மும்பை: சுதந்திரம் கிடைத்து, 70 ஆண்டுகளுக்கு பின், மஹாராஷ்டிர மாநிலம், மும்பை அருகில், கடல் பகுதியில் அமைந்துள்ள, எலிபென்டா தீவுக்கு, மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பை அருகில், கடல் பகுதியில் உள்ள, எலிபென்டா தீவில் உள்ள குகைக் கோவில்கள், ஹிந்து, புத்த மத சின்னங்களாக உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்ற, இந்த குகைக் கோவிலுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இதுவரை, மின் இணைப்பு இல்லாத இந்த தீவுக்கு, 25 கோடி ரூபாய் செலவில், மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், 15 மாதங்களில் முடிக்கப்பட்டன. மின் இணைப்பு தரப்பட்டு உள்ளதை அடுத்து, எலிபென்டா தீவு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, மாநில மின் வினியோக நிறுவன மண்டல இயக்குனர், சதீஷ் கராப்பே கூறுகையில், ''மும்பையில் இருந்து கடல் வழியாக, தீவுக்கு, மின் கேபிள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. ''தீவில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த, 950 வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE