகத்துக்கு, இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

தெப்பக்குளம் மற்றும் வசந்த மண்டபம் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில், தொல்லியல் துறைக்கு பரிந்துரைத்து, மீட்டெடுக்கும் முயற்சிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மாநகராட்சியின், 'மல்டிலெவல் பார்க்கிங்' திட்டமும் செயல்பாட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாதிரி சாலை, குளங்கள் மேம்பாடு, மல்டி லெவல் பார்க்கிங் என 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மாநகராட்சியால் முன் எடுக்கப்பட்ட பல்வேறு பணிகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் முட்டுக்கட்டை விழுந்து கொண்டே இருக்கிறது. ஆக மொத்தத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டமே, புஸ்வாணமாகி விடுமோ என்ற சந்தேகம், மக்களிடம் பரவுவதை தவிர்க்கவே முடியவில்லை என்பதே நிஜம்.
'ஆட்சேபனை இருக்கிறது!'

டவுன்ஹால் 'பார்க்கிங்' இடம் குறித்த சர்ச்சை பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'டவுன்ஹாலில் கார் 'பார்க்கிங்' நடத்துவதற்கு, வருவாய்த்துறை தரப்பில் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அங்கு, தெப்பக்குளம் இருந்ததற்கான ஆவணம் கிடைக்கும் பட்சத்தில், 'மல்டி லெவல் பார்க்கிங்' திட்டத்தை வேறிடத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

இதற்கிடையில், கார் 'பார்க்கிங்' செயல்படும் இடத்தின் ஒரு பகுதியில், தனியார் ஓட்டல் நிர்வாகம் சார்பில், சிறிய அளவில் கோவில் கட்டுவதற்காக, சிமென்ட் தளம் அமைக்கும் பணி, இரு நாட்களாக நடந்து வருகிறது. மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

--நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-பிப்-201804:28:00 IST Report Abuse
Bhaskaran சும்மா கதைவிடாதீங்க இருக்கிற தெப்பக்குளத்தையே பட்டா போட்டு ஆட்டைய போடுற அறநிலையத்துறை எப்பவோ இருந்த தெப்பக்குளத்தை மீட்கப்போறாங்களாம் கேக்குறவன் கேனப்பயனாயிருந்தா என்னவேனுமுனாலும் புழுகுறதா
Rate this:
Share this comment
Cancel
Shankar - Coimbatore,இந்தியா
15-பிப்-201816:55:03 IST Report Abuse
Shankar கோவை நகரில் விரிவாக்க பணிகள் மிகவும் மோசமான முறையில் கையாளப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட சாலையை அகலப்படுத்தும் முறையில், வளைவுகளை நேர் செய்வது முக்கியமானது. அனால், சரவணம்பட்டி-துடியலூர் சாலையிலும் சரி, இப்பொழுது விரிவுபடுத்தப்படும் சத்தி ரோடு, சிவானந்தபுரம் முதல் சரவணம்பட்டி வரை உள்ள சாலையிலும், வளைவுகள் குறைக்கப்படவில்லை. மாறாக, மிகுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது பொது மக்களுக்கு பேரிழப்பு மட்டுமின்றி, ஆபத்தும் கூட. குறிப்பாக இரு சக்கர ஓட்டிகளுக்கு பாதுகாப்பு குறைவால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த பணிகள் தகுந்த கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்டதாக தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
15-பிப்-201813:08:59 IST Report Abuse
Kundalakesi ஆர் எஸ் புரத்தில் தான் மரங்களும் நிழலும் நன்றாக உள்ளது. அதையும் அழகு செய்யப்போறோம் என்று வெட்டி வீழ்த்த இந்த மானம் கெட்ட அரசு முயல்கிறது. நீங்க முதல்ல மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, தடாகம் ரோட்ல வெட்டின மரத்துக்கு மாற்று மரங்களை காட்டுங்க. அப்பறம் இந்த மரத்த வெட்டலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X