பெண்ணுக்கு எது அழகு

Added : மார் 07, 2018
Advertisement
பெண்ணுக்கு எது அழகு

தமிழ்நாட்டின் பிரபல நடிகர், ஒரு பேட்டியில், தன் உடன் நடித்த உலக அழகியைப் பற்றி கூறியிருந்தார். அவர் முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி துடைத்தாலே அவ்வளவு அழகாக இருப்பார். மேலும், உலகமே அவரை உலக அழகி என்று ஒத்துக்கொண்டு பட்டமும் கொடுத்துவிட்டது. ஆனால், படப்பிடிப்பின் போது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அவர் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்து 'டச்-அப்' செய்து கொண்டே இருப்பாராம்.அவருக்கு அவர் அழகின் மீது நம்பிக்கையில்லை. பெண்கள் எப்போது தான் இந்த நிலைமையிலிருந்து மாறுவார்கள். ஒரு குழந்தை பிறந்துவிட்டால் முதலில் ஆண்குழந்தையா அல்லது பெண் குழந்தையா? எனக்கேட்பார்கள். இரண்டாவதாக அந்த குழந்தை கருப்பா, சிவப்பா? சிவப்பு என்றால் புருவத்தை உயர்த்தி நல்ல கலரா என்பார்கள். கருப்பாக பிறந்திருந்தால் ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல வேதனைப்படுவர். இந்த நிறத்தினால் வரும் தாழ்வு மனப்பான்மை இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தெருவுக்கு தெரு பெருகி வரும் அழகு நிலையங்களே இதற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும். இறைவன் நம்மை படைக்கும் போதே நம்மிடம் கேட்டு தாயையும், தந்தையையும், நிறத்தையும், அழகையும் படைப்பதில்லை. ஆண்டவன் நம்மை எந்த மாதிரியான உருவத்தில், நிறத்தில் படைக்கிறானோ அதை அப்படியே சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, வாழ பழக வேண்டும்.ஒரு பெண் பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரிவாள். அவளிடம் சென்று, 'நீங்கள் அழகா இருக்கிறீர்கள்'என்று சொன்னால், உடனே அந்த பெண், இல்லை; என் கண்ணை நல்லா பாருங்க கண்ணைச் சுற்றி, கருவளையம் வந்துடுச்சு, முடி வேற நிறைய கொட்டுகிறது,' என்று வேதனைப்படுவர். குண்டான பெண் ஒல்லியாக வேண்டும்,கருப்பான பெண் கலராக வேண்டும்,எல்லாம் நன்றாக அமைந்த பெண்ணுக்கு அவளுடைய மூக்கு கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம்என்ற குறை. இப்படி ஒரு நாளில் 24 மணிநேரத்தில் கால் பங்கு நேரம் அழகுக்காகச் செலவழித்தால் வாழ்க்கை என்னாவது?
தாய்மை அழகு : ஒரு சிறுவன் தன் வீட்டில் தனியாக சாப்பிட்டு கொண்டுஇருந்தான். அப்போது அருகில் வசிக்கும் பெண் ஒருவர், 'கூனி இருக்காங்காளா?' என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.அதற்கு அச்சிறுவன், 'அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை' எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான்.சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த தாயிடம், ஒருவர் கூனி இருக்காங்களா? எனக் கேட்டார். இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அம்மா' என்றான். தாய் அந்த சிறுவனின் அருகே அமர்ந்து, 'ஏம்ப்பா அம்மாவின் கூனை இதுவரை நீ பார்த்தது இல்லையா? இந்த ஊரில் பலர் என்னை கூனி என்று தானே கூப்பிடுவார்கள்' என்று கூறியவுடன், மகன் அம்மாவை இறுக அணைத்து முத்தமிட்டு 'அம்மா நான் உன்னை தாயாக தான் பார்த்தேன். இதுநாள் வரை எனக்கு உன்னுடைய 'கூனே' கண்ணுக்கு தெரியவில்லை' என்றானாம். ஒரு குழந்தைக்கு தாய்தான் அழகு. அந்த பெண்ணுக்கு தாய்மை தான் அழகு.
