நம்மால் இன்றி வேறு யாரால் முடியும்?

Added : பிப் 24, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
இதோ, கோடை வந்தாச்சு! தண்ணீர் பிரச்னை குறித்து அனைவரும் பேச தயாராகி விட்டோம். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல, தண்ணீர் தட்டுப்பாடு குறித்த பேச்சுக்கு, தென் ஆப்ரிக்காவின், கேப் டவுன் நகரம் கிடைச்சாச்சு!ஆம்... அந்நாட்டின் கடற்கரை நகரமான கேப் டவுன், தண்ணீருக்காக தத்தளிக்கும் என, வெளியாகியுள்ள செய்தி, நம்மை மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகளின் பல நகரங்களையும்
 நம்மால் இன்றி வேறு யாரால் முடியும்?

இதோ, கோடை வந்தாச்சு! தண்ணீர் பிரச்னை குறித்து அனைவரும் பேச தயாராகி விட்டோம். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல, தண்ணீர் தட்டுப்பாடு குறித்த பேச்சுக்கு, தென் ஆப்ரிக்காவின், கேப் டவுன் நகரம் கிடைச்சாச்சு!ஆம்... அந்நாட்டின் கடற்கரை நகரமான கேப் டவுன், தண்ணீருக்காக தத்தளிக்கும் என, வெளியாகியுள்ள செய்தி, நம்மை மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகளின் பல நகரங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிஉள்ளது.

'சில ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால், மார்ச் முதல், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு தீரும் வரை, நகராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும். 'குடிக்க, 2 லிட்டர், சமையலுக்கு, 4 லிட்டர், குளிக்க, 20 லிட்டர், கழிப்பறை உபயோகத்திற்கு, 27 லிட்டர் மட்டுமே வழங்கப்படும்' என, கேப் டவுன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது நடக்குமா... நடக்காதா என்பதைப் பற்றி கவலையில்லை. ஆனால், நம் நாடும் இந்த வரிசையில் வரும் என்பதும், பெங்களூரு நகரம் தான், தண்ணீருக்காக தத்தளிக்கும் என, வெளியாகியுள்ள செய்திகளும் தான், அபாயகரமான தகவலாக பார்க்கப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம், பெங்களூரு நகரம் தன், 79 சதவீத நீர்நிலைகளை இழந்துள்ளது; ஏரிகளின் அதிக பரப்பு, பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது; நகரின், 90 சதவீத கழிவு நீர், ஏரிகளில் கலக்கிறது.இந்த நிலை நீடித்தால், 'இந்தியாவின், கேப் டவுன், பெங்களூரு' என, அழைக்கப்படலாம். அதன்பின், போகப்போக நம் நாட்டின் பல நகரங்களும், கிராமங்களும், தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன்களாக மாறி, உயிரினங்கள் தங்கள் வாழ்க்கைக்காக போராட வேண்டியிருக்கும்.
'இதற்கான காலம் ரொம்ப துாரம் இல்லை என்பது மட்டும் உறுதி' என, அபாய சங்கு ஊதுகின்றனர், நீரியல் வல்லுனர்கள். மேலும், 'நாட்டின் பாதுகாப்பிற்கான ராணுவம், பொதுமக்களுக்கு தண்ணீரை அளவிட்டு வினியோகிக்க, தெருவில் இறங்கி வேலை செய்ய வேண்டி வரும்' என்றும் கூறுகின்றனர்.
இந்நிலை, நமக்கு வரக்கூடாது. இதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்...

முதலில், நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம், 'தண்ணீர் பற்றாக்குறை நாடாக நம் நாடு மாறிக் கொண்டிருக்கிறது' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இரண்டாவதாக, தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான செயல்பாடுகளை முழு மூச்சுடன் செய்ய முன்வர வேண்டும்.தமிழகத்தில் இப்போது கூட, எங்கு பார்த்தாலும் தண்ணீர்; 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள்; 34 நதிகள், இரண்டு
லட்சத்துக்கும் மேற்பட்ட ஓடைகள். ஒவ்வொரு ஊருக்கும், 2 - 4 - நீர்நிலைகள் உள்ளன.

