குழந்தைகள் நலனில் ஆயிரம் நாட்கள்| Dinamalar

குழந்தைகள் நலனில் ஆயிரம் நாட்கள்

Added : பிப் 16, 2018

ஒரு குழந்தை அறிவுடைய ஆரோக்கியமான குழந்தையாக மாற, அதன் முதல் ஆயிரம் நாட்களை நாம் கவனமுடன் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில், முதல் பிறந்த நாளை எட்டாமலேயே இறக்கின்ற குழந்தைகள் ஏராளம். குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. இந்தியாவில் தான் 50 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் கர்ப்பகாலத்தில் 270, ஒரு வயது நிறைவில் 365, 2வது வயது நிறைவில் 365 என ஆயிரம் நாட்களாக கணக்கிடுகிறோம். இக்காலத்தில் தான் தாய்மார்கள் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.
கர்ப்பகாலம் : கர்ப்பம் என்று தெரிந்தவுடன் டாக்டரை அணுகவேண்டும்.அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், தனியார் அல்லது அரசு மருத்துவமனையிலோ கர்ப்பிணிகள் பதிவு செய்ய வேண்டும். கர்ப்பிணிகள் இக்கால கட்டத்தில் 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரித்து இருக்க வேண்டும். வயிறு, சிறுநீரகம், ரத்தம், ரத்த அழுத்த பரிசோதனை அவசியம்.கர்ப்பகாலத்தில் ரணஜன்னி தடுப்பூசி போடப்படும். ஒரு மாத இடைவெளியில் டிடி 2வை தவறாமல் போட வேண்டும். இப்போது 100 இரும்பு சத்து மாத்திரைகள் அவசியம் சாப்பிட வேண்டும். ரத்தசோகையில் பாதிக்கப்பட்டால் 200 மாத்திரைகள் எடுக்கலாம். இதையும் முதல் மாதத்திலிருந்தே சாப்பிடவும். அங்கன்வாடி மையத்தில் தரப்படும் இணை உணவு 160 கிராமை தவறாமல் எடுக்க வேண்டும். இணை உணவானது கர்ப்பம் தரித்த நாளிலில் இருந்து குழந்தை பிறந்து 6 மாதம் வரை வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள் எப்போதும் சாப்பிடுவதை விட நான்கில் ஒரு பங்கு அதிகமாக சாப்பிடவும். உணவை ஒதுக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடவும். அப்போது தான் குழந்தைக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தானியம், பால், முட்டை, பழம், காய்கறிகள், பருப்பு மற்றும் பயறு வகைகளை பிடித்த விதத்தில் சமைத்து சாப்பிடவும். விருப்பம் உள்ளவர்கள் அசைவ உணவும் சேர்க்கலாம். இரவு 8 மணி நேரம், பகலில் 2 மணி நேரம் துாங்குவது அவசியம். சமையலில் அயோடின் உப்பு சேர்ப்பது நல்லது. குழந்தையின் உடல், மூளை வளர்ச்சிக்கு இது அவசியம்.நல்ல செய்திகளை பேச வேண்டும்உடல், ஆடைகளை சுத்தமாக வைக்கவேண்டும். அத்துடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் தாயை சந்தோஷமாக வைக்க வேண்டும். கருவில் உருவாகும் முதல் உறுப்பு செவி தான். நாம் எதை பேசினாலும் குழந்தை கேட்கிறது என்பதை மனதில் நிறுத்துங்கள். எனவே நல்ல செய்திகளையே பேசவேண்டும். இயன்றவரை வயிற்றிலுள்ள குழந்தையுடன் தாய் பேசிக்கொண்டு இருக்க வேண்டும். எளிய வகையில் யோகா, நடை பயிற்சி மேற்கொள்ளவும். மாதந்தோறும் எடை எடுத்து குழந்தையின் வளர்ச்சியை உறுதி செய்யவும். கர்ப்பகாலத்தில் உதிரபோக்கு, ரத்த சோகை, காய்ச்சல், தலைவலி, கண்பார்வை மங்குதல், வலிப்பு, உடல் வீக்கம், வலி இல்லாமல் பனிக்குடம்உடைதல் போன்ற அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
வயது ஒன்று வரை : குழந்தை பிறந்தவுடன் இரண்டரை கிலோ மற்றும் அதற்கு மேல் இருந்தால் ஆரோக்கியமான எடை. முதலில் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். முதலில் சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். ஏழாம் மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் இணை உணவாக மசித்த பருப்பு, அரிசி, கேழ்வரகு கஞ்சி, சத்துமாவை கூழ் போன்ற நிலையில் தரலாம். எட்டாவது மாதத்தில் இருந்து இட்லி, இடியாப்பம், மசித்த காரட், உருளை, முட்டையின் மஞ்சள் கரு தரலாம். ஒன்பது மாதம் முதல் 10 ம் மாதம் வரை வேகவைத்து மசித்த காய்கறி, கீரை, பருப்பு சாதம் தரலாம். 11 முதல் 12 மாதம் வரை பெரியவர்கள் உண்ணும் அனைத்து உணவையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு உணவை கொடுக்கும் போது முதலில் சிறிய அளவாக ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு அதே அளவு கொடுத்து பின்பு அளவை கூடுதலாக்கலாம். அடிக்கடி தண்ணீர் தருவது அவசியம். குழந்தை பசியை அறிந்து உணவு தரவேண்டும்.குழந்தைகளுக்கு இது போன்ற உணவை நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 முறை வழங்கலாம். அத்துடன் தாய்ப்பாலும் தொடர்ந்துகொடுக்கவும்.ஒரு வயதிற்குள் போடவேண்டிய அனைத்து தடுப்பூசியையும் போட்டாக வேண்டும். குழந்தையின் உடலும், ஆடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். கூர்மையான பொருட்களை தவிர்த்து மென்மையான பொம்மைகளை விளையாட தரலாம். ஒரு வயதில் நன்றாக பேச, நடக்க துவங்கும். அப்போது ஒவ்வொரு நிமிடமும் குழந்தையை கண்காணிக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சியிலோ, செயல்பாடுகளிலோ, உணவு உண்பதிலோ பிரச்னை இருந்தால் உடனே டாக்டரை அணுகலாம். ஏனெனில் ஒரு வயதிற்குள் குறைபாட்டை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம். ஒரு வயதிற்குள்ளான வளர்ச்சியை முயல்வேக வளர்ச்சி என்பர்.
வயது 2 வரை : ஒரு வயது முடிந்தவுடன் தாய் தந்தையருடன் அமர்ந்து தானாக சாப்பிட பழக்க வேண்டும். குடும்பத்தினர் என்ன உணவு சாப்பிடுகிறார்களோ, அதை குழந்தைக்கும் தரலாம். இறைச்சி, மீன், ஈரல், எலும்பு, காய்கறி சூப், முட்டை போன்றவற்றை தரலாம். ஒரு நாளைக்கு 5 முறை உணவுடன் தாய்பாலும் தொடர்ந்து தரவும். நொறுக்கு தீனிகளை தவிர்க்கவேண்டும். வீட்டில் செய்த உணவு பொருளை தான் தரவேண்டும். ஏழாவது மாதம் துவங்கிய நாளில் இருந்து குழந்தைக்கு உணவு ஊட்ட பிரத்யேக கிண்ணம் பயன்படுத்தவும். ஒவ்வொரு மாதமும் உணவு அளவு கூடுதலாக வேண்டும். குழந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை விளையாட்டாக ஊட்டவேண்டும். வற்புறுத்தி, பயமுறுத்தி, அடித்து ஊட்டக்கூடாது. பெற்றோரும் குழந்தைகளுடன் பேசவேண்டும். நீங்கள் ஏதாவது கேட்டால் பதில் அளிக்கிறார்களா என்பதற்கு அவர்களிடம் அடிக்கடி பேசினால் தான் தெரியும். ஒன்றரை வயதில் தான் குழந்தைகள் தங்கள் விருப்பத்தை தெரிவிப்பர். நன்றாக நடக்கவும் பேசவும் கற்றுக்கொள்வர். நாம் வீட்டு வேலைகளை செய்தால், அவர்களும் செய்ய ஆயத்தமாவார்கள். இச்செயல்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் உடனே குழந்தையை டாக்டரிடம் காட்டவேண்டும். இரண்டு வயது வரை ஒரு நாளுக்கு 2 முறை தொடர்ந்து தர வேண்டும். குழந்தையை எப்போதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் எடை 3 கிலோ இருந்தால், 6வது மாதத்தில் 6 கிலோவும், ஒரு வயதில் 9 கிலோ, 2 வயதில் 12 கிலோ எடை இருக்க வேண்டும். இதில், குறை இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறலாம்.
சத்துமாவு தயார் செய்யலாம் : வீட்டில் சத்துமாவு தயார் செய்யலாம். கேழ்வரகை இரவில் ஊறவைத்தால் முளைத்துவிடும். அதை நிழலில் காயவைத்து முளை விழும்படி வறுத்து, பின் மிக்சியில் அரைத்து அத்துடன் ஒரு பங்கு கேழ்வரகிற்கு அரை பங்கு பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து, வெந்நீரில் கலந்து காய்ச்சி கொடுக்கலாம். தானியங்களிலேயே பயறு வகைகளிலோ முளைகட்டும் பொழுது கூடுதல் சத்து கிடைக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.அரசின் மகப்பேறு நிதிஉதவி திட்டத்தில் தாயும், குழந்தையும் ஆரோக்கிய உணவு உண்ண 3 தவணையாக ரூ.12 ஆயிரம் தரப்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் உடல், மொழி, மனம், மனஎழுச்சி, சமூக வளர்ச்சிகளை துாண்டும் செயல்கள் விளையாட்டு மூலம் கற்பிக்கப்படும்.குழந்தையின் 5 வயதிற்குள் 90 சதவீத அளவிற்கு மூளை வளர்ச்சி அடையும். எனவே குழந்தையின் முதல் ஆயிரம் நாட்களில் அக்கறை எடுத்து ஆரோக்கிய குழந்தையை உருவாக்கினால், அவர்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமையும் புகழும் சேர்ப்பார்கள்.
_ஆர். மங்கையர்கரசிகுழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (ஓய்வு)காரைக்குடி

98424 44120

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X