வயலில் விதைப்பதற்கு விதை நெல்லை, விவசாயிஎங்கு தேடுவான்... இறைச்சி விற்கும் கடையிலா? தேர்வுக்கு விடைகளை மாணவன் எங்கு தேடுவான்... பழைய இரும்புக் கடையிலா?
பக்தர்கள், கோவில்களில் தானே தெய்வங்களை தேடுவர்... தொழிற்சாலைகளில் இல்லையே! தலைமையை தேடுவதில் இப்படி தான் தடுமாறிநிற்கிறான் தமிழன்.
புழு கூட தன் இரையை தானே தீர்மானிக்கிறது; ஆனால் இவர்கள், தலைமையை தீர்மானிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.ஆன்மிகம், பண்பாடு, பகுத்தறிவு, கலாசாரம் என, அனைத்திலும்
தமிழகம் சிறக்கிறது.ஆனால், சமீப காலமாக,இங்கு நடக்கும், சினிமா கவர்ச்சி அரசியலை பார்த்து, உலகமே சிரிக்கிறது. திரைப்படத் தலைமை உருப்பட்ட வரலாறு, இனி இங்கு இருக்காது.
ஞானிகள், அறிஞர்கள், இதழாளர்கள், கல்வி ஞானம் பெற்றவர்கள், ஆன்மிகப் பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், நேர்மையான அதிகாரிகள் என, எத்தனையோ பேர், முதல்வர் பதவிக்கு தகுதியாக இங்கு இருக்கின்றனர்.இவர்களிடம் இல்லாத ஞானமும், அறிவும், கமல், ரஜனியிடமும் இருக்கிறதா? அவர்களை நாடிச் செல்லும் கூட்டம், தேர்வு எழுதும் மாணவன், விடைகளை பழைய இரும்புக் கடையில் தேடுவது போல இருக்கிறது.
தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை, மாவட்டங்கள், நீர் நிலைகள்பற்றிய விபரங்கள், கமல்,ரஜினிக்கு தெரிந்திருக்குமா என்பதுசந்தேகமே!நடிகரை பார்க்க கூட்டம் கூடுகிறது என்பதற்காக, முதல்வர் பதவிக்கான தகுதி தமக்கு இருப்பதாக, நடிகர்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர். திரைப்படத் துறையில் அவர்களுக்கு அடித்தளம் இருக்கிறது... அரசியலில் இருக்கிறதா?
மிஞ்சிப்போனால், 'ஊழலை ஒழிப்பேன்; லஞ்சத்தை ஒழிப்பேன்; நீர் நிலைகளை துார் வாருவேன்' என்பர். இவற்றை தான், பல தனியார் தொண்டு நிறுவனங்கள், ஏற்கனவே சிறப்பாக செய்து வருகின்றனவே!சூப்பர் நடிகர்களாக இவர்கள் வளர்ந்த காலங்களில், தமிழகம் எத்தனை பிரச்னைகளில் சிக்கி, சின்னாபின்னாமானது...அப்போது, இவர்கள், அந்த பிரச்னைகளுக்காக,5 நிமிடங்களாவதுசெலவிட்டிருப்பரா?
சகாயம் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி,நேர்மையாக இருப்பதால்,25 ஆண்டுகளில், 24 முறை இட மாற்றம் செய்யப்பட்டு, பந்தாடப்பட்டாரே... அவரை விட, முதல்வர் நாற்காலி கனவு நடிகர்கள் எந்த விதத்தில் உயர்த்தி?தெருவுக்கு தெரு, அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குடும்பத்தலைவன் மது அருந்தியதால், லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நடுரோட்டுக்கு வந்து
உள்ளன.அவர்களை காப்பாற்றவும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், மொபைல் போன் கோபுரத்தில் ஏறி, போராட்டம் நடத்தி, உயிரை மாய்த்தாரே, சசி பெருமாள், அவரை விட இந்த நடிகர்கள் எந்த விதத்தில் உயர்த்தி?
சமூக சேவை, பொது சேவை, ஈவு, இரக்கம் என்பதெல்லாம் இயல்பாக வர வேண்டும். அடுத்தவர் எழுதிக்கொடுத்த வசனத்தை பேசினால் வந்து விடுமா...கரும்பை திரும்பத்திரும்ப இயந்திரத்தில் விட்டு பிழிவது போல, தயாரிப்பாளர்களிடமிருந்தும், பொதுமக்களிடம் இருந்தும், பணத்தையும்,புகழையும் பிழிந்துஎடுத்து விடுகின்றனர், இந்த நடிகர்கள்.
இறுதியாக குப்பைக்குபோகும் சக்கையிலிருந்தும் முதல்வர் பதவி கிடைக்குமா என, முயற்சிக்கின்றனர்.எம்.ஜி.ஆர்., காலம் வேறு; கமல், ரஜினி காலம் வேறு. எம்.ஜி.ஆரின் புகழுக்கு, பல அரசியல் தலைவர்களின் தமிழ் அறிவும், பட்டினியால் வாடிய பல கவிஞர்களின் பாடல்களும், திறமையானகலைஞர்களின் இசையும் தான் காரணம்.
மற்ற அரசியல் கட்சிகளுக்கு இருப்பது போன்ற கட்டமைப்பு, ரஜினி, கமல் இயக்கங்களுக்கு இல்லை. இருவருக்கும் சினிமாவில் நல்ல அனுபவம் உண்டு; அரசியலில் இல்லை. கட்சி வேறு, ரசிகர் மன்றம் வேறு. இந்த வித்தியாசத்தை அவர்கள் புரிந்து கொள்ள, ஒருதேர்தலே போதும்!
ரஜினியும், கமலும், 10 - 15 ஆண்டுகளுக்கு முன் துணிச்சலுடன் அரசியலில் இறங்கி இருந்தால், இப்போது அவர்கள் முதல்வர் கனவு காண்பதில் நியாயம் கொஞ்சம் இருக்கலாம்.
பட வாய்ப்புகள் குறைந்து, நரை, திரை முழுதும் விழுந்த பின், 'தமிழகத்தை காப்பாற்றப் போகிறேன்' என, இவர்கள் அறிவித்தால், நாம என்ன வெவரம் இல்லாதவரா?எம்.ஜி.ஆர்., தன் ரசிகர்களை நம்பி, கட்சி துவக்கவில்லை... ஏற்கனவே இருந்த, தி.மு.க.,வை தான், அ.தி.மு.க.,வாக மாற்றினார். அது போல, ரஜினியும், கமலும் எதை உடைத்து கட்சிதுவங்குகின்றனர்?
மற்ற கட்சிகளில், நகரம் முதல் கிராமம் வரை, கட்டமைப்பு இருக்கிறது; இவர்களிடம் இல்லை. ரசிகர்களின் பாக்கெட் பணத்தை ஏற்கனவே பறித்தது போதாது என, மீண்டும் பறிக்க, அரசியலில் குதித்துள்ளனர்.இப்போதைய பிரபலமான சில அரசியல் தலைவர்கள், தங்கள் சொந்த பணத்தில், கட்சியை, தொண்டர்களை வளர்த்தனர்;இவர்களால் இயலுமா?
கமலும், ரஜினியும் காலம் கடந்து அரசியலுக்கு வந்துள்ளது, அவர்கள் உடல் நலத்திற்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல. காலம் தாழ்ந்த இவர்களது வருகை, அரசியலில் தெளிவற்ற நிலையையும், குழப்பங்களையும் உருவாக்கும்.இன்னொரு உண்மையையும் இங்கு வெளிப்படையாக கூறியே ஆக வேண்டும்... அதாவது, இவர்களது ரசிகர்கள், குறிப்பாக, ரஜினி ரசிகர்கள், ஆரம்பத்திலிருந்து தெளிவாகவே இருந்தனர்;ரஜினியை மிகவும் நம்பினர்.
தெளிவான, பக்குவப்பட்ட மன நிலையில்,ரஜினி ரசிகர்கள், தேர்வு எழுத தயாராகும் போதெல்லாம், தேர்வை ரஜினி தள்ளிக்கொண்டே வந்தார்; பொருளாதாரத்தில் ஜெயித்துக் கொண்டே வந்தார்.
பாவம் ரசிகர்கள்...
ஜல்லிக்கட்டு காளைகளாக இருந்தவர்களைஅடிமாடுகளாக ஆக்கியது போல, அரசியல் மாற்றத்தைஏற்படுத்த துடித்த ஏழை ரசிகர்களை, ஏமாளிகளாக ரஜினி ஆக்கி விட்டார்.ரஜினியிடம் ரசிகர்கள், பணத்தை எதிர்பார்க்கவில்லை; பதவியை எதிர்பார்க்கவில்லை; நடிப்பைமட்டுமே எதிர்பார்த்தனர்.அவருக்கு இருக்கும் புகழை வைத்து, நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்றேசிந்தித்தனர்.
ஆனால், ரஜினியின்மன நிலையோ துறவு நிலை, தனித்தன்மை,ஆன்மிகம், அமைதி என்றே இருந்து வந்தது.ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம் உள்ள ரஜினி,'ஹரே ராமா; ஹரே கிருஷ்ணா' அல்லது ஈஷா மையம் போன்ற ஏதாவதுஒன்றைத் துவங்கியிருக்கலாம்; ரசிகர்களை ஆன்மிக வழிநடத்தி இருக்கலாம்.கங்கை நதிக்கரைக்குப் பயணப்பட்ட ரஜினியை, கூவம் நதிக்கரையில்
சேர்ப்பது எவ்வளவுமுரண்பாடானது!
