பொக்கிஷங்களை குப்பையில் எறியாதீர்!

Updated : மார் 14, 2018 | Added : மார் 11, 2018 | கருத்துகள் (6) | |
Advertisement
அன்று, 'ஆட்டோ' சங்கர் செய்தி, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது போல, சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே உள்ள பாலேஸ்வரம், 'செயின்ட் ஜோசப் ஹாஸ்பிக்ஸ்' பற்றிய செய்திகள் தான்!இறக்கும் தருவாயில் உள்ள ஆதரவற்றோருக்கான கருணை இல்லமான அங்கு நடந்தது என்ன, அதை நடத்தியவர்கள் குற்றவாளிகளா, அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என அலசுவது அல்ல,
பொக்கிஷங்களை குப்பையில் எறியாதீர்!

அன்று, 'ஆட்டோ' சங்கர் செய்தி, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது போல, சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே உள்ள பாலேஸ்வரம், 'செயின்ட் ஜோசப் ஹாஸ்பிக்ஸ்' பற்றிய செய்திகள் தான்!

இறக்கும் தருவாயில் உள்ள ஆதரவற்றோருக்கான கருணை இல்லமான அங்கு நடந்தது என்ன, அதை நடத்தியவர்கள் குற்றவாளிகளா, அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என அலசுவது அல்ல, இந்த கட்டுரையின் நோக்கம்.

மாறாக, இறக்கும் நிலையில் உள்ள ஆதரவற்றோரை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில், இது போன்ற காப்பகங்கள் உருவாக காரணம் என்ன என்பதை ஆய்ந்தறிவதே நோக்கம்.

பிரச்னைகளை விட, அதன் வேர்களை ஆராய்ந்தால் தான், உண்மையை கண்டறிய முடியும்.

நம் மாநிலத்தில், 20 - 30 ஆண்டுகளுக்கு முன், முதியோர் இல்லங்கள், இப்போது இருப்பது போல, ஊருக்கு ஊர் கிடையாது. முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன; அதற்கு காரணம், முதியோரை நாம் பாரமாக நினைப்பது தான்!

சிறு வயதில் படித்த கதை ஒன்று, இப்போது ஞாபகத்திற்கு வருகிறது...

ஒரு நாட்டின் ராஜா, 'முதியோர்களே இருக்கக்கூடாது; அனைத்து முதியோரையும் கொன்று விட வேண்டும்' என, மக்களுக்கு ஆணையிட்டான்.

மக்கள் அனைவரும், தங்களின் வயதான அப்பா, அம்மாவை கொன்று விட்டனர். ஆனால், ஒரு ஆளுக்கு மட்டும், தன் தந்தையை கொல்ல மனம் வரவில்லை; யாருக்கும் தெரியாமல் அவரை,

வீட்டில் ஒளித்து வைத்தார்.

ராஜாவுக்கு பிரச்னை வரும் போதெல்லாம், தீர்வு தெரியாமல் கையை பிசைந்து இருந்த போது, அப்பாவை ஒளித்து வைத்தவர் மட்டும், தன் அப்பாவிடம் அது குறித்து கேட்டு, ராஜாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு சொன்னார்.

ராஜாவுக்கு சந்தேகம்... அறிவில் சிறந்த, மதிமந்திரிகள் அல்லது மற்றவர்களால் தீர்வு காண முடியாத பிரச்னைகள் எல்லாவற்றுக்கும், இவனால் மட்டும் எப்படி தீர்வு காண முடிகிறது என, சந்தேகம் எழுந்தது. அதை, தந்தையை மறைத்து வைத்த நபரிடமே கேட்டும் விட்டார்.

அப்போது தான், தந்தையை கொல்லாமல் மறைத்து வைத்திருப்பதையும், அவரிடம் கேட்டு, பிரச்னைகளுக்கு தீர்வை கண்டுபிடித்து, அவ்வப்போது சொன்னதையும், அந்த நபர் கூறினார்.

ராஜாவுக்கு தன் தவறு புரிந்தது.


'முதியோர் எப்பேர்பட்ட பொக்கிஷங்கள்... அவர்களை கொலை செய்ய சொல்லி விட்டோமே...' என, தன் செயலுக்காக வருந்தினான்.அந்த ராஜாவின் ஆரம்ப கால மன நிலையில் தான், நாம் இப்போது இருக்கிறோம். வீட்டில் உள்ள முதியோரை, தொந்தரவு தரும் ஜீவனாக பார்க்கிறோம்.

