சந்திரபாபு நாயுடுவின் அரசியல் பலன் தருமா?| Dinamalar

சந்திரபாபு நாயுடுவின் அரசியல் பலன் தருமா?

Added : மார் 12, 2018 | கருத்துகள் (2)
Share
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, தன் இரு அமைச்சர்களை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து திரும்பப் பெற்றுள்ளார். ஆனாலும், கூட்டணியை முறிக்கவில்லை.அதேபோல, ஆந்திர மாநில அரசில், சந்திரபாபு தலைமையில் செயல்பட்ட, பா.ஜ., அமைச்சர்கள் இருவர், பதவி விலகியுள்ளனர்.தெலுங்கானா, ஆந்திரா என, இரு மாநிலங்கள் உருவானது காலத்தின் கட்டாயம். இரு
 சந்திரபாபு நாயுடுவின் அரசியல் பலன் தருமா?

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, தன் இரு அமைச்சர்களை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து திரும்பப் பெற்றுள்ளார். ஆனாலும், கூட்டணியை முறிக்கவில்லை.
அதேபோல, ஆந்திர மாநில அரசில், சந்திரபாபு தலைமையில் செயல்பட்ட, பா.ஜ., அமைச்சர்கள் இருவர், பதவி விலகியுள்ளனர்.தெலுங்கானா, ஆந்திரா என, இரு மாநிலங்கள் உருவானது காலத்தின் கட்டாயம். இரு மாநிலங்களின் தலைநகராக, ஐதராபாத் இருப்பது சாத்தியமில்லை என்பதால், ஆந்திராவுக்கு என, 'அமராவதி நகரை ' உருவாக்கி வருகிறார் சந்திரபாபு.
பல சிறப்பு அம்சங்கள் மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன், பிரமாண்டமாக உருவாகி வருகிறது அமராவதி நகர். அத்துடன், தன் மாநிலத்திற்கு தனியாக, 'ரயில்வே கோட்டம்' தேவை என்பதும், நாயுடுவின் கோரிக்கை.அதேநேரத்தில், அவரின் மற்றொரு கோரிக்கைப்படி, ஆந்திராவுக்கு, 'சிறப்பு அந்தஸ்து' அளித்தால், குறைந்த பட்சம், 50 ஆயிரம் கோடி ரூபாயாவது தரப்பட வேண்டும். ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவை மூலம், இந்த நிதி கிடைத்தால், காலப்போக்கில் மாநிலத்தின் நிதிச்சுமை குறையும்.ஆனால், மத்திய நிதி அமைச்சர், ஜெட்லியோ, 'அரசியல் சட்டப்படி, இம்மாதிரியான நிதி தர வாய்ப்பில்லை' என, கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக, 14வது நிதி கமிஷனின் அறிக்கையை சுட்டிக்காட்டிஇருக்கிறார்.இதற்கிடையில், நாயுடுவை போல, மத்திய அரசை ஆதரிக்கும், முதல்வர் நிதிஷ் குமாரும், ஏற்கனவே, தன் மாநிலமான பீஹாரின் வளர்ச்சிக்கு சிறப்பு நிதி கேட்டு வருகிறார். அதனால், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளித்தால், பீஹார் மாநிலத்திற்கும் தர வேண்டியது நேரிடும்.
எனவே, இதுபோன்ற பிரச்னைகள் எழாமல் இருக்கவே, 14வது நிதி கமிஷன் அறிக்கையை, அருண்ஜெட்லி சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், அதை நம்பிக்கை மோசடியாக, சந்திரபாபு கருதுகிறார்.பிரதமரை நம்பும் அளவுக்கு, ஜெட்லியை அவர் நம்பவில்லை.இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த, அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ்.சவுத்ரி, ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திர மந்திரி சபையில் இடம்பெற்ற, டாக்டர் சீனிவாச ராவ், மாணிக்யாலாய ராவ் ஆகிய, பா.ஜ, - எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரிடம் ராஜினாமாவை சமர்ப்பித்து உள்ளனர்.
பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்குவதில், தெலுங்கு தேசம், எம்.பி.,க்களின் பங்கு உள்ளது. ராஜ்யசபாவில், மாநில கட்சிகளான, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., திரிணமுல் ஆகியவை தங்களது தனித்தனி விஷயங்களை கையில் எடுத்து, சபையை ஒரு வாரமாக முடக்கி விட்டன.காங்கிரஸ் கட்சியின் அரசியல் உத்திகளில், ராஜ்யசபாவை முடக்குவது தொடர் பணியாக உள்ளது. மக்கள் பணம் வீணடிக்கப்படும் இவ்விஷயத்தில், சபையின் மையப்பகுதிக்கு, போஸ்டர்களுடன் வந்து கோஷமிடுவதும், புது வழக்கமாகி விட்டது.
ஆந்திராவில், 2019 தேர்தலில், பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது என்ற, பின்னணியில் காய் நகர்த்துகிறது, தெலுங்கு தேசம் கட்சி. அதற்கு காரணம், நேரு, இந்திரா காலத்தில், காங்கிரஸ், நாடு முழுவதும் வேகமாக வளர்ந்தது போன்ற நிலைமை, பா.ஜ.,வால், உருவாகி விடக்கூடாது என்பதே.
மேலும், கடந்த, 15 ஆண்டுகளைப் பார்த்தால், மாநில கட்சிகள் ஏதாவது ஒரு பொது விஷயத்தில், தேசிய அளவில் பிரச்னைகளை அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.அப்படி இருக்கும் போது, தங்கள் தனித்துவ செல்வாக்கை வைத்துக் கொண்டு, மத்தியில் உள்ள ஆட்சியை தங்கள் கருத்திற்கு ஏற்ப வளைக்கலாம் என்ற, அரசியல் சித்தாந்தத்தில் தெலுங்குதேசம் இறங்கியிருக்கிறது.
இது நீடிக்குமா... மக்கள் என்ன முடிவு செய்வர் என்பதை அறிய, பொதுத்தேர்தல் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X