ஆளுங்கட்சியின் 2 மாஜி டவுன் டாடிஆளுக்கொரு கட்சிக்கு போறாங்க ஓடி!| Dinamalar

ஆளுங்கட்சியின் 2 'மாஜி டவுன் டாடி'ஆளுக்கொரு கட்சிக்கு போறாங்க ஓடி!

Added : மார் 06, 2018
Share
ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில், சித்ராவும், மித்ராவும் ஆளுக்கொரு, 'ஓபோ' சைக்கிளை ஓட்டிக்கொண்டே சென்றனர். போக்குவரத்து நெரிசல் இல்லாத காலை நேரத்தில், அந்த சவாரி இனிமையாயிருந்தது.''நம்மூர்ல இந்த 'சைக்கிள்' திட்டம், 'சக்சஸ்' ஆகுமா மித்து?'' என்று கேட்டாள் சித்ரா.''நம்மூர்ல 'சக்சஸ்' ஆகலைன்னா வேற எங்க ஆகும்... 20 ஆயிரம் சைக்கிள் கொண்டு வரப்போறாங்களாம். ஆளுக்கொரு
 ஆளுங்கட்சியின் 2 'மாஜி டவுன் டாடி'ஆளுக்கொரு கட்சிக்கு போறாங்க ஓடி!

ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில், சித்ராவும், மித்ராவும் ஆளுக்கொரு, 'ஓபோ' சைக்கிளை ஓட்டிக்கொண்டே சென்றனர். போக்குவரத்து நெரிசல் இல்லாத காலை நேரத்தில், அந்த சவாரி இனிமையாயிருந்தது.
''நம்மூர்ல இந்த 'சைக்கிள்' திட்டம், 'சக்சஸ்' ஆகுமா மித்து?'' என்று கேட்டாள் சித்ரா.''நம்மூர்ல 'சக்சஸ்' ஆகலைன்னா வேற எங்க ஆகும்... 20 ஆயிரம் சைக்கிள் கொண்டு வரப்போறாங்களாம். ஆளுக்கொரு சைக்கிள்ல போனா, எவ்ளோ வண்டிங்க குறையும்?'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து... டிபி ரோட்டை ஆறு மாசத்துல மாடல் ரோடா மாத்தப்போறாங்க. இங்க தனியா 'சைக்கிள் டிராக்' வந்துடும்... அடுத்தடுத்து, டிவி சாமி ரோடு, என்எஸ்ஆர் ரோடு, ரேஸ்கோர்ஸ்ன்னு 6 இடங்கள்ல இந்த திட்டத்தை தொடங்கப் போறாங்க. அப்புறம்... குளங்களை இணைச்சும் நீர் வழிப்பாதையை ஒட்டியே 'சைக்கிள் டிராக்' போடப்போறாங்க... முதல்ல, திருச்சி ரோட்டுல 'சைக்கிள் டிராக்' வருது!'' என்றாள் சித்ரா.
''எதிர்காலத்துல, 'வீட்டுக்கு ஒரு சைக்கிள்' கொண்டு வரணும்கிறது தான் பிளானே... அப்பிடி வந்தா, பாதி 'டிராபிக்' குறஞ்சிடும்... அதுக்கு முன்னாடி, சிட்டிக்குள்ள சைக்கிள் ஓட்றவுங்களுக்கு, பாதுகாப்பு தர்றது மாதிரி, எல்லா முக்கியமான ரோட்டுலயும் 'சைக்கிள் டிராக்' அமைக்கணும். முக்கியமா, 'ரேஸ் டிரைவிங்' போறவுங்களைப் பிடிச்சு, தாறுமாறா 'பைன்' போடணும்!'' என்றாள் மித்ரா.
''சைக்கிள் திட்டத்தை மட்டும் வேகமா ஆரம்பிச்சிட்டாங்க... 'ஸ்மார்ட் சிட்டி'யில மத்த வேலையெல்லாம் எப்போ ஆரம்பிக்கப் போறாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.''எஸ்.பி.வி.,க்கு சீக்கிரமே கூடுதல் அதிகாரம் கொடுக்கப் போறாங்களாம்!'' என்று மித்ரா சொல்லும்போதே, குறுக்கே புகுந்த சித்ரா, ''ஏன்... இப்போ இருக்குற அதிகாரம் போதாதா?'' என்று வெடித்தாள்.
''அக்கா... 'எஸ்பிவி'ன்னா 'ஸ்பெஷல் பர்பஸ் வெய்க்கிள்'... அதாவது, 'ஸ்மார்ட் சிட்டி'க்காக துவங்குன கம்பெனி!'' என்று சிரித்தபடி தொடர்ந்தாள் மித்ரா...
''ஒவ்வொரு திட்டத்துக்கும், சென்னையில ஒப்புதல் வாங்குறதுல தான், பயங்கர 'டிலே' ஆகுது... அதனால, 'எஸ்பிவி'க்கு கூடுதல் அதிகாரம் கொடுக்குறது தொடர்பான 'பைல்', தலைமைச் செயலர் மேசையில இருக்காம்... சீக்கிரமே வந்துரும்கிறாங்க. இப்போ, சென்ட்ரல் கவர்ன்மென்ட் நேரடி கண்காணிப்பு தீவிரமாயிருக்குறதால, இந்த வருஷம் வேலை கொஞ்சம் வேகமாயிரும் போலிருக்கு!''
''புது கவுன்சில் வர்றதுக்குள்ள இந்த திட்டமெல்லாம் ஆரம்பிச்சா சரி... இல்லேன்னா, ஆளுக்கு ஆளு பங்கு கேக்க ஆரம்பிச்சிருவாங்க!'' என்றாள் சித்ரா.''கவுன்சில்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு... நம்மூர்ல இதுக்கு முன்னாடி இருந்த மாஜி 'டவுன் டாடி'கள் ரெண்டு பேருல ஒருத்தரு, தி.மு.க.,வுக்குப்போறாராம்; இன்னொருத்தரு, டிடிவி அணிக்குப் போறாராம்!'' என்றாள் மித்ரா.
''எல்லாம் அதிகாரப் போட்டி தான்... மேட்டுப்பாளையத்துல, சத்துணவு 'போஸ்ட்டிங்'குக்கு ஆள் எடுக்குறதுல, எம்.எல்.ஏ.,வுக்கும், அங்க இருக்குற எம்.பி.,க்கும் இடையில உரசலாம். ரெண்டு பேரும், 'நான் சொல்ற ஆளுக்கு தான் போஸ்ட்டிங் தரணும்'னு, மாவட்ட அதிகாரிக்கு 'பிரஷர்' கொடுத்திருக்காங்க... அவரு, கேக்க வேண்டிய இடத்துல கேட்ருக்காரு... அதுக்கு 'எம்.எல்.ஏ., சொல்ற ஆளுக்குப் போடுங்க'ன்னு உத்தரவு வந்திருச்சாம்!'' என்றாள் சித்ரா.''மாவட்ட அதிகாரியைப் பத்திச் சொன்னியே... அவரு... அவரோட பங்களாவுல இருக்குற அம்மன் கோவிலுக்கு போன ஞாயித்துக்கிழமை கும்பாபிஷேகம் பண்ணிருக்காரு தெரியுமா?'' என்று கேட்டாள் மித்ரா.
