குடும்பத் தலைவி என்றால் குறைவானவரா!

Added : மார் 08, 2018
Advertisement
WomensDay

நான் ஒருமுறை யோகா வகுப்பு எடுத்த போது, பங்கேற்பாளர்கள், ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.அப்போது, ஒரு பெண்மணி, தன் பெயரை சொல்லி, தன்னை வெறும் குடும்பத் தலைவி என, அறிமுகப்படுத்திக் கொண்டார்.'அதென்ன வெறும் குடும்பத் தலைவி... உங்களுக்கு அதன் அருமை தெரியவில்லை. வெளியில் சென்று பணம் சம்பாதிக்காததால், நீங்கள் இப்படி நினைத்துக் கொள்கிறீர்கள்' என, பதில் கூறினேன்.


உயர்த்தி காட்டியது

தங்கள் பெண்மை, ஆதிக்கம் செலுத்தப்படுவதாக நினைத்ததால் தான், பெண்கள், ஆண்கள் செய்யும் செயல்களை செய்ய முற்படுகின்றனர். தற்போது, உலகில் பல பெண்ணிய இயக்கங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன.பல்லாண்டுகளாக இந்த சமூகம், ஆணின் ஆதிக்கத்திலேயே நிகழ்ந்திருப்பதால், பெண்ணிய இயக்கங்கள் தோன்றுவது இயற்கை தான். ஆனால், அந்த இயக்கங்கள் உண்மையாகவே பெண்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமெனில், அவை, ஆணாதிக்கத்திற்கு எதிராக செயல்படாமல், பெண் தன்மையை மேலுயர்த்துவது எப்படியென சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போது தான், சமூகத்தில் எல்லாருக்கும் நன்மை நிகழும்.நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, எங்கள் தாயார், காலை, 6:00 மணிக்கு எழுந்து விடுவார். வீட்டை சுத்தம் செய்து, சிற்றுண்டி தயாரித்து, எங்களை பள்ளிக்கு அனுப்பி, பின் குளித்து, பூஜை செய்து, மீண்டும் உணவு தயாரித்து, 12:00 மணி அளவில் நிமிரும் போது, என் தந்தை சரியாக வீட்டிற்கு வருவார்.
எப்போதும், என் தந்தை வருவதற்கு முன், அவர் நன்றாக உடை அணிந்து, தலையில் பூ சூடியிருப்பார். இது எப்போதும் நடந்தது.எங்கள் வீட்டில், எந்த ஒரு தலையணை உறையிலும், ஒரு சிறிய, 'எம்ப்ராய்டரி' வேலையாவது இல்லாமல், எப்போதும் இருந்ததில்லை.ஒரு சிறிய பூவாவது, எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும். இந்த வேலைகள், எப்போதும் அவருக்கு ஆனந்தத்தைத் தந்தது.எங்கள் நல்வாழ்விற்காக, தன்னை ஒருவர், இந்த அளவு அர்ப்பணித்திருக்கா விட்டால், எங்கள் வாழ்வு எப்படி இருந்திருக்கும் என்பதை, எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அவருடைய அர்ப்பணிப்பு, எங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு படியிலும் உயர்த்தியது. அவர் வருமானம் ஈட்டாததால், அவரை யாருக்கும் தாழ்ந்தவராக கண்டிப்பாக நினைக்க முடியாது.அவருடைய தீவிர அர்ப்பணிப்பே, மற்ற அனைவரையும் விட, அவரை அதிகமாக உயர்த்திக் காட்டியது.வீட்டில் எது நடந்தாலும், அவரை கலந்தாலோசித்து தான் அது நடக்கும். ஏனெனில், மற்றவர் மீது அவர் கொண்டிருந்த அக்கறை அத்தகையது.இது தான், ஒருவருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது. பெண் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள், என் தாயாரிடம், 'நீ ஒரு அடிமை போல் இருக்கிறாய்... ஊதியம் இன்றி வேலை செய்கிறாய்... நீ பயன்படுத்தப்படுகிறாய்' என்றெல்லாம் சொன்னால், அவர், மிகவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்.


தோல்வியாக இருக்கும்

ஏனெனில், அவரைப் பொறுத்த வரையில், அவர் வீட்டில் செய்து வந்த பணிகள், அவருக்கு அன்புமயமான அனுபவத்தை கொடுத்தது. இப்படி, சிலர் தன்னலத்தையும் தாண்டி அன்புடனும், அக்கறையுடனும் ஈடுபடும் போது தான், இந்த உலகம் அழகானதாக இருக்கிறது.அதற்காக, எல்லா பெண்களும் வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டும்; ஆண்கள் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என, நான் சொல்ல வரவில்லை.நீங்கள் வாழும் வாழ்க்கை, மற்றவர் வாழ்க்கையில், நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது எனில், நீங்கள் அலுவலகத்திற்கு சென்றாலும் சரி அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல. எது தேவையோ, அதை நாம் செய்ய முடியும்.

ஆண் - பெண் என்ற இரு தன்மைகளை, இரு வேறு உயிரினமாகக் கருதாமல், இவ்விரண்டையும் ஒரே உயிரினமாகக் கருதி, வாழ வேண்டும்.சமூகச் சூழலில், பெண்ணுக்கும், சம அளவிலான ஈடுபாடும், பங்களிப்பும் கிட்ட வேண்டுமெனில், பெண் தன்மையை, முழுமையாக வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை, நாம் பார்க்க வேண்டும்.இதற்கென சில நடைமுறைகளையும், சில சட்டங்களையும் மாற்றத் தேவையிருக்கிறது. பெண்கள், ஆண் தன்மை கொண்டவர்களாக மாறி, பெண் தன்மையே இல்லாமல் செய்து விட்டால், அது தான், உலகில் பெண் தன்மைக்கு கிடைக்கப் போகும் உண்மையான தோல்வியாக இருக்கும்.

பெண் தன்மை என்பது தேவையற்றதும் இல்லை; பலவீனமானதும் இல்லை. பெண் தன்மை வித்தியாசமானது; மென்மையானது. இவ்வுலகில், பெண் தன்மை இல்லாமல் செய்து விட்டால், மென்மையில்லாத வாழ்க்கையிலும், மென்மையில்லாத உலகிலும் நாம் எப்படி வாழ்வது?பெண்ணிய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, பெண் தன்மையை எப்படி வளர்ப்பது என்பதில், கவனம் செலுத்த வேண்டும்.-சத்குருஈஷா யோகா மையம்

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X