சென்னை : அரசியல் கட்சி துவக்க உள்ள நடிகர் ரஜினி, இன்று(மார்ச் 10) இமயமலைக்கு கிளம்பி சென்றார்.
தமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன் எனக்கூறிய ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக, பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ள ரஜினி, 'எம்.ஜி.ஆர்., ஆட்சியை தருவேன்' என, அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சினிமா, அரசியல் என, பம்பரமாக சுழன்ற ரஜினி, இன்று இமயமலைக்கு புறப்பட்டார். விமானம் வாயிலாக, சிம்லா செல்லும் ரஜினி, அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் மற்றும் பாபா குகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். குகையில், தன் குரு பாபா மற்றும் ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறுகிறார். சமீபத்தில், தன் நண்பர்களுடன் இணைந்து, இமயமலையில் கட்டிய, தியான மண்டபத்திற்கும் செல்ல உள்ளார்.
பதிலளிக்க விரும்பவில்லை:
கிளம்புவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: அரசியல் இயக்கம் துவங்க முடிவெடுத்த பின்னர் இமயமலை பயணம் மேற்கொள்ள உள்ளேன். இமயமலைக்கு சென்று 8 ஆண்டுகள்ஆகிறது. புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. குறைந்த பட்சம் 10 நாள் முதல் 15 நாள் வரை தங்க திட்டமிட்டு உள்ளேன். தர்மசாலா, பாபா குகைக்கும் சென்று வழிபட உள்ளேன். இமயமலை சென்ற பின்னா்தான் எத்தனை நாள் அங்கு இருப்பேன் என முடிவு செய்யப்படும். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை . இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE