எண்ணமும் உடல்நலமும்| Dinamalar

எண்ணமும் உடல்நலமும்

Added : பிப் 15, 2018
 எண்ணமும் உடல்நலமும்

உணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைய சமூக சூழ்நிலையில் மருந்தே உணவு என்று பெரும்பாலனோர் வாழ்ந்து வருகிறோம். இன்றைய நடைமுறையில் மருத்துவனைக்கு செல்லாத குடும்பங்கள் இருக்கிறதா?

உடல்நலம் பேணிக்காக்காததால் பல வகையான வாழ்வியல் பிரச்னைகளும், சமூக பிரச்னைகளும் ஏற்படுகிறது. தனிமனித திறமையும் வெகுவாக குறைக்கின்றது. இதுவே தாழ்வான மனநிலைக்கு காரணமாக அமைகின்றது.

உடல் நலம் மருத்துவ காரணங்களுக்காக ஏற்படுகிறது என்பதை அறிவோம். ஆனால் இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடல்நல குறைபாடுகள் நமது எண்ணங்களாலும் ஏற்படுகிறது என்பது மனோதத்துவ மருத்துவ உண்மை. எண்ணங்களால் உடல்நலம் பாதுகாக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும்இயற்கையான வாழ்வியல் நிலை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்களது எண்ணங்களின் தரத்தை பொருத்து உடல்நல ஆரோக்கியம் வேறுபடுகிறது.


எண்ணம் தான் உடல்நலம்உடல்நலத்திற்கும் எண்ணத்திற்கும் தொடர்பு இருக்கிறது, ஏனென்றால் நமது உடல்நலம் நமது எண்ணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர்களது உடல்நலத்தில் பாதிப்புகளும், மாற்றங்களும் இயற்கையாக ஏற்படுகிறது. ஒருவகையில் எண்ணங்கள் தான் உடல்நல ஆரோக்கியத்திற்கு அடிப்படை காரணமாகவும் அமைகிறது.

உற்சாக எண்ணங்களை கொண்டு வாழ்பவர்கள் பெரிய உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகமாட்டார்கள். இதற்கு மாறாக கவலையான மனநிலையில் வருத்தி வாழ்பவர்கள், உடல்நலத்தில் ஆரோக்கியமற்று வாழ்கின்றனர். கவலையான மனநிலையில் மனிதர்கள் நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்பட்டு மகிழ்ச்சியற்ற வாழ்க்கை முறையின் மூலம் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

கோபத்தை சரியாக கையாளவிட்டால் ரத்த அழுத்தம் மற்றும் பதற்றமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப்படுகிறோம். இந்த நிலை உடல் உறுப்புகளையும் பெருமளவில் பாதித்து பல்வேறு உடல்நல கோளாறுகளை வரவழைக்கிறது.


எண்ணத்தால் ஆரோக்கிய வாழ்வுநாம் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதைகாட்டிலும், என்னவாக ஆவோம் என்ற நம்பிக்கை தான் நமதுவாழ்க்கையை தீர்மானிக்கிறது. வாழ்க்கையில் வெற்றி என்பது துரிதமான முடிவுகளை எடுப்பதினால் மட்டும் நின்றுவிடுவதில்லை. நாம் எடுக்கின்ற முடிவுகளில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் தான் இருக்கிறது.

உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கிய எண்ணங்கள் பொருந்திய வாழ்க்கை முறைக்கு நம்மை உட்படுத்தி கொள்ள வேண்டும். ஆரோக்கிய எண்ணங்களை மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வோம் என்ற நம்பிக்கையை பதிய வைக்க வேண்டும்.

ஆரோக்கிய உடல்நலத்திற்கு நமது வாழ்க்கை முறை பலநேரங்களில் காரணமாகவும், சில நேரங்களில் சவாலாகவும் மாறிவிடுகிறது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு தங்களை தயார்படுத்தி கொள்பவர்கள் பொதுவாக நல்ல உடல்நல ஆரோக்கியத்துடன் வாழ்வதை பார்க்கின்றோம். உடல்நலத்திற்கு ஒவ்வாத அல்லது பொருந்தாத வாழ்க்கை முறையில் வாழ்பவர்கள் பல நேரங்களில் தாமாகவே தமக்கு உடல்நல தீங்கை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.


