மாசம் 40 லட்சம் லட்சியம்... மாமூல் 20 லட்சம் நிச்சயம்!

Added : பிப் 20, 2018
Advertisement
பெங்களூருவுக்கு மாறுதலாகிச் சென்றிருந்த தோழி துங்கபத்ரா, இப்போது மீண்டும் கோவையில் வேலை கிடைத்து திரும்பி இருந்தாள். மித்ராவைப் பார்க்க வந்த இடத்தில், சித்ராவும் சேர்ந்திருக்க, மூவரும் சேர்ந்து, காரில் ஊர் சுற்றக் கிளம்பினர். வெயில் உக்கிரமாக இருந்தது; புது, 'ஷாப்பிங் மால்' போகலாம் என்று, சத்தி ரோட்டில் காரை ஓட்டிக் கொண்டே பேசினாள் பத்ரா...''நான் பேங்களூர்
மாசம் 40 லட்சம் லட்சியம்... மாமூல் 20 லட்சம் நிச்சயம்!

பெங்களூருவுக்கு மாறுதலாகிச் சென்றிருந்த தோழி துங்கபத்ரா, இப்போது மீண்டும் கோவையில் வேலை கிடைத்து திரும்பி இருந்தாள். மித்ராவைப் பார்க்க வந்த இடத்தில், சித்ராவும் சேர்ந்திருக்க, மூவரும் சேர்ந்து, காரில் ஊர் சுற்றக் கிளம்பினர். வெயில் உக்கிரமாக இருந்தது; புது, 'ஷாப்பிங் மால்' போகலாம் என்று, சத்தி ரோட்டில் காரை ஓட்டிக் கொண்டே பேசினாள் பத்ரா...
''நான் பேங்களூர் போயிட்டு வந்த பிறகு, நம்மூரு, 'க்ளைமேட்' கொஞ்சம், 'ஹாட்'டா தெரியுது!''
''காலையில கடும்பனி... மதியம் சரியான வெயிலு... இது தான் நம்மூரோட, 'டிபிக்கல் கிளைமேட்'... இந்த வருஷம், மழை நல்லாருக்கும்னு நினைக்கிறேன்!'' என்றாள் சித்ரா.
''என்ன மழை பேஞ்சாலும், மூணே மாசத்துல தண்ணிக் கஷ்டம் வந்துருதே... கேப்டவுன், பெங்களூரு வரிசையில, நம்மூர்லயும் 'டே ஜீரோ' வந்துருமோன்னு பயமா இருக்கு!'' என்றாள் மித்ரா.
''ஜாக்கிரதையா இல்லேன்னா உறுதியா வந்துடும்... இப்பவே ஆயிரத்து ஐநுாறு அடிக்கு மேல, 'போர்' போட ஆரம்பிச்சிட்டாங்க. போன வாரம் கலெக்டர் பங்களாவுக்குள்ளயே புது, 'போர்' போட்ருக்காங்க. அங்கயும் தண்ணிக் கஷ்டம் வந்துருச்சாம்!'' என்றாள் சித்ரா.
''நம்ம டிஸ்ட்ரிக்ட்ல, மத்த தண்ணிக்கெல்லாம் கஷ்டம் வந்தாலும், டாஸ்மாக் தண்ணி மட்டும், 24 x 7 கணக்குல ஆறா ஓடுது. அதுலயும் ரூரல் ஏரியா படுமோசமா இருக்கு,'' என்றாள் மித்ரா.
''அதுக்கு காரணமே, மது விலக்குல முக்கியமான பொறுப்புல இருக்குற ஒரு ஆபீசர் தான்... மாசம், 40 லட்சம் சம்பாதிக்கிறது அவரோட லட்சியம்; அஞ்சு டிவிஷன்ல, ஒவ்வொரு டிஎஸ்பியும் நாலு லட்சம் ரூபாயை, கிரைம் மீட்டிங்குக்கு முத நாளே தர்றதுல, 20 லட்சம், நிச்சயமா வந்துருது. ராத்திரி பகலா, சரக்கு விக்கவும், தாபா நடத்தவும் அனுமதிக்கிறதுல, பத்துப் பதினஞ்சு லட்சம் தேறுதாம். தாபாக்கள்ல வசூல் பண்றதுக்காகவே, பிரைவேட்டா அவர் ஆள் போட்ருக்காராம்!'' என்றாள் சித்ரா.
''அது தெரியலை... ஆனா, சரியா வசூல் பண்ணித்தர்றதில்லைன்னு தான், ரூரல்ல போலீஸ்காரங்களை அடிக்கடி மாத்துறாங்களாம். ஒரு சில போலீஸ்காரங்களை, ஒரே வருஷத்துல, நாலஞ்சு ஸ்டேஷன் மாத்திட்டாங்களாம்.
ஆனா, சமீபத்துல, வடவள்ளி ஸ்டேஷன்ல மாத்துன ஆறு போலீஸ்காரங்களை மட்டும், ஆளுங்கட்சி பிரஷர்ல மறுபடியும் அதே ஸ்டேஷன்ல போட்டு ஆர்டர் போட்ருக்காங்க!'' என்றாள் மித்ரா.
''அதை விடு மித்து... வசூல் ராஜாவுக்கு பிரபு மாதிரி, இவருக்கு, 'ரைட் ஹேண்டா' இருக்குறது, கருமத்தம்பட்டியில இருக்குற போலீஸ் ஆபீசர் தான்.
இவரைக் காப்பாத்துனதே, புள்ளையாரு தான்... அவரு மட்டும் மாட்டாம இருந்திருந்தா, இந்நேரத்துக்கு இவர் தான் விஜிலென்ஸ்ல சிக்கிருக்க வேண்டிய ஆளாம்!'' என்றாள் சித்ரா.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, துங்கபத்ராவுக்கு அலைபேசியில் அழைப்பு வந்ததால், இருவரும் அமைதியாயினர். வண்டியை ஓட்டிக்கொண்டே, 'ப்ளூடூத்'தில் பேசிய பத்ரா, 'சந்திரமோகன்... நான் நாளைக்கு தான் ஆபீஸ் வருவேன்... இன்னிக்கு ஜெயப்பிரகாஷை வச்சு, 'ஒர்க்' பண்ணுங்க' என்று அழைப்பைத் துண்டித்தாள். மித்ரா மீண்டும் தொடர்ந்தாள்...
''அக்கா... இவுங்க ரெண்டு பேரும் இப்பிடி வசூல் பண்றதுக்குக் காரணமே, மேல இருக்கிறவுங்களுக்கு, 'கப்பம்' கட்டுறதுக்குதான்னு சொல்றாங்க... ஆனா, சூலுார்ல இருக்குற ஆர்.டி.ஓ., யூனிட் ஆபீஸ்ல இருக்குற ஒரு லேடி ஆபீசர், வசூல்ல தன்னோட பங்கு வரலைன்னு, பீளமேட்டுல இருக்குற பெரிய ஆபீசரையே, 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கீட்டாங்களாம்!'' என்றாள் மித்ரா.
''ஏதாவது புரியுற மாதிரி சொல்லு மித்து!'' என்று பொய்க்கோபம் காட்டினாள் சித்ரா.
''அந்த ஆபீஸ்ல இருக்குற ஒரு இன்ஸ்பெக்டர், 'ஒன் மேன் ஆர்மி' மாதிரி, எல்லா வசூலையும் அவரே வாரிச் சுருட்டிட்டு இருந்திருக்காரு. இப்போ, ஆபீசை, 'சூபர்வைஸ்' பண்றதுக்கு வந்த இந்த லேடி, அதுல தனக்கு பாதி வேணும்னு போர்க்கொடி துாக்க, ரெண்டு பேருக்கும் இடையில, ஆபீஸ்லயே சண்டை நாறிடுச்சாம்!'' என்றாள் மித்ரா.
''இதுல பெரிய ஆபீசரை எதுக்கு அந்தம்மா மிரட்டணும்?'' என்று கேட்டாள் சித்ரா.
''அவரு, 'ஆபீஸ்ல ஏன் சண்டை போடுறீங்க'ன்னு கேட்கப்போயி, 'நீங்க என்ன யோக்கியமா'ன்னு அவரையே எகிறிருக்காங்க. இப்போ, பிரச்னை என்னன்னா, இவுங்க சண்டையால, சூலுார் யூனிட் ஆபீஸ்ல எல்லா வேலைக்கும் லஞ்சம் இரட்டிப்பாயிருச்சாம்... புரோக்கர்கள் கொந்தளிச்சுப்போயி, 'நீங்க முடிவு பண்ற வரைக்கும் பேப்பரே கொண்டு வர மாட்டோம்'னு மூணு நாளா 'ஸ்டிரைக்' அடிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''எல்லா டிபார்ட்மென்ட்லயும், ஆளுங்கட்சிக்கு வேண்டிய ஆபீசர்களா வந்து உட்கார்ந்திருக்காங்க... அவுங்க தான், எதைப்பத்தியும் கவலப்படாம வசூலே பிரதானம்னு மக்களை வாட்டி வதைக்கிறாங்க!'' என்று விரக்தியோடு பேசினாள் சித்ரா.
''சிட்டி லிமிட்ல, எல்லா ஏரியாவுலயும் சூதாட்ட கிளப்களை மூடிட்டாங்க... ஆனா, தடாகம் ரோட்டுல, இன்னமும் ஒரு கிளப் நடக்குதாம்... அதுக்கும் ஆளுங்கட்சி பின்னணிதான் சொல்றாங்க!'' என்றாள் மித்ரா.
''இருக்கலாம்... செல்வபுரம் ஏரியாவுல, ஒரு எஸ்.ஐ.,யும், ஸ்டேஷன் ஐ.எஸ்., போலீஸ் ஒருத்தரும் சேர்ந்து, ஏகப்பட்ட கட்டப் பஞ்சாயத்து பண்றாங்கன்னு எக்கச்சக்க 'கம்பிளைண்ட்' வருது; ஆனா, அவுங்க ரெண்டு பேரையும் பெரிய ஆபீசர் மாத்தவே மாட்டேங்கிறாராம். அங்க இருக்குற இன்ஸ்பெக்டர், 'அப்பா' படத்துல வர்ற பொடியன் மாதிரி, 'இருக்குற இடம் தெரியாம இருந்துரணும்யா'ன்னு அமைதியா இருக்குறாராம். இவுங்க ரெண்டு பேரு ஆட்டம் தான் ஓவராம்!'' என்றாள் சித்ரா.
''அந்த ஏரியாவுல, போலீஸ் இருக்கான்னே சந்தேகமா இருக்கு...கலவரத்தை உண்டு பண்றது மாதிரியே, பேனர்கள் வைக்கிறாங்க; மேடையில வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. கொஞ்சம்கூட 'கன்ட்ரோல்'ங்கிறதே இல்லை!'' என்றாள் மித்ரா.
''வாய்க்கு வந்தபடி பேசுறாங்கன்னு சொன்னதும், நம்ம பள்ளிக்கல்வித்துறையில இருக்குற 'அய்யா'வோட 'அண்ணன்' ஞாபகம் வந்துச்சு. அவரு வந்தவுடனே, அவருக்குக் கீழ இருக்குற எந்த ஆபீசரும், பிரஸ்கிட்ட வாயைத்திறக்கவே கூடாதுன்னு 'கண்டீஷன்' போட்ருக்காரு!'' என்றாள் சித்ரா.
''இது பழைய தகவலாச்சே... இப்போ என்ன புகார்ன்னா... வயசு வித்தியாசம் பார்க்காம, எல்லாரையும் அவரு தாறுமாறாப் பேசுறார்ங்கிறது தான்!'' என்றாள் மித்ரா.
இடையில் புகுந்த பத்ரா, ''நம்மூர்ல இன்னும் அதே கலெக்டர், அதே கமிஷனர் தான் இருக்காங்களா?'' என்று கேட்டாள்.
''இங்க தான் இருக்காங்க... ஆனா, ரெண்டு பேரும் கிளம்பத் தயாரா யிட்டாங்க...'ஸ்வச் பாரத்'தை தர மதிப்பீடு செய்யுற ஆய்வுக்குழு, அடுத்த வாரம் நம்மூரு வர்றாங்க. அதுக்காக, போன வாரம் ஒரு மீட்டிங் நடத்துன கார்ப்பரேஷன் கமிஷனர், ரொம்ப உருக்கமாப் பேசிருக்காரு!'' என்றாள் சித்ரா.
''அப்பிடி என்ன தான் பேசுனாராம்?'' என்றாள் மித்ரா.
''சீக்கிரமே டிரான்ஸ்பர் ஆயிருவோம்கிறதை சொல்லாம, 'எங்களை மாதிரி, ஆபீசர் யாரு வந்தாலும், ரெண்டு மூணு வருஷத்துல மாறிடுவோம். இது உங்க ஊரு, இதை நல்லா வச்சிருக்க வேண்டிய பொறுப்பும், அதிகாரமும் உங்ககிட்டதான் இருக்கு; அதை நல்லாச் செய்யுங்க'ன்னு பேசிருக்காரு. அடுத்த வாரம் ஆய்வுக்குழு வர்ற நிலைமையில, இப்போ வரைக்கும் ஏழரை கோடி ரூபாய்க்கு வர வேண்டிய குப்பைத் தொட்டி எதுவுமே வரலைங்கிறதுல அவருக்கு பெரிய வருத்தமாம்,'' என்றாள் சித்ரா.
''அவருக்கு அந்த வருத்தம்னா... நம்ம 'துாத்துக்குடி ரிடர்ன்' இன்ஜினியருக்கு, சி.இ.,பொறுப்பைக்
கொடுக்கலைன்னு ரொம்ப வருத்தமாம். கேட்டதுக்கு, 'வர்றப்போ வரும்'னு ஆளுங்கட்சி தரப்புல சொல்றாங்களாமே!'' என்றாள் மித்ரா.
''உங்க ரெண்டு பேருக்கும் ஒரு மேட்டர் சொல்றேன்... கார்ப்பரேஷன்ல இருக்குற ஒரு இன்ஜினியரு, 'வீக் எண்ட்' உற்சாகத்துல இருந்தப்போ, 'என்னைய யாரும் அசைக்க முடியாது; ஏன்னா, எனக்கு பெரிய இடத்து சப்போர்ட் இருக்கு... அவரு சாதாரண காண்ட்ராக்டரா இருந்தப்போ, நான் தான் அவரை முதல் முதலா பிளைட்ல கூப்பிட்டுப் போனேன்'னு எகத்தாளமா பேசிருக்காரு. அவரு யாருன்னு தெரியுதா?'' என்று கொக்கி போட்டாள் பத்ரா.
சற்றும் யோசிக்காத மித்ரா, 'இவருக்கு முடியுற பேருல தான், அவருக்கு பேரு ஆரம்பிக்கும்; சரியா' என்று சொல்ல, 'சபாஷ்' என்ற பத்ரா, 'இப்பவே ஒரு செம்ம ட்ரீட் தர்றேன்' என்று வண்டியை 'மால் பார்க்கிங்'கில் நிறுத்தினாள். மூவரும் வண்டியை விட்டு இறங்கி நடந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X