''கேள்விப்பட்டேன்... திருச்செந்துார்ல இருந்து அர்ச்சகர்களைக் கூப்பிட்டு வந்திருந்தாராமே... ஏற்கனவே, இந்த ஊருக்கு ரெண்டாவது தடவை 'போஸ்ட்டிங்' வாங்கிட்டு வந்தப்போ, 'இந்த முறையாவது பல வருஷத்துக்கு இருக்கணும்'னு, இதே கோவில்ல 'கெடா' வெட்டி, கறியும் சோறும் போட்டவராச்சே... இப்போ, இங்கேயே இருக்கணும்னு நினைக்கிறாரா, இதை விட நல்ல பதவியா வேணும்னு வேண்டிக்கிட்டாரா?'' என்று கேட்டாள் சித்ரா.''அது தெரியலை... ஆனா, இதே ஏரியாவுல இருக்குற 'இன்ஸ்' ஒருத்தரு, தன்னோட இடத்தைத் தக்க வச்சுக்கிறதுக்காக, சேலத்துல பிடிச்ச கஞ்சாவை, இங்க பிடிச்சதா கணக்கு காமிச்சிருக்காராம்!'' என்றாள் மித்ரா.
''யாரு... ஒளிமயமான காக்கிச்சட்டையா... அவரோட பேரு தான், ரெண்டு மூணு கட்டப்பஞ்சாயத்துல சிக்கி, கமிஷனர்ட்ட 'டோஸ்' வாங்குனாரே... அவரா?'' என்றாள் சித்ரா.''அவரே தான்... சேலத்துக்கு ஏதோ விசாரணைக்கு அவர் போனப்போ, ஒரு வண்டியில இருந்த நாலு பேரு, சண்டை போட்டுட்டு இருந்திருக்காங்க. இவர் நிறுத்தி விசாரிக்கப் போனதும், போலீஸ்னு பயந்து ஓடிட்டாங்க. அந்த வண்டியில தான், 200 கிலோ கஞ்சா இருந்திருக்கு. வேற எந்த ஊருக்கோ கடத்திட்டுப் போனதை, இங்க எடுத்துட்டு வந்து, பெரிய ஆபீசர்ட்ட பேரு வாங்கீட்டாராம்!'' என்றாள் மித்ரா.''எங்க பிடிச்சா என்ன... நம்ம ஊருல தான், காலேஜ் பசங்கள்ட்ட கஞ்சா புழக்கம் சர்வ சாதாரணமா இருக்கே!'' என்றாள் சித்ரா.
''அது சரி தான்... ஆனா, 'சிட்டிக்குள்ள இவ்ளோ கஞ்சா புழக்கம் இருக்குறதா அர்த்தமாயிருமே... இது தேவையா'ன்னு, மத்த 'இன்ஸ்'கள் எல்லாம் புலம்புறாங்க!'' என்ற மித்ரா,'' அக்கா... ரேஸ்கோர்ஸ்ல க்ரைம் பாக்குற 'இன்ஸ்', ஸ்டேஷனுக்கு 'கம்பிளைண்ட்' கொடுக்க வர்றவுங்களை தாறுமாறாப் பேசி, புகாரைக் கிழிச்சு வீசுறாராம்!'' என்றாள்.''தேனியில இருந்து, நம்மூரு ஜி.எச்.,க்கு வந்த டாக்டர் மேலயும் இதே 'கம்பிளைண்ட்'தான்... அட்டெனன்ஸ், லீவ் தர்ற அதிகாரத்தை அவர்ட்ட 'டீன்' கொடுத்திருக்காரு. அவரு... டாக்டர், நர்ஸ்கள் எல்லாரையும் ஏக வசனத்துல பேசுறாராம்... தேனியில 'கேத் லேப்' அமைச்சதுல நடந்த ஊழல்ல சிக்குனவராம்... 'இவரு எப்பிடி எங்களைக்கட்டுப்படுத்தலாம், அவரை மாத்துங்க'ன்னு, டாக்டர்கள் போர்க்கொடி துாக்கிருக்காங்க!'' என்றாள் சித்ரா.
''கார்ப்பரேஷன்ல இதே பொறுப்புல இருக்குற ஏ.சி., ஒருத்தரு, வயசை மாத்திப் போட்ட விவகாரத்துல, செகரட்டரியை முடிவு எடுக்கச் சொல்லி, கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. அவரை ஈரோடு கார்ப்பரேஷனுக்கு மாத்துறதுக்கு ஏற்பாடு நடக்குதாம்... ஆனா, டிரான்ஸ்பர் பண்ணுனா, மோசடி பண்ணுனது எப்பிடி சரியாகும்னு, அப்பீலுக்குப் போக ஒரு குரூப் தயாராயிருக்கு!'' என்றாள் மித்ரா.