அன்பு, அமைதி, நிதானம்,கனிவானபேச்சு, விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கை, சீரான சத்தான உணவு, நல்ல ஓய்வு, தியான பயிற்சி, இறை நம்பிக்கை, மன்னிக்கும் குணம் ஆகியவற்றை கடைபிடித்து வாழ்பவர்களுக்கு உடல்நலம் ஆரோக்கியத்தின் பாதையில் பயணிக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.


உணர்வுகளை காட்டுங்கள்நமது மனதில் நல்ல எண்ணங்களை முன்னிலைப்படுத்தி வாழ முற்படவேண்டும். இத்தகைய வாழ்க்கை முறையை மேற்கொள்வதற்கு சில குறிப்புகள்...

* மனதில் உள்ள உணர்வுகளை பொருத்தமான வகையில் வெளிக்காட்ட வேண்டும். மனதில் உள்ள அழுத்தங்கள், துக்கங்கள், வருத்தங்களை மனதிற்குள்ளே அடைத்து வைக்காமல் பழகியவரிடமோ, குடும்பத்தாரிடமே, நீங்கள் மதிக்கும் நபரிடமோ வெளிப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

மனதை வாட்டி வதைக்கும் ஏமாற்றங்கள், கசப்பான நினைவுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதின் மூலம், மனதிற்கு தேவையான இதமான சூழ்நிலையை அமைத்துக் கொள்ளலாம்.

* நாம் அனைவரும் குடும்பம், வருமானத்தை ஈட்டும் தொழில், சமூக தொடர்புகள், பிடித்தமான பொழுதுபோக்குகள், சமுதாய பொறுப்புகள் என்று பல கட்டமைப்புக்குட்பட்டு வாழ்கிறோம். இதில் எந்த விஷயத்திலும் ஒன்றை ஒன்று பாதிக்காத வண்ணம் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு போதிய நேரம் ஒதுக்கி கொள்வது நன்று. எந்த விஷயத்தை நாம் கையாண்டாலும் அதில் நிதானமாக, தெளிவாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் கசப்பான உணர்வுகளை அந்தந்த தளத்தில் விட்டு செல்வது நல்லது.

* நமது உடல் இயந்திரம் அல்ல. அது 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மனதையும், உடலையும், விழிப்போடும், உற்சாகத்தோடும், ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு வாழ்வதினால் மனதும், உடலும் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கிய உடல்நிலைக்கு வித்திடும்.

நுாறு ஆண்டுகளுக்கு முன்பாக, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தவர்களுக்கு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனோதத்துவ நிபுணர் எமிலி கோ, ஒரு தாரக மந்திரத்தை முன்மொழிந்து உள்ளார்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ''ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் நான் குணம், பெற்றுக் கொண்டே இருக்கிறேன். குணம் பெறுவேன்'', என்று தினமும் கூற வேண்டும். இந்த வாக்கியத்தை மனதிற்குள் அடிக்கடி சொல்லிக் கொள்பவர்களுக்கு மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு குணமடைந்துஉள்ளார்கள் என்பது வரலாறு.


நமது கடமைஎத்தனையோ கடமைகளையும் பொறுப்புகளையும் ஏற்கும் நாம், நமது ஆரோக்கிய உடல்நிலைக்கு கடமை ஏற்கிறோமா? என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் காலம் தொட்டே வாழ்க்கை முறைக்கும் உடல்நலத்திற்கும் உள்ள தொடர்புகளை எண்ணங்களின் வாயிலாக விவரித்து வருகின்றனர்.

நம்பிக்கையான நல்ல எண்ணங்கள், உடல்நிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தகூடிய வல்லமை படைத்தது. உடல்நல ஆரோக்கியத்தை எளிமையான முறையில் பாதுகாத்து, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்போம்!

-நிக்கோலஸ் பிரான்சிஸ்
தன்னம்பிக்கை எழுத்தாளர் மதுரை
94433 04776

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X