'இதுக நமக்கு என்னத்தை சொல்லித் தரப்போகுதுக... எந்த தகவல் வேண்டுமானாலும், 'கூகுளில்' தேடினால் கிடைக்கிறது... அப்புறம் எதுக்கு, தேவையில்லாமல் இந்த, தொணதொணப்புகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும்' என்ற அகம்பாவ மனது மேலோங்குகிறது.

அது தான், அனைத்து ஊர்களிலும் முதியோர் இல்லங்கள் உருவாக காரணமாகிறது.

அனைவரும், பணத்தை தேடி ஓடியபடி இருப்பதால், வழியில் இருக்கும் வேகத்தடையாக, முதியவர்களை நினைக்கிறோம்.


'முதியோரை வீட்டில் வைத்திருந்தால், உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டால், நம்மால் விடுப்பு எடுத்து வந்து கவனிக்க முடியாதே... ஆபிசில், இன்ஸ்பெக் ஷன், ஆடிட்டிங் அடிக்கடி இருக்குமே... அடிக்கடி விடுப்பு எடுத்தால், 'புரமோஷன்' தடைபடுமே' என, நினைக்கின்றனர்.

வேகத்தடையை தகர்க்க நினைக்கும் அவர்கள், முதியோர் இல்லங்களை உருவாக்குகின்றனர்.

பென்ஷன் வரக்கூடியவர்கள், சொத்துகளை விற்று பணத்தை கையில் வைத்திருப்பவர்கள், கட்டணம் செலுத்தி முதியோர் இல்லங்களில் சேர்ந்து, மிச்சம் உள்ள வாழ்க்கையை பிரச்னையின்றி கழிக்கின்றனர்.


பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தில், தங்களிடம் இருந்த பணம், காசு முழுவதையும் அவர்களுக்கு செலவு பண்ணி விட்டு, உழைப்பதற்கு உடலில் தெம்பும், செலவு செய்ய கையில் பணமும் இல்லாத முதியோர், பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாகி விடுகின்றனர்.யாரென்று சொல்லாமல், தங்கள் பெற்றோரை, 'எனக்கு தெரிந்தவர்கள்' என்று கூறி, முதியோர் இல்லத்தில் சேர்க்கும் வாரிசுகளும் உள்ளனர்.


சிலர் அது கூட செய்யாமல், வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகின்றனர். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், பேருந்து நிலையங்கள், கோவில்களில் பிச்சை எடுத்து கஷ்டப்படுகின்றனர்.பிச்சை எடுக்க மனமில்லாத மானஸ்தர்கள், தற்கொலை செய்து கொள்கின்றனர். உயிருடன் இருக்கும்போது, பெற்ற பிள்ளைகள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், இறந்த பின், அவர்களை கைவிட்டவர்கள் வடை, பாயாசம் வைத்து வழிபடுவர்.


செத்த பின், படத்திற்கு படைத்து என்ன பயன்!இறந்த பின் படத்திற்கு படையல் வைக்கும்

பிள்ளைகளுக்கும், இன்று, கருணை இல்லத்தில் இறந்தவர்களுக்காக கவலைப்படுபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.'அச்சச்சோ, வயதானவர்கள் இறந்த பிறகு, எலும்பு

களை விற்கின்றனர்...' என, சாலவாக்கம் காப்பகத்தின் மீது கூறப்பட்ட புகாரை கேட்டு, இப்போது பதைபதைக்கிறோம். உயிரோடு இருக்கும்போது அவர்களை கவனிக்காமல், எலும்புகளைப் பார்த்து இன்று பதறுவது சரியா?


வேண்டாம் என நாம், குப்பைத் தொட்டியில் போட்டவற்றை பொறுக்கி, சிலர் காசாக மாற்றுகின்றனர். சாலவாக்கம் ஹாஸ்பிக்ஸ்சும் அப்படித் தான் என, வைத்துக் கொள்ளலாம்.நம் வீட்டு முதியோரை, வேண்டாம் என, குப்பையாக வெளியேற்றி விட்டோம். அந்த குப்பையை சிலர் காசாக்க முயற்சி செய்திருக்கின்றனர். ஏனென்றால், குப்பையை நாம், மறுபடி தேடிப் போக மாட்டோமே!


அது போல, நம்மால் ஒதுக்கப்பட்டவர்களை மீண்டும் தேடப் போவதில்லை. அந்த தைரியத்தில் தான், இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லங்களில் சில, சர்ச்சையில்

சிக்கியுள்ளன.குற்றம் செய்தவர்களை விட, குற்றம் செய்ய காரணமானவர்களுக்கு தான் அதிக தண்டனை கொடுக்க வேண்டும். பெற்றோரை பாரமாக நினைத்து, வீட்டை விட்டு வெளியே அனுப்பியவர்களுக்கு தான், அதிக தண்டனை கொடுக்க வேண்டும்.


அதற்காக நீங்கள், ராமாயணத்தில் வரும் சிரவணன் மாதிரி, கண் தெரியாத வயதான பெற்றோரை தோளில் சுமந்து அலைய வேண்டாம்; ராமர் மாதிரி, அப்பா சொன்ன சொல்லுக்கு மறுவார்த்தை சொல்லாமல், அரசாட்சியை துறந்து, மரவுரி தரித்து, காட்டிற்கு செல்ல வேண்டாம்...

மஹாபாரதத்தில் வருவது போல, அம்மா சொல்லி விட்டாள் என்பதற்காக, ஒரே பெண்ணை ஐந்து பேர் மணக்க வேண்டாம்... வயதான பெற்றோரை மனித ஜென்மமாக மட்டும் மதியுங்கள்;

அவர்களுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்; அது போதும்!


சுயநலமென்னும் நச்சு மரங்கள், இன்று எங்கும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. அதில், 'அன்பு' என்ற வாசம் இல்லாத காகித பூக்கள், பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து நம்மவர்களை காப்பாற்ற, ஒரேயோரு வழி தான்!அது, புத்தனும், இயேசுவும், காந்தியும், நம் முன்னோரும் சொன்னது தான்! அந்த ஒற்றை சொல், அன்பு! அதை மட்டும், இளைய தலைமுறையினர் மனதில் விதைப்போம்; முதியோர் இல்லம் என்ற களைகளை வேரறுப்போம்.


இ - மெயில்: selvasundari152@gmail.com-


எஸ்.செல்வசுந்தரி


சமூக ஆர்வலர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (6)

tamilselvan - chennai,இந்தியா
24-மார்-201818:18:30 IST Report Abuse
tamilselvan அரசாங்கம் முதல் முதியவர் இல்லம் நடத்து அனுமதி அளிக்க கூடாது. இதை செய்துதால் வரவேரப்பு
Rate this:
POPCORN - Chennai ,இந்தியா
03-ஏப்-201810:56:29 IST Report Abuse
POPCORNஅப்போ அவர்களை உங்கள் வீட்டுக்கு அரசு அனுப்பட்டுமா ?...
Rate this:
Cancel
PeterVasan - Madurai,இந்தியா
24-மார்-201814:23:32 IST Report Abuse
PeterVasan ஒரு அப்பா தன் பிள்ளையை அன்போடு வளர்த்து நன்றாக படிக்க வைத்து கல்யாணமும் முடித்து வைத்தார். அவன் அப்பாவின் அன்பை உணரவில்லையா அல்லது மனைவியின் தூண்டுதலினாளையோ அவன் அவனுடைய அப்பாவை ஒரு ஆசிரமத்தில் விட போனான். அவன் அப்பாவும் கூட போனார். விடுகையில் அவ்வாசிரமத்தின் தலைவர் அவனுடைய அப்பாவிடம் வெகு நேரம் பேசினார். அவனுக்கு புரியவில்லை ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று. அப்பா ஆசிரமத்தில் நுழைந்தார். அவன் ஆசிரமத்தின் தலைவரிடம் கேட்டான் ஏன் அப்பாவிடம் இவ்வளவு நேரம் பேசினீர்கள் என்று. அத்தலைவர் மனம் பொறுக்காமல் சொன்னார். இதே ஆசிரமத்தில் தான் உன் அப்பா பிள்ளை இல்லாத போது ஒரு அனாத பிள்ளையை எடுத்து வளர்த்தார். அதே பிள்ளை அவரை இந்த ஆசிரமத்தில் விட வந்திருக்கிறது.
Rate this:
Cancel
ramtest - Bangalore,இந்தியா
24-மார்-201808:38:09 IST Report Abuse
ramtest உண்மைதான் ...அதே சமயத்தில் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தங்களது மகன் மருமகள் போன்றோருக்கு தேவையில்லாத தொல்லை தரும் முதியவர்களுக்கும் உள்ளனர் ..அனுபவ ஞானத்தால் பெரியவர்கள் போல் நடக்க வேண்டியவர்கள் , சிரியரிலும் சிரியராய் நடப்பதும் உண்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X