கல்லூரி மாணவர்களுக்கு அநீதி!

Added : மார் 17, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
பத்திரிகைகளில் சமீப காலமாக வெளிவரும், தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் முறைகேடு மற்றும் உயர்கல்வித் துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்த செய்திகள், அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்குகின்றன.நம் பிள்ளைகளின் எதிர்காலமே, இத்தகைய கல்வியாளர்கள் கையில் தான் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொருவரும், போராடி, கடன் வாங்கி, படிப்பு செலவை சுமக்கிறோம்.இவர்களோ, 'எட்டு
கல்லூரி மாணவர்களுக்கு அநீதி!

பத்திரிகைகளில் சமீப காலமாக வெளிவரும், தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் முறைகேடு மற்றும் உயர்கல்வித் துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்த செய்திகள், அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்குகின்றன.
நம் பிள்ளைகளின் எதிர்காலமே, இத்தகைய கல்வியாளர்கள் கையில் தான் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொருவரும், போராடி, கடன் வாங்கி, படிப்பு செலவை சுமக்கிறோம்.
இவர்களோ, 'எட்டு சி... பத்து சி' என கொடுத்து, பதவியில் உட்கார்ந்து, 'போட்டதை நான் எடுக்கணும்... அதற்காக, எந்தெந்த வழிகளில் சம்பாதிக்கணுமோ,
அந்தந்த வழிகளில், 'மால்' வாங்குவேன்' என்பதில், குறியாக இருக்கின்றனர்.

விசாரணை வந்ததும், 2,000 ரூபாய் நோட்டுகளை கிழித்து, 'டாய்லெட்'டில் வீசி, தண்ணீர் விட்டதை பார்க்கும் போது, வயிறு எரிகிறது.இப்படிப்பட்டவர்களை, 'உள்ளே' அடைப்பதுடன், இது போன்ற அவலங்களை நீக்கி, நம் மாணவர்களின் எதிர்
காலத்தை பாதுகாப்பது அவசியம்.இந்த துறையில் களைய வேண்டிய கொடுமைகள் சில உள்ளன... அவற்றை பார்ப்போம்...முதல் கொடுமை, பி.ஏ., அல்லது பி.எஸ்சி., பயிலும் மாணவர்கள், எதிர்கால கனவுகளோடு, தேர்வு எழுதும் போது, ஒரு சில பொறுப்பற்ற பேராசிரியர்களால், தேர்வில் நியாயமாக கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள்
கிடைக்காமல், அவர்களின் கனவுகள் சிதைந்து போகின்றன. எப்படி என கேட்கிறீர்களா...விடைத்தாள் திருத்தும் பணியின் போது, ஒவ்வொரு பேராசிரியருக்கும், ஒரு நாளுக்கு, காலையில், 16, மாலையில் 16 என, 32 விடைத்தாள்கள் கொடுக்க வேண்டும் என்பது விதி.
காலை, 10:00 மணி துவங்கி, மாலை, 5:00 மணி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற வேண்டும்.

ஆனால், பெரும்பாலான பேராசிரியர்கள், 12:00 மணிக்கு வந்து, மொத்த விடைத்தாள்களையும், மதியம், 2:00 மணிக்குள் திருத்தி, மையங்களை விட்டு வெளியேறுவது, வாடிக்கையாகி விட்டது.
குறைவான நேரத்தில், விடைத்தாள்கள் திருத்தப்படுவதால், தோராயமாக, கைக்கு வரும் மதிப்பெண்களை வழங்கி விட்டு செல்கின்றனர்.
அது மட்டுமா... விடை திருத்தும் போது, பக்கத்தில் உள்ள பேராசிரியரிடம் பேசிய படியே திருத்துவதும் நடக்கிறது. இதில், இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பி.ஏ., - பி.எஸ்சி., பிரிவிற்கு பாடம் நடத்த மட்டுமே, தகுதி உள்ளோர், எம்.ஏ., - எம்.எஸ்சி., மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதும் நடக்கிறது.
பெரும்பாலான கல்லுாரி களில், கவுரவ விரிவுரையாளர்கள் கூட, எம்.ஏ., - எம்.எஸ்சி., விடைத்தாள்களைத் திருத்தும் அவலமும் உள்ளது. இவர்களுக்கு,
அந்த பாடங்கள் குறித்து என்ன தெரியும்... இந்த கொடுமையை, யார் தட்டிக் கேட்பது...விடைத்தாள்கள் திருத்த, அனுமதி வழங்கிய
துறைத் தலைவர்கள், கல்லுாரி முதல்வர்கள் மீதும் கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மனசாட்சியுடன் திருத்தும், நேர்மையான பேராசிரியர்களின் கொந்தளிப்பு.
மாணவர்களின் வேலைவாய்ப்பு, அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அரைகுறை படிப்பாளிகள் திருத்துவதால், மாணவர்கள் பாதிக்கப்
படுகின்றனர்.

பெரும்பாலான பேராசிரியர்கள், குத்து மதிப்பாகவே, மதிப்பெண்களை வழங்குகின்றனர். அதாவது, அதிகபட்ச மதிப்பெண், 75ஐ போடுவதில்லை.
அது போல், குறைந்தபட்ச மதிப்பெண்ணான, பூஜ்ஜியத்தையும் வழங்குவது இல்லை. அனைத்து விடைத்தாள்களுக்கும், 35ல் இருந்து, 45க்குள், குத்து மதிப்பாக, மதிப்பெண் வழங்குகின்றனர்.
நன்றாக படிப்பவர்களுக்கும், சுமாராக படிப்பவர்களுக்கும், படிக்காத மாணவர்களுக்கும் வழங்கப்படும் மதிப்பெண் வித்தியாசம், 37ல் இருந்து, 41 வரை மட்டுமே என்பது கூடுதல் தகவல்.இது, எந்த விதத்தில் நியாயம்... மாணவர்கள் என்ன எழுதியிருக்கின்றனரோ, அதற்கு மதிப்பெண் போடத் தானே
சம்பளம் கொடுக்கின்றனர்.

இந்த மாதிரி, அக்கிரமங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!நன்கு படிக்கும் ஏழை மாணவர்கள், குறைவான மதிப்பெண் பெறும் போது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணம் செலுத்த இயலாத சூழ்நிலையில், குறைவாகப் போடப்பட்ட மதிப்பெண்ணையே ஏற்றுக்
கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.எனக்கு தெரிந்த, நன்கு படிக்கும் ஏழை மாணவி, போன செமஸ்டரில், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, அதிக மதிப்
பெண்ணும் பெற்று விட்டார். அதே மாணவிக்கு, தற்போது வெளியான, 'செமஸ்டரில்' முன் போலவே, குறைவான மதிப்பெண் வந்துள்ளது. ஒவ்வொரு செமஸ்டருக்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, பணம் கட்ட, அந்த மாணவி என்ன செய்வார்...
இப்படிப்பட்ட அக்கிரமம், அனைத்து தன்னாட்சிக் கல்லுாரிகளிலும், அரசு உதவிப் பெறும் கல்லுாரிகளிலும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைபெறுவது வேதனையான விஷயம். இது மட்டுமா...
அதிக நாட்கள் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றால், பேராசிரியர்களுக்கு பயணப்படி, அதிகமாக தர வேண்டி இருக்கும் என்பதால், ஒரு நாளுக்கு, 60 விடைத்தாள்களை வழங்குவதும்
நடைபெறுகிறது. 32 விடைத்தாள்களைத் திருத்த வேண்டிய நேரத்தில், 60 விடைத்தாள்களை எப்படி திருத்துவர் என்பதை யோசித்து பாருங்கள்... தலை சுற்றுகிறதா!
விடைத்தாள்கள் திருத்தும் பணி, சரியாக நடைபெற, பள்ளி கல்வித்துறை செய்ய வேண்டியவை:

* தாங்கள் நடத்தும் பாடத்திற்கான விடைத்தாள்களை மட்டுமே, பேராசிரியர்கள் திருத்த வேண்டும்
* பி.ஏ., - பி.எஸ்சி.,க்கு பாடம் நடத்துபவர்கள், எம்.ஏ., - எம்.எஸ்சி., விடைத்தாள்களை திருத்த அனுமதிக்கக் கூடாது
* மாணவர்கள் எவ்வாறு, ஒருவருக்கொருவர் பேசாமல் தேர்வு எழுதுகின்றனரோ, அது போல், பேராசிரியர்களும் ஒருவருக்கொருவர் பேசாமல், அரட்டை அடிக்காமல், விடைத்தாள்களை கவனமுடன் திருத்த வேண்டும்
* மொபைல் போன் உபயோகிக்க, தடை விதிக்க வேண்டும்
* அனைத்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்களிலும், 'பயோ மெட்ரிக்' முறையில், வருகை பதிவேடு வேண்டும்
* விடைத்தாள்கள் திருத்தும் பணியை, கண்காணிப்பு கேமரா மூலம், பதிவு செய்து, கண்காணிக்க வேண்டும்
* ஒரு நாளில், எத்தனை விடைத் தாள்களைத் திருத்தினர் என்பதை, பெற்றோர் கழகம் மற்றும் மூத்த பேராசிரியர்கள் சரி பார்க்க வேண்டும்
* மறு கூட்டலின் போது, வித்தியாசம், 5 சதவீத, மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால், முதலில் திருத்திய பேராசிரியரை, 'விடைத்தாள்களை இனி திருத்த கூடாது; போதும்' என, தடை விதிக்க வேண்டும்
* மறு கூட்டலுக்கு பின், மதிப்பெண் அதிகமாக பெற்றால், மறுகூட்டலுக்காக மாணவர் செலுத்திய பணம் முழுவதையும் திருப்பி கொடுக்க வேண்டும்.
சரி வர திருத்தாத பேராசிரியரால், திருத்தப்பட்ட அனைத்து விடைத்தாள்களையும், திரும்ப திருத்தி, அதற்கு ஆகும் செலவை, அந்த பேராசிரியரிடமிருந்து வசூலிக்க வேண்டும்
* 'ஆன்லைன்' மூலம் தேர்வு நடத்தும் முறையை, வெகு விரைவில் கொண்டு வர வேண்டும்.

அடுத்த கொடுமையை பார்ப்போம்.

கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள், மிகவும் தாமதமாக வெளிடப்படுகின்றன. 10ம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளி, தேர்வு முடிவுகளுக்கு தரப்படும் முக்கியத்துவம், பி.ஏ., - பி.எஸ்சி., - எம்.ஏ., - எம்.எஸ்சி., தேர்வுகளுக்கு
தரப்படுவதில்லை. இதில், அரசு தலையிட்டு, மே முதல் வாரத்திலேயே, எல்லா கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை
வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
* ஜூன் மாதம், இரண்டாம் வாரத்தில், தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றனர். இதனால், கல்லுாரி மாணவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
அதன் பின், விடைத்தாளை பார்த்து, மறு திருத்தலுக்கு முயற்சி செய்ய வாய்ப்பு தராமலேயே, தோல்வியுற்றவர்களை, தேர்வுக்கு விண்ணப்பிக்க சொல்லும் வினோத முறை உள்ளது. இது என்ன நியாயம் என, தெரியவில்லை!இதையெல்லாம்,
யாரிடம் சொல்லி அழுவது என தெரியாமல் தவிக்கின்றனர், நம் கல்லுாரி மாணவர்கள்.அடுத்த கொடுமை... ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும்,
அனைத்து கல்லுாரிகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் தானே வாங்க வேண்டும்... அது இங்கு இல்லையே!
ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ், ஒரே ஊரில் இயங்கும், இரண்டு கல்லுாரிகளில், ஒரே பாட பிரிவுக்கு, இரண்டு விதமான கட்டணங்கள்
வசூலிக்கப்படுகின்றன. இது எந்த விதத்தில் நியாயம்?கொடுமையிலும் கொடுமை இது தான்... பேராசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதற்காக, பேராசிரியர்களின் திறன் மேம்பாடு என்ற ஒரு திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தியது.
பேராசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து, 'முனைவர்' பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்ய, இதன் படி அனுமதி அளிக்கப்படுகிறது.

நம் மாணவர்களின் நலனுக்காக, மக்களின் வரிப்பணத்தில், முனைவர் பட்டம் பெற்ற பின், பேராசிரியர்கள் சிலர், வெளிநாடு சென்று, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
பேராசிரியர்கள் செய்வது, தேச துரோகம் அல்லவா... நாட்டுக்கும், மாணவர்களுக்கும் துரோகம் செய்யும் பேராசிரியர்கள் மீது, இந்த அரசு, என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
எனவே, இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகள் கல்லுாரிகளில் இனி நடைபெறாமல் பார்க்க வேண்டியது, அரசின் கடமை. மேற்கூறிய கொடுமைகளை நீக்கி, நம் இளைய சந்ததியினரின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டியது, இன்றைய உயர்கல்வித்துறையின் கடமையாகும்!இமெயில்: jjaneepremkumar@gmail.com - ஜெனிபர் பிரேம் -பத்திரிகையாளர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

PeterVasan - Madurai,இந்தியா
24-மார்-201813:46:57 IST Report Abuse
PeterVasan இந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு தெரிந்த நண்பர்களுக்கும் நான் படித்த காலத்தில் நடந்திருக்கிறது. நீங்கள் சொன்ன எல்லாம் அல்ல ஏதோ எக்ஸாம்ல மார்க் ஏமாற்றமாக இருக்கும். சமூக அக்கறையோடு எழுதின உங்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X