சில மாதங்களாக தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்கள் சிலவற்றில், தொடர்ச்சியாக சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. திருச்செந்துாரில் மண்டபம் இடிந்து விழுந்தது; மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், வீரவசந்தராயர் மண்டபம் தீக்கிரையானது; திருவாலங்காட்டில் ஸ்தல விருட்ஷம் தீப்பிடித்து சாம்பலானது.
இவற்றால், ஆட்சியாளர்
களுக்கு ஆபத்து உண்டாகுமா அல்லது பதவி பறிபோகுமா அல்லது ஆட்சி கலைக்கப்படுமா என்பது போன்ற, ஒன்றுக்கும் உபயோகமில்லாத சிந்தனைகள் தான், மக்களிடையேயும், ஆட்சியாளர்களிடமும் உலாவி கொண்டிருக்கின்றன.ஆனால், திருக்கோவில்களில் அசம்பாவிதங்கள் நிகழ உண்மையான காரணம் என்ன என்பதை பற்றி யாரும் சிந்திப்பதில்லை. மேலும், அதைத் தடுப்பது
எப்படி என, கவலையும் படுவதில்லை; அது குறித்து பேசுவதுமில்லை.திருக்கோவில்களைச் சுற்றி கடைகள் வியாபித்திருப்பது தான், தீ விபத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டாலும், கடைகள் மட்டுமே காரணமல்ல; கடைகளும் ஒரு காரணம்!திருக்கோவில்களில் அசம்பாவிதங்கள் நிகழ, முழு முதற் காரணம், இந்து அறநிலையத் துறை தான். இதை யாரும் மறைக்கவோ, மறக்கவோ கூடாது. அறநிலையத் துறை என்பது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில்
இயங்கும் ஓர் அரசுத் துறை.நம் நாட்டில், இந்து மதக் கோவில்கள் உள்ளன; கிறிஸ்துவ மத சர்ச்சுகள் இருக்கின்றன; இஸ்லாமியர்கள் வழிபட மசூதிகள் உள்ளன.
இதில், இந்து மத கோவில்களை தவிர, சர்ச்சுகளோ, மசூதிகளோ அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராமல், தனித்து சுதந்திரமாக, அந்தந்த மதகுருமார்களின் தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்குகின்றன.நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே, இந்து கோவில்கள் மீது ஆங்கிலேயர்களின் பார்வை விழுந்தது. 1925ம் ஆண்டிலேயே, 'இந்து சமய அறநிலையத் துறை' என்ற துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின், 1951ல், மத்திய அரசு, அத்துறையின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது; ஆனால், பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு தலையிடாமல்
தவிர்க்க, 'மதச்சார்பின்மை' என்ற லேபிளை, அரசு தன் முகத்தில் மூடியாக போட்டுக் கொண்டது.
மதச்சார்பின்மை என்றால் என்னவென அறியாத, 'அறிவாளி'களிடம், மதச்சார்பின்மை சிக்கி, பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறது.உண்மையில், எந்த மதத்தின் சடங்கு, சம்பிரதாயங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் மூக்கை நுழைக்காமல், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதே, உண்மையான மதச் சார்பின்மை.ஆனால், அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது... இந்து மதத்தைத் தவிர, ஏனைய மத விஷயங்களில், மூக்கையோ, முதுகையோ நுழைக்காமல், ஓரமாக நின்று, வேடிக்கை மட்டும் பார்க்கிறது.இந்து மதத்தின் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், மூக்கையும், முதுகையும் மட்டுமல்ல; முழு உடம்பையும் நுழைத்து, சம்மணமிட்டு அமர்ந்து, கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
ஆப்கனிலிருந்து படையெடுத்து வந்த கஜனி முகமது, குஜராத் மாநிலத்தின், சோம்நாத் கோவில் மீது, 17 முறை படையெடுத்து, விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துச் சென்றான். சுதந்திர இந்தியாவில், அந்த, 'திருப்பணி'யை, அரசுகளே செய்ய
ஆரம்பித்தன; செய்து கொண்டிருக்கின்றன.
கோவில் மீது முதலில் கை வைத்தது, ஆந்திர முதல்வராக இருந்த, என்.டி.ராமாராவ் தான். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பசியாற, அன்னதான திட்டத்திற்கு, கோவிலின் உண்டியல் வசூலை, அவர் பயன்படுத்த உத்தரவிட்டார்.ஆனால், நம் மாநிலத்தின் இந்து சமய அறநிலையத் துறையோ, கோவில்களின் அன்றாட அலுவல்களில் தலையிட்டு, அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது.பெருமாளுக்கோ, ஈஸ்வரனுக்கோ, முருகனுக்கோ, விநாயகருக்கோ, அம்பாளுக்கோ ஏதாவது செய்ய வேண்டுமானால், அறநிலையத் துறை அனுமதித்த பின் தான் செய்ய முடியும்.அர்ச்சனை டிக்கெட் கட்டணங்களிலிருந்து, உண்டியல் காணிக்கை வசூல் வரை, கோவில் வருவாயில், 16 சதவீதத்தை அரசுக்கு அளிக்க வேண்டுமென சட்டமியற்றி, அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.உதாரணமாக, அர்ச்சனை டிக்கெட் கட்டணம், 1௦ ரூபாய் என்றால், அதில், 1.60 ரூபாய் அரசுக்கு, அதாவது, இந்து அற
நிலையத் துறைக்கு போய் விடுகிறது.தர்ம தரிசனம், கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் என, ஆண்டவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலிக்க ஆலோசனையும் வழங்கி, அதில், 16 சதவீதத்தை, 'ஆட்டை' போட்டுக் கொண்டிருக்கிறது, இந்து சமய அறநிலையத் துறை.சுவாமிக்கு படைக்கும் சர்க்கரை பொங்கலில், எவ்வளவு முந்திரி பருப்பு, திராட்சை போட வேண்டும்; வெண் பொங்கலில் எவ்வளவு மிளகு, சீரகம் போட வேண்டும்; சுவாமிக்கு எத்தனை பழம் நிவேதனம் செய்ய வேண்டும் என, கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்து அறநிலையத் துறையின் ஆட்டத்திற்கேற்ப ஆடிக் கொண்டு இருக்கின்றனர் அர்ச்சகர்கள்.
அறநிலையத் துறையில், 1967 வரை, அரசு அதிகாரிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், 1967லிருந்து, அதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த நாள் முதல், கோவில் நிர்வாகத்தில், 'அறங்காவலர்கள்' என்ற போர்வையைப் போர்த்திய, கழகக் கண்மணிகளும், உடன் பிறப்புக்களும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர்.பிரசித்தி பெற்ற கோவில்களில், மாவட்டச் செயலர்களும், ஏனைய சாதாரண கோவில்களில் வட்டச் செயலர்களும், அறங்காவலர் குழுத்
தலைவர்களாக ஆயினர்.கோவில்களில், அறங்காவலர்களாகவும், குழு உறுப்பினர்களாகவும் அமர்ந்தவர்கள், 'கடவுள் இல்லை; கடவுளைக் கும்பிடுகிறவன் முட்டாள்' என, பரணி பாடிக் கொண்டிருந்தவர்கள். 'அன்பே சிவம் என்றால், அவன் கையில் சூலாயுதம் எதற்கு... வேர்க்கடலை நோண்டவா' என, கேள்வி கேட்டு, கேலி செய்தவர்கள்!அறங்காவலர்கள் போர்வையுடன் கோவிலில் நுழைந்த உடன்பிறப்புகள், கொஞ்சம் கொஞ்சமாக கோவில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை, கபளீகரம் செய்ய துவங்கினர்.
கோவில்களைச் சுற்றி, கடைகளை அமைத்து, அவற்றை கட்சிக்காரர்களுக்கு, சொற்ப கட்டணத்திற்கு குத்தகைக்கு கொடுத்தனர்.இப்போதிலிருந்து, 50 - 60 ஆண்டுகளுக்கு முன், எந்த கோவில் வாசலிலும் கடைகளை நான் பார்த்ததில்லை.
அர்ச்சனை செய்ய வேண்டுமென்றால், தேங்காய், பூ, பழம், கற்பூரம் போன்ற பூஜைப் பொருட்களை, வீட்டிலிருந்தே எடுத்து செல்வது தான் வழக்கமாக இருந்தது.கோவில் வளாகங்களை, உடன்பிறப்புகள் குத்தகைக்கு எடுத்தனர்; வாடகைக்கு எடுத்தனர்; அதற்கான தொகையை, முறையாக செலுத்தினரா என்றால் இல்லை. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளனர்; வசூலிக்க முடியாமல், கோவில் நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது.வருவாய் வரும் கோவில்களை வளைத்து வைத்துள்ள இந்து அறநிலையத் துறை, விளக்கு ஏற்றக் கூட வழியின்றி இருக்கும் ஆயிரக்கணக்கான கோவில்களை, திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.உலக அதிசயமாக கருதப்பட வாய்ப்புள்ள, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன், கோவிலை மட்டும் தான் கட்டினான். கோவில் வளாகத்தில் கழிப்பறையை கட்டினானா... இல்லையே!
ஆனால், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் வந்ததும், அவர்கள் செய்த முதல் வேலை, கோவிலை நிர்வகிக்கும் நிர்வாக அலுவலர் நிர்வாகம் செய்ய அலுவலகத்தை கட்டி, கூடவே அதில் கழிப்பறையையும் கட்டி கொண்டனர்.
வருமானம் அதிகம் வரும் கோவில் என்றால், நிர்வாக அலுவலரின் அறையில், 'ஏசி'யும் இருக்கும்.இன்னொரு வேடிக்கையான விஷயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்... இந்து சமய அற நிலையத் துறை, பிரதி மாதமும், 'திருக்கோயில்' என்ற பெயரில் பத்திரிகை வெளியிடுகிறது.
அதற்கான பணம், கோவில் வருவாயில் கிடைப்பது தான். ஆனால், அந்த பத்திரிகைக்கும், 15 ரூபாய் விலை வைத்து, கூடுதல் வருவாய் பார்க்கிறது.சட்டசபையில், இந்து அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட, 'கிப்ட் பேக்'குகள் தலைமை செயலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பைகள் ஒவ்வொன்றிலும், தலா, 500 கிராம் சுவீட், காரம், பஞ்சாமிர்தம் இருக்கும்.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், கோவில்கள் இருப்பதால் தான், இந்த அனாவசிய செலவு.எனவே, இந்து கோவில்கள் நிர்வாகத்தை அறநிலையத் துறையிடம் இருந்து மீட்டால் மட்டுமே, கோவில்கள் தழைத்தோங்கும். இதற்கான பணியில், ஹிந்து மதத்தினரும், மத அமைப்புகளும் ஈடுபட வேண்டும்.
கழக உடன்பிறப்புகளின் பிடியிலிருந்து, கோவில்களை மீட்டு, கோவில் வளாகத்திலிருந்து கடைகளை காலி செய்தால் தான், கோவில்கள் தீக்கிரையில் இருந்து தப்பிக்கும்.வழிபாட்டுத்தலம், வழிபடத் தான். வர்த்தகத்திற்கான இடமாக இருக்கக் கூடாது. நடக்குமா... பார்ப்போம்!இ-மெயில்: essorres@gmail.comஎஸ்.ராமசுப்ரமணியன்
எழுத்தாளர்