எனினும், அனைத்தும், ஏதாவது ஒரு வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.'நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது' என உத்தரவிட்ட, மதுரையில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கிளை, குளத்தின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. பல பேருந்து நிலையங்கள், நீர்நிலைகளின் மேல் தான் உள்ளன.'நீரின்றி அமையாது உலகு' என்று சொன்ன, திருவள்ளுவர் நினைவாக கட்டப்பட்ட, 'வள்ளுவர் கோட்டம்' குளத்தை அழித்து, அதன் மேல் தான் கட்டப்பட்டுள்ளது.
நம் தேசம், தண்ணீருக்காக தத்தளிக்காமல் இருக்க வேண்டுமெனில், சில நடவடிக்கைகள் அவசியம்... ஆறுகளைப் பாதுகாக்க, நீர் பாதுகாப்பு சட்டத்தில் தனிப்பிரிவுகளை இயற்றி, அவற்றை திறம்படச் செயல்படுத்த வேண்டும்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டம் வரை, விரிந்துள்ள சென்னை மாநகர எல்லைக்குள், 4,000 நீர்நிலைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலனவை, பலரின் அபகரிப்பில் மூச்சு முட்டி, அமுங்கி கிடக்கின்றன.
அவற்றை மீட்டெடுத்து, மூச்சு வாங்க விட்டாலே, பல லட்சம் மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு எந்த பிரச்னையும் வராது.

தமிழகத்தில் பெய்யும் மழையளவில் எந்த குறையும் இல்லை; ஆண்டுக்கு சராசரியாக, 92.5 செ.மீ., மழை பெய்கிறது. ஆனால், மொத்த மழையும் குறைவான நாட்களில் கொட்டித் தீர்ந்து விடுகிறது. அந்த நேரத்தில் பெய்யும் மழையை சேகரித்து வைக்க, நீர் ஆதாரங்களை நாம் தயாராக வைத்துக் கொள்வதில்லை.மழை நீரை சிறந்த முறையில் சேமிக்க உதவுபவை ஏரி, குளம், குட்டைகள். அவற்றில் பல, ௧,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே உருவானவை.
அவற்றை துார்வாரி, கரைகளை மேம்படுத்தி, நீர்வரத்துக் கால்வாய் மற்றும் மிகைப்போக்கிகளை செப்பனிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரை சேமிக்க வேண்டும்.இந்த பணியை ஏற்கனவே அரசு அவ்வப்போது செய்து வந்தாலும், ஒழுங்கான பராமரிப்பின்றி, முட்புதர்களோடும், பலரின் ஆக்கிரமிப்போடும் காணப்படுகிறது.எந்தவொரு ஊழலுக்கும் துணை போகாமல் தொடர்ந்து பராமரிக்க வேண்டிய புதிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், மழையை வரவழைக்க, பொது இடங்களில் மரங்களை நட்டு, பராமரிக்க வேண்டும். மத்திய-, மாநில அரசுகள், மருத்துவம், கல்வி மற்றும் பாதுகாப்புக்கு செலவழிக்கும் நேரம் மற்றும் பணத்தைப் போல, அதே அளவுக்கு, தண்ணீர் கிடைக்க, அடுத்த, 10 ஆண்டுகளுக்கு செலவழிக்க வேண்டும்.குளங்கள் இல்லாத கிராமங்களில், மக்களின் விருப்பப்படி, அவர்கள் மிகவும் எளிதில் அணுகக்கூடிய அளவில் குளங்களையும், அதன் கரையில் திறந்த கிணற்றையும் உருவாக்கி, தண்ணீர் பஞ்சத்தைத் தவிர்க்க முற்பட வேண்டும்.
நீர் நிலைகளை மேம்படுத்தவும், நதிகளை இணைக்கவும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, உரிய நோக்கத்தோடு செலவழிக்கப்படுகிறதா என்பதை, நடுநிலையான குழு அமைத்து, தீவிரமாக
கண்காணிக்க வேண்டும்.

