'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்' என்றார் மகாகவி பாரதியார். தமிழை தமிழர்களை காட்டிலும் கற்க வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்தளவிற்கு உலகின் தொன்மையான மொழியாக தமிழ் கருதப்படுகிறது. அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைய உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் நன்கொடைகளை வாரி வழங்கி விட்டனர். இருப்பினும் அதற்காக முயற்சி எடுத்தவர்களில் முதன்மையானவர் டாக்டர் விஜய்ஜானகிராமன்.
திருவாரூர் மாவட்டம் வடகாண்டத்தை சேர்ந்த இவர் 1975ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். பென்சில்வேனியாவில் பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதுடன், தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு வருகிறார். ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க இவர் நண்பர்களுடன் இணைந்து தொடர்பு கொண்டபோது 40 கோடி ரூபாய் செலுத்தவும், முன்பணமாக 6 கோடி ரூபாய் செலுத்தவும் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அப்போது விஜய் ஜானகிராமனும், திருவாரூர் மாவட்டம் திருக்குடந்தையிலிருந்து சென்று அமெரிக்காவின் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான சம்பந்தமும் இணைந்து முன்பணத்தை செலுத்தியுள்ளனர். மீதமுள்ள தொகை திரட்டப்பட்டது. நிதி திரட்டும் பணி முடியும் தருவாயில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த விஜய் ஜானகிராமன், தமிழ் இருக்கை குறித்து பல்வேறு தகவல்களை தினமலர் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார். அவருடன் பேசியதிலிருந்து....
* தமிழ் இருக்கை அமைய தேவை என்ன?உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ். உலக செம்மொழிகள் ஏழில் ஒன்று. கிரேக், சமஸ்கிருதம், லட்டீன், ெஹப்ரீயூ, பெர்சியன், சைனீஸ், தமிழ் ஆகியவை செம்மொழிகள். தமிழை தவிர மற்ற மொழிகளுக்கு ஹார்வர்டு பல்கலையில் இருக்கைகள் உள்ளன. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் 20வது இடத்தில் தமிழ் உள்ளது. உலகம் முழுவதும் 80 மில்லியன் பேர் தமிழ் பேசுகின்றனர். தமிழ் இலக்கியம் பரந்து விரிந்தது. செம்மொழிகள் பிரபல பல்கலைகளில் கற்பிக்கப்படுவது போல தமிழும் கற்பிக்கப்பட வேண்டும். தொன்மையான தமிழுக்கு தொன்மையான ஹார்வர்டு பல்கலையில் இருக்கை அமைய விரும்பினோம். அதற்கு முயற்சித்தபோது தமிழர்களும் இணைந்து கொண்டனர்.
* இருக்கை அமைவதால் என்ன பயன்?தமிழை வெளிநாட்டவர் கற்க வாய்ப்பு ஏற்படும். தமிழ் இலக்கியம், இலக்கணம் குறித்து ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மேலும் மொழியை வளப்படுத்த முடியும்.
* ஹார்வர்டு மாணவர்கள் தமிழ் கற்க ஆர்வமாக உள்ளனரா?ஆம். தற்போது 29 மாணவர்கள் ஜோநாதன் ரிப்லே என்பவரிடம் தமிழ் கற்று வருகின்றனர். ரிப்லே தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகள் வசித்தார். அரைமில்லியன் தமிழர்கள் வடஅமெரிக்காவில் வசிக்கின்றனர். ஆனால் ஹார்வர்டு பல்கலையில் குறைந்த எண்ணிக்கையில் தான் தமிழ் கற்கின்றனர். அமெரிக்காவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தமிழ் பள்ளிகள் உள்ளன. அதிலிருந்து வெளிவரும் தமிழ் மாணவர்கள் தமிழில் ஆய்வு படிப்புகளை படிக்க விரும்புகின்றனர். அவர்களை போன்றவர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் இருக்கை உதவியாக அமையும்.
* எவ்வளவு ஆண்டுகளுக்கு அங்கு தமிழ் கற்று கொடுக்கப்படும்?ஒரு முறை பல்கலையில் இருக்கை துவங்கினாலே போதும்.
* இருக்கை அமைக்க நிதி ஒரு வழியாக சேர்ந்து விட்டது. அடுத்து?ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை துவங்கிய பின் கற்றுத் தேர்ந்த தமிழறிஞர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தமிழில் ஆய்வுகளுக்கான வழிமுறைகளை வகுத்து கொடுக்க வேண்டும்.
* ஆக்ஸ்போர்டு போன்ற பிற பல்கலையிலும் தமிழ் இருக்கைகள் அமையுமா?அங்கு அமைய இங்கிலாந்து நாட்டிலுள்ள தமிழர்கள் முயற்சிக்க வேண்டும். ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கையை பார்த்து மற்ற நாடுகளிலுள்ள பிரபல பல்கலைகளிலும் தமிழ் இருக்கைகள் அமைந்தால் நல்லது. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்.
* தமிழில் பிறமொழி கலப்பு குறித்து?அதற்கு நாம் (மக்கள்) தான் காரணம். பிறமொழிகள் கலப்பின்றி தமிழில் பேச வேண்டும். நான் அமெரிக்காவில் நாற்பது ஆண்டுகள் வசித்தாலும் கூட சுத்தமான தமிழில் தான் பேசுகிறேன். தொடர்ந்து பேசுவேன். ஆங்கிலத்தை ஏவல் மொழியாக தான் பயன்படுத்துகிறேன். முடிந்தவரை தாய்மொழியில் பேசினால் போதும். அதற்கு யாரும் தயாராக இல்லை.
* தமிழின் சிறப்பாக நீங்கள் கருதுவது?தொன்மையான பாரம்பரியமிக்க மொழி தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழன் தான், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என, பாடியுள்ளான். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றவர்கள் தமிழர்கள். அறத்திற்காக ஒரு பகுதி திருக்குறளில் உள்ளது. எந்த மொழிகளிலும் அறம் என தனி பகுதி இல்லை. தாய்மொழியை யாரும் மறக்கக்கூடாது. மறைக்கவும் கூடாது. தேவைப்பட்டால் ஆங்கிலத்தை பிழைப்புக்காக வைத்துக் கொள்ளலாம்.இவரது தொடர்புக்கு kvjanakiraman@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE