ரஜினியுடன் உறவாடும் மணல் மாபியா கும்பல்!| Dinamalar

ரஜினியுடன் உறவாடும் மணல் மாபியா கும்பல்!

Added : பிப் 27, 2018
Share
சுட்டெரிக்கும் வெயிலில், ஊரை சுத்திட்டு, வீட்டுக்கு வந்த சித்ரா, 'பிரிட்ஜ்'-ஐ திறந்து, கூல் வாட்டர் எடுத்துக் குடித்தாள். அரை லிட்டர் 'ஜில்' தண்ணீரை குடித்து முடித்ததும், இப்பவே கண்ணைக்கட்டுதே, ஏப்ரல், மே மாசத்துல என்ன செய்யப் போறமோ,'' என, புலம்பினாள்.''வெயிலுக்கு புலம்புறீங்க... குடிக்க தண்ணீ கெடைக்காம கஷ்டப்படப் போறாம்,'' என, கொளுத்திப் போட்டாள்
ரஜினியுடன் உறவாடும் மணல் மாபியா கும்பல்!

சுட்டெரிக்கும் வெயிலில், ஊரை சுத்திட்டு, வீட்டுக்கு வந்த சித்ரா, 'பிரிட்ஜ்'-ஐ திறந்து, கூல் வாட்டர் எடுத்துக் குடித்தாள். அரை லிட்டர் 'ஜில்' தண்ணீரை குடித்து முடித்ததும், இப்பவே கண்ணைக்கட்டுதே, ஏப்ரல், மே மாசத்துல என்ன செய்யப் போறமோ,'' என, புலம்பினாள்.''வெயிலுக்கு புலம்புறீங்க... குடிக்க தண்ணீ கெடைக்காம கஷ்டப்படப் போறாம்,'' என, கொளுத்திப் போட்டாள் மித்ரா.''என்னப்பா சொல்ற,'' என, சித்ரா கேட்க, ''அக்கா, கோடைய சமாளிக்க, சிறுவாணி டேம்ல தண்ணிய சேர்த்து வச்சிருந்தாங்க. பி.ஏ.பி., திட்டத்துல, தண்ணி கொடுக்காத கோபத்துல, சிறுவாணியில இருந்து ஏகப்பட்ட தண்ணிய, கேரளாக்காரங்க வெளியேத்திட்டாங்க... அந்த தண்ணி, பில்லுாருக்கும் வராம இருக்க, தடுப்பு ஏற்படுத்தி இருக்கறதுனால, நம்மூரு அதிகாரிங்க, என்ன செய்றதுன்னு தெரியாம, கைய பிசைஞ்சிக்கிட்டு இருக்காங்க...'' என்றாள்.''அப்ப... இந்த வருஷமும் குடிநீருக்கு திண்டாட்டம் வருமாப்பா...'' எனக் கேட்ட சித்ராவிடம், ''அப்படித்தான் தோணுது... குடிநீர் வடிகால் வாரியத்துக்காரங்க பார்த்துக்குவாங்கன்னு மாநகராட்சி அதிகாரிங்க அக்கறை காட்டாம இருக்காங்க. நம்மூர் மக்களுக்குத்தான் பாதிப்பு வரும்னு புரிஞ்சுக்காம 'கிளப்'புல தாகம் தணிச்சிக்கிட்டு இருக்காங்க,'' என கொந்தளித்தாள் மித்ரா.''கரன்சி கொட்டுற வேலையா இருந்தா, கார்ப்பரேஷன்காரங்க மெனக்கெட்டு வேலை பார்ப்பாங்க. இது, வில்லங்கமான வேலையாச்சே. அதனால, தள்ளி விட்டுருப்பாங்க,'' என்றாள் சித்ரா.''தண்ணீர் பஞ்சம் வந்து, மக்கள் ரோட்டுக்கு வந்தா, இவுங்க தானே, சமாளிக்கணும். மே மாசம் உள்ளாட்சி தேர்தல் வரும்னு பேசிக்கிறாங்க. நடத்துனாங்கன்னா ஏகப்பட்ட சிக்கலை ஆளுங்கட்சிக்காரங்க சந்திப்பாங்க,'' என்றாள் மித்ரா.''அவுங்களுக்கென்ன... கரன்சிய கொட்டி, ஓட்டுகளை அள்ளிடலாம்னு கணக்குப் போட்டிருப்பாங்க...'' என்ற சித்ராவிடம், ''ஆனா... நெலைமை அப்படி இல்லீக்கா... கோயமுத்துார்ல புதுசா வச்சிருக்கிற ஜெ., சிலைக்கு மாலை அணிவிக்கிற நிகழ்ச்சிக்கு கொஞ்ச பேரு தான் வந்திருந்தாங்க. மாநகர் மாவட்ட செயலாளரே வரலைங்க. ஆனா, எதிர் கோஷ்டிக்காரங்க மேட்டுப்பாளையத்துல விழா நடத்தி இருக்காங்க. ஏகப்பட்ட கூட்டமாம். எப்பவும் தொண்டர்கள் எங்க பக்கம்தான்னு மார் தட்டிக்கிறாங்க. கோயமுத்துார் சிட்டிக்குள்ள எந்த விழாவும் நடத்துறதில்ல எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு,'' என்றாள் மித்ரா.''நீ எப்பவுமே அப்படித்தான் எல்லாத்தையும் சந்தேகப்படுவே ஆளுங்கட்சிக்காரரு தலைவரா இருக்கற சொசைட்டில, தி.மு.க., புள்ளி கல்லா நிரப்புறாராமே,'' என்றாள் சித்ரா.''நானும் கேள்விப்பட்டேன். 140 ரேஷன் கடைக, கூட்டுறவு சொசைட்டி கண்ட்ரோல்ல இருக்கு. இதோட, தலைமை அலுவலகம் தெலுங்குபாளையத்துல இருக்கு. கேஷியரா இருக்கறவரு தி.மு.க,,வை சேர்ந்தவரு. ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கியில வரவு வைக்கணும்னு, கூட்டுறவு துறை உத்தரவு போட்டிருக்கு. இங்க மட்டும், கையில தான் கொடுக்குறாங்க. அதுவும், 200 ரூபாயை பிடிச்சிட்டு கொடுக்குறாரு. மாசத்துக்கு, 28 ஆயிரம் ரூபாயை குறுக்கு வழியில சம்பாதிக்கிறாரு. இதுமட்டுமா... ரேஷன் கடை வருமானத்தை தெனமும் இங்க தான் கட்டணும். 10 ரூபா கூடுதலா கப்பம் கட்டணும்,'' என, மித்ரா அடுக்கிக் கொண்டே சென்றபோது, குறுக்கிட்ட சித்ரா, ''ஒரு டீ குடிக்கிற காசு... இதையெல்லாம் குத்தமா சொல்றீயே,'' என, வக்காலத்து வாங்கினாள்.''என்னக்கா இப்படிச் சொல்லிட்டீங்க. 140 பேரு வேலை பார்க்குறாங்க. ஒரு நாளைக்கு, 1,400 ரூபா... மாசத்துக்கு எவ்வளவு வரும். வருஷத்துக்கு எவ்வளவு வரும்னு, கணக்குப் போட்டுப் பாருங்க, பல 'ல'கரம் சம்பாதிக்கிறாரு. டீ காசுன்னு சொல்லி, 'அசால்ட்'டா விட முடியுமாக்கா,'' என, கொதித்தாள் மித்ரா.அவளை, எலுமிச்சை ஜூஸ் கொடுத்து, ஆசுவாசப்படுத்தினாள் சித்ரா.ஜூசை குடித்து முடித்ததும், ''நம்மூரு கலெக்டரும் இப்படித்தான்கா, ஜூஸ் கொடுத்து உபசரிச்சிருக்காரு,'' என்றாள் மித்ரா.''அவரைப் பார்க்க தெனமும் ஏகப்பட்ட வி.ஐ.பி., வரத்தான் செய்வாங்க. இதெல்லாம் பெரிய விஷயமா,'' என்ற சித்ராவிடம், ''அப்படி இல்லக்கா, நம்ம மாவட்டத்துல நல்லா படிக்கிற, 150 ஏழை குழந்தைகள, சுற்றுலாவுக்கு அழைச்சிட்டுப் போக ஏற்பாடு செஞ்சிருக்காங்க. பயணத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைக்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. வந்திருந்த பிள்ளைங்கள்ட்ட இயல்பா பேசிக்கிட்டு இருந்த கலெக்டர், எங்க போயி சுத்திப் பார்க்க ஆசைப்படுறீங்கன்னு கேட்டாரு. அதுக்கு... கலெக்டரய்யா வீட்டை சுத்திப்பார்க்கணும்னு குழந்தைங்க சொன்னதும், ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டாரு. நெலமைய சமாளிச்சு, வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. எல்லா இடத்தையும் சுத்திக்காண்பிச்சு, எலுமிச்சை ஜூஸ் கொடுத்து, உபசரிச்சிருக்காருக்கா,'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி, ஏகப்பட்ட விருது வாங்கி, ஆபீசுல அடுக்கி வச்சிருக்கிற அதிகாரி, இன்னமும் கலெக்டர் கனவுலதான் சுத்திக்கிட்டு இருக்காரா,'' என, வம்புக்கு இழுத்தாள் சித்ரா.''இரண்டாவது 'லிஸ்ட்' வெளியானப்ப, ரொம்ப ஆர்வமா, எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாரு... நம்மூருக்கு யாரெல்லாம் வர்றதுக்கு ஆசைப்பட்டாங்களோ. அவுங்களுக்கு 'போஸ்டிங்' போட்டுட்டாங்க. அதனால, நம்ம பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லைன்னு, ஜாலியா இருக்காரு. இருந்தாலும், கலெக்டர் மாநாடு முடிஞ்சதும், இன்னொரு 'லிஸ்ட்' வெளியாகும்னு சொல்றாங்க... கலெக்டர் பதவி கெடைக்கணும்; அதுவும் 'பசை'யுள்ள இடமா இருக்கணும்னு விரும்புறாரு. அதனால, ஏகப்பட்ட 'லாபி' செஞ்சிக்கிட்டு இருக்காரு. கலெக்டர் ஆகறது தப்பில்ல; ஊருக்கு நல்லது செஞ்சா சரி,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஸ்கீம்ல ஏகப்பட்ட ஊழல், முறைகேடு நடக்குதுன்னு கவர்னர்ட்ட புகார் வாசிச்சாங்களாமே,'' என, கொக்கியை போட்டாள் சித்ரா.''ஆமாக்கா... சூலுார் ஒன்றியத்துல, கரவளி மாதப்பூர்ன்னு ஒரு ஊராட்சியில, 'டாய்லெட்' கட்டுனதுல முறைகேடு நடக்குதுன்னு, ரெண்டு பேரை 'சஸ்பெண்ட்' செஞ்சாங்க. ஆனா, மாவட்டம் முழுக்க தப்பு நடக்குதாம். மாநகராட்சி 'லிமிட்'டுக்குள்ள, பல கோடி ரூபாய சுருட்டுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''என்னப்பா... இப்படிச் சொல்ற. ஆயிரக்கணக்குல 'டாய்லெட்' கட்டிக் கொடுத்திருக்காங்க. இதுல போயி, ஊழல் முறைகேடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கியேப்பா,'' என்ற சித்ராவிடம், ''அக்கா... எங்க வீட்டுல, 'டாய்லெட்' இல்லைன்னு யாராவது விண்ணப்பம் கொடுத்தா, ஆய்வு செஞ்சு... அவுங்களோட வங்கி கணக்குல மானியத்தை வரவு வைக்கணும். 'டாய்லெட்' கட்டிட்டாங்களான்னு, ஆய்வு செஞ்சு போட்டோ எடுக்கணும். நம்ம கார்ப்பரேசன்ல, குறிப்பிட்ட ஒருத்தங்களோட வங்கி கணக்குல, பணம் 'கிரெடிட்' ஆகுது. பயனாளிகளுக்கு பணத்தை கொடுக்கறதில்ல. நாங்களே கட்டித் தர்றோம்னு சொல்லி, கடனுக்கு கட்டிக் கொடுக்குறாங்க. உயரதிகாரிங்களும் கண்டுக்கறதில்ல,'' என, கொட்டித் தீர்த்த, மித்ரா, ''யார் ஆட்சிக்கு வந்தாலும், வளைச்சுப் போட்டு, மணல் மாபியா கும்பல் தலைவரா சுத்திக்கிட்டு இருக்காரே... அவரு, ரஜினி புராணம் பாடுறாராமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''ஓ... அவரா... ரஜினிக்கு நெருக்கமாம். சென்னைக்கு அழைச்சுப் பேசியிருக்காரு... அதுல இருந்து, எந்தக் கூட்டத்துக்கு போனாலும், ரஜினிய பத்தி பேசுறாரு. ஆளுங்கட்சிக்காரங்க மட்டுமில்ல, தி.மு.க.,காரங்களும் அதிர்ச்சியாகி இருக்காங்க... 'சிஸ்டம்' சரியில்லைன்னு சொல்ற தலைவரு, மணல் மாபியா கும்பல் வலையில சிக்கியிருக்காரேன்னு, தொண்டர்கள் புலம்பிக்கிட்டுக் இருக்காங்க,'' என, புட்டு புட்டு வைத்தாள் சித்ரா.''யார் ஆட்சிக்கு வந்தாலும், வளைக்கிறதுதானே, அவரோட வேலை. ரஜினி மயங்குவாரான்னு பார்ப்போம்,'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி, குருடம்பாளையத்துல ஒருத்தரு, பதவிக்கு ஆசைப்பட்டு, வீடு வீடா போயி, லட்டு கொடுக்குறாராமே,'' என, இழுத்தாள் சித்ரா, ''ஆமாக்கா... துணை தலைவரா இருந்தவரு, மறுபடியும் ஜெயிக்கணும்ங்கிறதுக்காக, வீடு வீடா போயி, காலண்டரும், ஆளுக்கொரு லட்டும் கொடுக்குறாரு...'' என்றாள் மித்ரா.''இதுக்கெல்லாம் நம்ம மக்கள் மசிவாங்களா... என்ன,'' என, எதிர் கேள்வி கேட்ட சித்ரா, ''நேர்காணலுக்கு போயிருந்த அன்னுார்க்காரங்க, செயல் தலைவர் முன்னால, பொங்கிட்டாங்களாமே...'' என, துருவினாள்.''ஆமாக்கா... ஒன்றிய செயலாளரா இருக்கற ஆனந்தமானவருக்கு எதிரா, புகார்கள அடுக்கி இருக்காங்க. நாங்க சொல்றத விசாரிங்க. தப்பா இருந்தா எங்கள கட்சிய விட்டு துாக்குங்கன்னு சொல்லி இருக்காங்க. கரன்சி விளையாட்டு விளையாடுற ஒன்றியமானவர் மேல, நடவடிக்கை எடுப்பாங்களான்னு தெரியல,'' என்றாள் மித்ரா.''நடவடிக்கைன்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. நடவடிக்கைங்கற பேர்ல, ஒரு அதிகாரி, காசு பார்க்குறாராமே,'' என்றாள் சித்ரா.''அதுவா... 'டாஸ்மாக்' நிர்வாகத்துல, 'டெபுடி' பேரை வச்சிருக்கிற அதிகாரி, தெற்கை கவனிச்சிக்குறாரு. சரக்குகளுக்கு கூடுதலா பணம் வசூலிக்கிறீங்கன்னு சொல்லி, கடைக்காரங்கள மிரட்டுறாரு. 