மவுனம் எனும் மொழி| Dinamalar

மவுனம் எனும் மொழி

Added : மார் 01, 2018

'மோனம் கைவந்தோர்க்கு முத்தியும் கைகூடும்மோனம் கைவந்தோர்க்கு சித்தியும் முன்நிற்கும்மோனம் கைவந்து ஊமையாம் மொழி முற்றும்காண்மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே'ஆன்மா லயப்படுவதுஆலயத்தில். மனம் லயப்படுவது மவுனத்தில். வயப்படும்மவுனத்தால் அனைத்து சித்தியும் கைகூடும் என திருமந்திரம் கூறுகிறது. எண்ணத்தை பரிமாறிக் கொள்ள பயன்படும் சாதனமே மொழி எனப்படும். எண்ணத்தை பரிமாறிக் கொள்ள ஒலி மட்டுமே தேவையன்று. அசைவாலும், குறியீட்டாலும் வெளிப்படுத்தலாம். மொழிக்கு ஆற்றல், அதை பயன்படுத்தும் முறையில் உள்ளது. கருத்துக்களையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்த மொழி வேண்டும் என்றாலும் காலத்தையும்,எண்ணத்தையும் அறிந்து சில இடங்களில் மொழியை தவிர்த்து மவுனமாக இருந்தால் அது வளமான பயனைத் தரும்.
மூன்று வகை : மவுனம் மூன்று வகை. முதல் வகை மவுனத்தில் உதடுகள் மட்டுமே மவுனித்து இருக்கும். ஆனால் அங்க அசைவுகள் இருக்கும்.மனம் சிந்திக்கும். இரண்டாம் வகையில் உதடும், உடலும் அமைதியாக இருக்கும். மனம் அசை போடும். மூன்றாம் வகையில் உதடு, உடல், மனம் மூன்றும் நிலைப்படுத்தப்படும். முதல் இரு வகைகளை மனிதர்களால் ஒரளவு செயல்படுத்த முடியும். மூன்றாவது வகை மவுனம் ஞானிகளுக்கே சாத்தியமாகும்.வாழ்வில் மவுனம் என்பதுமுக்கிய பண்பாகும். பொறுமை எனும் பண்பிருந்தால் அங்கே மவுனம் உருவாகும். உண்ணும் உணவு உடலுக்கு சக்தியை தரும். மவுனம் உள்ளத்துக்கு உறுதியை தரும். பண்பட்ட உள்ளத்தில்நிதானம் தோன்றும். நிதானத்தால் மவுனம் உருவாகும். மவுனம் என்பது தன்னையும், மற்றவர்களையும் புரிந்து கொள்ள பயன்படும் பண்பாடு. அதிகம் பேசினால் ஆணவம், பேசாமல் இருந்தால் அறியாதவன், அதிகம் செலவழித்தால் ஏமாளி, சிக்கனமாக இருந்தால் கஞ்சன், விவாதம் பண்ணினால் கோபக்காரன். சமரசமாய் சென்றால் பிழைக்கத்தெரியாதவன், செயலில் கடுமையாக இருந்தால் பொல்லாதவன், பொறுமையை கடைப்பிடித்தால் வாழத்தெரியாதவன் என மனிதர்களை பற்றி முரண்பாடான கருத்துக்கள் சில நேரங்களில் உருவாகும். இரட்டை நாக்கால் பேசப்படும் அத்தருணங் களில் மவுனம் மட்டுமே அரணாக துணை நிற்கும்.ரமண மகரிஷி தன் சீடர்களுக்கு மவுனத்தை பற்றி ஒரு கதைகூறினார். ஒரு சீடர் தன் குருவின் பண்பினில் மகிழ்ந்து அவரை பாராட்டுவதற்கு பரணி பாட முனைந்தார். மற்ற சீடர்கள், 'பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை கொன்றவரை பாராட்டும் பாடல். அது துறவிகளுக்கு பாடுவதற்கு ஏற்றதல்ல,' என்றனர். இதற்கு குருவிடமே சென்று தீர்வு காண்போம் என முடிவு செய்தனர். குருவிடம் அவர்கள்சந்தேகத்தை எழுப்பினர். குரு எந்த பதிலும் கூறாது பல நாட்கள் மவுனமாக இருந்தார். சீடர்களும் எதற்காக வந்தோம் என மறந்து விட்டனர். மனதை அடக்க பயிற்சியில் ஈடுபட்டனர். ஆயிரம் யானைகளை கொல்வதை விட மனமெனும் காட்டு யானையை அடக்குவதில் தான் உண்மையா ஆற்றல் உள்ளதை புரிந்துகொண்டனர். குருவுக்கு பரணி பாடுவது மிகப்பொருத்தமே என உணர்ந்தனர். பேச்சுகுறைந்துமவுனம் தீவிரப்படுத்தப்படும் போது, ஆற்றலும், உண்மயைான அறிவும் வெளிப்படும்.மவுனத்தால் மட்டுமே இனிய உறவுஇல்லத்தில் வெளிச்சம் இல்லை எனில் எத்தனை விலைஉயர்ந்த பொருட்களாக இருந்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதைப் போன்று மனிதனிடம் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும், மவுனத்தை சரியான இடத்தில் பயன்படுத்தவில்லை எனில் அனைத்து பண்புகளும் பயனற்று போய் விடும். வாழ்வில் பெரும் பயனை அடைய விரும்புகிறவர்கள், பயனற்றவற்றை பேச மாட்டார்கள் என திருக்குறள் கூறுகிறது.'அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்'அடக்கமின்மையால் அதிகம் பேசுபவர்கள் அழிவுப்பாதையை தேடுகிறார்கள். மவுனம் என்பது வாழ்வில் நெறிப்படுத்தப்பட்ட மவுன மொழி. கூடி வாழ்ந்த வாழ்க்கையில் உறவு துணையாகவும்,பிணைப்பாகவும் இருந்தது. விட்டு கொடுக்கும் மனம், பகிர்ந்து கொடுக்கும் எண்ணம், பாராட்டும் உள்ளம், பொருட்பயனை மட்டும் கருதாது அன்போடு உறவுகளுடன் இணைந்து வாழும் குணம் என பல பண்புகள் குழந்தைகளுக்கு இயல்பாகவே அவர்களுடன் இணைந்து வளர்ந்தது. இன்றைய சூழலில் ஆண்கள், பெண்கள் இருவரும் பணிக்கு செல்வதால் பணி நிமித்தத்தின் காரணமாக வெவ்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். அதனால் சுற்றத்தாரோடு இணைந்து வாழ வழியின்றி போய் விட்டது. குழந்தைகளும், சரியான வழிகாட்டுதல் இன்றி வளர்கிறர்கள். சொற்களின் முக்கியத்துவம் அறியாமல் வளர்க்கப்படுவதால் சமயத்தில் பயனற்ற சொற்களை பயன்படுத்துவதால், உறவுகள் முறிந்து விடுகிறது. வாழ்வில் இனிய உறவு மலர மனப்பயிற்சியுடன், தேவையான நேரத்தில் மவுனத்தை கடைபிடிக்க கற்றுத்தர வேண்டும். இல்லத்தில் இல்லல்கள் உருவாகும் போது குரலை உயர்த்தி பேசினால் அனைவரும் அடங்கிவிடுவார்கள் என நினைப்பது தவறு. கோபமான சொற்களை விட மவுனமே மற்றவர்களை அதிகம் பாதிக்கும். மவுனம் காத்தால் தோற்றவர் என்பதல்ல. பிறரை தோற்கடிக்க போகிறார் எனப்பொருள். மவுனத்தால் உராய்வின்றி உறவுகள் பலப்படும். தேவையான மவுனம் உறவில் தோன்றும் வலியையும், வேதனையையும் மாற்றும். உறவு மலரும்.
ஒரு சொல் வெல்லும் : ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்பது பெரியவர்களின் வாக்கு. சொல் என்பது வாழ்வை வழிப்படுத்த கூடியது. சர்ச்சில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆற்றிய சொற்பொழிவு இங்கிலாந்துக்கு வெற்றியை தேடித்தந்தது. ஆனால் ஹிட்லரோ மற்றவர்கள் சொல்லுக்கு செவி மடுக்காது காலத்தை கருதாது, குளிர்காலத்தில் ரஷ்யா மீது போர் தொடுத்து தோல்வியுற்றார். சாதனையாளர்கள், மற்றவர்கள் பேசுவதற்கு அனுமதியளித்து மவுனமாக இருந்து சோதனையை யும், சாதனையாக மாற்றிக் கொள்வார்கள்.மனம் ஒரு குரங்கு என்பர். மனதை மவுனமாக்கி அதை மகாசக்தியாக மாற்றுவது சுலபமல்ல. அதற்கு பயிற்சியும் முயற்சியும் தேவை. அடங்காத மனம் கோபத்தின் போது கடுமையான சொற்களை வெளிப்படுத்தும். அதனால் குடும்பத்தில் விரிசல்கள்தோன்றும். உறவுகள் உதிர்ந்து விடும். ஆனந்தத்தையும், துக்கத்தையும்பல நேரங்களில் மவுனத்தின் மூலம் வெளிப்படுத்துவது போல, ஆற்றாமையையும், கோபத்தையும் மவுனத்தால் வெளிப்படுத்தலாம். வாழ்க்கை என்பது அனைவருக்குமே ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் போராட்டமாக இருக்கும். அப்போராட்டத்தையும் மவுனமாக ஏற்று விடை காணவேண்டும். போராட்டம் என்பது நம்மை வளர்க்கவும், பலப்படுத்தவும் உதவும்.
சும்மா இருந்தால் சுகம் : எல்லாம் இருந்தும், எல்லாம் தெரிந்தும் சிலையாய் இருக்கும் இறைவனின் மவுனம் தான் அனைவருக்கும் ஆறுதல் தரும் மொழியாக உருவெடுக்கிறது. இறைவனின் மவுன மொழிக்குள் அத்தனையும் அடக்கி விடுகிறது.விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லைவிதைத்த தீய சொற்கள் என்றும் உறங்காதுஎனவே கோபத்தினால்உருவாகும் சொற்களை தவிர்ப்போம்.மவுனம் காப்போம். மவுனமே மனபலம். அதுவே மனிதனின் பலம்.
-முனைவர் ச.சுடர்க்கொடிகல்வியாளர், காரைக்குடி94433 63865

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X