தண்ணீருக்காக கோடிகளில் ஒதுக்கப்படும் நிதியை, அது தொடர்பான செயல்பாட்டுக்கு முழுமையாகச் செலவழிக்க வேண்டும்.'அரசுக்கு முன்மாதிரியான செயல்பாடுகளை மக்களே முன்னெடுத்துச் செல்ல வழிவகை செய்யலாம்' என்பதை, சேலம் மக்கள் சாதித்து காட்டி இருக்கின்றனர்.கடந்த, 2010ல், சேலம், கன்னங்குறிச்சியின் மூக்கனேரியில் காணப்பட்ட சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, ஏரியில் குப்பை கூளங்கள் மற்றும் கழிவு நீர் தேங்கியதையும் சுத்தம் செய்து, ஏரியைத் துார் வாரியுள்ளனர்.அதன் பயனாக இன்று, ஐந்து ஆண்டுகளாக, துாய்மையான நீரால் பலர் பயன் அடைகின்றனர். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி, கடல் போல காட்சியளிக்கிறது. 12 ஆயிரத்திற்கும் மேலான மரங்களை ஏரியின்
கரையில் நட்டு பராமரித்ததால், பலர் ஓய்வெடுத்து, உறவுகளை வளர்க்கும் உன்னத நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்.கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக முட்புதர்களும், சாக்கடைக் கழிவுகளும் சூழ்ந்து, கழிவுநீர் குட்டையாகிக் கிடந்த, தர்மபுரி, இலக்கியம்பட்டி ஏரி, 2014ல், அந்நகர மக்களின் தனிப்பட்ட முயற்சியால் இன்று, 'மாரியகம்' என்ற பெயரில், பரந்து விரிந்து, தண்ணீரைத் தாங்கி நிற்கிறது.விழித்துக்கொள்ள இது பொன்னான நேரம். மறந்தோமெனில் வருங்காலத்தில் தண்ணீரின்றி, தண்ணீருக்காக உலக நாடுகளிடம் சண்டை போடும், மூன்றாம் உலகப்போர் நிலைமை வரக்கூடும்.
நாம் வாழும் ஒவ்வொரு நகரங்களும், தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன்களாக மாறி விடும்.எனவே, நம் ஊரின் நீர்பிடிப்பு பகுதிகளை ஆழப்படுத்துவோம்; அனைத்து வெற்றிடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்போம்; மழையை மகசூலாகப் பெறுவோம்; துார் வாரிய நீர்ப்பிடிப்பு பகுதிகளை, மழை நீரால் நிரப்பி, நம் கிராமங்களை குடிநீரில் தன்னிறைவுக்
கண்ட ஊர்களாக உருவாக்குவோம்.

'நம்மாலன்றி வேறு யாரால் முடியும்...' என்ற உரத்தக் குரலோடு, இன்றே நம் பயணத்தைத் துவங்குவோம். தொடரும் நல்ல உள்ளங்களைத் தொடர்ந்து ஊக்குவிப்போம்!
saduraimsw@gmail.comஎஸ்.அருள் துரைசமூக ஆர்வலர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

THANGARAJ - CHENNAI,இந்தியா
03-மார்-201813:23:27 IST Report Abuse
THANGARAJ உடனடியாக சென்னை மற்றும் மாநகராட்சிகளில், வீட்டில் பயன்படுத்தும் RO முறை குடிநீர் வடிகால் போன்ற சாதனங்களுக்கு தடை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் சுத்திகரிக்க தேவைப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதினாலும், கழிவு நீர் என சொல்லக்கூடிய நீரை வீணாக்குவதும், கோடைகால தண்ணீர் தேவையை அதிகரிக்கும்..... உடனடியாக தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X