'டிரான்ஸ்பர்' போடாம இருக்கணும்னா ஒரு தொகை, 'டிரான்ஸ்பர்' போடுற இடம், 'கரன்சி' கொட்டுற ஏரியாவா இருந்தா, அதுக்கு ஒரு தொகைன்னு, 'ரேட்' நிர்ணயிச்சு, வசூலிக்கிறாரு. இதுல, கொடுமை என்னான்னா, எவ்ளோ 'ரேட்' கேட்டாலும், கொடுக்கறதுக்கு தயாரா இருக்காங்க,'' என்றாள் மித்ரா.''அப்ப... எவ்ளோ பணத்தை சுரண்டுறாங்கன்னு புரிஞ்சிக்கோ,'' என்ற சித்ரா, ''வி.சி.,க்கு ஜாமின் கெடைச்சிருச்சா?'' என, அக்கறையா விசாரிச்சாள்.''இல்லக்கா... இன்னமும் 'கம்பி' தான் எண்ணிக்கிட்டு இருக்காரு. முக்கியப் புள்ளிக பலரும் சிக்குவாங்க. அதுனால, வெளியே விடுறது ரொம்ப கஷ்டம். இப்ப... 'தங்க காசு' ஆடியோவ பத்திதான் பரபரப்பா பேசிக்கிட்டு இருக்காங்க. 'நான் அவனில்லை' என்கிற பாணியில, துறை தலைவர் ஒருத்தரு, விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்காரு. பாரதியார் பல்கலை முழுக்க, இதைப்பத்தி பேசி, சிங்காரமா சிரிச்சுக்கிட்டு இருக்காங்க. இவர் மேல நடவடிக்கை எடுப்பாங்களா... அல்லது, ஏகப்பட்ட ரகசியங்களை தெரிஞ்சவருன்னு, அமுக்கிடுவாங்களான்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.''பதிவாளர் பதவியை கைப்பத்துறதுக்கும் ஏகப்பட்ட போட்டி இருக்குதாமே,'' என்ற சித்ராவிடம், ''ஆமாக்கா... கம்ப்யூட்டர் துறை பேராசிரியையிடம், 60 'ல'கரம் வரைக்கு, 'மாஜி' பேரம் பேசியிருந்த தகவல் கசிஞ்சிருக்கு. அவரையே நியமிக்க, 'சிண்டிகேட்' மெம்பரா இருந்த சிலர் முயற்சி செய்றாங்க. கம்ப்யூட்டர் கொள்முதல்ல ஊழல் செஞ்சவர்ங்கிறதுனால, இவர நியமிக்கக் கூடாதுன்னு, பலரும் கடவுளை வேண்டிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.''இப்ப, கல்வித்துறையில, கறை படிஞ்சு போச்சுன்னு சொல்லலாம்; அந்தளவுக்கு படுமோசமா நடந்துக்கிறாங்க,'' என ஆவேசப்பட்டாள் சித்ரா.''எந்த துறையிலதான் இல்ல... எல்லா துறையும் மோசமாத்தான் இருக்கு...'' என்ற மித்ராவிடம், ''இருந்தாலும், தொடக்க கல்வித்துறையில இருக்கிற, முத்தான அதிகாரி, 'விசிட்'ங்கிற பேருல, 'பிளே ஸ்கூலுக்கு' போயி, கரன்சி வாங்கி, பையை நிரப்பிட்டாரு. இப்ப, அரசு உத்தரவுன்னு சொல்லி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்புறதுனால, ஏகப்பட்ட புகைச்சல் ஓடிக்கிட்டு இருக்கு,'' என, சொல்லிக் கொண்டிருந்தபோது, 'ஹாலிங் பெல்' ஒலித்தது.எட்டிப்பார்த்தபோது, வீட்டுக்கு வெளியே, முத்து முத்தாக பேசக்கூடிய பாலு என்கிற நண்பர் நின்று கொண்டிருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X