திருநெல்வேலி, நெல்லை அருகே உள்ள அரசு பள்ளி, தனியாரை மிஞ்சு வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அசத்துகிறது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளி, 1940ல், துவங்கப்பட்டது. துவக்க பள்ளியாக இருந்து, காரியாண்டியைச் சேர்ந்த சமூக சேவகரும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினருமான பாண்டுரங்கன் மற்றும் புரவலர்களின் ஒத்துழைப்போடு, 2011ல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்தது.
உயர் நிலை பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்ட, பாண்டுரங்கன், 3.5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார். 240 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் காந்தி மற்றும் ஆசிரியர்கள், ரோட்டரி சங்கத்தின் துணையுடன், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, பல்வேறு நவீன வசதிகளை, பள்ளியில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
கம்ப்யூட்டருடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், அரித்மெட்டிக் அல்ஜீப்ரா கணிதம், மாணவர்களுக்கு நீதி போதனை, யோகா, கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு, ஆறாம் வகுப்புக்கு ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐந்தாண்டுகளாக, 10ம் வகுப்பு மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். படிக்கட்டுகளும் பாடம் சொல்லும் என்பதற்கேற்ப, பள்ளியின் படிக்கட்டுகளில் வாய்ப்பாடு எழுதப்பட்டுள்ளது.
பள்ளி முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளதுடன், வகுப்பறைகளில் ஸ்பீக்கர் பொருத்தப் பட்டு, அறிவிப்புகள் செய்யப் படுகின்றன. பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகளும், காய்கறி செடிகளும் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் காய்கறிகளை, சத்துணவுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளியை தரம் உயர்த்தியதை அடுத்து, பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறும் முயற்சியில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE