சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

கல்லூரிகள் நிலை கவலைக்கிடம்!

Added : பிப் 17, 2018
Advertisement
 கல்லூரிகள் நிலை கவலைக்கிடம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட செய்தியை படித்த போது, 'இன்னொரு லஞ்சப் புகார்' என, நம்மில் பலர் கடந்து போயிருப்போம்; ஓரிரு நாட்களில் இந்த செய்தியையே மறந்து விடுவோம்.

ஆனால், அவ்வளவு சுலபமாக கடந்து போகக்கூடிய, போய் விட வேண்டிய விஷயம் இல்லை இது. உயர் கல்வித் துறை எந்த அளவு மோசமாக, ஊழல், முறைகேடுகளில் ஊறிக் கிடக்கிறது என்பதை பிரதிபலிக்கும் செய்தி இது.
உயர் கல்வித் துறையில் முறைகேடுகள் என்பது, செயற்கைக் கோள் உதவியுடன், 24 மணி நேரமும் நாம் பெற்று வரும் இணையதள வசதியைப் போல, சுற்றிக் கொண்டே இருக்கிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம், பொதுவாக எப்படி நடக்கிறது என, பார்ப்போம்!அதிகார பலம், பணபலம், சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களின் முழு ஆதரவோடு தான் பெரும்பாலான துணைவேந்தர்கள் பதவிக்கு வருகின்றனர்.பதவிக்கு வருவதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு, லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் கூட லஞ்சம் தருகின்றனர். இப்படி, பணத்தைக் கொடுத்து பதவியை வாங்கி வருவதால், கொடுத்த பணத்தை எப்படி எடுப்பது என்பதில் தான் அவர்களின் கவனம் இருக்கும்.இதனால், சம்பந்தப்பட்ட துணைவேந்தர், தன் அதிகாரத்தின் கீழ், காலியிடங்களுக்கு ஒருவரை நியமிக்கும் போது, குறிப்பாக, பேராசிரியர், உதவிப் பேராசிரியர் போன்ற பதவிகளுக்கு, விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, விண்ணப்பதாரரின், 'பொருளாதார' வசதியை பார்த்தே, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் நிலை இருக்கிறது.
இந்நிலையில், சிறந்த கல்வியாளர்களில் ஒருவராக வர வேண்டும் என்ற விருப்பத்தோடு இருப்பவர்கள், நேர்மையான வழியில் கல்வியாளராக, அதாவது, உதவி பேராசிரியராகவே முடியாது. அதிலும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள, படிப்பிலும் ஆராய்ச்சியிலும் ஆர்வம் கொண்டவர்களால் ஆக முடியாது.உயர் கல்வித்துறை என்பது, முழுக்க முழுக்க ஆராய்ச்சிக்கு என்றே ஏற்படுத்தப்பட்ட இடம். அதுபோல, சமூகப் பிரச்னைகள், இயற்கை வளங்கள் சார்ந்த விஷயங்கள் என, பல அம்சங்களையும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டவை, பல்கலைக்கழகங்கள்.ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உட்பட எந்த மாநில பல்கலைக்கழகத்திலும், சொல்லிக் கொள்ளும் படியாக ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி செய்தால், அந்த ஆராய்ச்சி குறித்த முழுமையான விஷயங்கள் கட்டுரையாக, சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் வெளி வர வேண்டும். மத்திய பல்கலைக்
கழகங்களில் இருந்து இது போன்ற ஆய்வு கட்டுரைகள் சில வெளிவருகின்றன.

மாநிலங்களில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் இருந்து, ஒரு ஆராய்ச்சி கட்டுரை கூட, வெளி வந்ததாகத் தெரியவில்லை.ஆராய்ச்சி மாணவர்கள் பற்றி முக்கியமான விஷயத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி செய்து, புதிய விஷயம் ஒன்றை கண்டுபிடிக்கும் போதோ, தங்களின் ஆராய்ச்சியில் முக்கியமான இலக்கை எட்டும் போதோ, ஆராய்ச்சி பற்றிய முழு விபரங்களையும் தொகுத்து, புத்தகமாக வெளியிட வேண்டும்.
அல்லது சர்வதேச இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். இப்படி பொது வெளியில் வெளியிடும் போது தான், தொடர்ந்து தங்கள் ஆராய்ச்சி அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.நம், மாநில பல்கலைக்கழகங்களில் செய்யப்படும் பெரும்பான்மையான ஆராய்ச்சிகள், புத்தகமாக அல்லது சர்வதேச இதழ்களில் வெளியிடுவதற்கான தரத்துடன் இருப்பதில்லை என்பது வருத்தமான விஷயம். இதற்கு காரணம், ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை அவர்களின் பேராசிரியர்கள் முறையாக வழி நடத்துவதில்லை.
ஆனால், நிலைமை இங்கு தலைகீழாக உள்ளது. பேராசிரியருக்கே தங்கள் துறை குறித்த போதுமான புரிதலும், அறிவும் இல்லாத போது, அவர் எப்படி, தன் மாணவனை வழி நடத்த முடியும்?பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சி என்பது, சமுதாயத்திற்கு, மனித வாழ்க்கைக்கு எதிர்கால சமுதாயத்திற்கு உதவக்கூடியது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொண்டால், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் முழுமையாக தங்களை ஆராய்ச்சிக்கென்றே அர்ப்பணித்துக் கொண்டுள்ளன.நம் இந்தியாவில், டாக்டர்கள், விஞ்ஞானிகள் போல, பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், தங்களின் சுய விருப்பத்தின் காரணமாக, தாங்களாகவே, தங்கள் துறைகளில் ஆராய்ச்சி செய்து
வருகின்றனர். தொடர்ந்து இப்படிப்பட்ட ஆர்வமிக்க ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள், சர்வதேச இதழ்களில் வெளி வருகின்றன. அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளால், மருத்துவம், அறிவியல் துறைகளில் பல நன்மைகள் நமக்கு கிடைத்துள்ளன.
ஆனால், நான் ஏற்கனவே சொன்னது போல, மாநில பல்கலைக்கழகங்களில் இருந்து எதுவும் பல ஆண்டுகளாக வெளி வருவதில்லை.இயற்கை வளங்கள், சமூக அறிவியலில் சமீப ஆண்டுகளில் என்ன மாதிரியான ஆராய்ச்சிகள் நம் பல்கலைக்கழகங்களில் நடை
பெற்று உள்ளன என்பதை, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