மனைவியின் அழகு : 'ஆசை அறுபது நாள்” ''மோகம் முப்பது நாள்” என்பது அந்த காலத்துபழமொழி. இதில் உள்ள அர்த்தம், வெளி அழகினால் உண்டாகும், ஆசையும், மோகமும் இரண்டு மாதங்கள் தான் நிலைக்கும். அதற்கு மேல் அந்த பெண்ணின் பழக்கவழக்கம், குணம், வேலை செய்யும் விதம், கணவனையும், அவரைச் சார்ந்தவர்களையும் அந்த பெண் கவனித்துக் கொள்ளும் விதம் இவை தான் அவளுடைய கணவனுக்கு அழகாகத் தெரியுமே ஒழியஅவளுடைய புற அழகு தெரியாது. பெரிய அழகியை திருமணம் செய்து, சிம்மாசனத்தில் அமரச்செய்து, தினமும் பார்த்து ரசித்துக் கொண்டு வாழ முடியாது. நல்ல மனைவி என்பவள் அவளுக்குரிய கடமையை சரியாக செய்தால் தான் நேசிக்க முடியும், ரசிக்க முடியும்.அந்தக் காலத்தில் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் நிச்சயிக்கப்பட்ட ஒரு மணப்பெண்ணுக்கு உண்ணும் உணவின் மூலமாகவே உடம்பை மெருகேற்றுவார்கள். ஆனால் இன்று ஒரு மணமகன் தன் குடும்பத்தாருடன் சென்று, மணப்பெண்ணை பார்த்து பிடித்து திருமண நாளை முடிவு செய்துவிட்டு சென்றது தான் தாமதம், பெண்ணின் தாயும், சகோதரிகளும் மணப்பெண்ணை எப்படியாவது இன்னும் அழகாக மாற்றுவதற்கு தீவிரமாக இறங்கி விடுகிறார்கள். கண்ட கண்ட கிரீம்களையும், எண்ணெய்களையும் முகத்திலும், தலையிலும் தேய்த்துக் கொண்டு, திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் முகம் வெந்து, அலர்ஜியாகி தோல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர். தவறான கிரீம்களை இப்படி பயன்படுத்துவது பெருகிக் கொண்டே செல்வதை எதிர்த்து, அகில இந்திய தோல் சிறப்பு சிகிச்சை அசோசியேஷன் சார்பில் இப்பொழுது மத்திய அரசிடம், இந்த மாதியான கிரீம்களையும் (ஸ்டிராய்டு கலந்த) தடைசெய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.தலை அலங்காரத்தையும், உடை அலங்காரத்தையும் பயன்படுத்தி நம் அழகை கூட்டிக் கொள்ளலாமே. உடம்பையும், முகத்தையும் கெடுக்க கூடியவற்றை தவிர்க்கலாமே?
எங்கே இருக்கிறது அழகு : அன்னை தெரசா எங்கு சென்று தன்னை அழகுப்படுத்திக் கொண்டு, நம் இதயங்களை கொள்ளை கொண்டார். அன்னைதெரசாவின் அழகு அவரது கருணை, அன்பு, தொண்டு உள்ளம் தான்.இந்திராவின் அழகு அவருடைய தைரியம், நாட்டை ஆண்ட விதம், நெருக்கடி காலக்கட்டத்தில் அவர் எடுத்த முடிவுகள். ஜெயலலிதா ஒரு பெண் சிங்கமாகவே வாழ்ந்து மறைந்தார். நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாமை, முடிவு எடுக்கும் விதம், எடுத்த முடிவில் கடைசிவரை மாறாமல் இருந்து வெற்றி பெறுவது. பெண்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி. இதுவே அவரின் அழகு.எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல், பத்மா சுப்ரமணியத்தின் நடனம், கிரண்பேடியின் நேர்மை, வீரம். இறகு பந்து விளையாட்டில் பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் பெற்று தந்த வெற்றி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் என ஒவ்வொரு சாதனையாளர்களையும் நினைக்கும்போது, அவர்களுடைய புற அழகு தெரிவதில்லை; மாறாக அவர்களின் திறமையே நமக்கு அழகாக தெரியும்.அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாகதோன்றுவதின் முதல்படி.ஒரு பெண்ணை சில நாட்கள் கழித்து சந்திக்கும் போது, அவருடைய புறத்தோற்றத்தை விமர்சித்து அவர் மனம் நோகும்படி கூறாதீர்கள். பலநாள் கழித்து சந்திக்கும்போது நன்றாக இருக்கிறாயா, உடம்பு சுகம் தானா, குடும்பத்தில் அனைவரும் நலம் தானா, எனக் கேட்டு, அவருடைய பெருமைகளையும், நற்பண்புகளையும், நல்ல குணங்களையும் கலந்து உரையாடுங்கள். மற்றவர்களுக்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தரும் பேச்சுகளை மட்டும் பேசுவோம்.
--அமுதா நடராஜன்எழுத்தாளர், மதுரை

r_amudha@yahoo.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X