''மித்து... சிட்டிக்குள்ள இருக்குற எல்லா சூதாட்ட கிளப்களையும் மூடிட்டாங்க... ஆனா, சரவணம்பட்டியில மட்டும், 'மயிலு' பேரைக் கொண்ட தி.மு.க.,காரர் ஒருத்தரு மட்டும், தைரியமா நடத்திட்டு இருக்காராம்!'' என்றாள் சித்ரா.
''ஈரோடு மண்டல மாநாட்டுக்காக, தி.மு.க., நிர்வாகிகளுக்கு இவ்ளோ வசூல் பண்ணனும்னு 'டார்கெட்' போட்டு இருக்காங்களாமே... அப்புறம் இப்பிடி 'கிளப்' நடத்தாம, எப்பிடி சம்பாதிப்பாங்க?'' என்று கேட்டாள் மித்ரா.''நம்மூர்ல சம்பாதிக்கிறதுக்கா வழியில்லை... ஏஆர்ஓ 2 ஆபீஸ்ல, புரோக்கர் ஒருத்தரு, ஆபீசுக்குள்ளேயே டேபிள் சேர் போட்டு உட்கார்ந்து, 'புது ரேஷன் கார்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு பேரம் பேசிட்டு இருக்காரு... கேட்டா, தனி தாசில்தார் கூட, கூட்டணி போட்ருக்கார்னு சொல்றாங்க!'' என்றாள் சித்ரா.
''இன்னொரு வசூல் மேட்டர் சொல்றேன்... நம்ம மாவட்டத்துல இருக்குற, 276 மெட்ரிக் ஸ்கூல்கள்லயும், ஸ்கூலுக்கு, 7,500 ரூபா வசூல் பண்ணிருக்காங்க... கேட்டா, பொதுத்தேர்வு விடைத்தாள்களைக் கொண்டு போறதுக்கு 'ரூட் ஆபீஸ்' வசூல்னு சொல்றாங்க!'' என்றாள் மித்ரா.
''அதுக்கு தான், கவர்மென்ட்ல காசு கொடுப்பாங்களே!'' என்று குறுக்கே புகுந்தாள் சித்ரா.''ஆமாக்கா... நம்ம டிஸ்ட்ரிக்ட்ல 13 ரூட் இருக்கு... ஒரு ரூட்க்கு 2,500 ரூபா, கவர்மென்ட்ல தர்றாங்க. ஆனா, அது போதாதுன்னு, ஸ்கூல்கள்ல வசூல் பண்ணிருக்காங்க... காளப்பட்டியில இருக்குற பிரபல ஸ்கூலோட பிரின்ஸிபால் ஒருத்தர் தான், இது சம்மந்தமா 'வாட்ஸ் ஆப்'ல உத்தரவு போட்டிருக்காரு... கணக்குப் போட்டுப் பார்த்தா, 20 லட்சத்து 70 ஆயிரம் ரூபா வருது!'' என்றாள் மித்ரா.
''நீ சொல்ற 'பிரின்சி', 'வாட்ஸ் ஆப்'ல பயங்கரமான மேட்டரை எல்லாம் பறக்க விட்டு, பேரன்ட்ஸ்களைப் பதற விட்டவராச்சே... அவரை மாத்திட்டதா அப்போ சொன்னாங்க... எல்லாம் நடிப்பா?'' என்று கேட்டாள் சித்ரா.அதைக் கவனிக்காத மித்ரா, ''அக்கா! எனக்கு தாகமா இருக்கு...இளநீர் குடிப்போம்!'' என்று சைக்கிளை இளநீர் கடையில் ஓரம் கட்டினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X