கட்சி துவங்குவதற்கு, களப்பணி ஆற்றியஅனுபவங்கள் தேவை.அராஜகத்தில் ஈடுபட்டால், காவல் துறையை, திட்டங்களை சரியாகசெயல்படுத்தாத,எம்.எல்.ஏ.,க்களை, லஞ்சம்
- ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை எதிர்த்து, களப்பணி ஆற்றிய அனுபவம், ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்கும் இருக்க வாய்ப்பில்லை.தமிழகத்தில் இயங்கி வரும் சிறு சிறு
இயக்கங்கள், இந்தப் பணிகளை தொடர்ந்து ஆற்றி வந்துள்ளன.திரைப்படத் துறையில் அனைத்து வகையான பலன்களையும் அனுபவித்து, மக்களுக்காக எந்த களப்பணியும் ஆற்றாமல், வயது முதிர்ந்த காலத்தில் அரசியலுக்கு வருவது, நாட்டுக்கும் நல்லதல்ல; இவர்கள் உடல் நலத்திற்கும் நல்லதல்ல.
ரஜினி முதல்வராக வேண்டும் என, அவரது ரசிகர்கள் கனவு கண்டிருக்கலாம். ஆனால், அவருக்கு அரசியலில் வர வேண்டும்என்ற பேரார்வம்,உண்மையிலேயே இல்லைஎன்பது, அவரது
மனசாட்சிக்கு தெரியும்.ஒருசில நேரங்களில், ஒருசில சினிமாவில், தப்பித்தவறி அவர் பேசிய
சில வசனங்களை, ஊடகங்கள், 'எம்பாமிங்' செய்து வைத்து, அவருக்கு வலை போட்டு, அரசியலுக்கு இழுத்து வந்து விட்டன.
எனவே, கமலும், ரஜினி யும், தங்களை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால்,இருவரும் சேர்ந்து ஒரு காரியம் செய்யுங்கள்...தமிழகத்தில் திறமையான, நேர்மையான, அனைத்து ஊடகங்களிலும் நற்பெயர், நம்பிக்கை பெற்ற ஒருவரை அடையாளம் காட்டி, அவரை முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்க செய்யுங்கள்.இது தான், இன்றைய தமிழகத்திற்கு தேவை. இதை, ரஜினியும், கமலும் செய்வதால், தமிழகத்தை காத்த பெருமை இவர்களுக்கு சேரும்.
அரசியல் பயணம் என்பது, இருவருக்கும் தேவையற்ற சிக்கல்களை, தோல்விகளை இடர்ப்பாடு
களை உருவாக்கும். தேர்தல்களத்தில், ஓட்டு போடுவதற்கே காலில் விழுந்துகெஞ்ச வேண்டியிருக்கிறதுஅல்லது கையூட்டு தர வேண்டியிருக்கிறது.மேலும், அரசியலில் தேர்ந்த, பிற கட்சிக்காரர்களின் சூழ்ச்சிகளைபெருமளவில் சந்திக்கநேரிடும். எல்லாகட்சிகளுடன் கூட்டணி
வைக்கவும் இயலாது. ஏனெனில், அவர்கள்எல்லாம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
இங்கு, இன்னொரு உண்மையை போட்டு உடைத்தே தான் ஆக வேண்டும்... ரஜினி
கண்டக்டர் ஆக இருந்த காலம் வேறு. இன்று அவர்,சொகுசாக வாழ்பவர்.
ஷூட்டிங், ஓய்வு, ஆன்மிகம், அமைதி, தியானம் என, ஹாயாக, ஆண்டுக்கு சில நுாறு கோடி ரூபாயை சம்பாதிப்பவரால், தினமும், நுாறு, இருநுாறுகட்சித் தொண்டர்களைசந்திக்க இயலுமா?
மேலும், வயது முதிர்வு, மருத்துவமனை சோதனைகள் போன்ற சிக்கல்களில் இருக்கும் இவர்களுக்கு, தொடர் அரசியல்பயணங்கள் ஒத்து வருமா?
இறுதியாக, கமலுக்கும்,ரஜினிக்கும் ஒருவேண்டுகோள்...பணம் கொடுத்தால் தான் நீங்கள் நடிப்பீர்கள்; 'கால்ஷீட்' கொடுப்பீர்கள். இப்போது அநேக மக்களும் அப்படி தான்! பணம் கொடுத்தால் தான் ஓட்டளிப்பர். மக்களை அப்படி ஆக்கி விட்டனர்.நீங்கள் ஒரு படத்திற்கு வாங்கும் பணம், 50 கோடி ரூபாய் என்றால், வாக்காளர்கள் ஓர் ஓட்டுக்கு, 6,000 ரூபாய் வாங்குவர்! தருவீர்களா... யோசித்து, அரசியலுக்கு வாருங்கள்!
இ - மெயில்:
kattumanathozhil@yahoo.co.in
சிந்துபாஸ்கர் ஆசிரியர்,
கட்டுமான தொழில், மாத இதழ்