சமூக அறிவியல் ஆராய்ச்சி என்பது, நாம் வாழும் சமூகம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை பிரதிபலிக்கும் கண்ணாடி. அதன் மூலமே, செய்ய வேண்டிய அவசியமான மாற்றங்களை செய்ய முடியும்.சர்வதேச அளவில் செயல்படும் சமூக அமைப்புகளும், அரசுகளும், தமிழகத்தில் செயல்படும் சமூக திட்டங்களை அங்கீகரித்து, அதில் உள்ள சிறப்பான அம்சங்கள் குறித்து, அமர்தியா சென், ஜான் டேரிஸ் போன்ற அறிஞர்கள் விரிவாக அலசி, சர்வதேச அளவில் புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதி உள்ளனர்.
பெண் சிசுக்கொலை ஏற்படுத்தும் சமூக அவலங்கள் குறித்து, கனடாவில் வசிக்கும், சாரதா சீனிவாசன் என்பவர், விரிவாக ஆராய்ந்து, புத்தகம் ஒன்றை எழுதி, சமீபத்தில் வெளியிட்டு உள்ளார்.தமிழகத்தில், பல பல்கலைக்கழகங்களில், பல துறைகளில், ஒரு பேராசிரியர், ஒரு உதவிப் பேராசிரியர் மட்டுமே உள்ளனர்.

மற்ற அனைவரும், 10 ஆயிரம், 15 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான ஊதியத்தில் தற்காலிக விரிவுரையாளர்களாக உள்ளனர். இதனால், பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் எந்த வேலையும் செய்வதில்லை. பல்கலைக்கழகங்களுக்கு வெளியே நிறைய தொழில்கள் அவர்களுக்கு உள்ளன. அவர்களின் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும்.பிஎச்.டி., பட்டம் பெறுவதற்காக, ஆராய்ச்சி செய்யும் மாணவர்களின் நிலை இன்னும் மோசம். அவர்கள் பெறும், யு.ஜி.சி., உதவித் தொகையில் பாதிக்கும் மேல், வழிகாட்டும் பேராசிரியர் எடுத்துக் கொள்வார்.பல பேராசிரியர்களின் வீடுகளில் காய்கறி வாங்கிக் கொடுப்பது; குழந்தைகளை பள்ளியில் விடுவது போன்ற வீட்டு வேலைகளை ஆராய்ச்சி மாணவர்களே செய்கின்றனர்.அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு, லட்சம் லட்சமாக, அரசும், தனி நபர்களும் நிதி அளிப்பது மகிழ்ச்சி தான். ஆனால், நம், சென்னை பல்கலைக்
கழகத்தில், எத்தனையோ ஓலைச்சுவடிகள் பராமரிப்பு இல்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றி நம்மில் யாருக்கேனும் அக்கறை உள்ளதா?முப்பது ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் உயர் கல்வியின் தரம் எப்படி இருந்தது... இப்போது எப்படி இருக்கிறது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டு, பல டாக்டர் பட்டம் பெறலாம். அந்த அளவுக்கு, நிலைமை மோசமாக உள்ளது.மேல் படிப்பிற்காக, கடந்த ஆண்டு நான், ஜெர்மனி நாட்டிற்கு சென்றிருந்த போது, கொலோன் பல்கலைக்கழக ஜெர்மனி பேராசிரியர் ஒருவர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்களாக இருந்த டாக்டர் அனந்தகிருஷ்ணனையும், மறைந்த பேராசிரியர், வ.குழந்தைசாமியையும் பற்றி பெருமையாகப்
பேசினார்.

அந்த அளவிற்கு சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்த பல திட்டங்களை அவர்கள் செயல்படுத்தினர். அது போல, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை துவங்கிய, மு.வரதராஜனாரின் பணியும் மகத்தானது.சென்னை அடையாறில் உள்ள, எம்.ஐ.டி.எஸ்., ஆராய்ச்சி மையத்திற்கு, பொருளாதார மேதை மால்கம் ஆதிசேஷையா, சென்னை அண்ணா சாலை உட்பட பல பிரதான இடங்களில் இருந்த தன் வீடு உட்பட மதிப்பு மிக்க சொத்துகள் முழுவதையும் கொடுத்தார்.இப்படி, சமுதாய நலனுக்காக பலர் ஏற்படுத்திய பல்கலைக்கழகங்கள், சிலரின் சுய லாபத்திற்காக இன்று இயங்கிக் கொண்டிருப்பது எவ்வளவு வேதனையான விஷயம்!எதிர்கால சமுதாயம் குறித்த உண்மையான அக்கறை இருப்பவர்கள், உயர் கல்வியில் உள்ள அவலத்தை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். எந்த விதத்திலும் எதிர்கால தலைமுறையினருக்கு அநீதி இழைப்பவர்களாக இருக்கக்கூடாது.இமெயில்: guma@ignou.ac.in டாக்டர் உமா.கே உதவிப் பேராசிரியை,ஸகூல் ஆப் ஜென்டர் அண்ட் டெவலப்மென்ட ஸ்டடீஸ், இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்
கழகம், புதுடில்லி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X